புதன், ஆகஸ்ட் 03, 2016

அல்பைக் எனும் அம்மா உணவகம்.

எந்த புது இடத்துக்குப் போனாலும் என்னோட முதல் பிரட்சணை சாப்பாடுதான். ஆறுமாத புராஜெட்டுக்காக சவுதி ஜித்தா வருவதற்கு முன், ‘’சேட்டன் கடை மோட்டா ரைஸ் விண்வெளியிலேயே கிடைக்கும் போது, ஜித்தாவில் கிடைக்காதா என்ன?’’ என்று எண்ணிக்கொண்டுதான் வந்தேன். ஆனால் வந்தபின்புதான் தெரிந்தது, சேட்டன்கள் எல்லாம் அரபியாக கன்வெர்ட்டாகி சுட்ட கோழி விற்றுக்கொண்டிருக்கும் கொடூறம். சுட்ட கோழி சாப்பிடுவது என்பது எனக்கு பழகிப்போனது என்றாலும், முப்பது நாள் மூணு வேளையும் சுட்டகோழி என்றால், குஷ்டமாகும்தானே.

வெரைட்டியாக வேறு ஏதாவது சாப்பிடச் சென்றால், பர்சுக்கோ அல்லது வயிற்றுக்கோ பங்கம் வந்துவிடுகிறது. இங்கு சுட்டுப்போட்டால் கூட யாரும் அரபி தவிர்த்து வேறு மொழி பேசுவதில்லை. சுற்றி இருக்கும் ஒரு மலையாளி கடையில் கூட ‘என்ன வேண்டும்?’ என்பதை அரபியில்தான் கேட்கிறான். சிலரின் முகத்தைப் பார்த்து இவன் இன்னவன் என்று கண்டுகொள்வது கடினம், ஆனால் என் மூஞ்சைப் பார்த்தால் என் தெரு பெயர் முதல் பாஸ்போர் நம்பர் வரை தெரியும். தெரிந்தும் என்னிடம் அரபி அல்லது ஹிந்தியில்தான் பேசுறானுங்க. ஒரே ஒருதடவை மட்டும் தமிழ் கடைக்குச் சென்றேன். மலையாளியே பராவாயில்லை என்று தோன்றியது. ஆர்டர் எடுப்பவன் மாஸ்டரிடம் ‘’மூணு தோசைய்ய்ய், அதுல ஒன்னு மொருவலா’’ என்று சொல்லிவிட்டு, நம்மிடம் வந்து ‘’அவுர் ஆப்கா கியா சாயியே’’ன்னு கேட்டான். இதுக்கும் அவன் காதுபடவே கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்த ராதிகா ஆப்தேயின் கும்ம்மான போட்டோ ஷீட்டைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். 

அரபி சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டு, சில அரபி ஹோட்டலுக்குச் சென்றால் சர்வநாசம். மெனுகார்டுகூட அரபியிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் அதில் இருக்கும் படத்தைச் சுட்டிக்காட்டி ஆர்டர் செய்துவிட்டு டேபிளில் அமர்ந்தால், நான்குபேர் சாப்பிடும் அளவிற்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள். இல்லையென்றால் சின்ன தட்டில் கொண்டுவருவார்கள் ஆனால் நான்கு நாளுக்கான சாப்பாட்டுப் பைசாவை புடுங்கிவிடுகிறார்கள். துபாயில் எட்டுவருடம் இருந்தும் அரபிமொழி கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதில்லை, ஆனால் சவுதியில் இறங்கிய எட்டாவது நிமிடமே அந்த கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இப்பவெல்லாம் ஊருக்கு போன் செய்தாலே ‘’பாப்பா, மாமா கெய் பாலக், குல்லு தமாம்?’’ என்றுதான் வாயில் வருகிறது. நமக்கு சோறுதானே முக்கியம்.

இப்படி சாப்பாட்டுக்காக நான் படும் கஷ்டத்தை நண்பன் ஒருவனிடம் சொல்லி அழ, அவன்தான் அல்பைக் ரெஸ்டாரண்ட் பற்றி சொன்னான். இதுவும் KFC போன்றதுதான் என்றாலும், ஆந்திரா மெஸ்ஸில் சோறு போடுவதுபோல 10 ரியாலுக்கு இரண்டு பன்னு, 5, 6 சிக்கென் பீஸ், பிரென்ச் பிரைஸ் என அள்ளிக் கொட்டிவிடுகிறார்கள். முதல்முறையாக சாப்பிடுவதாலோ என்னவோ டேஸ்ட் சூப்பரோ சூப்பர். தொடர்ந்து சாப்பிட்டால் ஒருவேளை பொண்டாட்டி சமையல்மாதிரி சப்பென்று இருக்கலாம். லைட்ட பசிச்சா 5 ரூபாய் சான்விச், ஹெவியா பசிச்சா பத்து ரூபாய் சான்விச் என காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய சைஸ் சான்விச்சை காலையில் வாங்கிவைத்து கடிக்க ஆரம்பித்தால், ஆபிஸ் முடிந்து வீட்டுக்ப்போகும் போது கூட மிச்சம் இருக்கும். எவ்ளோ ‘’பெரிய்ய்ய மாத்திர.....’’ தேவையானி ரியாக்சன் மாதிரி அவ்ளோ பெரிய்ய சான்விச் அது.

அம்மாவைப் பார்த்த பின்புதான் ஹிலாரி கிளிங்டன் கட்சியின் அதிபர் வேட்பாளராகியிருப்பதைப் போல், அம்மா உணவகத்தைப் பார்த்துத்தான் அல்பைக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக எழுதாலாம் என்று நினைத்தேன். எதையும் நம்பும் தமிழரல்லவா நாம், ஆனால் என் சொந்தக்காரர் நேற்று இரவுதான் தண்டனைக்காக தலையை வெட்டும் இடத்தைக் காண்பித்தார்.  ஜித்தா எப்படி? என்று கேட்பவர்களிடம், ரைமிங்காக தப்பாக எதுவும் சொல்லிவிட்டு, நாட்டிற்கு நாக்கில்லாமல் வர எண்ணமில்லை, ஆகையால், ம்ம்ம்ம் ஓக்கே, பரவாயில்லை, நல்லாயிருக்கு என கவுண்டர் சொல்லுவது போல ‘’ஈயம் பூசுனதுமாரியும் இருக்கனும் பூசாததுமாரியும் இருக்கனும்’’ என்ற லெவலை மெயிண்டெய்ன் செய்கிறேன்.

இங்கு, டாக்ஸி எல்லாம் பாக்கிஸ்தான் நாட்டுக்காரர்களுக்கு பட்டாப்போட்டு கொடுத்துவிட்டார்கள் போல, மீட்டர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏரியா பெயரைச் சொன்னால், 40 ரூபாய் என்பார்கள், நாம் 10 ரூபாயில் இருந்து பேரத்தை ஆரம்பிக்கவேண்டும். பத்து நிமிடத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடம் பேரம் பேசி 25 ரூபாய்க்கு முடிக்கவேண்டும். இங்கு எனக்கு என்னுடய சொந்தக்கார மச்சான்தான் வழிகாட்டி. முதல்நாள் அவர், ‘’டாக்ஸியில் ஏறியதும் பாக்கிஸ்தானி எந்த ஊரு? எங்க வேலைபார்க்குற? என கேள்விகேட்பான், அடிச்சிகூட கேட்பான், நீ இஞ்சினியர்னு மட்டும் சொல்லிறாத, இல்லாட்டி இறங்கும் போது கூட பத்து கொடு, இருபது கொடு என்று சண்டைக்கு வருவான்’’ என்று சொன்னார்.

இதுவரைக்கும் நிறைய முறை டாக்ஸியில் ஏறியிருக்கின்றேன், அவர் சொன்னது போலவே, ‘’என்ன தம்பி? எந்த ஊரு? எங்கயிருந்து வர்றீங்க?’’ என்ற கேள்விகளை ஹிந்தியில் கேட்பார்கள் நானும், ‘’இந்தியா, மெட்ராஸ், மதராசி’’ என பதில் சொல்லுவேன். ஆனால், ‘’என்ன வேலை பாக்குற?’’ என்ற கேள்வியை கேட்டுவிட்டு, “ஆபிஸ் பாய்?, ஹவுஸ் டிரைவர்?, கிளினர்?...” என அவர்களே பதிலும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ‘’என்னடா இது ஜித்தால ஒரு பொறியாளனுக்கு வந்த உச்சகட்ட சோதனை’’ என்று நானே நினைத்துக்கொள்வேன். எங்கம்மா சத்தியமா நான் இஞ்சினியர்னு சொன்னால் கூட நம்பமாட்டார்கள் போல. நம்ம டிசைன் அப்படி. டாக்ஸிக்காரர்களுக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதில் கூட பிரட்சனையில்லை, சிலபேர் வண்டியில் நாத்தம் குடலைப் புடுங்கும். பின் சீட்டில் போய் உட்கார பின் கதவைத் திறந்தால், வம்படியாகப் பிடித்து முன்னாடி உட்காரவைத்து கையை தூக்கி தூக்கி தும்சம் செய்வார்கள். ஒருமுறை பொறுமையிழந்து ‘’குழிக்க வேண்டியதுதாணடா?”” என கேட்டுவிடலாம் என்று தோணியது, ‘’குளிச்சிட்டேனே, வேணும்னா மோந்துபாரு” என்று சட்டயை கழட்டி மூஞ்சை அக்குள்குள்ள கொண்டுபோயிருவானோ? என்ற மரணபயத்தில் வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு உயிர் பிழைத்தேன்.

என் வாழ்வில், இன்னும் என்னென்ன கொடுமைகளை காட்டக் காத்திருக்கிறதோ இந்த உலகம்?. 


--------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.