சனி, டிசம்பர் 31, 2011

துணிவே துணை.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஒருவனுக்கு எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்பம் அமைவதில்லை. சந்தர்பம் தான் அதிஷ்டம், என்ற பெயரில் சிலரால் அழைக்கப்படுகின்றது. சந்தர்பம் கிடைத்துவிட்டால் போதும், என் திறமைகளை வெளிப்படுத்தி நான் வாழ்வில் வெற்றிபெற்றுவிடுவேன் என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. ஆனால் அந்த சந்தர்பத்தினை அமைத்துக்கொள்ள அனைவருக்கும் துணிவு வேண்டும். எதற்கும் துணிந்தால் தான் சந்தர்பத்தினை ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்பது நான் சொல்லதில்லை கவிஞர் கண்ணாதசனே சொன்னது. அவருடைய வாழ்க்கயில், அவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவர, திருச்சியை நோக்கி அவர் ஊரைவிட்டு ஓடிவந்தது கூட துணிவே.

அமிரகத்தினை பொருத்தவரை, இந்தியர்களில் அதிகமாக சுயதொழில் செய்பவர்கள், மலையாளிகள் தான். அதற்கு காரணம் அவர்களின் துணிவு. நமக்கே ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என்று தோன்றினால் நாம் முதலில் யோசிப்பது, எவ்வளவு முடக்கம் செய்யவேண்டும், மாதம் மாதம் எவ்வளவு திரும்ப கிடைக்கும், இருக்குற காச இதுல போட்டுட்டா வீட்டுக்கு எப்படி இந்தமாதம் செலவுக்கு காசு அனுப்புவது.... இப்படியான ஒரு சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

எனது உறவினர் இங்கு ஒரு கட்டிடத்தின், செக்கியூரிட்டியாக இருக்கின்றார். அவருடன் ஒரு மலையாளியும் வேலை செய்கின்றார்கள். அன்று எனது உறவினருக்கு மாலை சிப்ட் வேலை என்பதால் காலையில் சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அப்போதும் அவர் பணியில் இருந்தார், நான் கேட்டேன் ‘இன்று காலை அந்த மலையாளியின் டுடி தானே, நீங்கள் இருக்கின்றீர்கள்? என்று. அதற்கு அவர் சொன்னது ‘இன்று அவன், அவனுடைய கடை திறப்பு விழாவிற்கு சென்றிருகின்றான் அதனால் அவனுடைய டுடியை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆம், கிட்டத்தட்ட அவன் அமிரகம் வந்து 4 வருடங்கள் தான் இருக்கும். அவனுடைய சம்பளம் எனது உறவினரின் சம்பளம் அளவுதான்.

‘எப்படி மச்சான்? என்று எனது உறவுகாரரிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘துணிவுதான். மேலும் அவர் சொன்னார், ‘தமிழனுக்கும், மலையாளிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு, தமிழன் வியாபாரம் ஆரம்பிக்கும் போது நஷ்டப்பட்டுவிட்டால் என்ன செய்வது? என்று யோசிப்பான், ஆனால் அதே மலையாளி, வியாபாரத்தில் வரும் லாபத்தினைக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்பான்.

மலையாளிகளைப் பொருத்தவரை, இங்கிருந்து செல்லும் பணம் எல்லாம் அவர்களின் சேமிப்புதான். தினசரி வீட்டு செலவிற்கு அவர்களின் கைத்தொழில் அல்லது ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் கொண்டு ஓட்டிவிடுவார்கள். நமக்கு அப்படி இல்லை, 20,000 அனுப்பினாலும் அடுத்தமாதம் கொஞ்சம் சேர்த்து அனுப்புபா என்று 25,000க்கான கணக்கு காண்பிப்பார்கள். இந்த மாதிரி இருந்தா நமக்கு எப்படி துணிவு வரும்?.

எனது திருமணத்திற்காக என்னுடைய நண்பர்களை, தொலைபேசியில் அழைக்கும் போது, என்னிடம் அனைவரும் கேட்கும் கேள்வி ‘மச்சி, கல்யாணம் முடிந்த பின்னாடி என்ன செய்யப் போற? ‘இந்தியாவில் செட்டிலாகப் போறியா? இல்ல, மீண்டும் துபைதானா?, .......... இப்படியான பல கேள்விக்ளுக்கு மவுனம் மட்டுமே எனது பதிலாக இருக்கும். இல்லன்னா ‘இன்னும் முடிவுபண்னலடா, என்கிற பதிலாகத்தான் இருக்கும். ஆனால் என் பதிலுக்கு அர்த்தம் என்னவோ, இன்னும் துணிவு/தைரியம் வரவில்லை என்பதுதான்.

எங்க ஊருக்குன்னு ஒரு வலைதளம் உண்டு, அதில் துபை கணவனுக்கு அங்குள்ள மனைவிகள் எழுதுவது போல கவிதைகள், விடுமுறை கழித்து விட்டு துபைக்கு வருபர்களின் மனநிலை பற்றிய கட்டுரைகள், 40 வருடம் துபையில் இருந்தவரின் வாழ்க்கை வரலாறுன்னு போட்டு வண்டி, வண்டியா எங்கிட்ட இருந்து வாயத்தான் வாங்குவானுங்க. இத FACEBOOK ல வேற போஸ்டு பண்ணுறது, அத ஒரு 100 பேரு லைக் பண்ணுறதுன்னு ஒரே அலப்பரையா இருக்கும். சரி இத பார்து துணிந்து எவனாவது ஊருக்கு போயிருக்கானான்னு பார்த்தா எவனும் கிடையாது. ஒன்லி போஸ்டிங்க், லைக்கிங்க் தான். அந்த வலைதளத்தில் ‘வாருங்கள் துபை நண்பர்களே, உள்ளூரில் வியாபாரம் தொடங்க, ஏஜென்சி எடுக்கன்னு எந்த விளம்பரமும் வராது, மாறாக, குவைத்துக்கு ஆட்கள் தேவை, சவுதிக்கு இஞ்சினியர் தேவை தான் வரும். திருந்துங்க பாஸ்!!!!!!!!!!

துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தைன்னு வசனமெல்லாம் பேசுவதற்கு நல்லாத்தான் இருக்கு, ஆனா..................................................


-------------------------------------------விடியும் புத்தாண்டு அனைவருக்கும், துணிவை கொடுக்கும் ஆண்டாக அமைய பிராத்தனை செய்தவனாக----யாஸிர்.

வியாழன், டிசம்பர் 29, 2011

விவேகானந்தர் பாறையின் மறு பக்கம்......

கன்னியா குமாரி, பாரத்தாயின் பொற்பாதம், இயற்கைத்தாயின் அருட்கொடை, கடற்தாயின் உற்சாகம் என்று பலவிதமான பெருமைகளுடையது. கன்னியா குமாரி என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது விவேகானந்தரின் பாறையில் அமைந்துள்ள அவரின் நினைவு மண்டம் தான். அய்யன் வள்ளுவன் எழுத்தாணியோடு கம்பீரமாக நின்றிருந்தாலும், ஏனோ முதலில் அனைவரின் நினைவில் முதலில் வருவது அந்த நினைவு மண்டபம் தான். இது 1962ல் ஆரம்பித்து 1972ல் கட்டிமுடிக்கப்பட்டது. அவ்வளவு அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும், மண்டபத்திற்கு பின்னால் ஒரு பெரிய கதையுண்டு என்பது இந்த காலத்திற்கு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய கலவரத்தை முன்னோக்கிச் சென்று, அது போல் எதுவும் நடக்காமல் முடிந்த இந்த சம்பவத்தினை, வரலாறு அவ்வளவு சீக்கிரமாக மறந்துபோனது அல்லது மறைத்துவிட்டு போனது மிகவும் ஆச்சிரியம்.

கன்னியாகுமாரி என்று, எதனால் பெயர் வந்தது என்று அந்த மாவட்டத்துக்காரர்களுக்கே தெரிந்திருக்காது. விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்படும் இந்த பாறைக்கு, ஸ்ரீ பாதப் பாறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மிகச்சரியாகச் சொன்னால், ஸ்ரீ பாதப் பாறைதான் அதன் முதற்பெயர், தேவி கன்னியாகுமாரி என்பவர் சிவபெருமானை மணப்பதற்காக அங்கு தவமிருந்ததாக ஐதீகம். அங்கு பாறை காணப்படும் பாத சுவடு கூட இவருடையது என்று இன்னும் நம்பப்படுகின்றது.

1963ம் வருடம் இந்திய அரசு விவேகானந்தரின் நூற்றாண்டினை ஒரு நினைவுச்சின்னம் எழுப்பி கொண்டாட முடிவு செய்தது. விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் விடிவெள்ளி, அமைதியின் திருவுருவம், இவரால் உந்தப்பட்டவர்களும், உத்வேகம் அடைந்தவர்கள் நம்மில் அதிகம். காலங்கள் பல கடந்தபின்பும் அவரது, வார்த்தைகள் இன்னும் பலரின் கணினியின் தொடக்கப்பக்கத்தில் புன்னகைத்துக்கொண்டிருக்கும். ஐ.நாவில் அவர் பேசிய முதல் வாக்கியத்தினை, இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வோம். இந்தியாவின் தேசிய அடையாளங்களில் இவரும் ஒருவர், என்பதை விட இவர் முக்கியமானவர் என்பதுதான் சரி.
விவேகானந்தர், கன்னியாகுமாரிக்கு வந்திருந்தார், அங்கு கடலுக்கு உள்ளே உள்ள பாறைக்கு நீந்தி சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். இது போதாதா, அவருக்கு நினை மண்டம் அங்கு கட்ட. நினைவு மண்டம் மட்டுமா, மண்டபத்திற்கு சென்று வர, ஒரு பாலம் போடவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. அதற்கான வேலைக்கு ஒரு குழு வேலாயுதம் பிள்ளை என்பவரின் தலைமையில் உருவானது.

விவேகானந்தரின் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு யார் எதிர்க்ப் போகின்றார்கள், யாருக்கு கருத்து வேறுபாரு இருக்கமுடியும்? என்று அதிநம்பிக்கையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சுறு சுறுப்படைந்தது. விஷயம் வேகமாகப் பறவியது, குமரி முழுவதும்.

தேவி கன்னியாகுமாரி என்பது ஐதீகம், விவேகானந்தரின் மூன்று நாள் தியானம் என்பது ஒரு நிகழ்வு, ஆனால் அதையும் மீறி சிலரின் வாழ்வாதாரமாகவும் அந்த பாறை இருந்தது, அந்நாளில் அது பலர் மறந்தது. குமரி மீனவர்களின் வாழ்வாக இருந்தது அது. மீன்பிடிப்பின் போது ஏற்படும் கலைப்பு போக்கும் இடமாகவும், வலையினை விரித்து காயவைக்கும் இடமாகவும், மீன் வியாபார பரிமாற்று இடமாகவும் இருந்தது. அவர்களின் போதாத காலம், அவர்கள் அநேகம் பேர் கிரிஸ்தவர்களாக இருந்தது தான். ஒவ்வொரு ஆண்டும், சிலுவை வைத்து ‘குரூஸ் என்னும் திருவிழாவும் இந்த பாறையில் வைத்து நடத்தினார்கள். ஆகையால் எதிர்ப்பு, மீனவர்களால் உருவானது.

காலம் மீனவர்களை, “கிரிஸ்தவர்களாகவும், விவேகானந்தரை “இந்து சன்னியாசியாகவும் மட்டுமே பார்க்கவைத்ததுதான் கொடுமை.

நானூறு வருடங்களுக்கு முன்பு புனித சேவியர் இங்கு வந்தபோது, இந்த பாறையில் தான் இருந்து ஜெபம் செய்தார், ஆகவே இது கிரிஸ்தவர்களுக்குத்தான் சொந்தம் என்ற கதை அங்குள்ள ஒரு பாதிரியாரால் கொம்பு சீவி விடப்பட்டு. கிரிஸ்தவர்கள் தான் இந்த பாறையின் உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டார்கள். ஹிந்துக்களுக்கு புதிதாக கதை ஒன்றை உருவாக்கும் வேலை தேவைப்படவில்லை. இருக்கவே இருக்கு, தேவி கன்னியாகுமாரி, விவேகானந்தர்.

மீனவர்கள் ஒரு காரியம் செய்தார்கள், இரவோடு இரவாக ஒரு பெரிய சிலுவையினை கொண்டு சென்று பாறையில் வைத்துவிட்டார்கள் (பாபர் மஸ்ஜித்தில், சில வீணர்கள் செய்த அதே பார்முலா). கரையில் இருந்து பார்த்தாலே தெரிகின்ற அளவிலான ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய சிலுவை அது.

சூடு ஏறியது அங்குள்ள மக்களுக்கு, கண்டன ஆர்பாட்டங்கள், ஆட்சியாளருக்கு மனு, அரசுத்தலைவர்களுக்கு தந்தி, ஸ்ரீபாதப் பாறையில் எப்படி சிலுவையினை வைக்கலாம்? என கொதித்து நின்றது எதிர்த்தரப்பு.

பாறை எங்களுக்குத்தான் சொந்தம் என்று இருதரப்பும் உரிமைகொள்ள, தமிழக அரசு தலையிட்டது. பாறை யாருக்குச் சொந்தம் என்று ஒரு விசாரனைக்கு உத்தரவிட்டது. விசாரனையின் முடிவில், பாறைக்கும், கிரிஸ்தவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. எனவே பாறையில் உள்ள சிலுவை வருவாய்த்துறையினரால் அகற்றப்பட்டது.

இது எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல ஆனது, 400 வருடங்கள் முன்பு இது போன்ற பெரிய சிலுவை இருந்தது, பின்பு சில சமுக விரோதிகலால் அது அழிக்கப்பட்டுவிட்டது, அதனால் இப்போதுள்ள சிலுவையினை தமிழக அரசு காப்பாற்றுவதை விடுத்து அழிக்கின்றது, அதற்கு பரிகாரமாக, அதே போல் ஒரு சிலையை மட்டுமல்லாமல் புனித சேவியருக்கு ஒரு நினைவுச் சின்னமும் உருவாக்கவேண்டும் என்று புது திரைக்கதையினை உருவாக்கி, கோஷங்களை எழுப்பினர் அங்குள்ள கிரிஸ்தவ சமுகத்தினர். இந்தமுறை குமரி மீனவர்களுக்கு ஆதரவாக நம்ம கேரள பங்காளிகள் இணைந்துகொண்டார்கள்.

இரண்டில் எது செய்தாலும் மத கலவரத்துக்கு தூபம் போடும் என்றெண்ணிய, அன்றய முதல்வர் பக்தவத்சலம், விவேகானந்தரும் வேண்டாம், சேவியரும் வேண்டாம், பாறை, பாறையாகவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவருக்கு, இந்த பாறை விவேகானந்தர் தவம் இருந்த இடம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக வேண்டும் என்றால் ஒரு போர்டு வைத்துவிடலாம் "இது விவேகானந்தர் தியானம் செய்த பாறை" என்று நிறுத்திக்கொண்டார்.
முதல்வர் பக்தவத்சலம்
ஏக்நாத் ரானடே
இந்நிலையில் இந்த பிரட்சனை ஹிந்துக்களால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர், ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பி பிரட்சனையை தீர்க்குமாரு கட்டளையிட்டார். ஹிந்துக்கள் மட்ட்டுமல்லாது கிரிஸ்தவர்களும், நடுநிலையாளர்களும் இவர் என்ன செய்யப்போகின்றார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தன. சிலர் ஆர்.எஸ்.எஸுக்கு விஷயம் சென்றதில் இருந்து, எங்கு என்ன நடக்குமோ? என்ற அச்சவுணர்விலும் சில மக்கள் இருந்தனர்.

ரானடே, இவருக்கு ‘தமிழ் என்று சொல்லுவதற்கே, இயலாதாக இருந்தது, மேலும் தமிழக அரசியல், அரசியல் தலைவர்கள் யார் யார்? எப்படி? என்பதெல்லாம் அறிந்திராத ஒருவரால் எப்படி இதனை தீர்த்துவிடமுடியும் என்று தலை சொறிந்து நின்றது ஒரு கூட்டம். இந்நிலையில் அவர் ஆரயத்தொடங்கியது, பிரட்சனைகளையும், அதன் வேர்களையும், மற்றும் எதிர்ப்பாளர்கள் யார்? என்பதை மட்டுமே.

அப்போது விவேகானந்தர் மண்டபத்திற்கு தீவிரமாக எதிர்த்து நின்றது இரண்டு பேர். ஒருவர் தமிழக முதல்வர் பக்தவத்சலம், மற்றொருவர் ஹீமாயூன் கபீர், அன்றய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர். கபீர் ஒரு கல்கத்தாகாரர். ரானடே, நேராக கல்கத்தா போய் இறங்கியதும் முதல்வேலை, அனைத்து பத்திரிக்கைகளையும் கூட்டி, பிரட்சனை இது தான், வங்கத்தின் தங்கம், விவேகானந்தருக்கு உங்கள் மாநிலத்தின் அமைச்சர் கபீர் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்று ஒரே போடுபோட்டுவிட்டு, நடையை கட்டினார். இது போதாதா பத்திரிக்கைகளுக்கு, ரானடே தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு, கபீர், தன் ஆட்சேபனையை விலக்கிக்கொண்டார்.

ஆனால் இந்த மாதிரியான பாச்சாவெல்லாம் பக்தவச்சலத்திடம் பலிக்கவில்லை. அமைதியை நிலைனாட்டும் பொறுப்பு, சட்ட ஒழுங்கு எல்லாவற்றையும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மிகவும் யோசனையிலேயே இருந்தார். பின்பு விவேகானந்தரின் நினைவு மண்டப குழு விஸ்தரிக்கப்பட்டு, அதில் நடுநிலையாளர்கள் பலரை சேர்த்துக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் தி.மு.க தலைவர் அண்ணாதுரை. மற்றும் சில கம்யூனிஸ்ட் தலைவர்களும். சன்னியாசிகள் கால் போன இடம், தூங்கின இடம், உட்கார்ந்த இடம் என்று மண்டபம் கட்டினால், இந்தியாவில் வீடுகளை விட, மண்டபங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்று கூறி சில் பெரியாரிஸ்டுகள் குழுவில் இடம்பெறாமல் விலகிக்கொண்டனர்.

பின்பு நடுனிலையாளர்களின் துணையுடன், கிரிஸ்தவ மக்களை சமாதானம் செய்தும், அதிர்ப்திகளை சரி செய்தும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நன்கொடையில் கட்டப்பட்ட மண்டபம் தான் இன்று பாறையில், பவ்வியமாக பவனிவரும் மண்டபம். இது அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸின் திறமையால் கட்டப்பட்டது என்று கரசேவகர்களும், அண்ணாத்துறையின் நடுநிலையான முயற்சியால் கட்டப்பட்டது என்று திராவிட இயக்கத்தினரும், கம்யூனிஸ்டுகள் தான் காரணம் என்று சிலரும், கிரிஸ்தவர்களின் விட்டுக்கொடுக்கும் தன்மையால் தான் இது நடந்தது என்று ஆளுக்கொரு காரணத்தினை சொன்னாலும், விவேகானந்தர் என்ற ஒரு நல்ல ஆன்மாவிற்காக மட்டுமே இது சாத்தியமானது என்பது தான் உண்மை.

----------------- யாஸிர் அசனப்பா.
.

திங்கள், டிசம்பர் 26, 2011

இந்த படை போதுமா...?, இன்னும் கொஞ்சம் வேணுமா...?


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
டிசம்பர் 25 ஐ உலகமக்கள் மறந்தாலும் மறக்கலாம், ஆனால் டிசம்பர் 26 ஐ எவரும் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. கடற்தாயின் ருத்தரதாண்டவம் சுனாமி எனும் பெயரில். மிகச்சரியாக 7 வருடங்கள் உருண்டோடிய நிலையில். அதே போல் ஒரு சுனாமி, மெரினாவில் உண்டானது, ஆம், அது மக்களின் சுனாமி!. ஆகாயத்தில் இருந்து பார்த்தவன் கண்டிப்பாக அப்படித்தான் எண்ணியிருப்பான், என்ன இது மறுமுறை ஒரு சுனாமியா என்று. மலையாளிகளுக்கு நாம், நன்றி கடன் தான் பட்டிருக்கின்றோம், என் உறவுகள் இத்தனை உணர்வு உள்ளவர்கள்!!! என்று ஆச்சிரியப்பட்டு, மெய்சிலிர்த்து தெரிந்துகொண்டமைக்கு.

கடந்த இதழில், பாரதிராஜாவின் நேர்காணல், ஆனந்தவிகடனில் பிரசுகமாயிருந்தது. அதில் முல்லைபெரியாருக்காக திரைத்துறையில் இருந்து ஏன் இன்னும் எந்த போராட்டமும் நடத்தவில்லை என்று ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், அதற்கு முன்பு இவர் தலைமையில் நடந்த போராட்டங்கள், சில நபர்களின் அரசியல் நுழைவிற்காகவும் (விஜயகாந்த்), அரசியலில் நல்ல பேர் (சீமான்) எடுக்கவேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். அது போல இனி எவனுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் (விஜய்) நான் போராட்டம் நடத்தப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
 பொதுவாக சினிமாக்காரன் பொதுமக்களுக்காக போராடவேண்டும் என்ற கொள்கைக்கு எதிரானவன் நான். உண்மையில் ஒரு சிலரைத் தவிர, வேறு எவனுக்கும் அந்த மாதிரியான எண்ணம் இருப்பதில்லை. ஏதோ சங்கத்துல இருந்து கூப்பிடுறானுங்கன்னு சொல்லிக்கிட்டு, போட்டோ ஷுட்டுக்கு வர்ரதுமாதிரி, மேக்கப், உடைன்னு போட்டுகிட்டு வந்து போஸ் கொடுத்துட்டு போயிடுறானுங்க. அந்த பேட்டிய படிச்சு முடித்தவுடன், என் நண்பர்களுடனான அரட்டையில், ஒருமையில் பாரதிராஜவைத் திட்டி தீத்திருக்கின்றேன். ‘இவனுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஏன், சினிமாக்காரனை எதிர்பாக்கின்றான், மக்களைக் கூட்டி போராட்டம் நடத்தவேண்டியது தானே, இல்ல போராடுகின்ற மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு போராடவேண்டியது தானே..... , இப்படியாக திட்டிக்கொண்டிருந்தது, பாவம் அவர் காதுக்கு கேட்டுவிட்டதோ என்னமோ. 2 நாளுக்கு முன்பு செய்தித்தொலைக்காட்சி ஒன்றினை பார்க்கும் போது, மக்களுடனான ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தார். அதன் மூலம் நான் பேசிய பேச்சிற்கு என்னை கொஞ்சம் அசிங்கப்படவும் வைத்துவிட்டார்.

வைகோ, ஒரு உண்மைத் தமிழன், இவருடைய கூடங்குளம் போராட்டத்திற்கு என் ஆதரவு இல்லை என்றாலும், இதற்கு என்னுடைய, ஏன், இந்த உலகின் மூலை, முடுக்கு, சந்து, பொந்தில் இருக்கும் அனைத்துத் தமிழனின் ஆதரவும் இவருக்கு உண்டு. அனைத்துக் கட்சித் தலைவர்களும், தன்னுடைய கட்சி கொடியை வைத்துக்கொண்டு, போராட்டம் நடத்தும் வேளையில், தமிழனின் போராட்டத்திற்கு போர்கொடி உயர்த்துவோம், கட்சிகொடியை அல்ல என்று முழங்கும், ஒரு உண்மைத் தலைவன். கடந்த வாரத்தில், கேரளாவிற்கு எதிராக நடந்த, பொருளாதார முற்றுகை போராட்டத்தில், கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில், ‘தலைவர் வைகோ வாழ்க என்ற கோஷத்திற்கு எதிர்பு தெரிவித்து, தன்னுடைய பேரை உபயோகப்படுத்த வேண்டாம் என்று கூறி, ‘தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க என்று கோஷங்களை எழுப்புமாறு தெரிவித்து, காவல்துறை வண்டியில் ஏறினார்.

சிங்கத்தின் குகை சென்று என்று எழுதினால், சிங்கத்தின் இனத்திற்கு அவமானம், அதனால், மன்மோகன் ‘சிங்கின் குகைக்கு சென்று, ‘கேரளாக்காரன் பெரியார் அணையின் மீது கைவைத்தால், சோவியத் யூனியன் போல இந்தியா துண்டு, துண்டாக உடையும், அதையும் நான் முன்னின்று நடத்துவேன் என்று பிடரியை பிடித்து ஆட்டிவிட்டு வந்தவர் வைகோ.

 நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்ட பொதுக் கூட்டத்தின் மேடையின் அமைப்பே, போராட்டத்தின் வீரியத்தைக் காட்டியிருக்கும். மேடையில் ஒரு நாற்காலிகூட போடாமல், பேச்சாளர்கள் மேடையின் தரைவிரிப்பிலும், வந்தவர்கள் கடல் மணலிம் இருந்து தம் எதிர்பை தெரிவித்தது அனைவரையும் உணர்சிபடத்தான் வைத்திருக்கும்.

இதில் அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. கூட்டத்தில் வந்த சிலர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்று கூடி போராடவேண்டும் என்று சொலவது இயலாத காரியம், கூரை மேல் நிற்கும் கோழியைப் பிடிக்க வக்கில்லாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவத்ற்கு ஒப்பானது. முல்லை பெரியாரு விவகாரத்திற்காக விவாதம் நடத்த, தமிழக அரசு கொண்டுவந்த சட்டசபை கூட்டத்திற்கே, குவாட்டர் வாங்க டாஸ்மார்க் கடையின் லைனில் நின்றுவிட்டு மிகவும் தாமதமாக வந்த மாண்பு மிகு எதிர் கட்சி தலைவர் விஜயகாந்தை வைத்துக்கொண்டா அதை எதிர்பார்பது?, இல்லை நேற்று, பிரதமரை வரவேற்க வந்த தி.மு.க எம்.பிகளும், காங்கிரஸ்காரர்களும் சம்பிரதாயத்திற்கு கூட வணக்கம் வேண்டாம், ஒரு சின்ன புன்னகை கூட, பிரதமர் அருகில் நின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்காத, இந்த அறிவுஜிவிகளை வைத்துக் கொண்டா ஒரே அணியாக நின்று எதிர்ப்பது?.

நேற்றய கூட்டத்தில் கவிஞர் அறிவுமதி சொன்னது போல, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால், மோர் கொடுக்கும் கலாச்சாரத்தின் புதல்வர்களை சீண்டினால் என்னவாகும் என்பதை காட்டவேண்டும். நம் உரிமைகளை நாம் தான் பெறவேண்டும், எவனாவது பெற்றுத்தர வருவான் எதிர்பார்ப்பது கூடாது.

எதிர்க்கத் துணிந்தால் தான் தமிழ் மீளும்,
எதற்கும் துணிந்தால் தான் தமிழ் ஆளும்.

விரைவில் நாம் ஆள்வோம், நம்மிடம் ஆடியவர்களை ஆட்டிவிப்போம்.
-------------------------------------------------------------------------யாஸிர்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

டாக்டர்........ 1 4 3

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
நான் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி தலைவலி வருகின்றது என்பதை அறிந்து எங்கப்பாவிற்கு பெரிய தலைவலியாகப் போச்சு. சரின்னு பொது நல மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனைகளும் செய்த பின்பு, அவருக்கு எதுவும் தப்பாக புலப்படாததால், என்னை கண் மருத்துவரிடம் காட்ட சிபாரிசு செய்தார். மருத்துவரின் சிபாரிசின் பேரில், திருநெல்வேலியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்றோம். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும், இடைவெளியில்லாமல், கண்ணுல ஆராய்ச்சி நடந்தது. என் கண்ணை வைத்து அங்குள்ள எல்லா ஜுனியர் டாக்டர்களுக்கும் பாடம் நடத்திவிட்டார்கள். ஒரு அடிம சிக்கினா விடுவாங்களா (சிக்கிய அடிமை மிகவும் திரைமைசாலி வேறு), பரிசோதனை இன்னும் முடியல, தம்பிய கூட்டிகிட்டு அடுத்தவாரம் வாங்கன்னு சொல்லியனுப்பினாங்க.

ஒருவாரம் விட்டு மறுபடியும் ஆராய்ச்சி கூடத்துல சிக்கின எலி மாதிரி, பரிசோதனைங்கிற பேருல, எனக்கு பெரிய சோதனையே நடந்துச்சு. எங்கப்பா நான் பிறந்த தினத்தில், வார்டுக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டிருந்தது போன்ற ஒரு சீன் அங்கும் ரிப்பீட் ஆச்சு. ஒரு வழியா சாய்ங்காலமா எங்கப்பாவை உள்ள கூப்பிட்டு ‘உங்க பையனுக்கு ‘லேசி ஐ. அதாவது ஒரு கண்ணுல கொஞ்சம் பார்வை கம்மியாக இருக்குன்னு சொல்ல எங்கப்பாவுக்கு மிகப் பெரிய கவலையாகிவிட்டது.

ஏதாவது ஒரு கண்ண பொத்தியோ, அல்லது மூடியோ பார்க்கும் போது, அந்த கண், தற்செயலாகவே அதனுடைய பார்வையை இழக்கின்றது. டி.வி பார்க்கும் போதோ, அல்லது தொலைவில் உள்ளவரை பார்க்கும் போதோ, நீங்க கவனிச்சிங்கினா தெரியும், உங்க பையன் இடது கண்ண சுருக்கி, வலது கண்ண அகலமாக விரித்து பார்பான். இந்த மாதிரியான செயலால் தான் “லேசி ஐ உருவாகின்றது என்று சொல்லிமுடிக்க, எங்கப்பாவால தாங்கவே முடியல.

அப்ப இதுக்கு எதுவும் செய்யமுடியாதா டாக்டர்னு........ எங்கப்பா கேட்பதற்கு முன்பாகவே, ஒரு பச்சை நிற கண் திரை ஒன்றை காண்பித்து, இதன் மூலமாக வலது கண்ணை மறைத்து, இடது கண் மூலமாக கொஞ்ச காலம் பார்க்க்வைத்தால், அதன் பார்வை மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என்று சொன்னார். அந்த திரை கிட்டத்தட்ட அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த ஒரு பாடலுக்கு அணிந்து வருவது போலவே இருக்கும்.

ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, அந்த திரையை மாட்டிக் கொண்டு பள்ளிக்கு, என்னை எங்கப்பா கூட்டிக்கொண்டு வந்தார்கள். வாத்தியாரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி, விட்டுவிட்டு போக, பள்ளிக் கூடத்துல ஏக மரியாதை நமக்கு. அதற்கு முன் எவனும் தன்னுடைய பெஞ்சில் இடம் தரமாட்டனுங்க, ஆனா திரையை கண்ணுல மாட்டிவிட்ட பின்பு, இங்க உக்காரு, பக்கதுல உக்காருன்னு ஏகத்துக்கு அன்பை, அண்டா, அண்டாவாக கொட்டினார்கள் நண்பர்கள்.

புதுப் பொண்டாட்டி கொஞ்ச நாளைக்குத்தான் அழகா இருப்பாங்கிறது மாதிரி, ஒரு வாரத்துக்கு நல்லாப் போகிக்கொண்டிருந்தது, அதற்கு பின்பு, அந்த திரை என் கண்களை அழுத்த கண்ணீர், கண்ணீராக வர ஆரம்பித்தது. மேலும் மற்ற வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னை ஒத்தக் கண் சிவராசன்னு கேலி பண்ண, என்னால அத தொடர்ந்து போடமுடியல. ஒத்தக் கண்ணன்னு சொன்ன மற்ற வகுப்பு மாணவர்களை என் வகுப்பு தோழர்கள் எனக்கு ஆதரவாக அடிக்க ஆரம்பிக்க ஒரு வகுப்பு கலவரமே நடந்தது. இனி இதை போடமாட்டேன்னு சொன்னா, எங்கப்பா முதுகுல போடுருவாங்களேன்னு எண்ணி, பள்ளிக்கு வரும் போது வீட்டில் வைத்து மாட்டிவிட்டு, பள்ளிக்கு வந்த பின்பு கழட்டி வைத்துவிடுவேன். லீவு தேவைன்னா உடனே எடுத்து மாட்டிக் கொண்டு, கண்ணீரை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு, வாத்தியாரிடம் போய் ‘சார் கண்ணு ரொம்ம்ம்ம்ம்ம்ப வலிக்குதுன்னு சொன்னா, நம்ம துணைக்கு ஒரு பையனையும் அனுப்பி வைப்பார். சில சமயம் நண்பனுக்கு லீவு வேண்டும் என்பதற்காகவும் ஆக்டிங் செய்ததுண்டு.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செக்கிங்கிற்காக செல்லவேண்டும். ஒரு கண்ணை மூடிவிட்டு போர்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களை படிக்கவைப்பார்கள். ஒவ்வொரு வரியும் போக, போக சிறிது, சிறிதாக இருக்கும். முதலில் வலது கண், இந்த கண்ணில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால் கடைசியாக இருக்கும் சின்ன எழுத்துக்கள் வரை படிக்க முடியும். அடுத்து இடது கண், இதுல முதலாவதாக இருக்கும் பெரிய எழுத்தே, கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும். அடுத்த வரியில் உள்ளது, ஏதோ இருப்பது போல தெரியும் என்றால் பின்வரும் எழுத்துக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். நாம தான் அந்த கண் திரையை பயன்படுத்தவேயில்லையே, இதுல எங்க இம்புருமண்ட் ஆகுறதுக்கு. ஆனா, உண்மையைச் சொன்னம்னா, வேறு ஏதாவது டெரர்ரான்ன ஐ.டியாவ குடுத்துடுவாங்களோன்னு பயந்து, இம்புருமண்ட் இருக்குன்னு காட்ட, வலது கண்ணால படிக்கின்ற சமயத்தில், முதல் இரண்டு வரியில் உள்ள எழுத்துக்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வேன், இடது கண்ணால் வாசிக்கச் சொல்லும் போது, மனப்பாடம் செய்துவைத்ததை அப்படியே ஒப்பித்து விடுவேன் (வாட்ட ஐடியா சேட்ஜி.........)

பிறகு என்ன, உங்க பையனுக்கு நல்லா இம்புருமண்ட் ஆகியிருக்குன்னு, டாக்டர் எங்கப்பாவிடம் சொல்ல, அன்னைக்கு திருநெல்வேலியில், இருட்டுக் கடை அல்வாதான்.........., நியாஸ் ஹோட்டலில் சாப்பாடுதான்............... கலகட்டும்.

இப்படியா, இரண்டு, தடவை டிமிக்கு கொடுத்துகொண்டிருந்தேன். பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான் என்பது போல 3வது செக்கிங்கில் மாட்டியாச்சு!!!!!. எப்போதும் போல முதலில் வலது கண்ணால் படிக்கச் சொல்ல, A, K, J, K, N, O, Z, J, I, K, V, O, P, Q, W, X, R ……ன்னு அய்யா ஷேக்ஸ்பியர் பேரன் மாதிரி, பொழந்துகட்ட. இப்ப இடது கண்ணால படிங்கன்னு சொல்லிக்கிட்டே டாக்டரம்மா போர்டை, நம்பர் இருக்கும் பக்கம் திருப்ப, செத்தடா செல்லக்குட்டின்னு நினைத்துக்கொண்டு,

7......... .............. ..1...........................................8..........................................ன்னு இழுக்க,

ம்ம்ம் சொல்லு தம்பி அடுத்து என்ன தெரியுது? இது டாக்டர்.

டாக்டர்........ 1 4 3 ன்னு நான் சொல்ல,

தம்பி, இப்படி போர்டுல இல்லாததை எல்லாம் வாய்க்கு வந்த படி சொல்லக் கூடாதுண்ணு சொல்லிவிட்டு,

முதல் லைன்ல இரண்டாவது நம்பர் என்ன?

4லா?

நான் உங்கிட்ட கேட்டா நீ, எங்கிட்ட கேக்குற?

சரி, 5 வது லைன்ல, முதல் நம்பர் என்ன?

5 வது லைன்னா..........., அது எங்க இருக்கு? நான் பாவமாக கேட்க,

இத கேட்ட டாக்டருக்கு கிருகிருன்னு வந்திருச்சு.சரி, இதுக்கு மேல உண்மையை மறைக்க கூடாதுண்ணு, ஒன்னுமே தெரியலன்னு சொல்லிவிட்டேன். ஆக அன்னைக்கு அல்வாவும், புரோட்டாவும் கட்டு.

பிறகு, காலம் மாற, மாற இப்போது கண்ணாடியில் வந்து நிக்குது. இந்த வார குமுதம் ரிப்போட்டரில் இதைப்பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த போது எனக்கு இந்த ஞாபகம் எல்லாம் வந்தது. அதில் அவர்கள் சொல்லிய குணப்படுத்தும் முறைகள் யாவும் நான் செய்துபார்த்தது. கணக்கெடுப்பின் படி, நூற்றில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருப்பதாக தெரிவிக்கின்றது.

ஆக நான், உங்களைப் போன்று சாதாரணமானவன் அல்ல, நூற்றில் ஒருவன்.

----------------------------------அனைவருக்கும் கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள்-யாஸிர்.

சனி, டிசம்பர் 24, 2011

“சுயமே சத்தியம்”, “சுயமே உன்னதம்”

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
இந்தியாவில் இருந்து கிரெடிட் கார்டு மூலமாக, நான் ஆர்டர் செய்த புத்தகங்கள் நேற்றுதான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது. பதிமூணு புத்தகங்களில், பத்து மட்டும் தான் இப்போது கிடைத்திருக்கின்றது. மீதி, இருப்பு இல்லாமையால் பின்பு அனுப்பிவைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

புத்தகங்களை நான் ஆர்டர் செய்வதற்காக, இணையதளத்தினை மேய்ந்து கொண்டிருந்த போது, என் கண்ணில்பட்டது “இவன் தான் பாலா. பல நண்பர்களால் அதிகளவு, எனக்கு சிபாரிசி செய்யப்பட்டது. நான் விகடன் பிரியன் என்பதால், விகடன் வெளியீட்டில் வரும் புத்தகங்களை அதிகளவு படிப்பதில், ஆர்வம் உண்டு. இப்படியாக படித்து எனக்கு, மிகவும் பிடித்தது பிரகாஷ் ராஜின் “சொல்லாததும் உண்மை சேரனின் “டூரிங்க் டாக்கிஸ், இந்த இரண்டுமே ஓசியில் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தது. பின்பு காசு கொடுத்து வாங்கியது என்றால் அது கோபிநாத்தின் “நீயும் நானும், இப்போது “இவன் தான் பாலா.

பாலாவை எனக்கு பிடிக்காதபோதிலும், நண்பர்கள் சிபாரிசு பண்ணுகின்ற அளவிற்கு, அப்படி என்ன இருக்கின்றது, என்பதை அறிய மட்டுமே நான் இந்த புத்தகத்தை வாங்கினேன். பாலாவை எனக்கு மிகவும் பிடித்த காலம் ஒன்று இருந்தது, அவரை விரும்பியதற்கான காரணமும், வெருப்பதற்கான காரணமும் நடிகர் அஜித்தாக இருந்தார். அவருடைய சேது படம் வெளிவந்த பின்பு, அவரின் இரண்டாவது படத்தின் (நந்தா) நாயகன் அஜித்தாக இருந்தார், பின்பு சில காரணங்களுக்காக அவர் நடிக்கயியலவில்லை. பின்பு அவரின் நான் கடவுள் திரைப்படத்திற்காக, அஜித்தின் தலைமுடி முதல், உருவம் வரை மாற்றி, ஒருவருடம் ஆகியும் திரைப்படத்தை துவங்காததால், அஜித் அந்த படத்திலிருந்து வெளியேற, பெருங்கோபமுற்று இவர், இவரின் நண்பர்களோடு செய்த கலாட்டாவின் மூலம் தான் மனித இனத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமானவன் என்று காட்டிக்கொண்டவர். ஆக அஜித்தை வைத்து படம் எடுக்கப் போகின்றார் என்பதற்காக இவரை விரும்பியும், அஜித்திடம் நடந்துகொண்ட விததினால் இவரை வெறுத்துப் பார்த்தவன் நான்.

சரி, பத்து புத்தகம் கையில் வந்துவிட்டது, ஆனால் முதலில் எந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிப்பது? என்ற எண்ணத்தில், ஒன்று ஒன்றாக நோட்டம் விட்டபடி இருக்கையில், மிகவும் குட்டியூண்டு புத்தகமாக இருந்ததால் “இவன் தான் பாலா படிக்கத்துவங்கினேன்.
ஒரே மூச்சில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன், இது என் முதல்முறையும் கூட, ஆனாலும் நான் பாலைவை விரும்பவில்லை. ஆனால் அவரின் சில வரிகளில் மெய்சிலுத்திருக்கின்றேன். புத்தக அறிமுகத்தில் “சுயமே சத்தியம், “சுயமே உன்னதம், “பராதீனம் ப்ராண சங்கடம் யாரையும், எதற்காகவும் சார்ந்திருக்க கூடாது என்பது வாழ்கை எனக்கு கற்றுத்தந்த அனுபம் என்று எழுதியிருந்தது என்னை அதிகம் ஈர்த்தது.

இதுவரை நான் படித்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் என் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது இல்லை (அதிகமானவர்களுக்கு இருந்திருக்காது). இதுவும் தான், ஆனால் ஒரு சில சம்பவங்கள், ஒத்துப் போகும். 7 வது பகுதியில் வந்த ஒரு நிகழ்வு தான், என்னை புத்தகத்தை கீழே வைக்கவிடாமல், 21 பகுதிகளையும் படித்து முடிக்கத்தூண்டியது.
“பாலு... நம்ம வம்சத்துல எவனும் உன் லெவலுக்கு இருந்தது இல்லப்பா. ஒங்கிட்ட எப்படி பேசறதுன்னு தெரியல. தயவுசெஞ்சு உடம்பைக் கெடுத்துக்காதடா கட கட வென கண்ணீர் வழிய, என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான் என் தகப்பன்!. அவர் என் காலில் விழுந்தபோதே, பாதி நிதானத்துக்கு வந்துவிட்ட நான், அவரது கண்ணீரைப் பார்த்ததும், உடைந்தே போனேன்.

என் வாழ்வில், ஒத்துப் போன சம்பவம் அது, என் அப்பாவின் கண்ணீருக்கு காரணமானவன் நான் இல்லை, மற்றவனுக்காக என் அப்பா வடித்தது, ஆனால் அந்த கண்ணீர், எனக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்தது. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாமல் இருப்பது, வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்று புரியவைத்தது..... இப்படி கற்றுக் கொண்டது அதிகம். வாழ்க்கையில் நான் யாரையும் மன்னிப்பேன், ஆனால் அந்த மற்றவனை மட்டும் மன்னிக்கவே என்னால் முடியாது.

பாலுமகேந்திராவின் அன்பு, மனிதநேயம், நண்பர்களின் கலாட்டா, ஊன்றி கவனிக்கும் குண்ம், வாழ்வின் ரணம், சின்ன வயது காதல், கடந்து சென்றவர்கள்....... இப்படியாக பல இருந்தும், என்னைக் கவர்ந்தது வழக்கறிஞர் சந்திரசேகர் சொன்னதாக சொன்னது “ நல்லா ஆட்டம் போடு, ஊர் சுத்து, கெட்டு குட்டிச்சுவராக் கூட போ... ஆனா ஒரு நாளைக்கு ஒரு புது விஷயமாவது தெரிஞ்சுக்கோ. ஒரே ஒரு விஷயம்... ஒரே ஒரு தகவல் புதுசாத் தெரிஞ்சிக்காம தூங்காதே

அடுத்து விக்ரம் சொன்னது “நாம ஜெயிக்கனும். பழிவாங்கறதுண்ணா... அடிக்கிறது, உதைக்கறது, அவமானப்படுத்துவது மட்டுமில்லையே.... அவங்க கண்ணு முன்னால் ஜெயிக்குறது கூடத்தான்

அப்ப நான் அதிக, அதிகமா ஜெயிக்கவேண்டியிருக்கு........


தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல-நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
-------------------------------------------------------------------------யாஸிர். 

புதன், டிசம்பர் 21, 2011

திரும்பி பார்க்கின்றேன்....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

நான் +2 படித்துவிட்டு, இஞ்சினியரிங்கிற்காக, எண்டிரன்ஸ் எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். பொதுவா எனக்கு அப்போது எதிர்காலத்துல, அப்படியாகனும், இப்படியாகனுங்கிற எண்ணம் எல்லாம் இல்ல, எங்க வீட்டில் என் அண்ணங்க யாரும் காலேஜுக்கு போகாததால, என்னை எப்படியாவது இஞ்சினியர் ஆக்குவது என்று என் அப்பாவின் முடிவாகயிருந்தது. சின்ன குழந்தைங்ககிட்ட எதிகாலத்துல நீ என்னவா ஆகப்போறன்னு கேட்டா, டாக்டர்னு பட்டுன்னு எதையும் யோசிக்காம சொல்லுறது மாதிரித்தான் நானும், இஞ்சினியராவேன்னு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்ப எல்லாம் சத்தியமா எனக்கு செமஸ்டர், அரியர், பஸ்ட் கிளாஸ், புராஜெக்ட், பிராக்டிகல்..... இப்படியான டிபிகள்ஸ் இருக்குமுன்னு தெரியாது.

எண்டிரன்ஸ் கிளாஸுக்கு போகனும்னு, என் நண்பர்கள் அனைவரிடமும் ஐடியா கேட்டு, தென்காசியில் சேரலாமுன்னு முடிவுபன்னி, அப்பாகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி, என் அப்பா “நாளைக்கு சீக்கிரம் ரெடியாகு, எம்மோசிக்கு போகனும்

என்னதுதுதுதுதுது எம்மோசியாஆஆஆஆஆஆஆ
எம்மோசி - Muslim Orphanage Committee (MOC), ஒரு முஸ்லீம் பள்ளிக்கூடம் (அனாதையாக இல்லாதவர்கள், காசு கொடுத்து படிக்க வேண்டும்), திருநெல்வேலியில் இருக்கு, அங்க எண்டிரன்ஸுக்கு வகுப்பு எடுப்பதாகவும், சிறந்த ஆசிரியர்களின் சீறான மேற்பார்வையில், சிறப்பான கல்வின்னு, ஏதோ ஒரு நாதாரி ரைமிங்க என் அப்பாகிட்ட சொல்ல, எங்கப்பாவும், நாம் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொன்னா, நம்ம புள்ளயாண்டான் நம்மள பேசி சமாளிச்சி அங்க போகவேமாட்டான்னு தெரிஞ்சிகிட்டு, முயலுக்கு காலே இல்லங்குற அளவுக்கு விடாப்பிடியாக நின்றதால, வேற வழிதெரியாம, ஒரு மாசம் திருநெல்வேலியில் தங்கிப்படிக்க, பெட்டிகட்டி பஸ்ஸுல பயணித்துக்கொண்டிருந்தேன்.
பஸ்ஸுல போகும் போது, ஜன்னல் ஓரமான சீட்டில் சாய்ந்துகொண்டு, இந்த சினிமாவுல வருகின்ற மாதிரியான பிளாஸ்பேக். எங்க குடும்பத்தில், என் அண்ணன், என் அத்தை மகன்கள், பெரியப்பா பையன், மற்றும் என் சொந்தத்தில் உள்ள அனைத்து குடும்பத்தில் இருந்தும் யாராவது ஒரு ஆள், எம்மோசியில் படித்தவர்களாக இருந்தார்கள். அங்க படிச்ச யவனும் பத்தாவது தாண்டவில்லை, அப்படியோரு ராசியான பள்ளிக்கூடம் அது.
அவங்க, அங்க படிக்கும் போது, நான் ரொம்ப சின்னபையன், என் அப்பா, என் அண்ணன், மற்றும் சொந்தகார பயலுகள பாக்குறதுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு, திண்பதற்கு எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். சொன்னா நம்ப மாட்டீங்க, உண்மையில், சேது படத்துல வருகின்ற சீன்மாதிரியே இருக்கும் (சேது படம் பார்த்தபோது எனக்கு, இந்த சின்ன வயது ஞாபகம் தான் வந்தது), எல்லோரையும் மொட்டையடித்து, தட்டுடன், ஒரு கைலியோடு பார்க்கும்போது......என்னால தாங்கவே முடியாது. எங்கப்பா வந்ததும், எங்க ஊருக்காரங்க வந்து, சாப்பாடு சரியில்ல, கொசு கடிக்குது, வாத்தியார் அடிக்குறாருன்னு, எங்கப்பாவ வரசொல்லுங்கன்னு ஏகப்பட்ட புகார்களும், வீட்டுக்கு சொல்லியனுப்புற விசயங்களுமாய் இருக்கும். (எங்க குடும்பத்து பசங்க, படிக்காம போனதுக்கு இந்த பள்ளிக்கூடம்தான் காரணம் என்று நான் கண்டிப்பா சொல்லுவேன்).
அங்குள்ள கொடும தாங்க முடியாம, இரவுல சுவர்யேரி குதித்து, வீட்டுக்கு ஓடி வந்தவங்கள, அடியடின்னு அடிச்சு மறுபடியும் அங்கயே அனுப்பிவைக்கிறது, வெங்காயத்தை நைத்து, அக்குளுக்குள்ள வைத்து, வேண்டுமென்றே காய்ச்சல் வரவழைத்து ஊருக்கு வருவது. பள்ளிக் கூடத்துல இருந்து ஓடிவந்து, அப்பாக்களின் அடியிலிருந்து தப்பிக்க, தாத்தாவிற்கு வடை, பஜ்ஜி வாங்கி கொடுத்து நிலைமையை சமாளிக்க, அனைவரும் பரிதவித்த முகத்துடன் லைன் கட்டி நின்னது...................எல்லாம் என் கண்முன்னாடி வந்து போனது.
நீங்களே சொல்லுங்க, இவ்வளவு பெரிய ட்ராஜடியான பிளாஸ்பேக்க வச்சிகிட்டு, என்னால எப்படி அங்க படிக்கமுடியும்???????.
அப்ப எங்களுக்குன்னு (என் கேஸ் மாதிரி, அங்கும் எங்க ஊருக்காரங்க 10 பேரு இருந்தாங்க) இருந்த ஒரே ஆருதல்னா அது, அந்த பள்ளிய தொட்டடுத்து, மெடிக்கல் காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் மட்டும் தான். கலையில கூட்டம், கூட்டமாக பொண்ணுங்க எல்லாம் போகும், ஆனா நல்ல பிகரா, இல்லா சொத்த பிகரான்னு பாக்குரதுக்கு சுவர் ஏறித்தான் குதிக்கனும். என்னடா வாழ்க்க இது, விதி இப்படி, ஸ்டம்ப ஊனி, பேட், பாலுடன் கிரிகெட் விளையாடுதேன்னு எண்ணி ரொம்ப கான்டாயிடுச்சி. என் அண்ணன்மார்களோட காலத்தில் ஏற்பட்ட கொடுமையை விட, இது பெருங்கொடுமையா இருக்கேன்னு வாழ்க்கையை வெறுத்து, விட்டுட்டு போன ஒரே வாரத்துல, ஐயா, பேக் டு பெவிலியன்.
நான் ஏதோ செய்யாத குற்றத்த சென்ஞ்ச மாதிரி என் அப்பா, எண்ரன்ஸ் எக்ஸாம் முடிஞ்சு, ரிசல்ட வரும் வரை எங்கிட்ட பேசவேயில்லை. இப்ப நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு, ஆனா அந்த நேரத்துல அது ரொம்ம வசதியா இருந்திச்சு. நான் நினைத்த இடத்துலயே படித்தேன், சினிமாவிற்கு போனேன், நல்லா ஊர் சுத்தினேன், கிரிகெட் விளையாடினேன்..... ஆனா புத்தகத்த மட்டும் தொடவேயில்ல.
ரிசல்ட் வந்ததும் மார்க்க பார்த்துவிட்டு (அடிங்ங்க..., யாருடா அவன்..., மார்க் எத்தனன்னு கேட்கிறது?), என் அப்பா சொன்னது, “என் பேச்ச கேட்டிருந்து எம்மோசியில் படிச்சிருந்தா................., இன்னும் நல்ல மார்க் வாங்கியிருந்திருப்பான்.
அந்த வசனத்த கேட்டுவிட்டு நான் சொன்ன பஞ்ச் டயலாக் (எங்கப்பா போனதுக்கு அப்புறம் தான்) என்னனு தெரியுமா???
.
.
.
.
.
.
.
எங்க படிக்கிறோம்ங்குறது முக்கியமில்ல,

எப்படி படிக்கிறோமுங்குறது தான் முக்கியம்.
--------------------------------------------------------------------------யாஸிர்

திங்கள், டிசம்பர் 19, 2011

விஜய் டி.வி


நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
தொலைக்காட்சிகளிலே, எனக்கு மிகவும் பிடித்த சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அதற்காக 100% என்று என்னால் சொல்ல இயலாது. நான் காலேஜ் முடித்து, ஒருவருடம் தமிழ்நாட்டிலேயே வேலை செய்ததால் டி.வி பார்க்கும் நேரம் குறைவாக இருந்தது. பின்பு பெங்களூரு சென்ற பின்பு, கம்பெனி கொடுத்த வீட்டில் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து டி.வி வாங்கி, கேபில் கனெக்சன் எல்லாம் கொடுத்து, புல் செட்டப்பில் செய்துவைத்திருந்தோம். அந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் தான் விஜய் டி.வி.

அதற்கு முன்பு சன் டி.வி, ராஜ் டி.வி....ன்னு பல சேனல்கள் பாத்திருந்தாலும், விஜய் டி.வி கொஞ்சம் வித்தியாசமான நிகழ்சிகளின் மூலம் எங்களை ஈர்த்தது. பொதுவா சிவில் இன்ஞ்சினியர் என்பதால், எங்களுக்கு வேலை எல்லாம் முடிந்து, வீட்டிற்கு வர இரவு 9.00 மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ்காக டி.வியை போட்டுப்பார்த்தால், ஒரே அழுகாச்சி சீரியல்களாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் தான் விஜய் டி.வியின் பல விதமான நிகழ்சிகள் ஒளிபரப்பாகின. வித்தியாசமான நிகழ்சிகள், கலக்கப் போவது யாரு?, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா? நானா?....மூலமாக நாங்கள் வேறு எந்த சேனல்களுக்கும் திரும்ப போவது இல்லை.


அரசியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள் முன்னாடி அதிக அளவு வந்துகொண்டிருந்தது, ஆனால் ஏனோ அது இப்போது வருவதில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அவர்களின் கணிப்பு, மற்றும் அரசியல் தலைவர்களின் நேர்முக விவாதம் என பட்டைய கிளப்பிக்கொண்டிருந்தார்கள். மற்ற நிகழ்ச்சிகளை விட எனக்கு இந்த அரசியல் விவாத நிகழ்ச்சி ரொம்ப, ரொம்ப பிடித்திருந்தது, காரணம் மற்ற சேனல்கள் எல்லாம் தத்தம் அரசியல் தலைவர்களை மட்டுமே உயர்வாக பேசி / துதி பாடிக்கொண்டிருக்கும் வேலையில், நடு நிலையோடு நிகச்சிகளை வழங்கியது தான்.

அதிகளவிலான நிகழ்ச்சிகள், இந்த டி.வி சேனலில் இருந்தே, மற்ற டி.வி சேனல்கள் காப்பியடித்துக் கொண்டிருந்தன. விஜய் டி.வியில் பிரபலம் அடைந்தது போல், வேறு எந்த டி.வி நிகழ்ச்சிகளிலும் எவரும் பிரபலம் அடைந்தது இல்லை என்பது உண்மை. சந்தானம், மதுரை முத்து முதல் இன்று உள்ள சிவ கார்த்திகேயனும் ஒரு உதாரணம். ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளை அதிகமாக பார்பதுண்டு, இருந்தாலும் அந்த சீசன் முடிந்த பின்பு, அவர்கள் ஒளிபரப்பும் புளூபர்ஸ் எனப்படும் மேக்கிங் ஆப்பை நான் மிஸ் செய்வது இல்லை.


இவர்களின் நிகழ்சிகளை தொகுத்து வழங்கும், தொகுப்பாளர்களும் சரி, தொகுப்பாளினிகளும் சரி, அவ்வளவு கன கச்சிதமாக அந்த நிகழ்சிகளுக்கு பொருத்தமாகயிருப்பார்கள். காலம் மாற, மாற தொகுப்பாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். முன்பு எந்த நிகழ்ச்சியானாலும், தீபக், டி.டி (திவ்யதர்சினி) தான் வருவார்கள், பின்பு அது கோபினாத்துக்கு சென்று, இப்போது சிவ கார்த்திகேயனிடம் வந்துள்ளது. இடையிடையில், அர்சனா, உமா ரியாஸ்கான், மிமிக்கிரி சேதுவும் கலக்கினார்கள்.

விஜய் டி.விமுன்பு போல இப்போது இல்லை என்பது தான் உண்மை. உதாரணமாக விஜய் அவார்ட்ஸில், இப்போது அதிக பாரபட்சம் காட்டப்படுவதாகவே நான் நினைக்கின்றேன். முதல் 2 ஆண்டுகள் நன்றாக இருந்தது, அதன் பின்பு, கமலஹாசன், விஜய், சூர்யாவின் ரசிகர்களுக்காகவே இது நடத்தப்படுவது போன்ற மாயையை உருவாக்கியுள்ளது. தசாவதாரம் படத்திற்கு, இவர்களின் விருது ரொம்ப ஓவர், சிறந்த காமெடியெனும் கமலஹாசன் தான் என்று சொன்னது, தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய காமெடி. கண்டிப்பாக நான் கமலுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அந்த வருடம் வெளியான படங்களில் இதைவிட அதிக அளவில், நகைச்சுவை செய்திருந்த நடிகர்கள், பல படங்களும் உண்டு, கமலுக்கு கொடுக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, கொடுக்கப்பட்டது. அந்த வருடம் கமலுக்கு 5 விருதுகள், நடிகர், திரைக்கதை, வில்லன், கமெடி, குணச்சித்திரம் என்று. பின்பு சூர்யாவிற்கு, கிட்டத்தட்ட சூர்யாவிற்கு விருது கொடுக்காத கடைசி 3 வருடங்கள் இல்லை என்றே சொல்லலாம். எதாவது ஒரு கேட்டகரியில் விருது, அவர் எந்த கேட்டகரியிலும் வரவில்லை என்றால், அவருக்காகவே ஒரு புது கேட்டகரியை உருவாக்குவது என்று கடுப்பேத்தினார்கள். கடைசியாக அவருக்கு கொடுத்த விருது என்ன தெரியுமா?, சமுக சேவையில் சிறந்த நடிகர் – சூர்யா. என்ன கொடும இது, நடிப்புக்கும், சமுக சேவைக்கும் என்ன சம்பந்தம், அதற்கு எதற்கு சினிமா விழாவில் விருது. ஒரு ரோட்டரி கிளப்பில் சிறந்த நடிகருக்கு விருது கொடுப்பது எப்படி தவறானதோ அது போலத்தான் இதுவும். சமுக சேவகருக்கா விருது கொடுக்க 1000 அமைப்புகள், இயக்கங்கள் உள்ளன, இவர்கள் எதற்கு?, ஏன்?. விஜய் அவார்ட்ஸின், முதல் வருடத்தின் உண்மையான விருது, அதாவது ஃபேவரட் ஆக்டர் (அதிகளவு விரும்பப்படும் நடிகர்) விருது அஜித் குமாருக்கு தேர்வானது. ஆனால் அஜித் குமார் அதை வாங்க, அந்த நிகழ்ச்சிக்கு வராத ஒரே காரணத்திற்காக, இதுவரை அஜித்குமார் புறக்கணிக்கப்படுவதாகவே நான் நினைகின்றேன்.


வர வர விஜய் டி.வியின் தனித்தன்மை குறைவதாகவே எனக்கு தோன்றுகின்றது. கடைசியாக நான் பார்த்த நீயா? நானா? வில் இது அப்பட்டமாக தெளிவானது. சமுகத்தில் இருக்கும் பிரட்சனைகளைப் பற்றி விவாதம் நடத்தும் நிகழ்ச்சியில், ரஜினிகாந்தின் பெருமை பற்றி பேசும்படியாக ஆனது மிக மிக கேவலம். அதிலும் பாரதியாரின் பிறந்த தினத்தில் இந்த கொடுமை. நீயா?, நானா? அன்று நீயும், நீயும் என்றாகிப் போனது.

ஜீனியர் சூப்பர் சிங்கர்னு ஆரம்பிச்சு, அந்த பிஞ்சுகள், சூப்பர் சீனியர் ஆகும்வரை விடுவதில்லை. இந்தமாதிரியான குறைகள் இருந்தாலும், ஜாக்கிசானையும், ஜேம்ஸ் பாண்டயும் தமிழ் பேசவைத்தது, காமெடியான பல் நிகழ்ச்சிகள், அற்புதமான மேடைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பது என்று பார்க்கும் வகையில், விஜய் டி.வி தான் பெஸ்ட், மற்ற தமிழ் டி.வி சேனல்களுடன் கம்பெர்பன்னும் போது மட்டும்.

-------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், டிசம்பர் 14, 2011

ஹே, ஹே என்ன ஆச்சு எனக்கு....

நம் அனைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.


என்ன எனக்குள் இன்றிலிருந்து இப்படியொரு மாற்றம். விடுமுறை பற்றி நினைத்துக் கூட பார்க்காதவன். எத்தனை நாள் விடுமுறை எடுக்க வேண்டும் என்று யோசனையில் இப்போது. வங்கியில் பணத்தை எடுத்து, செலவு மட்டும் செய்யத்தெரிந்தவன், இப்போ மீதமுள்ளதை மிச்சப்படுத்த முயல்பவன். திருமணத்திற்கு திண்ண மட்டும் சென்றவன், அதற்காகும் செலவிற்கு கணக்கு பார்ப்பவனாக, நான் இப்போது.

கல்யாண தேதி குறிச்சதுக்கே, கண்ணாடி போட்ட எனக்கு இப்படி கண்ணகெட்டுதுன்னா, கல்யாணத்துக்கு அப்புறம்!!!!!!!!!!!!!!.

வீட்ட கட்டிப் பாரு, கல்யாணம் செய்து பாருன்னு ஒரு பழமொழியிருக்கு. எவ்வளவு உண்மை அது. சிவில் இன்சினியராக இருப்பதால், வீட்டை கட்டிப்பார்பதன் கஷ்டம் ஒரளவிற்கு தெரியும். இருந்தாலும் அப்படி ஒரு கஷ்டம் வந்திரக்கூடாதுன்னு, வீடு கொடுக்குற வீட்டுல தான் பொண்ணு எடுக்கனும்னு, பயங்கரமா பிளான் எல்லாம் போட்டுவைத்திருந்தேன். வைத்தது வைத்ததாகவே இருக்கு இன்னமும். ம்ம்ம்ம்ம்

இன்று பெண் வீட்டிற்கு சென்று கல்யாண தேதி குறித்தாயிற்று. சரி கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகும்னு என் அப்பாகிட்ட கேட்டா, ஏதோ, தோசக்கடையில சொல்லுறமாதிரி சாதா, ஸ்பெஷல் சாதா, ஸ்பெஷல், ரோஸ்ட்ன்னு 4 விதமா சொல்ல, ரோஸ்டுக்கு ஆகும் விலையிலிருந்து கேட்டு, சாதாவே போதும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கே @!#% லட்சம் ஆகுமாம். அப்ப கட்டதோசை லெவலுக்கு இறங்கி எவ்வளவு ஆகுமுன்னு கேட்டா, என் குல பெருமை, குடும்ப பேரு எல்லாத்தயும் எங்கப்பா போனில், ஒரு பொசிசன்ல் நின்னு சொல்ல, பல்ல கடிச்சிகிட்டே, கடுப்போடு ஒகே, ஒகேன்னு சொல்லியிருக்கிறேன் (வேற வழி).

பொண்ணுக்கு பட்டு புடவை, அக்காவிற்கு நகை, அண்ணிக்கு செயின், அண்ணனுக்கு ஜவுளின்னு, வீட்டிற்கு பந்தல்ன்னு.........லிஸ்டு ஒரு குயர் நோட்டயும் தாண்டிப் போகுது. வாழ்கையில இந்தமாதிரியான விஷயம் எல்லாம் ஒரு முறைமட்டும் தான் வரும், அதனால செலவ எல்லாம் பார்க்கதே, சும்மா அடிச்சு தூள்பண்ணுன்னு என் நண்பன் சொன்னான். எனக்கு வந்ததே கோபம் அவன்மேல. வராத பின்ன, அந்த நாயி ஓடிப் போயி ரிஜிஸ்டர் மேரஜ் பன்னினவன், கூட வந்தவங்களுக்கு டீ கூட வாங்கிகொடுக்கல, பக்கி அது பேசுது.

கை நடுக்கம், சுவர்பார்த்து சிரிக்கிறது, வலது கால் ஷுவ இடது கால்ல போட்டுப்போறது, அடிவயிற்றில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், கண்ணடியில கீரல் விழுந்தாலும், கொடுறமா பார்த்துக்கிட்டு நிக்கிறது.... என்னதான் ஆயிரம் சொல்லுங்க,  இது கூட நல்லாத்தான் இருக்கு.
.
.
.
தூக்கை எதிர்நோக்கியிருக்கும் கைதி போலவும்,
பிரசவ நாளை எதிர்பார்த்திருக்கும் அன்னை போவும்
இப்போது நான் – ஆம்,
பிரம்மச்சரியத்தின் சாவு, சம்சாரியின் பிறப்பு ஒரே நாளில்
பிப்பிரவரி 19, 2012 (இன்ஷா அல்லாஹ்)
--------------------------------------------------------------------------------------யாஸிர்.