வியாழன், மே 31, 2012

வழுக்கையில் முடி!, தொப்பையை குறைப்பது எப்படி?


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

தலைப்பில் உள்ள இரண்டு விசயங்களில் ஏதாவது ஒன்று சம்பந்தமான விளம்பரத்தினை நான் கண்டுவிட்டால், உடனே அந்த முகவரியை குறித்துவைத்துக்கொள்வேன். இல்லன்னா மூணு பக்கத்து விளம்பரத்துக்காக கொடுக்கப்படும் நோட்டிஸினை ஒரு வரி விடாம கடைசிவரி வரை படித்துவிட்டுத்தான் அந்த இடத்தினை காலி செய்வேன்.

இந்த குவாலிஃபிகேஸனோட இருக்குறது தமிழ் நாட்டில, ஏன்,  இந்த உலகத்திலையே என்னைத்தவிர ஒருவர் இருக்காருன்ன, அந்த பெருமை நம்ம பவர்ஸ்டார்க்குத்தான்.
வழுக்க எனக்கு எப்படி விழுந்தது, எப்ப விழுந்ததுன்னு தெரியல, ஆனா விழக்கூடாத நேரத்துல கரெக்டா விழுந்துச்சு. நான் ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் அதப்பத்தின கவல எனக்கு ஏற்பட்டது இல்ல, அதன் மூலமா அந்த காலகட்டத்துல எனக்கு வழுக்கை விழுந்திருக்க வாய்ப்பு இல்லன்னு தோனுது. காலேஜ் படிக்கும் போது, மொத்தமா, ஒரே நாள்ள விழுந்த ஃபீலிங்க்.

அய்யய்யோ முடி இல்லையேன்னு, நான் அதிகமாக கவலைப்பட்டது இல்லை, என் நண்பர் வட்டங்கள் என்னை சில சமயங்களில் “மொட்டப்பு ன்னு கேலி பண்ணி அழைக்கும் போதும் கூட, அதற்கெல்லாம் காரணம் நாம அவனுங்கள பண்ணுற அலப்பரைக்கும், கேலி, கிண்டலுக்கும், அட்லீஸ்ட் இப்படியாவது கூப்பிட்டு, அவங்க சந்தோசப்பட்டுக்கொள்ளட்டுமே என்ற ஒரு நல்ல எண்ணத்துல தான்.

ஒரு நாள் என் நண்பர்களுடன் மதியம் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, கை களுவுவதற்காக சென்ற இடத்தில், முகம்பார்க்கும் கண்ணாடி கரெக்ட தலைக்கு மேல இருந்துச்சு, அதுவும் லைட் எஃபக்டோட, அப்பத்தான் எனக்கு ஒரு உண்ம வெளங்குச்சு. நான் அதுவரைக்கும் எனக்கு கொஞ்சம் முடியில்லன்னு நினச்சுக்கிட்டு இருந்தேன், ஆனா முடியே இல்லன்னு அப்போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன். அதிகமா கவலைப்பட்ட காலங்கள் இல்லைன்னு சொன்னேன தவிற, கவலையேபட்டதில்லைன்னு சொல்லவில்லை.

முகம்பார்க்கும் கண்ணாடியில மண்டய பார்த்தப்பின்னாடி, ஒரே ஃபிலிங்க்ஸ், எங்கடா மருந்து கிடைக்குமுன்னு தேடி, மூலை, முக்கு, சந்து, பொந்து எல்லாம் தேடி அலையத்தொடங்கியாச்சு. அதுக்கு காரணம், ஒரு பிகர். அப்ப அய்யாவுக்கு லைட்டா லவ் மூடு ஸ்டார்ட்டாகியிருந்துச்சு. அவளுக்கு ஏகப்பட்ட போட்டி பாஸ், அதுல நாம இப்படி ஒரு குறையோட இருந்தா எப்படி?. அப்ப தேடத்தொடங்கியது தான் இன்னைக்கு வரைக்கும் முடிவே இல்லாம, தேடிக்கிட்டே இருக்கிறேன்.

தேய்க்காத எண்ணெயில்ல, பார்க்காத வைத்தியமில்ல, ம்ம்ம்ம்ம் வளரவேயில்லையே. சுத்தமான தேங்காய் எண்ணெயில ஆரம்பிச்சு, அமலா எண்ணெய், கேசவர்த்தினி எண்ணெய், கேரளா ஆயுர்வேத வைத்தியசாலை எண்ணெய், கோட்டக்கல் மூலிகை எண்ணெய்..............................இப்படியா எல்லா எண்ணயும் தேய்ச்சாச்சு, மண்ணெண்ணயத் தான் இன்னும் தேய்க்கல. கடைசியா இப்ப, இந்து லேகா எண்ணயில வந்து நிக்குது. மீசையில முடிமுளைக்குற சமயத்துல, மண்டயில உள்ள முடியெல்லாம் போக ஆரம்பிச்சுடுச்சு.
இதுக்கு இடைப்பட்ட காலத்துல எங்க பக்கத்து ஊர் இடைகாலில் ஒரு வைத்தியன், 30 நாளில் வழுக்கையில் முடி, ஸ்டாலினுக்கே முடி வளர வைத்த வைத்தியன்னு பேனர்கட்டி ப்ப்ளிசிட்டி பண்ண, ஹை ரெக்கமண்டேசன்ல அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் வாங்கி வைத்தியம் பார்த்தேன். கடைசில என்ன வச்சி அவன்தான் வளர்ந்தானே தவிர, அவனால எனக்கு ஒரு மயிரும் வளரல. 

‘உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சு?. எளவு வீட்டுல, துக்கம் விசாரிக்குற மாதிரியான, இந்த கேள்விய மட்டும் என்னால, இதுவரைக்கும் சகிச்சுக்கவே முடியல. அறிவாளிகளுக்கெல்லாம் அப்படித்தாண்டா, முடியிருக்காதுன்னு சொன்னா, உடனே அப்போ, அபுதுல் கலாம் என்ன முட்டாளான்னு கேட்குறானுங்க. இவனுங்களுக்கு விளக்கம் கொடுத்தே, எனக்கு அங்க அங்க இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் போயிடுச்சு.

எந்த பதில சொன்னாலும் ஒத்துக்கமாட்டாங்குறானுங்களேன்னு எண்ணி, இப்பவெல்லாம் அப்பன், பாட்டேன், பூட்டேன்னு எல்லாத்தயும் இழுத்துர்றது. யாராவது, அந்த கேள்விய இப்ப கேட்டாங்கன்னா, “எங்கப்பாவுக்கு இருந்துச்சா, எங்கப்பாவோட அப்பாவுக்கு இருந்துச்சா, எங்கப்பாவோட, அப்பாவோட, அப்பாவுக்கு........................... ன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, அப்பப்பான்னு அலரியடிச்சு ஓடிர்ரானுங்க.

வழுக்க என்பது இளைமயின் அடயாளமாம், இளநீர் வாங்கும் போது, நாம என்ன சொல்லி வாங்குவோம், ‘நல்ல வழுக்க இளநீயா பார்த்து கொடுப்பான்னு தானே. சோ, நாங்க, இப்ப இல்ல எப்பவுமே யூத்ஸ்தான்.
தொப்ப, இது எப்ப.......................ன்னு பாத்திங்கன்னா, கடந்த 3 வருசமாத்தான். காலேஜ் படிக்கும் போது, நான் வெறும் 47 கிலோ தான். அடிச்சா, அடி வாங்குற, இந்தியன் புருஸ்லி மாதிரி இருப்பேன். இது 2004ன் அப்டேட். அப்புறமா, விருது நகர்ல கொஞ்ச நாள் வேலை பார்க்கும் போது, ஒரு பாய் கடையில் அன்லிமிட்டெட் சாப்பாடு சாப்பிட்டு, கொஞ்சம் குண்டானேன். ஆனாலும், வயிறு கண்ரோலில் தான் இருந்துச்சு. அப்புறமா 4 வருசம் பெங்களூரில் இருந்தாலும், சாப்பாட்டுக்குன்னு ஒரு குறையும் இல்லை, இருந்தாலும் எனக்கு உடம்பு போடவேயில்ல.

துபாய்க்கு வந்ததிலிருந்து, பேய் தீணி, ஆனா வேலைன்னு பார்த்த, இந்தா, இந்த பிளாக் எழுதுறது தான். பின்ன எப்படி தொப்ப வைக்காம இருக்கும். இந்தியாவுல இருக்குற வரைக்கும், 15 மாடி கட்டிட்த்துல, படில ஏறி, இறங்கியே சாப்பிட்ட சாப்பாட்ட ஜீரணிக்க வச்சுருவானுங்க. ஆனா இங்க, ஹால்ல இருந்து க்க்கூஸுக்கு போறதுக்கு வண்டி. காலையில 7.00 மணிக்கு சீட்டுல உட்காருற நான், சாயங்காலம் 6.00 மணிக்குத்தான் எழுந்திருப்பேன்.

ஓடுன்னா உடம்பு குறையும்னு (யாரைக் கூட்டிக்கிட்டுன்னு எல்லாம் கேட்க கூடாது) சொன்னத கேட்டு, ஓட ஆரம்பிச்சா, ஷூ தேஞ்சது தான் மிச்சம், தொந்தி தேயல. டாக்டர்கிட்ட ஐடியா கேட்ட, ஓடனும் ஆனா, நீங்க ஓடுற மாதிரியெல்லாம் ஓடக்கூடாது, நாய் தொரத்துனா எப்படி ஓடிவீங்களோ, அப்படி ஓடி, நாக்கு தொங்கி, இளைச்சு நிக்கனும்னு சொன்னாரு. ஒரு நாள் ஓடும் போதே தெரிஞ்சு போச்சு, அப்படி ஓடியிருந்தா நாக்கு தொங்கி மண்டய போட்டிருப்பேன். வாரத்துல 2 நாள் விரதம், இரவு சப்பாத்தின்னு என்னலாமோ செஞ்சு பார்த்தாகிவிட்டது. ஒரு சேஞ்சும் இல்ல.

துபாயிக்கு வந்து, இரண்டு வருடம் கழித்து முதல் முதலா ஊருக்கு போனபோது, விமான நிலையத்துக்கு குடும்பமே வந்திருந்தது. திருவனந்தபுரம் ஏர்போர்டில் வெளியே வந்தவுடன், மாமான்னு கூப்பிட்டுகிட்டே வரும் அக்கா குழந்தைகள், நல்லா இருக்கியாப்பான்னு கண் கலங்கி நிற்கும் அம்மா, அக்கா, கையோடு, கை பற்றி தோளில் சாய்க்கும் அப்பா.........இப்படி கனவு கண்டு வந்து, ஏர் போர்டுக்கு வெளிய வந்து பார்த்தா, என்னய பார்த்தும், பார்க்காமலும் நிற்கும் குடும்பத்த பார்த்து அதிர்ந்து போனேன். என்ன விட்டு விட்டு எனக்கு பின்னாடி வந்த ஒல்லிக்குச்சி பயகிட்ட பேசினத பார்த்து, கடுப்பாகி, “டாடி அயம் ஹியர் அப்படிங்குறத தமிழ்ல சொல்லி, யாரு அவன்னு விசாரிச்சா, நீ தாண்டா அவன்னு நெனச்சு, பேசிக்கிட்டு இருந்தோம் சொன்னவுடன் புரிந்துவிட்டது, நாம எவ்வளவு மாறியிருக்கிறோம் என்று. என்னடா எப்படி இருக்கன்னு கேப்பாங்கன்னு பார்த்தா, என்னடா இப்படி இருக்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க?. வாட்ட சாட் இன்சிடண்ட்.....................

சமீபத்துல ஒரு நண்பருடைய பிளாக்கில், யோகா மூலமாக தொப்பையை குறைக்கலாமுன்னு, மனப்பாடம் செய்து, ரூமில் செய்யலாமுன்னு துண்ட எல்லாம் போட்டு உட்கார்ந்தா, தலைப்பு ‘தொப்பையை குறைப்பது எப்படிங்குறது மட்டும் ஞாபகத்துல இருக்கு, மற்றதெல்லாம் மறந்து போச்சு. மறுநாள் பிரிண்ட் போட்டு எடுத்துகிட்டு போயி செய்யலாமுன்னு இரவு 7.00 மணிக்கு உட்கார்ந்தா................... உட்கார்ரதுக்கே பத்து பாயிண்ட் இருக்கு.

இடது காலை, வலது தொடயில போட்டு, வலது காலை இடது தொடையில போட்டு, உட்காரவேண்டும். இடது கால் போச்சுன்னா, வலது கால் போகமாட்டேங்குது, வலது கால் போச்சுன்னா, இடது கால் மக்கர் பண்ணுது. இப்படியா போட்டு, போட்டு பாத்துக்கிட்டு இருக்கும் போது, ‘சரி, சரி, மணி 9.30 ஆயிடுச்சு, எந்திச்சு சாப்பிடவான்னு ஒரு குரல், எங்கயோ கேட்ட குரலுக்கு திரும்பி பார்த்தா, சிக்கென் 65 யுடன் பிரியாணியையும் மிக்ஸ் பண்ணி விளையாண்டு கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நடுவுல இருந்துக்கிட்டு, நான் இப்படி தொந்திய குறைக்கிறேன், தொப்பய கரைக்குறேன்னு சொல்லுறது நல்லவா இருக்கு.

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஏதோ அந்த இரண்டுக்கும் நான் வழி சொல்லப்போகிறேன் என்று என் ஜாதிக்கார, பாசக்கார பயலுகளுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்.


பிப்பிலிக்கா, பிலாப்பி.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், மே 29, 2012

சினிமா கிருக்கு


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்கும் போதெல்லாம் எனக்கு தமிழ் நாட்டுல ரிலீஸ் ஆகும் படங்கள பத்தி அதிகமா தெரியும். ஒரு படம் நல்லாயிருக்குன்னு ஏதாவது பேப்பர்ல படிச்சுட்டேன், எவ்வளவு கஷ்டப்பட்டுனாலும், அது எங்க ஊரு மங்களசுந்தரிக்கு வரும் போது பாத்துருவேன். ஒரு சினிமா பாக்குறத ஏம்ல பெருச பீத்துதன்னு நீங்க கேக்கலாம், ஆனா அப்பவெல்லாம் எங்க ஊர பொருத்தவரைக்கும் சினிமா தேட்டருக்கு போயி படம் பாக்குறது என்பது பெரிய குத்தம். பீடி குடிக்க்ககூடாது, பொய் சொல்லக்கூடாது இப்படிய நீதி போதனைகள் வூட்ல சொல்லித்தரும் போது, சினிமா பாக்கக்கூடாதுன்னு ஒரு வரியும் வரும். அப்படி பாத்துட்ட ஆண்டவ கண்ண குத்திருவான் என சொல்லித்தருவானுவோ.

அப்புட்டு சொல்லியும் நாம கேப்பமான்னா, அதெப்படி கேப்போம், நாமக்குத்தா அப்பவே, ஓடாத பாம்ப புடிச்சுட்டு வந்து மிதிக்குற வயசு.

ஒரு படத்த வூட்டுக்கு தெரியாம பாத்தாச்சு. ஆண்டவ கண்ண குத்தல, ரெண்டாவது தடவயும், அத்தா (அப்பா) சண்டயில இருந்து ரூவாய களவாண்டுகிட்டு போயி பாத்தாச்சு, அப்பயும் ஆண்டவ கண்ண குத்தல.

பாத்தியாலே, ஹாரிஸு, இவனுவ சொல்லுறது எதுவுமே உண்மயில்ல, சினிமா பாக்குறது தப்புன்னா, என்னய ஆண்டவன் ரெண்டுதடவலா கண்ண குத்தியிருக்கனும். பாரு, எனக்கு எப்படி கண்ணு நல்லா தெரியுது. அன்னா அங்க போறாளே அவ பசிரா தானே, அந்த ஓரத்துல நிக்குறவ நஜிமா அக்கா நத்தடம்மாதானே. இப்ப என்னல சொல்லுத. ஆண்டவ என்ன என் கண்ணயா புடிங்கிட்டான். இதெல்லாம் சும்மால, உலலாயிக்கு.

ஆமால, இவனுவ பொய்யி பொய்யாலா சொல்லித்தாரனுவோ,
மங்கள சுந்தரி டாக்கிஸ்
அதவுடு, வார ஆட்டுக்குட்டி பெருநாளுக்கு, மங்களசுந்தரியில சேதுபதி ஐ.பி.எஸ் வருது. நீ வாரியா, போவாமா?

எனக்கும் ஆசையாத்தாம்லே இருக்கு, ஆனா எங்க ராதா (தாத்தா) வுடமாட்டாரே?
9.00 மணிக்கு பெருநா தொழுவ முடிச்சு, குட்டிய 10 மணிக்கு அருத்தபின்னால நமக்கு என்னல வேல, எல்லாரும் குட்டிய வெட்டுரதுல பிஸியா இருப்பானுவ, அந்த நேரத்துல போயிட்டு வந்துருவோம். 11.00 மணிக்கு படம் போடுவான், 2.00 மணிக்கு முடிஞ்சிரும்ல. யாருக்கும் தெரியாது
.
ம்ம்ம்ம்ம் எங்க ராதா எங்கல போனன்னு கேட்டா நா என்ன சொல்ல?

என்னல ஆக்கங்கெட்ட கேள்வியா கேக்க, எல பிரியாணிய முன்னால வச்சிக்கிட்டு யவமுல ஓங்கிட்ட வந்து கேள்வி கேப்பான்?, அப்படியே கேட்டா, புளியமுக்கு தெருவுல, குட்டிய அருக்கும் போது, அது அவுத்துக்கிட்டு ஓடிருச்சு, அத புடிக்கபோனோமுன்னு, என்னயும் சேத்து சொல்லு.
ம்ம்ம்ம்ம்..

இது சரிப்படாது, நீ வேணாம், நான் ஒத்தயில போய் படம் பாத்துக்குரேன். என்னமோ இம்புட்டு யோசிக்க,

இல்லல...............ஆனா

என்ன நொல்லல, நோனான்னுக்கிட்டு, லாஸ்டா சொல்லு வாரியா? வர்லயா?.

(ஹாரிஸ் கொஞ்சம் யோசனையில் இருந்த மாதிரி இருந்துச்சு, ஆனால் ஒரு பேச்சுக்குத்தான், வந்தா வா, வராட்ட போன்னு சொன்னேன தவிர, ஒத்தயில போவ எனக்கும் பயமாக இருந்தது, அதனால எப்படியும் தாஜா பண்ணி தள்ளிகிட்டு போயிரனும்னு குறியா நின்னேன்)

நல்லா யோசிச்சுக்கோப்பா, விஜிகாந்த் சூப்பரா சண்ட போடுறானாம். கொள்ளகூட்டங்கள அடிபின்னுரானாம். செந்தில், கவுண்டமணியெல்லாம் கூட இருக்கானுங்க
..............................(ஹாரிஸ் இன்னும் யோசனையில்)

மீனாலாம் இருக்கா, இடுப்ப அப்படி இப்படியாட்டி ஒரு பாட்டு வரும், சூப்பரா இருக்கும்ல, நான் போன வாரம் ஒலியும், ஒளியும்ல பாத்தேன். அம்புட்டு அளகா இருக்கா. துப்பாக்கி சண்ட இருக்கு, டுப்பிக்கோ, டுபிக்கோன்னு சுடுவானுவோ பாரு.......

சரில, போவலாம், என்ன ஆனாலும் பரவாயில்ல நான் சமாளிச்சுக்கிடுதேன்.
(அப்பாட)

தொழ முடிஞ்சு, குட்டிய அருத்தவுடனே முக்கந்தில இருக்க பாட்டிகடைக்கு வந்திரு, அங்க நானு வந்துருதேன். ரோட்டு வழியா போனா, எவனும் பாத்துட்டு வூட்டுல சொல்லுருவானுவோ. நாம குண்டியடிச்சா பள்ளிக்கூடம் வழியா போயி, ஐ(ஹை)ஸ்கூல தாண்டி தியேட்டருக்கு போவாம்.
ஹஜ் பெருநாள் அன்று, ஆட்டுக்குட்டியை குளிப்பாட்டிவிட்டு, நானும் குளித்துவிட்டு, தொழுகைக்குச் சென்றேன். போகும் வழியில் ஹாரிஸைப் பார்த்து புரோகிராமை உரப்பித்து விட்டு, தொழுக்கையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன், குட்டிய குர்பானி கொடுத்தபாடில்லை.

“என்னத்தா, என்ன ஆச்சு இன்னுமா அருக்கல? ன்னு எங்கப்பாகிட்ட கேட்க

இல்லல, உரிக்க ஆள்கெடச்சாத்தான, அருக்கமுடியும். அப்படியில்லனா, அருத்துப்போட்ட பின்னாடி உரிக்க கஷ்டமாயிருக்கும்.

உரிக்கிரவன் எப்ப கிடச்சு, நாம எப்ப படத்துக்கு போயி, “ஆண்டவா அந்த உரிக்கிறவன கொஞ்சம் வேகமா வரச்சொல்லக்கூடாதா? ன்னு மனசுக்குள்ள வேண்டுதல்.

உரிக்க ஆள் வந்தாச்சு, உரிக்க ஆள் வந்தாச்சு, எல்லோரு வாங்க, குட்டிய அருக்கப் போகுதுன்னு என் அண்ணன் சொல்லிக் கொண்டு வந்தான்.
கால்களை மடக்கிப் பிடித்து ஒருவரும், வயிற்றுப் பகுதியை இன்னொருவர் பிடித்துக் கொண்டும், இருக்க, எனது பெரியத்தா ஆட்டை அருப்பதற்காக தயாராகி, “அருக்கும் போது எல்லோரும் தக்பீரை உரைக்க சொல்லனும் என்று கட்டளையிட

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் (அய்யய்யோ டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சுயிருப்பாங்களோ) லாயிலாஹ இல்லல்லாஹ்ஹூ அல்லாஹ் அக்பர் (படம் போட்டு எழுத்துக்கட்டம் ஆரம்பிச்சிருக்குமோ).

இனும ஒரு நிமிசத்தக்கூட தாமதப்படுத்தக் கூடாது கிளம்புலன்னு சொல்லி ஓட்டமா ஓடி, பாட்டிகடையில நின்ன சேக்காளியயும் கூட்டிக்கிட்டு, ஏற்கனவே போட்ட பிளானில் சின்ன சேஞ்சும் பண்ணாம தியேட்டரை எட்ட, டிக்கெட் கொடுக்க என எல்லாம் டைமிங்க் ஆக இருந்தது.

படம் முடிந்து வெளியே வந்ததும், “எல ஹாரிஸு, வூட்ல ஏதாவது கேட்டா நான் முன்னால சொன்ன பொய்ய சொல்லிரு, மாட்டிக்கிட்ட அவ்வளவுதா, கொள்ளையில போறவனுங்க கொன்னெடுத்துருவானுவோ, பாத்துக்கோ

மறுநாள்.

பத்துப்பேரு படை சூள, “டேய்ய்ய்ண்டான் (பேக்ரவுண் மியூசிக்), டுபில், டுபில்லு கொள்ளகூட்ட தலைவ அடிப்பான், விஜிகாந்த், சொவத்துல ஏறி ஓங்கி மூஞ்சில் மிதிச்சு தள்ளுவான், ரத்தமா வடியும் அப்போ, டுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஸ்பீடா ஆம்புலன் வந்து மீனாவ ஏத்திட்டு போவும் என பாத்த படத்த, டிக்கெட் கொடுக்காம நண்பர்களிடம் பகிர்ந்து, “பாத்திங்களால, நா எம்புட்டு தயிரியமானவ, படத்துக்குலாம் போயிட்டு வந்துட்டேன். நம்பலன்னா ஹாரிஸ்ட கேளுங்கல, நானும் அவனும் தான் போனோம்.

அதே நாள் சாயங்காளம்,

ஏத்தா, அசனப்பா, என்னத்தா உ மவ, படத்துக்கெல்லாம் போனானாம், அதே மாதிரி நானும் படத்துக்கு போறேன்னு எ மவ அழுது அடம்பிடிக்கான்.

பெரிய வீட்டில் படித்துக் கொண்டிருந்த என் காதுக்கு அது கேட்க, “போச்சுடா பத்து பேயில, எந்த பேய பெத்தவன்னு தெரியலியே? ன்னு பார்த்தால், அது மைதீனோட அத்தா

“வா யாகத் அலி, உள்ளவாயேன், வெளியில நின்னு பேசிக்கிட்டு இருக்க, என்ன ஆச்சு, என்ன சம்பவம்ன்னு என் அப்பா கேட்க, ஒன்னு விடாம மைதீன் அத்தா சொல்ல.

பஞ்சாயத்து கூடிருச்சு..................

செல்லாது, செல்லாது, செல்லாது, நான் படத்துக்கே போவல, இவண்ட சும்மா அள்ளிவிட்டேன். அவ்ளோதான்.

“இல்ல, இல்ல, ஹாரிஸ் கூட போனான், அதுவும் சேதுபதி ஐ.பி.எஸ்ஸுக்கு என மைதீன் கூற,
யாருல ஹாரிஸு, அவன கூட்டிட்டு வால, அவங்கிட்ட கேக்குறேன். அதுக்குமுன்னாடி உண்மய சொன்னீன்னா, ரெண்டு, மூணு அடியோட வுட்டுருவேன். மைனா (மைதீன்) சொல்லுதது மட்டும் உண்மயா இருஞ்சி, பேவுள்ள உன்ன கொன்னேவுடுவேன்.

இல்லத்தா, நான் சும்மதான் சொன்னேன்னு சொல்லுதோம்லா, வேணும்னாலும் மம்மஸ்த பெருத்தா பேரன் ஹாரிஸ கூட்டிக்கிட்டு வாரேன், நீங்க கேளுங்க.

கூட்டுவால,

நண்பனை நோக்கி ஓட்டமா ஓடி, “எல ஹாரிஸு ஒரு தப்பு நடந்திருச்சில, நம்ம மைனா இல்ல மைனா, அவ எங்கத்தாட்ட போட்டுகொடுத்துட்டான்ல, நாம படத்துக்கு போனது எங்கத்தாவுக்கு தெரிஞ்சிருச்சு, நான் சமாளிச்சுட்டேன். உன்ன கூட்டிட்டுவந்து சொல்ல சொல்லுது, அதனால, நீ வந்து எங்கத்தாகிட்ட, நாங்க சினிமாக்குலாம் போவல, கிரிகெட் வெளயாண்டுக்கிட்டு இருந்தோமுன்னு சொல்லி என்ன காப்பாத்துல ன்னு அர மனசோடு இருந்தவங்கிட்ட கெஞ்சி கூத்தாடி, அவன கூட்டிக்கிட்டு போயி அங்கப்பாவின் முன்னால் நிறுத்தினேன்.
யாருல நீ?, ன்னு எங்கப்பா ஹாரிஸ பார்த்து கேட்க

நா, நா, நா, நா, ம்ம்ம்ம் மம்ஸ்தன் இருக்காங்கல்லோ அவுங்க பேரன், ஹாரிஸ். (அப்பவே அவனுக்கு வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு)

அடே, பாத்துமா மோவனா நீ, எத்தனாவது

6 வது.

6 வதா, எல அவளுக்கு மூணு புள்ளன்னுதான கேள்விப்பட்டேன். நீ என்னன்னா 6 வதுங்க.

இல்ல. நான் ரெண்டாவது பையன், 6 வது படிக்கன்னு சொல்லவந்தேன்.

“சரி அத உடுல, விசயத்துக்கு வருவோம் முன்னு சொல்லிக்கிட்டே எங்கப்பா பிரம்ப எடுக்க, எனக்கு தெரிஞ்சு போச்சு, மாப்புள எல்லாத்தயும் உலர போரான், நாமக்கு இன்னைக்கு டங்கு நக்கா, டனக்கு நக்கான் தான்.

“ம்ம்ம் சொல்லுல என்புள்ளய சினிமாவுக்கு கூட்டிட்டு போனியா? உண்மய சொல்லிரு இல்லன்ன அவ்ளோதான், என கொஞ்சமாத்தான் அரட்டுனாரு எங்கத்தா,

ஓ, ஓன்னு ஒப்பாறி வச்சிட்டு, “நான்லா கூட்டிட்டு போவல, அவந்தா என்ன கூட்டிட்டு போனான், நா வேணா, வேணான்னு தான் சொன்னே, அதெல்லா, ஆண்டவ கண்ண குத்தமாட்டான்........................... .என நான் சொன்ன எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லிட்டான்.

அடப்பாவி படத்துக்கு போனோம்னு சொல்லுறதோட நிறுத்த வேண்டியது தானே, ஆண்டவன் கண்ண குத்துறதயெல்லாம், ஏன் இந்த எடுவட்டவன் சொல்லிகிட்டு இருக்கான். என மனசுக்குள்ள நினச்சிக்கிட்டு இருக்கும் போதே,

“அதுமட்டுமில்ல, நீங்க என்ன கூட்டுவர சொன்ன போது, அரபாத் எங்கிட்ட வந்து, எங்கத்தா படத்துக்கு போனியான்னு கேக்கும், நீ இல்லன்னு சொல்லனும்னு வேற பொய் சொல்ல சொன்னான்
சுத்தம். சும்மா இருக்குற நிலத்துக்கே தண்ணி பாச்சுரவரு எங்கப்பா, இவ உழுது, பாத்தி கட்டி, வித விதச்ச நிலத்த குடுத்தா சும்மாவா இருப்பாரு.

அப்புறம் என்ன, பத்தல் போடல, மைக் செட் வைக்கல, டியூப் லைட் கெட்டல, ஆனா, திருவிழா மட்டும் கோலாகலமாக நடந்துச்சு. ஒங்க வூட்டு அடி, எங்க வூட்டு அடியில்லைலோ, ஊர் மொத்த வூட்டு அடியும் அன்னைக்கு நமக்குத்தான்.

“ஏம்ல சவட்டு மூதி, பொய்யால சொல்லுதன்னுஎங்கப்பா பிரம்ப தூக்கி அடிக்க, கை ஓங்குன வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்குது, அதுக்கபுறமா மூணு நாள் நடந்தது எனக்கு எதுமே தெரியலைன்னா, எந்த அளவுக்கு திருவிழா இருந்திருக்கும்னு தெரிஞ்சிக்கங்க.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

சனி, மே 26, 2012

(I.P.L) என்னோட ராசி, கெட்ட ராசி


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

ஐ.பி.எல் ஆரம்பித்ததிலிருந்து, நான் இதுவரைக்கும் சென்னைக்கு சப்போர்ட் பண்ணியதே இல்லை. வரும் ஐ.பி.எல்களில் பண்ணுவனா என்னனு எனக்கு தெரியாது, ஏன்னா அது என் கையில இல்ல, எல்லாம் நம்ம தாதா கங்கூலி கையில தான் இருக்கு. ஆமா அவரு அடுத்த வருசத்துல இருந்து ஐ.பி.எல் விளையாடலன்னா, ஒரு வேளை நான் சென்னைக்கு சப்போர்ட் பண்ணலாம். உன்னையெல்லாம் இப்ப யாருடா அழைச்சான்னு நீங்க மனசுக்குள்ள கொதிக்குறது தெரியுது.
ஜ.பி.எல் ஒன்னு ஆரம்பிக்கும் போது, தல கங்கூலிய யாருடா ஏலத்துல எடுக்குறான்னு பார்த்துக்கிட்டு இருக்கும் போது, நம்ம சாருக்கான் முன்னாடி வந்து ஏலத்துக்கு போகுற ஆளா நீங்க, இங்க வாங்கன்னு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு இஸ்துகுனு போக. அன்னையில இருந்து “மே பொங்காளி கூ” (நான் பெங்காளி) ஆகிட்டேன். ஜ.பி.எல்லின் முதல் மேச்சில் மெக்குல்லம் அடிச்ச அடில, இனி பத்துவருசத்துக்கு எவனும் கப்பு பக்கத்துல வரக்கூடாது, கப் வாங்கும் போது, முதல் வரிசையில இவன் இவன் தான் இருக்கனும், செண்டருல கங்கூலி நின்னு அவருக்கு கீழ கப் இருக்கனும் என்று ஒரே அக்கப்போருதான். கொல்கத்தாவுக்கு எதிரா எவனாவது பேசிட்டான் செத்தான், பேசியே பேய வெரட்டிருவோம். முடிவுல “சென்னை ஜிந்தாபாத்ன்னு சொல்லவேண்டியவன், இவனுங்கள்ட இருந்து இப்ப தப்பிச்சா போதும்னு “கொல்கத்தாகி கோலி மார்ரோ ன்னு சொல்லிட்டு தப்பிச்சோம் பிளைச்சோமுன்னு ஓடிருவான்.

இது எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான், அடுத்தடுத்து தோல்விகள் மட்டுமே கொல்கத்தாவிற்கு கிடைக்க, ஏர் டெல் சூப்பர் சிங்கர் வைக்கலாமே, இன்னைக்கு நீயா? நானாவில் நல்ல தலைப்பு அது பார்க்கலாமே, வாங்க டி.ஆர். ராஜேந்திரன் படம் ரிலீஸ் ஆகியிருக்கு முதல் நாளே பார்த்துடலாம் இல்லன்னா, மறு நாள் தியேட்டருல படம் இருக்காது, அங்க போகலாமே..............என மே, மேன்னு ஆடுமாதிறி கத்தி, எதிரணி கோஷ்டியிடம் தப்பிக்க நான் பட்ட பாடு, அடடடடா........ சொல்லிமாளாது. இதுல திடிரென ஒரு வெற்றி கிடச்சிருச்சுன்னா, மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறும். அடுத்த மாட்சிக்கு அப்புறம் என்ன மறுபடியும் மே, மே..... தான்.

இப்படியா ஒன்னு இல்ல ரெண்டுயில்ல, மூணு வருசமா விடாம சப்போர்ட் பண்ணினேன் கொல்கத்தாவிற்கு. இதுல மூணாவது ஐ.பி.எல்ல கேப்டன் பதவியில் இருந்து கங்கூலிய தூக்க, காண்டாயிடுச்சு நமக்கு, இருந்தாலும் அன்றைக்கு டீமின் நலன் கருதி, தீ குளிக்குறத ஒத்திவச்சோம். 4 வது ஐ.பி.எல், சோகமே சோகம், கங்கூலிய யாரும் ஏலத்துல எடுக்கல, இதனால ஐ.பி.எல் என்பது இந்தியா கிரிகெட் டீமுக்கு முற்றுக்கட்டயா இருக்கும், அதனால பிள்ளைகள் படிப்பு கெடுகின்றது, ஜட்டி பனியனோட சாரி பிராவோட சியர் கேள்ஸ் எல்லாம் ஆட்டுறது மறுபடியும் சாரி ஆடுறது நம்ம நாட்டு கலாச்சாரத்த குழி தோண்டி புதைக்குறதுக்கு சம்ம்...............இப்படியா சொல்லுற கூட்டத்துக்கு கொடி பிடிச்சு, கங்கூலி இல்லாத ஐ.பி.எல்ல, இல்லாம பண்ணனும் என்று இந்தியாவின் கடைக்கொடியிலிருந்து ஒரு குரல் அல்ரா சவுண்ட் சிஸ்டத்துல, துபாயில் இருந்து கேட்டுருக்குமே, கேக்கலயா, அப்படின்னா அது அடியேன் குரல் தான்.

இப்படியா போய்கிட்டு இருந்ததுக்கு இடையில, கங்கூலியின் சேவை, புனேக்கு தேவையின்னு, புனேக்காரனுங்க கால்லவிழுந்து கதற (ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்), தாதா, புனே நோக்கி புறப்பட்டார். ஆனா புனேக்காரனுங்களுக்கு வந்த அறிவு கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா, அந்த ஐ.பி.எல்லில் புனே பிளே ஆப் சுற்றுக்கு போயிருக்கும். ஆனா என்ன பண்ணுறது, மீதமுள்ள இரண்டு போட்டியில ஜெயிச்சாலும், பிளே ஆப் சுற்றுக்கு போகமுடியாதுங்குற நேரத்துல வந்து கங்கூலிகிட்ட கெச்சிக்கிட்டு நின்னா, பாவம் அவரால என்ன பண்ணமுடியும்?. அதுவும் கேபடன் பொறுப்பு கொடுக்காம, அவர் என்ன தான் செய்யமுடியும்?. இருந்தாலும் முயற்சி செய்து பிளே ஆப்க்கு இல்லன்னாலும், நேரா பைனலுக்கு முயற்சி செய்தும் பயன் இல்லாம போச்சு. அந்த அளவுக்கு பிரஸர் கொடுக்கலன்னா அட்லீஸ்ட் அந்த இரண்டு மேட்சுலயுமாவது ஜெயிச்சிருந்துருக்கலாம். ம்ம்ம்ம்ம் நேரம் யார விட்டது.
ஐ.பி.எல் 5 கங்கூலி தலைமையில் புனே வாரியர்ஸ், ஆஹா கேட்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கு. ஆனா கங்கூலி முடிவு பண்ணியிருந்தாரோ இல்லயோ நான் முடிவு பண்ணியிருந்தேன், தக்காளி........, கப்பு வாங்கலன்னாலும் பரவாயில்லை, ஆனா தாதாவை ஏலத்துல பங்கு பெறவச்சு, அதுல யாரும் எடுக்காம அவர தெருவுல நிக்கவச்ச, சாருக்கான் டீம, சும்மா டாரு, டார கிளிச்சு, ஐ.பி.எல்ல இருந்து ஓட, ஓட விடனும் என்று.

போர், போர் குருஷேஸ்திர போர்ன்னு சொல்லி, எல்லாரையும் கூட்டிவச்சு புனே-கொல்கத்தா மேட்சப்பார்த்தா, கொல்கத்தா ஃபோர், ஃபோரா அடிக்குது. அவனுங்கள ஓட விடுவாருன்னு பார்த்த 6 பாலுக்கு 36 ரன்னு தேவையான இடத்துல ஒரு ரன்னுக்கு புனேவாரியர்ஸ் ஓடு, ஓடுன்னு ஓடிக்கிட்டு இருக்கு. பொங்காளிங்களுக்கு எதிரா விளையாண்ட 2 போட்டியிலும், கொல்கத்தா வெற்றி பெற, 5 வது ஐ.பி.எல்லிலும் தல, பிளே ஆப் சுற்றயே பார்க்காம வெளியே வந்தது ரொம்ப சோகம்.

நாம தான் தமிழ்நாட்டுக்காரனாச்சே, தேர்தல்ல நாம போட்டியிடலனாலும், போட்டியிடுற கட்சிக்கு ஆதரவு கொடுகுறது மாதிரி. பெங்களூருக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்குன்னு சும்மா தான் சொன்னேன், நல்லா விளையாண்டுக்கிட்டு இருந்த பயலுங்க திடிரென, டெக்கானுடன் தோல்வியடைய, சென்னை பிளே ஆஃபுக்கு போயிருச்சு. இதுக்கு பேருதான் “நோகாம நொங்கு திங்குறது

இந்த டெக்கான் சார்ஜஸ் பயலுகள பத்தி சொல்லியே ஆகனும், தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்ங்குற மாதிரி, எல்லோருடயும் தோத்துக்கிட்டு இருந்தவனுங்க, இரண்டு மேட்சிலயும் ஜெயிச்சு, புனே வாரியர் வாயில மண்ணல்லிப் போட்டதுமில்லாம, அய்யோ பாவம், பெங்களுரு தலையிலயும் மண்ணப்போட்டு, இவனும் உள்ள போகாம, அவனுங்களையும் உள்ள போகவிடாம பண்ணிட்டானுங்க.
பிளே ஆஃப் ஒன்னு – கொல்கத்தா vs  டெல்லி. தலைவன் கங்கூலிய மதிக்காத கொல்கத்தா டீம்முக்கு நோய் வந்து நாசமா போகுகன்னு சாபம் விட்டேன், என் சாபம் அப்படியே பலிச்சிடுச்சு, ஆனா, ஒரு சின்ன மாற்றம் டீம் மாறிடுச்சு. டெல்லிக்கு டெங்கு காய்ச்சல் வந்திடுச்சு, கொல்கத்தா ஜெயிச்சு பைனலுக்கு போகிடுச்சு.

பிளே ஆஃப் இரண்டு – சென்னை vs  மும்பை. சென்னைதான் இரண்டு தடவ கப் வாங்கிடுச்சே, பாவம் மும்பைக்கு இந்த தடவ சான்ஸ் கிடைக்கட்டும் என்று கண் மூடி பிராத்தனை செய்ய. இங்கயும் லைட்டா டங்க் சிலிப்பாயிடுச்சு. சென்னை ஜெயித்து செமிபைல்லில் டெல்லியை எதிர் கொள்ள

செமி பைனல் – சென்னை vs  டெல்லி.
விஜய் நடிச்சது கில்லி,
சேவாக் அடிப்பான் சொல்லி,
தோனி ஆவான் பல்லி,
இந்த தட ஐ.பி.எல வாங்குது டெல்லி

இப்படியெல்லாம் பாடிக்கிட்டே என் மச்சான் பக்கத்துல உக்கார்ந்து மேட்ச் பார்த்தா..............., யாரு ஸார் அவன் முரளி விஜய், அந்த அடி அடிக்குறான்.

கடந்த 5 வருட என்னுடைய ஐ.பி.எல் வரலாற்றுல, 4 வருட கிரிகெட் வாழ்க்கயில (ஐ.பி.எல் 4 நான் எந்த டீமுக்கும் சப்போர்ட் பண்ணல), நான் பார்த்த எந்த போட்டியிலுமே, சப்போர்ட் பண்ணின டீம் ஜெயிக்கவேயில்லை. அதையும் மீறி ஜெயித்திருந்துச்சுன்னா, அன்னைக்கு நான் அந்த மேட்ச பார்க்கல / (கமெண்ரி) கேட்கலன்னு அர்த்தம். அத விடுங்க நம்ம பைனலுக்கு வருவோம்

பைனல் – சென்னை vs  கொல்கத்தா. ஆயிரம் சொல்லுங்க இந்த கல்கத்தகாரனுங்க செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல. எவ்வளவு தையிரியம் இருந்தா எங்க தல, எங்க தாதா, எங்க உயிர் கங்கூலிய டீம விட்டு தூக்குவானுங்க.
       அஜித் நடிச்சது மங்காத்தா
       பஸ்பமாயிடுவ கங்கூலிய எதிர்த்தா
       சாருக்கான், போடாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.......

புரியலியா??????????????

சென்னைக்கு விசில் போடு......
----------------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், மே 24, 2012

ஆற்றாமை


நம் அனைவரின் மீதும் இறைவைனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

எத்தனை நாளைக்குத்தான் நாமும் தொழிலாளியாகவே இருக்குறது, முதலாளியா ஆகித்தான் பார்போமே என்று என் சிந்தனையில் விழுந்தது எப்படித்தான் காங்கிரஸ் ஆட்சியின் காதில விழுந்ததோ தெரியாது, பெட்ரோலின் விலை ரூ. 7.5 லிட்டருக்கு கூடுதலாம், உனக்கும், இந்தியாவுக்கும் சரிபட்டு வராது, நீ அங்கயே (துபாயில்) இருந்து சிவில் இஞ்சினியர் என்றபெயரில் ஒட்டகத்தினை மேய்த்துக் கொண்டேயிரு என்று கொல்லாமல் கொல்லுகின்றது காங்கிரஸ் கட்சி. இரவுக்குள் ஒரு மூணு லிட்டர் போட்டுகிட்டா 22.5 ரூபாயை மிச்சப்படுத்தலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் அனைவரும் வண்டியைத் தூக்கிகொண்டு பல்கிற்கு ஓட, அத்தனை கூட்டத்தயும் பார்த்துவிட்டு, கதவ சாத்திக்கிட்டு பல்க் ஓனர் ஓட, இந்தியனுக்கு ஓட, ஓட தூரம் குறையல.

‘இப்படி கூட்டம் கூட்டமா, நாம ஓட வேண்டிய இடம் பெட்ரோல் பல்க் இல்ல மக்களே, நாம கூடி நிக்கவேண்டிய இடம் வேற என சொல்ல தோணுது, முஹம்மது யாஸிர்னு பேரு வச்சிருக்க என்னய ‘நீ என்னடா பி.ஜே.பிக்காரனான்னு சொல்லிருவாங்களோன்னு பயம்மா வேரு இருக்கு.
போகிற போக்கைப் பார்த்தால் மக்களை எல்லாம், மாவோயிஸ்டுகளாக மாற்றிவிடுவார்கள் போல. இந்தியாவின் வரலாறு பற்றி படிக்க அதிக அக்கரை கொள்ளும் எனக்கு, இந்தியாவின் எதிர்காலம் ரொம்ப பயமாக இருக்கின்றது. அடுத்த தலைமுறையை எப்படி உருவாக்குவது என்பதில் தொடங்கும் பயம், அடுத்த தலைமுறை எப்படி உருவாகும் என்பதில் திசைமாறி மிரளவைக்கின்றது. ஒரு சில நிகழ்வுகளைப் படிக்கும் போது நாம் எதிர்காலத்தில் எதை நோக்கிய பயணத்தில் இருக்கின்றோம் என்ற குழப்பம் ஏற்படுகின்றது.

கோவையில் ஒரு திருமணத்தினை நிருத்திய அந்த மணப்பெண் கூறிய காரணத்தை அறியும் போது என் மனைவிமேல் எனக்கு அளவில்லா அன்பு அதிகமாகின்றது. தனக்கு காரில் அதிக ஸ்பீடாக (140 km/hr) போவது பிடிக்கும், தனக்கு கணவராக வரப்போகும் இவருடன் அப்படி காரில் செல்லும் போது, 80க்கு மேல் போகும் போதே, ஏன் இப்படி போகிறாய், மெதுவாகப் போ, என்ன அவசரம், என்றெல்லாம் பயப்படுகிறார். இப்படிப்பட்டவருடன் என்னால் எப்படி சந்தோசமாக இருக்க முடியும். என்று கேள்வி எழுப்பி அந்த கல்யாணத்தினை நிறுத்திவிட்டாள்.

எதிர் வீட்டுக்காரியின் கோழி தன்வீட்டிற்குள் வருவதால் ஏற்பட்ட சண்டையின் விரோதத்தில், அவள் வெளியே சென்ற நேரமாய் பார்த்து, எதிர் வீட்டுக்காரியின் ஒன்னரை வயது குழந்தயை கழுத்தை நெரித்துக் கொன்ற விழுப்புரத்துக்கார குடும்ப குத்துவிளக்கை நினைத்து எந்த விதத்தில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள?

ரவுத்திரம் பழகு என்பது அநியாயத்திற்கு எதிராகத்தானே ஒழிய, அநியாயத்திற்கு ரவுத்திரம் பழகிவிடலாகாது.
உலகமே இப்போது வன்முறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 59 வயதுக்கார ஜாக்கிச் சானே, எனக்கு வயதாகிவிட்டது, இனி என்னால் ஆக்சன் படங்களில் நடிக்கலாகாது, காமெடி படங்களை தேர்வு செய்யப் போகிறேன், மேலும், நான் எப்போதும் வன்முறையை விரும்பாதவன், ஆதலால் தான் என் படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில், நகைச்சுவையை இணைத்திருப்பேன் என்று கேசுவலாக சொல்லுகிறார்.

ஆனால் நாம் இன்னும், 62 வயதுக்காரரை ஆயிரம் பேரை அடிக்கிறமாதிரியான கிராபிக்ஸ் காட்சிக்கு, கட்டிப் போட்டு கயிறு கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறோம். வருசத்துல வருகிற 100 படத்துல 90 படம் ரத்தமும், ரணமுமாகத்தான் இருக்குது. பெரிய பட்ஜெட் படம்னா, ஹீரோ துப்பாக்கி தூக்குறாரு, சின்ன பட்ஜெட் படம்னா ஹீரோ அரிவாள தூக்குறாரு. இத பார்க்கும் போது நமக்கு தூக்கிவாரிப் போடுது, விட்டா ஸ்கிரீன்ல இருந்து வெளிய வந்து நம்மள ஒரு போடு, போட்டுவிட்டு போயிருவானுங்க போல.

பெட்ரோல் விலைக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து நடக்கும் ஆர்பாட்டத்துக்கு கூடும் கூட்டத்தை விட, சினிமா பார்க்க கூடும் கூட்டமே அதிகமாக இருக்கின்றது. மறதி இந்தியனின் பெரிய வியாதி. இதயெல்லாம் தெரிந்து தான் மத்தியரசு ஒன்னு ஒன்னுக்கா ரேட்ட கூட்டியாச்சு.

எங்க ஊருல ஒருத்தன் மூணு குழந்தையுள்ள பொண்ண கூட்டிக்கிட்டு ஓடிட்டான். ஆனா நான் ஊருக்கு போன போது, வெள்ளையும் , ஜொள்ளையுமா ரோட்டுல நடந்துக்கிட்டு இருக்கான். நான் என் நண்பனிடம் கேட்டேன்

‘என்ண்டா இவன், ஒரு குற்றவுணர்சி, அசிங்கமே இல்லாம, கூலா இப்படி நடமாடுறான், எப்படிடா?
மூணு நாளைக்கு முன்னாடி வரை அவன் அசிங்கப்பட்டு, தெருவில் எல்லாம் நடமாடாமத்தான் இருந்தான், ஆனா 2 நாளைக்கு முன்னாடி இவன் சாதனையை முறியடிச்சுட்டதுனால, இவன் நல்லவனாக புரமோசன் ஆகிட்டான்

என்ண்டா சொல்லுற, எனக்கு ஒன்னுமே புரியலையே!!!!!

‘ஆமா, மச்சான், 2 நாளைக்கு முன்னாடி ஒருத்தன் 5 புள்ள வச்சிருக்குற பொம்பளய கூட்டிட்டு ஓடிட்டான். அதனால 3 புள்ளய வச்சிருந்தவள கூட்டிட்டு ஓடுன இவன் நல்லவனா ஆகிட்டான். இதுக்கே இப்படி வாயப்பொளந்துட்டா எப்படி? 2 நாளைக்கு முன்னாடி ஓடிப்போன இவனும் நல்லவனா மாருவதற்கான சான்ஸும் இருக்கு. இப்படி அவன் சொல்ல சொல்ல எனக்கு மயக்கமே வந்திருச்சு.
இந்த மெத்தடாலஜியத்தான் காங்கிரஸ் இப்போ கையில எடுத்திருக்கு. 7.50 ரூபாயை அதிகப்படுத்தி முக்குக்கு, முக்கு கூடி ‘பொறம்போக்கு, ‘பண்ணாடைங்க...... என்று சொல்லும் நம் வாயை, 2.0 ரூபாயை குறைத்துவிட்டு ‘நல்லவங்கன்ன்ன்ன்ன்னு சொல்ல வச்சிருவானுங்க.

  அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.


----------------------------------------------------------------------------------யாஸிர்.