திங்கள், ஆகஸ்ட் 24, 2015

கந்தூரி விழா

எழுத்தாளர் சுஜாதா, வீட்டில் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும்படி வைத்திருப்பாராம்.  எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும் என்ற காரணமாம். அதனால்தான் அவரால் அதிக புத்தகங்களை படிக்கமுடிந்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல நாமும் முயற்சிக்கலாம் என்று, ரூமில் ஒரு புத்தகம், ஆபிஸில் ஒரு புத்தகம், தினந்தோரும் செல்லும் மச்சான் ரூமில் ஒரு புத்தகம், பார்க்கிங்க் கிடைக்காமல் காரில் இருக்கும் போது படிப்பதற்காக ஒரு புத்தகம்...... என எல்லா இடத்திலும் வைத்திருந்தேன். காரில் புத்தகம் வைக்கும் போது கொஞ்சம் ஓவராத்தான் போறோம்மோன்னு எனக்கே தோணுச்சு. ஒரு புத்தகத்தையாவது படிச்சியா? என்று நீங்கள் தமிழில் கேட்டால், நான் ‘லா’ என்று அரபியில் பதிலுரைப்பேன்.

நேற்று, ரூமில் வைத்திருந்த சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’ புத்தகத்தை படிக்க திறந்தேன். இஞ்சினியரிங் முதலாமாண்டு கெமிஸ்டரி புத்தகத்தை முதன்முதலாக திறக்கும் போது உடலில் சில வேதியல் மாற்றங்கள் உண்டாகி வந்தது பாருங்க ஒரு தூக்கம்......அதே தூக்கம் திரும்ப தேடி வந்தது. ஆனால் படித்த அந்த இரண்டு பக்கங்கள் என்னை, ஏர்கண்டிசனுடன் கூடிய என்னுடய டவுஸர் காலத்துக்கு இழுத்துச்சென்றது.

அந்த புளியமரம் தர்ஹாவின் காம்பவுண்டுக்கு உள்ளே இருந்ததா? வெளிப்புறமாக இருந்ததா? என்ற ஞாபகம் கூட இப்போது எனக்கு இல்லை. அதில் தான் கந்தூரியின் இரண்டாவது கொடியை கட்டுவார்கள். ரொம்ப வயதான மரம், கிழம் தட்டிய மனிதனின் தோல் போல இருக்கும். மரம் முழுவதும் செதில் செதில்களாக இருக்கும். அடிக்கடி பொக்கு கிளைகள் கீழே விழுந்த வண்ணம் இருக்கும். ஆனாலும் அதன் புளியம் பூவும், பழமும் இன்னும் நாவில் எச்சிலை ஊறச் செய்கின்றது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நாங்கள் அதைச் சுற்றி சுற்றியே இருந்தோம். எங்களை விரட்டி அடிக்க எத்தனையோ கட்டுக் கதைகள் சொன்னாலும் புளியமரமே கதி என்று கிடந்தோம். பொக்கு மரமாக இருந்ததால், பாம்பின் புகழிடமாகிவிட்டது. பின்பு ஒரு நாளில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் போது கை, கால், தலை, உடல் என வெட்டிச் சாய்க்கப்பட்ட மனிதனைப் போல் துண்டு துண்டாக கிடந்தது.

எங்கள் தெருவில் ஒரு அவுல்யாவின் அடக்கஸ்தலம் இருக்கிறது. இதுபோன்ற அடக்கஸ்தலங்களுக்கு தர்ஹா என்று பெயர். இவருடய பெயரிலேயே நிறைய தர்ஹாக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. எக்ஸாக்டாக எந்த இடத்தில் அந்த அவுல்யா முக்தியடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாரா? என்பதுகூட கேள்விக்குறி. பண்டைய காலத்தில் பெரிய நிலபிரபுகளிடம், நிலத்தை ஜமாத்திற்கு ஆட்டயப்போடுவதற்காக இதுபோன்ற அவுல்யாக்கள் தேவைப்பட்டார்கள்.  இவர்கள்தான் இஸ்லாத்தை ஊர் ஊராக சென்று பரப்பியவர்கள். அவர்களின் ஞாபகாற்தமாக அவர் நின்ற, திண்ற, உறங்கிய இடங்களை சமதியாக மாற்றி ஜாமாத் நிறைய சம்பாத்தியம் செய்துகொண்டிருந்தது.

இதுபோன்ற தர்ஹாக்களில் தொழுகை நடக்காது, ஏதாவது வேண்டுதல் இருந்தால், 50 மில்லி எண்ணெயை அங்கு இருக்கும் விளக்கில் ஊற்றிவிட்டு அந்த அவுல்யாவிடம் அல்லாவிடம் ரெக்கமண்டேசன் பண்ணச் சொல்வார்கள். வேண்டுதலைப் பொறுத்து, மில்லி லிட்டரின் அளவு கூடும். எண்ணெய் வாங்குவதற்காக பக்கத்திலேயே ஒரு கடை இருக்கும். நாம் ஊற்றிய எண்ணெய் இரவில் திரும்ப பாதி விலைக்கே அந்த கடைக்கு வந்து சேர்ந்துவிடும். சிலபேர்கள் அவுல்யாக்களையே அல்லா என நம்பி, விம்பி விம்பி அழுது பிராத்தனை செய்வார்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாருகள் செய்யும் தவறுக்கு, பாவம் அவுல்யா அல்லாவிடம் அடிவாங்கிக்கொண்டிருப்பார். ப்ளஸ் ஒன் படிக்கும் போது மாதத் தேர்வில் ஆங்கிலத்தில் ஜஸ்ட் 45 எடுத்தா போதும் என்று பிராத்தனை செய்து நானும் எண்ணெய் ஊற்றினேன். ஆனால் எடுத்த மார்க்கிற்காக அந்த வாத்தியார் அடித்ததில், பால் ஊற்றும் நிலைக்கு முந்திய நிலை வரை சென்று தப்பித்தேன். அன்றிலிருந்து அவுல்யா என்னிலிருந்து அப்பிட் ஆகிவிட்டார்.

வருடம் தோறும் இதுபோன்ற தர்ஹாக்களில் கந்தூரி விழா நடக்கும். கொடி எடுப்பது, சந்தனக்கூடு எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இது எதுவுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது கிடையாது, தர்ஹா உட்பட. இதுபோன்ற கந்தூரிவிழாவிற்கான காரணம் ரொம்ப எளிது. நாங்க எல்லாம் சுமார் 5 அல்லது 6 தலைமுறக்கு முன்பாக இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள்.  இஸ்லாத்திற்க்கு வந்த புதிதில், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது அனைவரும் கோவில் திருவிழாவிற்குச் செல்ல, பள்ளிவாசலில் கூட்டம் பல்லிழித்துக் கொண்டிருந்தது. மார்க்க அறிஞர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தயையும் இறக்கிப் பார்த்தும் பயனில்லை. இன்னும் பயிற்ச்சி தேவைன்னு புரிந்துகொண்டார்கள்.

இப்படி போனால் சரிவராது என்பதை உணர்ந்து, இஸ்லாத்திற்க்கு மாறியவர்களை இஸ்லாத்திலேயே பெவிக்கால் போட்டு உட்காரவைக்க, அறிஞர்களின் போர்டு மீட்டிங்கில் உருவானதுதான் இந்த கந்தூரி விழா. கிட்டத்தட்ட ஆடல், பாடல் தவிர்த்து அனைத்துமே கோவில் திருவிழாவை ஒத்தே கந்தூரி விழாக்கள் இருக்கும். தேருக்கு பதிலாக சந்தனக்கூடு போல. சில ஏரியாக்களில் தீ மிதி விழாக்கள் கூட கந்தூரி விழாக்களில் உண்டு.  சென்ற முறை கந்தூரி விழாவில், எங்கள் ஜமாத் தலைவர் ஆடிய குத்தாட்ட வீடியோவை பார்த்த போது வரும் ஆண்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்படி உண்டு என்றால், ரீட்டாவை புக் செய்ய சில பல போராட்டங்களை கையிலெடுக்கவேண்டும். ரெண்டு கொடி ஏற்றுவார்கள் முதல் கொடிக்கும் இரண்டாவது கொடிக்கும் பத்து நாள் இடைவெளி. பதினோராவது நாள் வெடியுடன் கந்தூரி இனிதே முடியும்.

வீட்டுக்கு வீடு பிரசாதமாக, ‘’மால்ஸா’’ கிடைக்கும் மாவில், வெல்லம் எல்லாம் போட்டு கொடுப்பார்கள், துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் பேமிலி என்றால் தேங்காய், பால், பழம் போட்டு ஒரு வகையான பிரசாதம் தருவார்கள். அதற்காகவே யானையில், கொடியை தூக்கிக்கொண்டு செல்லும் போது பின்னாடியே போகவேண்டும். இளவட்ட பசங்க எல்லோரும், தனது டாவு இருக்கும் வீட்டிற்க்கு முன்பாக வாத்தியக் கோஷ்டியை நிறுத்தி 10 ரூபாய் கொடுத்து நலந்தானா வாசிக்கச் சொல்லுவார்கள். எந்த வீடு, டாவு பெயர் என்ன? எனபதை விசாரித்து, அண்ணன் வரும் போது ‘’அண்ணேய் பாத்திமா அக்காவாண்ணே’’ என கோரஸாக சொல்லவேண்டும். இதெல்லாம் அவர் வாங்கி கொடுக்கும் கலர் தண்ணிக்காகத்தான் என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. ஆண்கள், அக்கா-தங்கச்சி வீட்டிற்கு கந்தூரி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அனுப்புவார்கள். அந்த பாக்ஸ் ஓலப்பாயில் செய்ததாக இருக்கும் அதில் இத்துப்போன இனிப்பு சேவும், செத்துப்போன ஜிலேபியுடன், சில மைசூர்பாகுவு இருக்கும்.

கொடி எடுப்பதற்க்கு முன்பாக, யானைக்கு பட்டு துணி, அலங்காரம் எல்லாம் செய்து தர்ஹாவிற்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்துவார்கள். பெயருக்கு ஏதோ அரபியில் ஓதி பழம் கொடுத்து யானையை ஒதுங்க சொல்லிவிட்டு அடுத்த அரை மணி நேரம் அமைதியே உருவான அவுல்யாவின் கல்லறைக்கு பக்கத்தில் டிரம்ஸ் கோஷ்டி ‘’நேத்து ராத்திரி எம்மா,,,,’’ போன்ற இரவு பனிரெண்டு மணிக்கு ஒலிபரப்பும் பாடல்களை மதியம் ஒரு மணிக்கு தெரிக்கவிட்டுக் கொண்டிருப்பார்கள்.  கல்லறையில் மல்லாக்க படித்திருக்கும் அவுல்யா குத்துப்பாட்டை கேட்டு கவுந்துபடுத்துவிடுவார்.

இரவில் சந்தனக்கூடு கொண்டு வரும் போது அதனுள் ஒருவர் நடந்துவருவார். உள்ளே இருப்பதால் நமக்கு அவரின் முகம் தெரியாது,. சந்தனக்கூடைச் சுற்றி கலர் கலர் பேப்பர்களும், லைட்டுகளும் மின்னும். முதலில் நான் ஏதோ எலக்ட்ரிசன் என்று எண்ணிக்கொண்டேன். பின்பு ஒரு நாளில்தான் தெரிந்தது, ஏதாவது வேண்டுதல் நிறைவேற அப்படி செய்வார்களாம். தீ பந்தம் சுற்றுதல் என்ற பெயரில் ச.கூடு முன்பாக எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். சிலம்பம் சுற்றுவதற்கு வெளியூர் ஆள் கிடைக்கவில்லை என்றால், எங்கள் ஊரில் யாரையாவது செட்டப் செய்து, போக்கிரி படத்தில் வரும் பஜக், மொஜக், டொஜக்.... ஸ்டைலில் மாறி மாறி அடித்துக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் கால ‘’கல்யாண மாலை’’ நிகழ்ச்சியே இந்த கந்தூரி விழாக்கள்தான். ஊரில் இருக்கும் அனைத்து பெண் பிள்ளைகளும் வந்துவிடுவார்கள். பெண்கள் வெளியில் தலைகாட்டுவதற்கான ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். பெண் போட்டோ கொடுத்து திருமணம் செய்யும் செய்யும் பழக்கமோ, மாப்பிள்ளை பெண் பார்க்கும் பழக்கமோ எங்கள் ஊரில் இல்லாததால், இது போன்ற சந்தர்பங்களில் பெண்களை செலக்ட் செய்து வீட்டில் பெரியவர்களிடம் கூறுவார்கள். அதனால்தான் கந்தூரி விழா முடிந்த மறு மாதம் கல்யாண சீசனாகவே இருக்கும்.

இஸ்லாத்தில் புரட்சி செய்ய கிளம்பியவர்கள், பெண்களின் கல்வி முன்னேற்றம் என பல காரணங்களினால் இப்போது கந்தூரி விழாக்கள் நீர்த்துப்போய்விட்டன. கந்தூரி விழா கூடாது என முழங்கும் புரட்சியாளர்கள்தான் பெண்களைக் காண முதல்வரிசைக்கு முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். தர்ஹா காம்பவுண்டில் ஜமாத்தின் கல்யாண மண்டம் வந்துவிட்டது. கோடி, கோடியாய் முழுங்கிவிட்டு இன்னும் முழுமை பெறாத அந்த கல்யாண மண்டம், தனக்கும் முழுங்கிய கோடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற தோறனையில் இருக்கின்றது.


---------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

டியர் மோடி

ஸ்ரீமான் மோடி அவர்களே.............. என்று தொடங்குவதற்கு என்னை மன்னிக்கவேண்டும், எனக்கும் தங்களை மோடிஜி என்றே அழைக்க ஆசை, ஆனால் அஜித்தின் தீவிர ரசிகரான நான் ‘’ஜி’’ படத்தை பார்த்ததிலிருந்து அந்த வார்த்தையை/எழுத்தை தவிர்க்கவே எண்ணுகின்றேன். தங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தால் அந்த காவியத்தைக் கண்டு என் மனதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். 

நான் அபுதாபியில் இருக்கின்றேன். பாருங்கள், நீங்கள் இங்கு வந்திருந்தபோது, நான் வேலை செய்யும் இடத்திற்கு மிக அருகில் தங்கியிருந்தது பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல் இருந்துவிட்டேன்.  தாங்கள் இருக்கும் இடம் முன்பே தெரிந்திருந்தால், பிரட்சனைகளைப் பற்றி பேசவேண்டும் என்றால் அனுமதி கிடைத்திருக்காது, செல்ஃபி எடுக்கவேண்டும் என்று கூறி என் நண்பனின் ஆப்பில் ஐபோன் 6 எடுத்துக்கொண்டு வந்து உங்களை சந்தித்து இருப்பேன். காலம் நம்முடய சந்திப்பை காலதாமதப்படுத்துவதை எண்ணி வருந்துகின்றேன்.

தங்களின் வருகையால், அபுதாபியில் கோவில் வரப்போகும் செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சி. முன்பு கோவில் செல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் துபாய் வரை செல்லவேண்டி இருந்தது. மாலையில் கோவில் செல்லவேண்டும் என்றால், அன்றய தினம் காலை, மதியம் எங்கள் மெஸ்ஸில் சைவ உணவாகவே இருக்கும். ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு வெள்ளிக்கிழமை மட்டன் பிரியாணி கிடைக்காதன் வலியை நீங்கள் உங்கள் கட்சியில் இருக்கும் முக்தர் அப்பாஸ் நக்வியிடமோ அல்லது நஜிமா ஹெப்துல்லாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அபுதாபியில் கோவில் வந்துவிட்டால் காலையிலேயே, கடவுளை தரிசித்துவிட்டு, மதியம் மட்டன் பிரியாணிக்கு வழிசெய்தமைக்காக கோட்டான கோடி நன்றிகள்.

தாங்கள் இந்த நாட்டின் பட்டத்து இளவரசரின் உபசரிப்பை புகழ்ந்து பேசியதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. இப்போதும் கூட இஞ்சிபருப்பான் பாக்கெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டே டைப் செய்துகொண்டிருக்கின்றேன். தாங்களின் வருகையையொட்டி நகரில் ஒரு போஸ்டர் ஒட்டவோ, பிளக்ஸ் வைக்கவோ அனுமதியளிகவில்லை. இருந்தாலும் விடுவோமா? பேஸ்புக்கில், புர்ஜ் கலிபாவில் இந்திய கொடி லைட்டிங்க் செய்ததாக போட்டோ ஷாப் செய்து பரப்பினோம். குமரி முத்து கண்கொண்டு கண்டாலே அது ஒரு போட்டோஷாப் என்று அப்பட்டமாக தெரியும், ஆனாலும் ஆயிரத்துக்கு மேல் லைக்குடன் நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்தமுறை வரும்போது குஜராத்தில் இருந்து கைதேர்ந்த போட்டோஷாப் வல்லுனர்களை முதலிலேயே அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் நீங்கள் பேசியது போலவே, அபுதாபி ஐ-காட் லேப்பர் கேம்மில் வசிக்கும் லேபர்களிடம் ’’உங்களால் இந்தியா பெருமை அடைகிறது’’ என்று பேசியதை எண்ணி இங்குள்ளவர்கள் புலங்காயிதம் அடைந்தனர். சொகுசாக வாழ அமெரிக்கா சென்றவர்களிடம் அந்த வசனம் ஓகே, ஆனால், சொந்த நாட்டில் சோத்துக்கு வழியில்லாமல் அந்நிய நாட்டில் கொத்தடிமைபோல் இருப்பதற்கு இந்தியா ஏன் பெருமையடையவேண்டும்? மாறாக ஆட்சி செய்தவரகளும், ஆட்சி செய்பவர்களும் வெட்கப்படவேண்டும் .என்று எவனும் கேள்வி கேட்கவில்லை. ஏன் யோசிக்கக் கூட இல்லை. அதுதான் உங்களின் வெற்றி.

‘’தொழிலாளர் நலம் பேணப்படவேண்டும், மனிதாபிமானத்துடன் தொழிலாளர்களை நடத்தவேண்டும்’’ என்று நீங்கள் கட்டளையிட்டபோது, ஆசான வாயையும் சேர்த்து மூடியபடி அந்த அரபி அதிகாரி தலையாட்டியதாக ஒருவர் கூறக்கேட்டேன். அதைச் சொல்லும் போது அவருக்கு புல் அரித்திருந்தது, எனக்கோ....... ஃபுல் அடித்ததுபோல் இருந்தது. அந்திய நாட்டில் வந்து இவ்வாறு அறைகூவல் விடுக்கும் தாங்கள், சொந்த நாட்டில் நசுக்கும் தொழிலாளர் நல வாரியங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வைப்புத்தொகையில் கை வைப்பதில் இருந்து, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை சட்டவிரோதமாக மாற்ற நினைப்பது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊனமடைந்த ராணுவ வீரர்களின் சலுகையில் கைவைப்பது  வரை, பாவம் இந்த அரபு நாட்டு அடிமைகள் அறியவில்லை.  அது உங்களின் அடுத்த வெற்றி.

பத்து வருடத்திற்கு மேல் இந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூரில் இருப்பது போல குடியுருமை வழங்க ஆவணசெய்வீர்கள் என்று எண்ணினோம். அது நடக்காமல் போனது சற்று ஏமாற்றம்தான். இருப்பினும் அடுத்த ஊழல் பிரட்சனை உருவெடுக்கும் போது தாங்கள் இன்னொரு முறை இங்கு வருவீர்கள் என்பதால் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். 50,000 பேர் கூடிய அந்த வரலாற்று நிகழ்வு புகைப்படங்கள் சிலவற்றை காணக்கண்டேன். கம்யூட்டரில் இமெயில் ஓப்பன் செய்ய அறியாதவர்கள், தங்களைக் காண ஆன்லைனில் புக்கிங்க் செய்திருப்பதாக அறிந்த போதுதான் தங்களின் ஆற்றலைக் கண்டு ஆடிப்போனேன். உங்களுக்கு கூட்டிய, மன்னிக்கவேண்டும் கூடிய கூட்டத்தையும், நீங்கள் ஆற்றிய உரையையும் உளவுத்துறையிடம் கேட்டு இந்த நாட்டு மன்னரும், இளவரசரும் மெர்சலாகிவிட்டதாக ஒரு செய்தி. ராசல் கைமாவில் வெங்கையா நாயுடு, அஜ்மானில்  அருண் ஜெட்லி, சார்ஜாவில் சாக்ஷி மகராஜ், உம்மல் குயினில் உமாபாரதி, புஜைராவில் ராஜ் நாத் சிங், துபையில் சுஸ்மாஸ்வராஜ் ஆகியோறை களம் இறக்கி ஆட்சியைப்பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் போல உங்கள் பேச்சு இருந்தது. பலே.

நேற்று மதியம் ஒரு ஹோட்டலில் எனக்கு எதிர்தார்போல்  ஒரு தமிழர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். துபாயில் இருந்து ஆபிஸ் விசயமாக அபுதாபி வந்திருந்தார், பேச்சிற்கு நடுவே ‘’இன்னைக்கு சீக்கிரம் போகணும், மோடி பேச்சை கேக்கணும், எல்லோரும் அவரைக் காண ஆவலா இருக்காங்க, நீங்க வரலையா?’’ எனக் கேட்டார். ‘’இல்ல பாஸ், எனக்கு அதுல முன் அனுபவம் இருக்கு, அதனால நான் வரல’’ என்றேன். ‘’எப்படி, முன்னாடி மோடி மீட்டிங்கிற்கு போயிருக்கீங்களா?’’ என்று கேட்டார். ‘’இல்ல, ஆனா லிங்கா படத்திற்கு போயிருக்கேன்’’ என்று சொன்னேன். நான் கூறியதன் அர்த்தம் அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. கண்டிப்பாக நேற்று அவன் முன்வரிசையில் அமர்ந்து உங்கள் பேச்சை கேட்டிருப்பான். நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ‘’நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’’ என்று.

முதலீட்டாளர்கள் கூட்டத்தில், காங்கிரஸின் மந்தமான செயல்பாடுகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை, பல கோப்புகள்/திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன அதனை முடிக்கிவிடவே நான் வந்துள்ளேன் என நீங்கள் உள்நாட்டுஅரசியலை வெளிநாட்டில் வந்து பேசினீர்கள். ஆனால் தங்களின் கையெழுத்திற்காக ஆயிரக்கணக்கான கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் காத்திருப்பது பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதை நினைத்து நீங்கள் வாயை மூடி நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். சுதந்திர தின விழாவில், நாட்டில் ஊழலே இல்லை, கருப்பு பண நடவடிக்கை, சாதி, மத பேதம் பாராது........ என்று பேசியபோது தேமே என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் உங்களை நோக்கி வேறு என்ன கேட்டுவிடமுடியும்?. பேலன்ஸ் ஜீரோ என்றாலும் கோடிக்கணக்கானவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்த சாதனை உலக வரலாற்றில் தங்களுக்கு மட்டும்தான். இனி, 15 லட்சம் ரூபாய் பற்றி எவனாவது பேசினால், அதற்காகத்தான் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருக்கின்றோம் என்று அடுத்த 4 வருடங்களை ஓட்டிவிடலாம். அப்புறம் அதுவே அவர்களுக்கு பழகிவிடும்.

தாங்கள் பிரதமராக தேர்வானபோது எனக்கு மனவருத்தம் இருந்தது. இப்போது இருக்கிறதா? என்று எதிர் கேள்வி கேட்டு என்னை இன்னலுக்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றே எண்ணுகின்றேன். அதே அளவு சந்தோசம் காங்கிரஸ் தோல்வியால் இருந்தது. தமிழில் வின்னர் என்ற படத்தில் வருவது போல ‘’அந்த பொண்ண நீ லவ் பண்ணினா என்ன?, நான் லவ் பண்ணினா என்ன? மொத்தத்தில் அந்த குடும்பம் நாசமா போகணும் அவ்வளவுதான்’’ என்று காங்கிரஸை எதிர்த்துக்கொண்டு இருந்தேன். உங்களின் வெற்றியை கண்டபோது அது சாத்தியமாகலாம் என்று தோன்றியது. ஆனால், தற்போது தாங்கள் மறைமுகமாக, காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் ஆள் சேர்த்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. உடனடியாக ஆப்ரேஷன் ‘’போட்டோ ஷாப் போடுறோம் பார்’’ ஐ முடிக்கிவிட வேண்டும். ஆகையால் தாங்கள் அமெரிக்கா, ரஷ்யா, துபாயில் எடுத்த போட்டோக்களை, இது அஹமதாபாத், வதோத்ரா, ராஜ்கோட். சூரத் ன்ற கேப்சனுடன் உடனே தங்களது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யுமறு கேட்டுக்கொள்கிறேன்.

அபுதாபியில் கோவில் கட்ட 2013லேயே அனுமதியளிகப்பட்டுவிட்டதாமே?,
இதுவரை சென்ற நாடுகளில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் எவ்வளவு?
அபுதாபி ஷேக் கூறியிருக்கும் பல மில்லியன் டாலர் முதலீடு எதில்? எப்போது?
 ....................என்று கேள்வி கேட்பவர்களை தலைகீழாக தொங்கவிட்டு மூக்குப் பொடியை தூவும் ‘’பானபத்திர ஓனாண்டி’’ தண்டனைச் சட்ட மசோதாவை  உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும்.

மேலும் நிலுவையில் இருக்கும், விவசாய நில புடுங்கும் சட்டத்தை போர்கால நடவடிக்கையில் அமல்படுத்தி, இந்தியாவை பாலைவனமாக மாற்றி அதன்மூலம் சவுதி, குவைத், அபுதாபி போன்று பெட்ரோல், காஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

தாங்கள் இங்கு இருக்கும் வரையில், அபுதாபி சுட்சர்லாந்து போல குளு, குளு என்று இருந்தது, ஆனால் இன்றிலிருந்து மறுபடியும் சூடு ஆரம்பித்து, சூ........ (காலில் போடும்) வழியாக புகைவருவதால் இங்கு நிறுத்திக்கொள்கின்றேன்.

பாரத் மாத்தாக்கீ ஜே.


--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், ஆகஸ்ட் 12, 2015

மெஹர்.

மெஹர் கேரக்டரில் கவிதாயினி சல்மா. தலையில் முக்காடு இல்லாமல் நிறைய தி.மு.க மேடைகளில் பார்த்தவரை, முக்காடே கீழே விழாத மெஹர் கேரக்டரில் பார்க்கும் போது கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போனேன். இயக்குனர் தாமிராவும் அங்குதான் ஜெர்க்காகிவிட்டார், அவரைச் சொல்லி குற்றமில்லை, தி.மு.கா கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்ல நடிகர்கள் என்ற எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் சல்மா. சல்மாவிற்கு பதிலாக வேறு யாராவது தொழில் முறை நடிகை நடித்திருந்தால் படம் டாப்பாகி இருந்திருக்கும்.

http://ithukuppaithotti.blogspot.ae/2015/08/blog-post.html

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

சதுரகிரி மலையும் எம்.ஜி.ஆரும்.


 நான் இஞ்சினியரிங் அரியர்ஸ் இல்லாமல் முடித்ததில், பலருடைய பங்கு பாதிக்கு மேல் இருந்தது. முதல் வருசம் கம்யூட்டர் லேப்பில் பிட் கொடுத்த ஜி.கார்த்திகேயனிலிருந்து, C, C++ லேப்பில் பார்முலா எழுதிக்கொடுத்த பொன்மணி பிரியா, கடைசி பரீட்சைக்கு பேப்பர் காட்டிய காஞ்சனாதேவி வரை அனைவருக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பட்டவன். பதிலுக்கு, எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கு நான் முன்சென்று உதவினாலும், செண்டம் எடுக்க முயற்ச்சிப்பவர்கள், என்னை செல்லமாக தவிர்த்துவிடுவார்கள். மேலே சொன்னவர்களோடு சேர்த்து சிலருக்கும்கூட, எனக்கு உதவிசெய்யும் பாக்கியம் கிடைத்திருந்தது, ஒரு எக்ஸாமில் எல்லாமே அவுட்டாப் சிலபஸ், கண்டிப்பாக ரி-எக்ஸாம் வரும் ஆகையால் எதையாவது எழுதி பக்கத்தை நிறப்ப ஆசிரியர் கேட்டுக்கொண்டார். வேறு வழியில்லாமல் என்னோட பஞ்சில் வலதுபுறம் இருந்த கம்யூட்டர் டிபார்ட்மெண்ட் ஜீனியர் பேப்பரில் கைவைக்கும்படி ஆகிவிட்டது.

இவர்கள் எல்லோரும் விஜயகாந்த் படத்தில், எப்போதாவது வரும் காமெடியன்கள் போல. ஆனால் டைரக்டர் ராஜேஷ் படத்தில் வரும் சந்தானம் மாதிரி, எல்லா எக்ஸாமிற்கும் என் நிழல் மாதிரி கூட இருந்தவன் நாகவிஜயராஜன். ----என்டே தளபதி----. கொஸ்டின் பேப்பர், மெயின் ஷீட், அடிசனல் ஷீட் என கொடுத்து கொடுத்து சிவந்த கை அவனது. அதற்கு கைமாறாக, மிமிக்கிரி என்ற பெயரில் போடும் மொக்கைகளையும், புரியாத பட்டினத்தார் பாடல்களையும் சிரித்துக்கொண்டே கேட்கவேண்டும். சில சமயங்களில் இதற்கு நாம் அரியரே வைத்திடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் இஞ்சினியரிங்கை 7 வருடத்தில் முடிக்கவேண்டும் என்ற செய்தி என்னை கலவரப்படுத்தியது.

காக்க காக்க படம் பார்த்ததில் இருந்து, ‘’சூர்யா மாதிரி இருக்கேனா?’’ என்று கேட்டு அடிஷனலாக கொடுமைசெய்தான். ‘’லிப்ஸ்டிக் போட்டா ஜோதிகா மாதிரிகூட இருப்படா’’ என்று சொன்னாலும் சிரிப்பான். என்னை பாஸாக்கி விடவேண்டும் என்பதற்காக மட்டும், எக்ஸாம் டைமில், சிவில் புத்தகங்களை படிப்பான். ஆனால் மற்றநாட்களில் ஐ.எப்.எஸ் படிப்பிற்காகவே ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். அது அவன் கனவாக இருந்தது. அவன் ரூமிற்க்கு போனால், பட்டினத்தார் புத்தங்களும், ஐ.எப்.எஸ் புத்தகங்களும்தான் செல்பில் இருக்கும் மற்ற புத்தகங்களை தேடினால்தான் கிடைக்கும்.

இவ்வளவு நல்ல நண்பனோட, புதுவீட்டு கிரகபிரவேசத்துக்கு என்னால் போகமுடியவில்லை. எனக்கு அது ரொம்ப வருத்தம். என்னைக்காவது ஒரு நாள் அவன் வீட்டிற்கு போகவேண்டும் என்ற எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் குடும்பத்தில் ஏதோ நேத்திக்கடனுக்காக சதுரகிரி மலைக்கு, சாமி கும்பிட போகிறோம் என்று சொன்னான். புரோகிராம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்றதால் நானும் வருகிறேன் என்று சொன்னேன். எனக்குப் பின்பு, ஒவ்வொருவராக பெயர் கொடுக்க, எண்ணிக்கை பத்து, பதிமூன்றுக்கு மேல் ஆனது. நம்ம கூட உட்கார்ந்து சாமி படம் பார்த்தவங்களுக்குள் இவ்வளவு பக்தியா என்று என்னால் நம்பவே முடியவில்லை. அப்புறமாகத்தான் தெரிந்தது எல்லாம் கிடாய் வெட்டி, கறிசோறு திங்க பெயர்கொடுத்தவர்கள் என்று.

அதுவரைக்கும் சதுரகிரி மலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. சனிக்கிழமை படைபரிபாளங்களுடன் அவன் வீட்டில் இறங்கி, இரவு சாப்பாட்டை ஒரு தட்டில் நாலுபேர் வீதம் சாப்பிட்டு, கதை, கேலி, கிண்டல் என அன்றய இரவு இன்பமயமானதாக இருந்தது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து, குழித்து, சூடான சில பல இட்லிகளை உள்ளே தள்ளி, கோவிலுக்கு போவதற்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்தோம். ஏற்கனவே, ஒரு 50, 60 பேர்களை ஏற்றிக்கொண்டு எங்கள் முன்பாக அந்த லாரி நிற்க, எங்களுக்கு பயங்கர சந்தோசம். என் வாழ்க்கையில் நான் லாரியில் போனதே இல்லை. மாட்டு வண்டி என்றால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும். கலர், கலரான பட்டு சேலைகளில் பெண்களை கண்டபோது, பாரதிராஜா படம் பார்த்தது போல இருந்தது. அந்த கூட்டத்தில் நாங்கள் மயில் ஸ்ரீதேவியை, ஹே மய்யில், ஹே மய்யில் என தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் எல்லாமே மயில் அம்மா காந்திமதியாகவே இருந்தது.

லாரியில் ஏறுவதற்காக நாகுவின் கட்டளைக்காக காத்திருந்தோம். ஆனால், நாகவிஜயராஜன் முகம் ரொம்ப வாடிப்போய் இருந்தது. விசாரித்ததில், ‘’நீங்க எல்லாம் பரவாயில்லடா, மிதுன் பெரியவீட்டு பையன் அவன் எப்படிடா லாரியில................’’ என இழுத்துக்கொண்டிருந்தான். அவன் லாரியில ஏறலன்னா, லாரிய அவன் மேல ஏத்துவோம் என நக்கல் பண்ணினாலும், நாகு சமாதானம் ஆகவில்லை. ஆனால், அவன் யாரை நினைத்து வருத்தப்பட்டானோ அந்த மிதுன்தான் ஊருக்கு முதலாவதாக ஏறி, மற்றவர்கள் ஏற கை கொடுத்துக்கொண்டிருந்தான். நாகு ஹேப்பி அண்ணாச்சி, லாரி கிளம்பியது. போர வார பொதுமக்களுக்கும், பஸ்களுக்கும் கை ஆட்டிக்கொண்டும், வணக்கம் தெரிவித்துக்கொண்டும் சென்றோம்.

கிரிஷ்ணங்கோவில் வரை லாரி சீராக சென்றது. அங்கிருந்து வத்ராயிருப்பு ரோட்டை பிடித்ததில் இருந்து, லாரியில் இந்தப் பக்கம் நின்றவன் அந்தப் பக்கமும், அந்தப் பக்கம் நின்றவன் இந்தப் பக்கமுகாக குலுங்கி, குலுங்கி சென்றது. இறுதியாக ஒரு இடத்தில் லாரி நின்றது. எங்கடா கோவில் என்று தேடிப்பார்த்தோம். எங்களுக்கு புலப்படவில்லை. மலையும், மலைசார்ந்த இடமுமாக இருந்தது. சுத்தி பச்ச பசேல் என ரொம்ப வித்தியாசமான பாலுமகேந்திரா லோகேஷன். கூட வந்த ஒருவரிடம் கோவில் எங்க பாஸ்? என்று கேட்டோம். அவர் மலை உச்சியை காட்டினார். ‘’ஒஹோ, அப்ப இங்க டீ குடிக்க நிப்பாட்டி இருக்கோமா?’’ என்று கேட்டேன். இல்ல தம்பி, இதுவரைக்கும்தான் வண்டி போகும், கோவிலுக்கு நாம நடந்துதான் போகனும்னு சொன்னாரு. கோவிலுக்கு வந்திருந்ததால், கொஞ்சம் பொறுமையுடன் பதில் சொன்னார், ஆனால் அவருடய கண்ணில் கெட்டவார்த்தைகள் கொப்பளித்ததை என்னால் காண முடிந்தது. 

பூமிதி திருவிழாவுக்கு வந்த கவுண்டமணி மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை. பதிமூனு பேரும் ஆள், ஆளுக்கு மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம். ஆடு பலி கொடுப்பது, மற்றும் சில காரியங்கள் எல்லாம் அந்த மலையின் அடிவாரத்திலேயே நடந்தது. அந்த நேரத்தில் ஒரு பாட்டி சதுரகிரி மலையின் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் பற்றிய பெருமைகளை எல்லாம் சொல்லியது. பாட்டிகள் கதை சொல்லி கேட்பது என்பது அவ்வளவு இனிமையானது. அதுவும் இதுமாதிரியான வரலாறு, புராணங்கள் என்றால் விட்லாச்சாரியார் படம் பார்ப்பதுபோல. மாட்டுக்காரர் பச்சைமால் பற்றிய கதைகள் எல்லாம் சொன்னார். இன்னமும், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் எல்லாம் இந்த மலையில் வாழ்வதாக கூறினார். நாங்க கொஞ்சபேர் மலை அடிவாரத்தில் ஒரு சின்ன குன்றின் மீது பேசி சிரித்துக்கொண்டிருந்தோம், தாகம் வரவே, தண்ணீர் கேட்க அங்கு இருந்த ஒரு சின்ன குடிலுக்கு சென்றோம்.

அந்த குடிசையில் யாருமே இல்லை, ரொம்ப சின்ன குடிசை, பார்க்கும் போதே ஏதோ வயதானவர்கள் வசிப்பதாகவே தோன்றியது, மிஞ்சிப்போனால் 4 பாத்திரங்கள், ஒரு தகர பெட்டி இருக்கும். எல்லாமே அழுக்குப் படிந்தே இருந்தது, ஒன்றைத் தவிர. அந்த ஒன்று எம்.ஜி.ஆர் போட்டோ. அதற்க்கு கீழே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு வைக்கப்பட்டிருந்த சந்தன, குங்கும பொட்டின் ஈரம்கூட காயாமல் இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த குடிசை இருக்கும் நிலையை வைத்துப் பார்க்கும்போது, அந்த விளக்கிற்கு ஆகும் எண்ணெயின் செலவே மிக அதிகம். அதுவரை எனக்கு எம்.ஜி.ஆரின் மீது எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் இருந்ததில்லை. அந்த நிகழ்வு என்னை ரொம்ப பாதித்தது.

கோவிலுக்கு சென்ற வயதான பெரியவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது, மலையேற ஆயத்தமானோம். முதலிலேயே வேகம் கூடாது என்று பாட்டி சொல்லியதால், நாங்கள் மெதுவாகவே மலை ஏறினோம். ஆர்வக்கோளாரில் ஆக்ஸ்போர்டு டிகிரி வாங்கிய மிதுன் படுவேகமாக பாய்ந்து, பாய்ந்து சென்றான். பாதை ஒத்தயடி பாதையாகவே இருந்தது, அதுவும் பாறைகளாகவும், மர வேர்களாகவும், செங்குத்தாகவும் இருந்தது. அரை மணி நேரம் ஆனது, ஒரு மணி நேரம் ஆனது கோவில் வருவதாகத் தெரியவில்லை. எதிர் வந்த பாட்டியிடம் இன்னும் எவ்வளவு தூரம் பாட்டி மேலே போகவேண்டும்? என்று கேட்டோம். இப்பதான தம்பிகளா ஏறவே ஆரம்பிச்சிருக்கீங்க என்று சொல்ல. மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போச்சு. நெக்ஸ்ட், ரெஸ்ட் என்று அரை மணி நேரம் உட்கார்ந்து பின்பு நடக்க ஆரம்பித்தோம்.

நம்ம மிதுன், போன ஸ்பீடுக்கு இன்நேரம் சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டு இறங்கி வந்துகொண்டிருப்பான்!!!!! என்று பேசிக்கொண்டிருக்கும் போது, பாதையின் பக்கவாட்டில் கொஞ்ச உசிரோடு ஒரு பாடி கிடந்தது, எங்கயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு திருப்பி போட்டுபார்த்தா. நண்பர் மிதுன். இதெல்லாம் உனக்கு தேவையா? என்று திட்டி தண்ணிகுடிக்க வைத்து இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு நாங்கள் ‘’சித்தன் போக்கு சிவன் போக்கு என்று மேலே ஏறினோம்’’. 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான அந்த செங்குத்தான பாதையின் பாதிவழியில் போகும்போது, செத்துப்போன என்னோட பாட்டி பேராண்டின்னு மேல இருந்து கூப்பிட்டமாதிரி ஒரு பிரம்மை. அல்லே இல்ல எனக்கு. திரும்ப தரையப் பார்த்தாத்தான் நிஜம் என்ற ஜென் நிலையில் இருந்தேன். 

போகிற வழி எல்லாம் சில சாமிகளின் சிலையும், சித்தர்களின் சிலையும் இருந்தது. இறுதியாக சுந்தரமகாலிங்கம் சாய்வாகவும், அதற்கு எதிரே சந்தனமகாலிங்கம் சந்தனத்தோடும் காட்சியளித்தனர். நாளைக்கு நடக்கவிருக்கும் ‘’பிரிகாஸ்டு கான்கிரீட்’’ கிளாஸ் டெஸ்டை ரத்து செய்ய வேண்டுமாறு நாகுவிடம் ஆப்ளிகேசன் கொடுத்தேன். (டெஸ்ட் நடந்தது, பேப்பரை பார்த்தபின்பு, மறுவாரம் ரி-டெஸ்டின் மூலம் தப்பித்தோம்.)

இன்னும் மேலே போனால் பெரிய மகாலிங்க கோவிலை காணலாம் என நாகு சொல்ல, இன்னும் பத்து அடி மேல் பக்கமா எடுத்துவைத்தால் ஒரேடியாக மகாலிங்கத்திடம் போய்விடுவேன். அடுத்த அட்டம்டில் அவரைப் பார்த்துக்கொள்ளலாம் என, பெ.மகாலிங்கத்தை ஆப்சனில் விட்டுவிட்டு கீழே இறங்கிய போதுதான் எவ்வளவு கடுமையான பயணம் என்பது புரிந்தது.

7 மணிக்கு ஏறிய மலையில் இருந்து இறங்கி வந்து, சாப்பிட 3 மணி ஆனது. மதம் அனுமதிக்காததால் என்னைத் தவிர அனைவருக்கும் கறி சோறு பரிமாரப்பட்டது. எனக்கு ரசம் சோறு. இடதுபக்கம் திரும்பினால், ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான், முனி......................... என எல்லா ராஜ்கிரண்களும் அங்குதான் இருந்தார்கள். 



----------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015

ஸாரி, கலாம்.

2001ம் ஆண்டு என்றுதான் என் நினைவு, எங்களோட காலேஜிக்கு ‘என்விரான்மெண்டல் சேஃப்டி பிளாக்கை (Environmental safety Block) திறந்துவைத்து பேசுவதற்காக அப்துல் கலாம் வந்திருந்தார். காரில் வருபவரை வரவேற்பதற்காக, காலேஜ் கேட்டில் இருந்து ஆடிட்டோரியம் வரை மாணவர்கள் சாலையின் இரண்டு சைட்களிலும் நிற்கவைக்கப்பட்டிருந்தோம். மாணவர்கள் நிற்பதை பார்த்த கலாம், காலேஜ் கேட்டில் காரிலிருந்து இறங்கி, எங்களை நோக்கி கையசைத்தபடி ஆடிட்டோரியம் வரை நடந்தே சென்றார். சுமார் 500 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் கடைசி இரண்டு வரிசைகள் மட்டும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவை எல்லாம் கலாம் நேசித்த/விரும்பிய இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இளைஞர்கள் அனைவருக்கும் வயது சுமார் 30 இருக்கலாம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது.

மாணவர்களுக்காக, அவரவர் டிபார்ட்மெண்டில் புரஜெக்டர் மூலமாக, ஆடிட்டோரியத்தில் இருந்து நிகழ்ச்சிகள் லைவ் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அப்துல்கலாம் பேசும் போது, ‘’500 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் நான் சுமார் 400 மாணவர்களாவது அமரவைக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணினேன்’’ என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பின்பு புரஜெக்டர் மேட்டர் அவருடய காதில் மெதுவாக புரஜெக்ட் செய்யப்பட்டது. ‘’ திரையில்தான் அவர்கள் என்னை காண வேண்டும் என்றால் நான் வீட்டிலிருந்தே பேசியிருப்பேனே? ’’ என்று கூறியதாக ஒரு பேச்சு அடிபட்டது. அன்று மட்டும் எனக்கு தெரிந்து குறைந்தது 1000 அக்னி சிறகுகள் புத்தகமாவது விற்றிருக்கும். அனைவருக்கும் பொறுமையாக கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் போல ரொம்ப எளிமையாகவே இருந்தார்.

வாங்கியதற்காக படித்தவர்களும், படிப்பதற்காக வாங்கியவர்களும் சரிபாதி இருந்தார்கள். இந்தியாவில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் அக்னிச் சிறகுகளாகத்தான் இருக்கும் என்றே நினைக்கின்றேன். படிப்பாளிகள் இருக்கும் தேசத்தை விட அறிவாளிகள் உள்ள தேசமாக இந்தியா இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்ட ஒரு நல்ல ஆன்மா. தன் இறுதி மூச்சுவரை மாணவர்களை நேசித்த ஒரு மகான். அதிகமான மக்களின் ரோல்மாடல், கண்டிப்பாக எனக்கும் ரோல்மாடலாக இருந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

ஆனால்,

அணு ஆயுத ஆபத்தையும், அதன் மூலம் உலகில் ஏற்பட்ட விளைவுகளையும் இங்கு பலர் அறிவர். தான் ஒரு அணு விஞ்ஞானி என்பதற்காக இந்தியாவை அணு ஆயுதம் கொண்ட நாடாக மாற்றி, அதன் மூலமாக இந்தியாவை வல்லரசாக மாற்றிட எண்ணிய அவரின் கருத்துக்கு உடன்பட என் மனம் ஒப்பவில்லை. அணு ஆயுதங்களின் விளைவைப் பற்றிய விவாதங்களில், அவற்றை நல்வழியில் உபயோகப்படுத்திடவேண்டும் என்று கூறியிருக்கின்றார், ஆனால், எப்படி? என்று மட்டும் கூறவில்லை. அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு இந்தியா வல்லரசு ஆவதைவிடுத்து, பசி, பட்டினியற்ற இந்தியா என்ற நல்லரசு வேண்டும் என்பது என்போன்ற சிலரின் கருத்து.

இந்தியா வல்லரசு ஆகிவிட்டால், புதுப்பேட்டை படத்தில் வரும் குமாரு, கொக்கி குமாரான கதைதான். பெரியண்ணன் தோரனை வரும், கட்டப்பஞ்சாயத்து செய்யனும், நாம்மள பார்த்து எல்லோரும் பயப்படுவான்......................., அதே மாதிரி நாமளும் எல்லோரையும் பார்த்து பயப்படனும், நிம்மதி இருக்காது. இங்க பலபேரு வல்லரசு என்றால் இந்தியாவும் அமெரிக்கா மாதிரி ஆகிடும், பொண்ணுங்க எல்லாம் ஸ்கர்ட் போட்டுப்பாங்க, ஆம்பள பயலுக எல்லோரும் ஜட்டி போடாம பேண்டு போட்டுக்கலாம், காலையில் பிரட்டு, மத்தியானத்துக்கு பர்கர், நைட்டுக்கு பிட்சா சாப்பிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பாவம்.

கலாமின் இறப்பிற்கு சமூக வலையதளங்களில் செலுத்தப்பட்ட அஞ்சலிகள் மற்ற எந்த தலைவருக்கும் வாய்க்கப்படாத ஒன்று. அது ஒரு கட்டததிற்கு மேல் .......ஷ்ஷ்ஷ்ஷ்...ஷப்ப்ப்ப்பா....... ‘மிடியல’ ரேஞ்சுக்கு செல்லும் அளவிற்க்கு அட்ராசிட்டி செய்துகொண்டிருந்தார்கள் / செய்துகொண்டிருக்கின்றார்கள் / செய்வார்கள். கலாம் இறந்த செய்தி கேட்டபின்பும் இரவு சாப்பாடு சாப்பிட்டவர்கள் எல்லாம் ‘’தேஷ்ஷ துரோகிகள்’’ என்றெல்லாம் கூறிவிடுவார்களோ என்று எண்ணி, நான் எல்லாம் பச்சத் தண்ணியக்கூட வாயில வைக்கவில்லை என்று சத்தியம் செய்துகொண்டிருந்தேன். ராமநாதபுரத்தில் கலாம் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால், 200 ரூபாய்க்கு ஆளும்கட்சிக்கு  ஓட்டுப்போடுபவன் எல்லாம் ‘’பார், கலாமின் மறைவிற்கு அமெரிக்க கொடியே பாதியில் பறக்கவிடப்பட்டிருக்கிறது’’ என்று பொங்கி ஸ்டேட்டஸ் இடுகிறான். அது கலாமின் மறைவிற்கு அல்ல, சண்டையில் செத்துப்போன அந்த நாட்டு ராணுவ வீர்ர்களுக்காக, அதுவும் ஜூலை 25ல் பறக்கவிடப்பட்டது என்று கமெண்ட் எழுதினால். அடுத்த பத்து கமெண்ட் ‘’தேஷ்ஷ துரோகி’’.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்றவர்களின் படத்தைப் போட்டு, காலாமின் இறப்பிற்க்கு செல்லாத இவர்களின் படங்களை புறக்கணியுங்கள் என்று அடுத்த போஸ்ட். போஸ்ட் போட்டவன் யாருன்னு பார்த்தா ‘பகவதி’ படத்துக்கு பால்குடம் எடுத்தவன், ‘தலைவா’ படம் வருவதற்கு தாமதமானதால் பால்டாயில் குடிக்க முயன்றவன். நகைச்சுவை நடிகர் தாமு, கலாமின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாக பார்த்தேன். ஆகையால் நடிகர் தாமு ஹீரோவாக நடித்து வெளிவரும் படத்தை தவிற வேறு எந்த படங்களையும் பார்க்கமாட்டேன் என்று நானும் கொள்கைமுடிவு எடுத்துள்ளேன். விசாரித்த வரையில், சன்னி லியோன் அஞ்சலி செலுத்தவரவில்லை, அதனால்தான் சன்னியின் படங்கள் இருக்கும் 850 இணையதளங்களை மத்திய அரசு முடக்கிவிட்டதாக, யாம் சந்தேகிக்கின்றோம்.

இவர்கள் இடும் கலாமின் அரிய புகைப்பட அலப்பரைகள், மோடியின் போட்டோஷாப் புகைப்படங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் போல. அப்துல்காலாம் ஸ்கூல் போட்டோ என்ற பெயரில் ஒரு 12 வயது சிறுவனின் புகைப்படத்தை, காணக் கண்டேன். அது HD மார்டன் கேமராவில் எடுக்கப்பட்ட ரொம்பத்தெளிவான கலர் போட்டோ. அப்துல்கலாம் பிறந்தது 1931, பனிரெண்டு வயது என்றால் 1943. அந்த ஆண்டு கலர் போட்டோ கேமெராக்கள் வந்ததாக்க் கூட என் சிற்றரிவிற்கு எட்டவில்லை. அதுவும் இவ்வளவு தெளிவாக எப்படி?. 1947ல் காந்தியே கருப்பு வெள்ளை போட்டோவில்தான் ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தார். என்னமோ போங்க.

அடுத்து கலாமின் குடும்ப போட்டோ என்று ஒன்று, எனக்கு தெரிந்து ராமநாதபுரம் முஸ்லீம் பேமிலியில் தலையில் முக்காடு இல்லாமல், நெற்றி நிறைய பொட்டுவைத்துக்கொண்டு மங்களகரமாக இருந்த ஒரே பேமிலி கலாமின் பேமிலியாகத்தான் இருக்கும். தனுஷ் பிறந்த நாள் கொண்டாடியது, உடல்நிலை காரணமாக ஜெயலலிதா அஞ்சலி செலுத்த வரமுடியாமல் போனது, கலாம் குடும்பம் VS  கலைஞர் குடும்பம் என்று போட்டோ போடுவது, கலாமின் கடைசி நிமிடம் என்று கூறிக்கொண்டு ஏழு வருடத்திற்கு முன்பான ஒரு போட்டோவைப் போஸ்ட் செய்வது என கலாம் ஆன்மா விரும்பாத/மன்னிக முடியாத காரியங்களை செய்வது ரொம்ப அபத்தம். அதை, படித்தவர்களே கொஞ்சம் கூட யோசிக்காமல் ஷேர் செய்வது அபத்தமோ அபத்தம்.

தன்னுடய இறந்தநாளில் விடுமுறையை விரும்பாதவர் கலாம், ஆனால் விடுமுறை விடச்சொல்லி பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பாக ஆர்பாட்டம். நம்மை விட மலையாளிகள் எவ்வளவோ மேல், அவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மறுநாள் அரைமணி நேரம் கூடுதலாக வேலை செய்தனர். நம்மள செய்யச்சொன்னா? செய்வீர்களா?......... செய்வீர்களா?........ கூடுதலாக இருமுறை கேட்டுவிட்டால் ‘போய்ரு, தூக்கியடிச்சிருவேன்’ என்று கூறிவிடுவோம்.

ஹைலேட்டான ஒரு வாட்ஸஅப் மெஸேஜ்தான், என்னை ரொம்ப கவர்ந்தது. அதுல இருக்குற ஒரு சின்ன அரசியலைக்கூட ஒருவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் நமை என்ன செய்வது.

அந்த மெஸேஜ் என்னவென்றால்

‘’’’ ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார், இளைஞர்களாகிய நாம் கீழ்காணுபவையை பின்பற்றி ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்துகாட்டுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

1      1. புகையை விடுவது
2. மதுவை விடுவது
3. மாமிசம் உண்பதை விடுவது
4. மரம் நடுவது
5. கெட்ட பழக்கங்களை விடுவது
6. அன்பை பரப்புவது
7. ஈகோவை விடுவது. ‘’’ 

படிக்கும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்குதா?. அப்படி இருந்துச்சுன்னா நீங்க அந்த வேலைக்கு சரிப்படமாட்டீங்க. படிக்கும்போதே மூன்றாவது பாயிண்டை இரண்டு மூன்று முறைக்கு மேல் திரும்ப திரும்ப படிச்சீங்கன்னா. உங்களுக்கு அந்த அரசியல் அப்பட்டமாக தெரியுதுன்னு அர்த்தம்.

மேலே இருக்கும் கலாமிற்க்கு தற்போது புரிந்திருக்கும், ‘’இவர்கள் கடைசிவரை கனவு மட்டுமே கண்டுகொண்டிருப்பார்கள்’’ என்று. 


-------------------------------------------------------------------------------------------------------------------------- யாஸிர் அசனப்பா.