வியாழன், ஜூன் 26, 2014

ஏங்கித் திரிந்த காலம்.

ஊர் கூடி தேர் இழுத்து தெருவுல விடுவது போலவே, ஊர் கூடி முடிவெடுத்து “இங்க பாருல, உ மாமி பொண்ணுக்குத்தான் நீ புருசனா வேலை பார்க்கப்போற” என நிச்சயித்து தெருவில் விட்ட நேரம். திக்கு திசை தெரியா தி.மு.க காரன் போல அப்போது நான் இருந்தேன். கையில் துண்டு போட்டு விரல் பிடித்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு உடன்பாடு ஏற்பட்டு உருவான பந்தம். உருக்குலையாமல் மேல் சொன்ன டயலாக்கிற்கு தைரியமாக தலையாட்டி வைத்திருந்தேன். அன்று ஆட்டிய தலைதான் இன்னும் ஆட்டி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தை எவளிடமிருந்தாவது இன்று கேட்டிறாதா, நாளை கேட்டிறாதா என ஏங்கித் திரிந்த காலம். அந்த ஏக்கத்தினை வீட்டிலிருந்தோர் எட்டிப் பார்த்திருந்திருக்க வேண்டும், இனி விட்டால் ஏர்வாடிதான் என்றே எத்தனித்திருக்க வேண்டும். அதன் விளைவே துண்டுடன் கூடிய பேச்சுவார்த்தை. “ஈக்கினிசா” என்ற பட்டப்பெயருடன் இஞ்சினியரான தன் பையனுக்கு பெண் கொடுக்க பட்டத்து ராஜா பரிவாரங்களுடன் வருவார் என வாசலில் எட்டி எட்டி பார்த்து ஏமாந்து போன கதையை ஈஸ்ட்மெண்ட் கலரோடு பிளாஸ்பேக்கில் சென்று படம் காட்ட விருப்பமில்லை.

டிசம்பரில் ஒப்பந்தமான அக்ரிமெண்ட் படி குழி தோண்ட ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் இரண்டு மாதம் கழித்து தோண்டிய குழியில் தள்ளிவிட்டு மூடினார்கள். முன்வழுக்கை பின்னோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பொண்ணுக்காக யாசகம் செய்யாததுதான் குறை. முப்பது வயது அல்மோஸ்ட் முதிர்கண்ணன் ரேஞ்சுக்கு போன எனக்கு தோண்டிய பள்ளம் அழகானதா, அம்சமானதா என்று யோசிக்க நேரமில்லை, விழுந்துவிட்டேன்.

கல்லூரி முடித்து பெங்களூருக்கு வேலைக்கு சென்றிருந்த நேரம், யாரும் என்னை முஸ்லீமாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை. “எங்கம்மா சத்தியாமா நான் முஸ்லீம், முஸ்லீம்” என முக்கிக் கொண்டிருந்தாலும் யாரும் நம்பத்தயாரில்லை. உறுதிப்படுத்த ஒரு வழி இருந்தது ஆனால் அதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களின் சந்தேகத்திற்கு இரண்டு காரணங்கள் ஒன்று எனக்கு உருது தெரியாமல் இருந்தது, இரண்டாவது எனக்கு கல்யாணமாகமல் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பார்த்த முஸ்லீம் ஆண்களுக்கு 22 வயதில் குறைந்தது 2 வயது குழந்தையாவது இருக்குமாம். உருது மொழி பற்றி ஏதோ சொன்னார்கள் உருப்படியாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை (நமக்கு அதுவா முக்கியம்).

22 வயதில் கல்யாணம் என கேட்டவுடன், முஸ்லீமாக பிறந்ததற்கு பெருமையாக இருந்தாலும், தப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில் முஸ்லீமாக பிறந்துவிட்டோமே என்ற கோபம் தான் அதிகமாக இருந்தது. ‘நமது ஊரில் இஸ்லாத்தை தப்பாக பரப்பிவிட்டார்கள் பாவிகள்” என்று மேடை போட்டு முழங்க எண்ணினேன். பத்தாவது படிக்கும் போது புத்தகத்தை ஒரு கையிலும், பாவடையை மறு கையிலும் பிடித்துப் பார்த்த வகுப்புத் தோழிகளுகளை, நான் கல்லூரிக்குச் சென்று திரும்பிப் பார்க்கையில், புத்தகத்துக்கும் பாவடைக்குமான கை, கைக்குழந்தைக்கும் முதல் குழந்தைக்குமாக இருந்தது.

கல்லூரியில் கெமிஸ்ரி வகுப்பு வரும் போது எல்லாம் ‘சே நாமளும் பொட்டப்புள்ளையா பிறந்திருந்திருக்க கூடாதா?” என விட்ட பெருமூச்சிக்காற்று எந்த கார்பரேசன் தண்ணி குழாயிலும் வந்திருக்காது. “உங்களது பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்துவிடுங்கள், இல்லையேல் அவர்களது குற்றங்களுக்கு நீங்களும் பொருப்பாவீர்கள்” என நபிகள் நாயகம் கூறியது எப்படி நம்ம தகப்பனாருக்கு தெரியாமல் போனது? என பல முறை யோசைனையில் இருந்ததுண்டு. எனக்கு எப்படி நபிகளார் சொன்ன இந்த ஒரு விசயம் மட்டும் தெரிந்ததோ, அது போல இந்த ஒரு விசயம் மட்டும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஒன்னு சொல்ல மறந்திட்டனே, எங்கப்பாவுக்கு 21 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது (அது சரி).

‘”அந்த பொண்ணு உன்னத்தாண்டா பாக்குது” என என்னிடம் சொன்னவர்கள் எவரையும் வெறும் வயிற்றுடன் அனுப்பியது கிடையாது. பொய், சுத்தப் பொய் என தெரிந்தும் ஒரு அல்ப சந்தோசத்துக்கு அலைந்து கொண்டிருந்த அந்த காலங்களை திரும்ப கூப்பிட்டு மனத்திரையில் ஓட்டிப் பார்க்கும் போது, திரும்பி உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழ தோன்றும். என் நினைவு சரி என்றால் அது என் 25 ஆவது வயது “வயசு போய்கிட்டே இருக்கு, நிறைய இடத்தில் இருந்து பொண்ணு எல்லாம் வருது, சீக்கிரமா கல்யாணத்தை நடத்திடனும்” என அம்மா சொன்னாள். “இம்புட்டு வெயில்ல நீ எதுக்கு ரேசன் கடைக்கு போற, குடு நான் வாங்கிட்டு வாரேன்” என துள்ளிக்குதித்து ஓடிச் சென்று ஒரு கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் மண்ணன்னெய்க்காக மணிக்கணக்காக நின்றேன். வரிசையில் நின்ற போதெல்லாம் “நிறய வீட்டிலிருந்து பொண்ணு வருவதாகச் சொன்னாளே, அந்த வீட்டுல இருந்து வந்திருக்குமோ, இந்த வீட்டிலிருந்து இருக்குமோ” என்ற எண்ண ஓட்டத்தில், வரிசையின் நீளம் பெரிதாக தோன்றவில்லை.

அம்மா இரண்டு வீட்டைப் பற்றி சொன்னாள், இரண்டுமே எனக்கு பிடிக்கவிலை, “பொண்ணு எதுவுமே படிக்கலியே?” என நான் கூற, “உங்க அண்ண மட்டும் என்ன ஐ.ஏ.எஸ்ஸா படிச்சிருக்காரு?” என தூக்குச்சட்டியை தூக்கியபடியே அக்கா பக்கத்தில் வந்து அமர்ந்தாள். ‘பொண்ணு அண்ணனுக்கா...............?” என இழுத்தேன், அப்போதுதான் வளைகுடாவில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் உடன் பிறப்பும் ஒண்டியாக இருந்தது என் சிற்றரிவுக்கு ஞாபகம் வந்தது. சொந்தங்கள் கூடி பேசிய நேரத்தில் கூட்டத்தில், ஒரே ஒரு கண்ணியவானுக்கு மட்டும் என் கண்களில் ஊற்றெடுக்கும் கானல் நீரைப் பற்றி தெரிந்திருக்கும் போல “சின்னவனுக்கும் சேர்ந்து பொண்ணு பார்திடவேண்டியது தானே?” என ஒரு சரத்தை முன்மொழிய, அதை வழிமொழிய யாரும் இல்லாத்தால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. என்ன சொல்வது, நான் நடந்து போனா, சனியன் சைக்கிள்ல போய் சைடு ஸ்டாண்ட் போட்டு நிக்குது.

அடுத்த ஒரு வருடம் மறந்தும் கூட ஒரு காதல் படங்கள் கூட பார்த்திடவில்லை. எல்லாம் ஆக்சன், ஆக்சன், ஆக்சன் என எந்த ரியாக்சனும் இல்லாமல் வாழ்க்கை உருண்டு ஓடியது. திடீரென “உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவோமா?” என முகத்தைப் பார்த்து மை டியர் டாட் கேட்க, பதட்டத்தில் “எனக்கு எதுக்குப்பா..., இப்ப அவசரம் கொஞ்சம் பொறுத்து” னு சொல்லித் தொலைத்துவிட்டேன். பொறுத்தாங்க, பொறுத்தாங்க............ பொறுமைக்கு பெயர் எடுத்த அன்னை தெரசாவையே மிஞ்சிர அளவுக்கு பொறுமையின் எல்லைக்கே போய்விட்டார்கள்.

அடுத்த வருடம் திருமணம் இல்லை என்றால், அட்டம்ட் ரேப் கேஸில் ஆயுள் தண்டனை கைதியாகி இருப்பேன் என எண்ண ஓட்டம் ஓடோ ஓடு என ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வேலை ஸ்டெடியானவுடன் தான் பெண் பார்ப்பது என்பது வழக்கமாக இருந்தது, ஆனால் இப்போது உள்ள தலைமுறைகள் அப்படியெல்லாம் எங்களைப் போல மங்குனி அமைச்சர்களாக இல்லை. பெண் பார்த்தால் தான் வேலைக்கே போவேன் என அடம்பிடிப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

நம்ம கதைக்கு வருவோம்.

பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஒரு 10 வருசத்துக்கு பொறுத்துவிட்டு, நேரடியா 60 தாவது கல்யாணத்தை பண்ணிடலாங்குற முடிவு செய்யப்பட்ட போதுதான் டிசம்பர் டுவிஸ்ட். டிசம்பரில் முடிவு பண்ணியவர்கள் போன் நம்பரை வாங்கி தருவார்கள் என வெயிடிங் லிஸ்டில் இருக்க, மீண்டும் அன்னை தெரசாவின் அதே பொறுமை. டிசம்பரில் டிரங்க் கால் புக் பண்ணியவனுக்கு பிப்பிரவரி 14ல் தான் கனெக்சனே கொடுத்தார்கள்.

அதுக்கு அப்புறமா மாலை 6 மணி முதல் 8 மணி வரை பேக்ரவுண்டில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் லா, லா...தான். இப்படியாக மணிக்கணக்கில் பேசியபோது ஒரு நாள் "உங்க ஹாபி என்ன?” என்று என் மனைவி கேட்டதற்கு, சமைக்கத்தெரிந்த ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும் என்று எங்கயோ வடை மடித்து கொடுத்த பேப்பரில் படித்ததை வைத்து ‘சமைப்பதுதான் என் ஹாபி’ என்று சொல்லியிருந்தேன்.

கல்யாணத்திற்கு அப்புறமாக வாழ்க்கை ‘ஹேப்பி’யாக போகும் என்று நினைத்த எனக்கு, இப்போது ‘ஹாபி”யாக போய்கொண்டிருக்கிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், ஜூன் 09, 2014

என்ன்ன்ன பொண்ணுடா அவ..


பள்ளியில் கம்பரோடு காலாட்டிக்கொண்டே ராமாயணத்தையும், திருவள்ளுவர் தோளில் கை போட்டபடியே ‘கடலைப்பால்’ பற்றிய விவாதத்தில் வீற்றிருந்த உ.வே சாமிநாத அய்யரின் எள்ளுப் பேரனின், கொள்ளுப் பேரனாகிய என்னை, பொறிவைத்துப் பிடித்து பொறியாளராக்கிய பெருந்துயரமான காலகட்டம். ஆறு சப்ஜெக்டில் ஒரு சப்ஜெக்ட் ஆங்கிலம் என்பதையே ஏற்காத இந்த பிஞ்சு மனசு, அனைத்து சப்ஜெக்டும் ஆங்கிலம் என்றதும் சின்னதாக இல்லை பெரியதாகவே ஆடிப்போய்விட்டது. கலர் கலர் கன்னிகள் தரிசனத்தை கரிசனத்தில் கொண்டு, ஆங்கிலத்தை அலட்சியமாக எதிர்கொள்ள எத்தனித்தவனுக்கு, அய்யஹோ......... அளப்பெரும் ஏமாற்றம்.

இப்படி திரும்பிய இடமெல்லாம் டின்னுகட்டிகொண்டிருந்த நேரம், ஊருக்கு இரண்டு நாள் விடுமுறை கழித்து, மீண்டும் பாளையங்கோட்டை சிறையின் சிவகாசி பிராஞ்சுக்கு புத்தக பொதியுடன் பிரயாணிக்க பஸ்டாண்ட் வந்துகொண்டிகொண்டிருந்தேன். அதிகாலை ஐந்து மணியிருக்கும், அனைவரும் அயர்ந்து தூங்கும் நேரம், தெரு நெடுக மின்விசிறிச் சத்தம் தூக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. தூக்கமும், துக்கமுமாக நடந்துகொண்டே பஸ்டாண்ட் வந்தடைந்தேன்.

காலை தொழுகைக்கு கடன் கேட்க செல்வது போல சாரை சாரையாக தொண்டு செய்து பழுத்த பழங்கள் மசூதியை நோக்கி வேகமெடுத்துக் கொண்டிருந்தனர். பஸ்டாண்டில் யாருமே இல்லை, சிமெண்ட் பெஞ்ச் வா, வா என்றழைத்தது. மூட்டையை ஓரங்கட்டி, மூடினேன் கண்ணை. முழித்து நேரத்தை பார்க்கும் போது மணி ஏழரை. கிட்டத்தட்ட என் நிலமையும் அதேதான். அந்த நேரத்திலும் பஸ்டாண்ட் பயணிகளுக்காக ஏங்கிக்கொண்டுதான் இருந்தது. ‘ஏதாவது பஸ் ஸ்ரைக்கா இருக்குமோ? முக்கிய தலைவர்கள் யாரும் முக்தியடஞ்சிருப்பாங்களோ?, பேசாம வீட்டுக்கே திரும்ப போய் பஸ் வரலன்னு சொல்லிறலாமா? வேண்டாம், வீட்டுக்குப் போனா, கொண்டுவந்த புக்க எடுத்து படிக்கச்சொல்லுவானுங்க, அதுக்கு பேசாம காலேஜுக்கே போயிரலாம்’ என எனக்குள் நானே பேசிக்கொண்டிருந்த நேரம்.

வெள்ளக் கலரில் சிமெண்ட் கலர் கோடு போட்ட டாப்ஸ், சிமெண்ட் கலர் பேண்ட் போட்டு ஒரு பெண். ‘இறைவா இதுக்குத்தானா? இந்த கன்னியைக் காணத்தான் இந்த காளையை கண் அசத்தினாயா? இது எல்லாம் உன் திருவிளையாடலா?’ என மறுபடியும் எனக்கு நானே. போட்டிருக்குற டிரஸ்ஸை பார்த்தா கண்டிப்பா கான்வெண்டுலதான் படிக்கனும், இங்கிலீஸ் எல்லாம் பிச்சு ஒதறும், இந்த பொண்ணை காதலிச்சா இவள வச்சி, வைக்கிற அரியர் பேப்பரை எல்லாம் கிளியர் பண்ணிறலாம் என முடிவெடுத்த நேரம், பக்கத்தில் இருந்து யாரோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு மாயை. ‘நம்ம வாழ்க்கையில அப்படி எல்லாம் நடக்காது’ என்று பக்கத்திலிருந்தவன் கன்னத்தில் அடித்துச் சொல்லிக்கொண்டிருந்த அந்த அப்படி, இப்படி சீக்கிரம் நடக்குமென்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

கிள்ளிப் பார்த்துக் கொண்டேன், ஆம், உண்மைதான், அவளேதான், அவள் தான் என்னைப் பார்க்கிறாள். நான் பார்க்கும் போது திரும்பிக்கொள்கிறாள், நான் திரும்பும் போது எனைப் பார்க்கிறாள். இன்னும் என்னால் நம்பமுடியவில்லை, என்னைத்தான் பார்க்கிறாளா? எதற்கும் பேண்டில் ஜிப் முறையாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். இப்போது ‘கண்பார்ம்’ ஆகிவிட்டது, ஜிப் போட்டிருப்பதும், அந்த பெண் என்னைத்தான் பார்க்கிறாள் என்பதும். எதிர்வீட்டு ஜீனத், பக்கத்து வீட்டு மெகருன்னிசா மாதிரி மொன்னையான பீஸ் இல்லை அழகான பீஸ், சீ ச்சீ.. அழகான அதுவும் பேரழகான பெண். முதல் முறை என்பதால் ஒரே படப்பிடிப்பாக இருந்தது.

எப்போதும் ‘குளிச்சிட்டு காலேஜுக்கு போடா’ என்று கத்தும் அப்பா, இன்னைக்குன்னு பார்த்து கத்த மறந்ததால், கொஞ்சம் கிளாமர் குறைந்திருந்தது, கண்டிப்பாக அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது, குட்டிகுரா பவுடரின் மனம் அதை கவர்செய்திருக்க வேண்டும் என்றே என் கணிப்பு. பேசவேண்டும் என்ற ஆவல் அவளிடம் அப்பட்டமாக தெரிந்தது, எப்படியும் பேசிவிடுவாள் என்று நான் உறுதியாக நம்பினேன், ‘ஆனா, இங்கிலீஸ்ல பேசிவிட்டால்? என்ன பண்ணுறது என்ற கவலை ஓப்பன் செய்த பீர் பாட்டில் போல பொங்கிக்கொண்டு வந்தது. அதையும் மீறி இங்கிலீஸ்ல பேசினா, ‘நான் ஊமை’ன்னு தமிழ்ல சத்தம்போட்டு கத்திக்கொண்டே இடத்தை காலி பண்ணிறலாம்' என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நம்பினார் கைவிடப்படார்.

‘மணி என்ன?’ என்று கேட்டால்,

அண்ணான்னு சொல்லாத ஆனந்ததில் ‘7.45’ என்று சொன்னேன்.

‘காலேஜா?’

‘ம்ம். மெப்கோ,’

‘அது எங்க இருக்கு?’ (என்னது எங்க இருக்கா? சேரும் போது பச்சபுள்ளைகிட்ட கேட்டா கூட எங்க காலேஜைப் பற்றி பக்கம் பக்கமா சொல்லும்னு சொன்னானுங்களே, படுபாவீங்க, நாசமா போவானுங்க என சாபம் விட்டு)

‘சிவகாசிக்கும் விருதுநகருக்கும் இடையில இருக்குது’. என்று ஜொல்லினேன்.

‘அச்சச்சோ ரொம்ப வெயில் கொளுத்துமே? குற்றாலத்துக்கு பக்கத்துல இருந்துட்டு எப்படி சமாளிக்கிறீங்க?’ ன்னு கேட்டதுமே முடிவே பண்ணிட்டேன். காலேஜைப் பார்த்துவிட்டு பெத்த அப்பன், ஆத்தாகூட கவலைப்படாத இந்த விசயத்தை பற்றி ஒரு பொண்ணு கவலைப்படுதுன்னா என்ன அர்த்தம்? அதுதானே அர்த்தம்? அதே தான். என முடிவுபண்ணி, முறையா போய் பொண்ணு கேட்போம் இல்ல, நொல்லன்னு சொன்னானுங்கன்னா பொண்ண தூக்கிருவோம் என சபதம் எடுத்த நேரத்தில், பஸ் வந்து நின்றது.

நல்லவேளை, பஸ்ஸில் கூட்டமே இல்லை, புளியங்குடி போகுறவரை வருத்துக்கொண்டே செல்லலாம் என எண்ணியபோது, எருமையில வந்த எமன் மாதிரி ‘பாப்பா, நீ முன்னாடி போ, தம்பி நீங்க இந்த சீட்டுல உட்காருங்க’ ன்னு சொல்லி பாழாப்போன பஸ் கண்டெக்டர் கட்டிக்கொண்டிருந்த கனவுக் கோட்டையில் கருப்பு பெயிண்ட் அடிச்சிட்டான். அவள் நிருத்தம் வந்த பின்பும் அந்த பிரிவின் வலி அவள் கண்களில் தெரிந்தது. நான் பார்க்க, அவள் பார்க்க, பஸ் போக, அவளுடைய நினைவுகளில் நானும் போக, நாசமாப் போன காலேஜ் வந்துவிட்டது.

‘காலேஜ் பக்கமாக இருக்குது என்பதற்காக மாசம் மாசம் வரக்கூடாது, ரெண்டுமாசத்துக்கு ஒரு தடவ வந்தா போதும்’ என்று அப்பா சொன்னது எல்லாம் ஞாபகத்துல வச்சிக்கிட்டு, அடுத்த வாரமே ‘அத்தாச்சிய ரொம்ப தேடுது’ ன்னு அழுதுகொண்டே வீட்டுல வந்து நின்னுட்டேன். ‘வருங்காலத்தை கரெக்டா கணிச்சு, உலகம் 2050 ல இப்படித்தான் இருக்கும், அதுக்கு ஏத்தமாதிரி நாம இந்தகாலத்துல இப்படித்தான் வாழணும்’ என்று பிளான் பண்ணி வாழ்ந்த என் நண்பன் பெயர் அயூப் கான்.

‘இப்ப என்னோட வயசு 20, எனக்கு எப்படினாலும் 27 வயசுல கல்யாணம் பண்ணிவைப்பாங்க, நம்ம ஊர் நிலவரப் படி பார்த்தால், கல்யாண பொண்ணுக்கு வயசு கண்டிப்பா 18 ஆகத்தான் இருக்கவேண்டும்’ என கணக்கு எல்லாம் பக்காவா போட்டு ஆறாவது வகுப்பு படிக்குற பெண்ணை அப்போது லவ் பண்ணிக்கொண்டிருந்தான். அவனிடம் நடந்த விசயத்தை எல்லாம் சொல்லி, ‘நாளைக்கு காலையில அந்த பொண்ண போய் பஸ்டாப்புல பார்க்குறோம், நீ ரெடியா இரு’ என்று சொல்லி முடிக்குறதுக்குள்.

‘அந்த பொண்ணு பேரு, பர்ஹானா. இரசலியா புரம் தெருவில் இருந்து வருகுது, புளியங்குடியில் +2 படிக்குது. அந்த பொண்ணோட அப்பா மெயின் ரோட்டுல பலசரக்கு கடை வச்சிருக்காரு...........................’ என லிஸ்ட் நீள, எனக்கு நா வரண்டு, கண்ணு ரெண்டும் சைடுல சொருகிடுச்சு.

 ‘டேய், அயூப்பு நீயுமாடா?’ என கவுரவ பட சிவாஜி எபெக்ட்டுல நெஞ்ச பிடித்துக்கொண்டே கேட்க. ‘ஆறாவது வகுப்பு படிக்கிற என் ஆள கவுத்துரதுக்கு, ரைம்ஸ் படிக்கவே நேரம் சரியா இருக்குது, இதுல அது வேறயா’ என அவன் கூற

‘அப்ப வேற யாருடா?’ என்று கேட்டேன்.

அதற்கு அயூப், ‘வேற யாருடா இல்ல, வேற எத்தன பேருடா? ன்னு கேளு’ என்றான்.

என்னடா சொல்லுற?.

‘அன்னைக்கு நீ ஏறுனது வேணும்னா பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்ஸா இருக்கலாம், ஆனா அந்த பொண்ணு எங்கும் நிற்கும் பஸ்மாதிரி. உங்க சொந்தத்திலேயே 5 பேரு ஏறுனா அந்த பஸ்ஸுலதான் ஏறுவேண்ணு நிக்குறானுங்க, அவங்க யார் யாருன்னா...............’

என் கல்லூரி நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி, சனிக்கிழமை காலை வந்து சேர்ந்த ஒரு நாள் உண்டு என்றால் அது அன்று மட்டும்.

ஸ்டார்ட் மியூசிக்.

♫♫♪ இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா....
அவங்க கண்ணு ரெண்டும் கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா....♫♫♪♫♫♪♪


------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

ஞாயிறு, ஜூன் 01, 2014

ஆண்டுவிழாவும் அய்யணார் பாண்டியும்.


“கையெழுத்து எப்படி இருக்குமோ அப்படித்தான் தலையெழுத்தும் இருக்கும்” ன்னு சொல்லி சொல்லி பயங்காட்டியே அழகா எழுதவச்ச ‘எஜுகேட்டட் பேமிலி’ யின் முதலாவது பட்டதாரி நான். ‘எழுதுற எழுத்து அச்சுக்குண்டா இருக்கணும்டா’, ‘கண்ணுல ஒத்திக்கற அளவுக்கு இருக்கணும்டா’ போன்ற வசனங்கள் பத்தாவது பரீட்சை எழுதுவது வரைக்கும் தொடர்ந்தது. ‘இதுக்கு மேல நாய் வாலை நிமித்த, குழலைச் சொரிகிவைத்தாலும், குழல்தான் வளையும்’ எங்கிற உலக உண்மை நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவர்களுக்கு தெரிந்தது.

அழகா இல்லை என்றாலும் மோசமாக இல்லை என்கிற அளவுக்கு என் கையெழுத்து இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் எங்க வீட்டுக்கு அடுத்தவீட்டில் இருந்த சாகுல் ஹமீது தான். சுத்துப்பட்டு பதினெட்டுப் பட்டி கிராமத்திலேயே அவரு மட்டும்தான் எம்.ஏ படித்தவர், முஸ்லீம் என்றாலும் ஹிந்து பத்திரிக்கை வாங்கிப் படித்தவரும் கூட. ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை இப்போது நாம கம்யூட்டரில் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் அவர் எழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு வாக்கியத்தை எழுதிக்கொடுத்தால், அரைமணி நேரம் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இன்னும் கையெழுத்து என்றால் அவர் பெயர்தான் என் நினைவுக்கு வருகிறது.

பள்ளிக்கூட காலங்களில் பொறாமைப்பட வைத்தது அய்யனார் பாண்டியன், மற்றும் முருகையா ஆகியோரின் கையெழுத்து. அய்யனார் பாண்டியன் கையெழுத்து அழகாக இருக்கும், ஆனா ஒவ்வொரு எழுத்தும் அத்தி தண்டி தண்டியா இருக்கும். ஆய்வாளருக்கு மனு எழுத சொன்னா, ஆயிரம் பக்கமாவது ஆகும். ‘ஐயா, வணக்கம்’ என்பதே அஞ்சு பக்கத்துக்கு வந்திடும். ‘டேய், அய்யானாரு எழுத்த குண்டு குண்டா எழுதுறது தப்பில்லை, அதுக்காக குண்டுகல்யாணம் சைசுக்காடா எழுதுறது?’ என்று ஒரு வாத்தியாரே கமெண்ட் அடிச்சது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கும். பரீட்சை ஹாலில், நாங்க நாலு பக்கம் கொண்ட மெயின் சீட்டில், இரண்டாவது பக்கத்தை எழுதும் போது அவன் அடிசனல் சீட் ஆறு வாங்கியிருப்பான். அவனுக்கு மட்டும் பேப்பரைக் கட்ட நூலுக்கு பதிலாக சணல் கயிறே தேவைப்படும்.

‘அம்பது பக்கத்துக்கு எழுதி எம்பது மார்க் எடுக்கும் நீ அறிவாளியா? இல்ல பத்து பக்கம் எழுதி அம்பது மார்க் எடுக்கும் நான் அறிவாளியா?’ என்று அவனிடம் லந்தை கொடுக்குறதுண்டு. ‘உன்னமாதிரி நானும் அம்பது பக்கம் எழுதியிருந்தால், என்னோட மார்க் 250 தாக்கும். மைண்டிட்’ ன்னு சொல்லி தெரிக்கவிடுறது மட்டும் எங்களுடய அப்போதைய ஒரே ஆருதல்.

அய்யணார் பாண்டிக்கு எக்ஸ்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்னா ரொம்ப பிடிக்கும், பாட்டுப் படிப்பது, டான்ஸ் ஆடுவது, நடிப்பது, இந்தமாதிரி அனைத்து திறமைகளையும் தன்னகத்தே கொண்ட தாடியில்லா டி.ராஜேந்திரன் அவன். ‘இந்த வருட ஆண்டுவிழாவை அதகளப்படித்திடனும்’ என்று ஆசிரியர் கூட்டம், கங்கனம் கட்டிக்கொண்டு, பரதேசி மாதிரி இருந்தவனிடம் ‘எல நீ பிரபுதேவா மாதிரிலா இருக்க, நீ முக்காலா, முக்காப்புலா பாட்டுக்கு ஆடு’, நியூஸ் ரீலில் பேமஸ் குட்கா மகேஷ் குரல் மாதிரி இருந்தவிடம் போய் ‘ஏல... இம்புட்டு நாளு நீ எங்கயிருந்த, ஏய் என்னமா பாடுத, நீ தான் மெலோடி சாங்க் பாடுத’ என கிடச்சவன எல்லாம் நீ டான்ஸ் ஆடு, நீ பாட்டுப்பாடு என உசிரெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எப்படியோ படாத பாடுபட்டு ஒரு லிஸ்டை ரெடி பண்ணி, தலைமையாசிரியரிடம் நீட்டியவுடன், லிஸ்டில் இருந்த பத்துப்பேரில், பாதிபேரை நீக்கிவிட்டார். ‘என்னையா இது? எல்லாம் பத்தாவது, பனிரெண்டாவது படிக்கிற பயலுகளா இருக்கானுங்க. இப்படி டான்ஸ், பாட்டுன்னு இழுத்துவிட்டா, பிறகு பரீட்சை ரிசல்ட் டான்ஸ் ஆடிடும் தெரியும்ல, போங்க போயி அந்த பயலுகளுக்கு பதிலா +1 அய்யணார்கிட்ட ஒரு நாடகம், டான்ஸ்க்கு ஏற்பாடு பண்ணசொல்லுங்க.’ என்று தலைமை ஆசிரியர் சொல்ல, அடுத்த பத்தாவது நாள் நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி. பத்து ஒரு குயர் நோட்டுப் போட்டு ஸ்கிரிப்ட் / திரைக்கதை எழுதியிருந்தான். நல்ல வேளை நாடகம் பதினைந்து நிமிடம்னு முன்னாடியே சொல்லிட்டானுங்க, இல்லன்னா ஸ்கிரிப்ட் பேப்பரை கொண்டு வர மாட்டுவண்டியத்தான் அனுப்பியிருக்கனும். படித்த மூன்று இளைஞர்களின் கதை பற்றிய நாடகம் அது. அந்த நாடகத்தைப் பற்றி இப்ப கேட்டாலும், கழுவி கழுவி ஊத்துவானுங்க. அவ்வளவு மொக்கையான நாடகம். பகவதி பாதி, வேட்டைகாரன் மீதி மிக்ஸ் பண்ணி படம் எடுத்தமாதிரி.

ஆனாலும், அய்யனார் பாண்டி மற்றும் அவனுடன் நடித்த ரெண்டு பேரு மட்டும், நாடகம் சூப்பர் ஹிட், உலக நாடக மேடையிலே இதுமாதிரி கிடையாதுங்குற ரேஞ்சுக்கு பீலா விட்டுக்கொண்டு இருந்தார்கள். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழித்து அந்த ரெண்டு பேரில் ஒருத்தனுக்கு உண்மை தெரிந்து ‘ஆமாம் அது ஒரு மொக்கையான நாடகம்’ னு தைரியமாக ஒத்துக்கொள்ள பல வருடங்கள் தேவைப்பட்டது. கடைசி வரை அய்யனார் பாண்டியனுக்கும், அந்த மற்றொருவனுக்கும், என்னைப் போல தைரியம் வரவில்லை.

நாடகம் முடிந்த கையோடு அய்யணார் பாண்டியனின் டான்ஸ் ஸோலோ பெர்பாமன்ஸ். பிஸ்தா படத்தில் ‘வில்வெட்டா, வில்வெடா வில்ல, வில்ல வெட்டட்டா....’பாடலுக்கு. நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கும் போது, நாங்க எவ்வளவு கெஞ்சியும் ஆடிக்காட்ட மாட்டேன்னு அடம் புடிச்சாப்புடி. ‘எல்லோரும் ஸ்டேஜில பாருக்க, இப்பவே ஆடிக்காட்டுனா உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்காது’ என ஏக போக பில்டப். நாடகம்தான் பிளாக்பஸ்டர் பப்படம் ஆகிடுச்சு, அய்யணார் டான்ஸ் ஆடி பிக் அப்லாஸ் வாங்கி நம்ம கிளாஸ் மானத்தை காப்பாத்திடுவாருன்னு ஆவலுடம் எதிர்பார்திருந்தோம்.

நாலு நிமிச பாட்டுல முதல் ஒரு நிமிசம் பேக் சாட்டுல திரும்பி நின்னாப்புல, அடுத்த ஒரு நிமிசம் இடது பக்கமா போயி கைய சுத்தி சுத்தி முருக்கு சுட்டாப்புடி, அடுத்த ஒரு நிமிசம் வலது பக்கமா போயி அதே மாதிரி இன்னொரு முருக்கு சுட்டாப்புடி. கடைசி ஒரு நிமிசம் செண்டரா வந்து கைய முருக்கி முருக்கி சுட்ட முருக்கு எல்லாத்தையும் எடுத்து சாப்பிடாப்பிடி. ஸ்டேஜிக்கு போகுறதுக்கு முன்னாடி ‘நவரச நாயகன் கார்த்திக் மாதிரி ஆடுவேன் பாரு’ ன்னு சொல்லிட்டுப்போனவன் அந்த பாட்டுல வர்ற கவுண்ட மணிய விட மோசமா டான்ஸ் ஆடுனதை நென்ச்சாலே ரொம்ப பீலிங்க்ஸ் ஆவுது. டான்ஸ் பாக்குற முன்பு வரை நாடகம் ஒரு குப்பை, பெரிய மொக்கை என சொன்னவன் எல்லாம், டான்ஸ் பார்த்த பின்னாடி நாடகம் சூப்பர் சூப்பர்னு ‘அது இது எது’ மாக்காப்பா மாதிரி கைதட்டி பாராட்டினாங்க.

ஆக்சுவலா, அ.பாண்டி எங்களுக்கு ஒரு செட் முந்தியவர், திடீர் சுகவீனத்தால், ஒரு வருடம் நஷ்டப்பட்டு எங்களுடன் +1ல் படிப்பை தொடர்ந்தவர். நாங்க எப்போது அய்யனார் அண்ணன் என அழைத்தாலும், வயது வித்தியாசம் பார்க்காமல் நாங்க கொடுக்கும் லந்தையும், செய்யுற நக்கலை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பாசத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்த சிறந்த நண்பர். பள்ளிக்காலத்துக்கு அப்புறமா ஒரு நாலுவருடம் கழித்து ஒரே ஒரு முறை போனில் பேசியது, அப்புறம் டச்சே இல்லாம போச்சு. எப்பவாவது பார்க்கும் போது நாடகத்திலும், டான்ஸிலும் ஏற்பட்ட தவறுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மனசு பூரா நட்போடு காத்திருக்கும் தம்பி.


--------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.