வியாழன், ஜூன் 15, 2017

வனஜா டீச்சர்.

தென்காசிக்கு போவதாக இருந்தால், போகும் போது பஸ்ஸில் வலது புறமும், திரும்பும் போது இடது புறமும் உட்காரும்படியாக பார்த்துக்கொள்வேன். எங்க ஊரில் இருந்து ஏழு கிலோ மீட்டரில் . கி.பி 1888ல் ஆரம்பித்த அந்த பள்ளிக்கூடத்தில் தான் நான் படித்தேன். சினிமா கிராபிக்ஸ்ஸை மிஞ்சும் இயற்கையான எளில்மிகு லோக்கேஷனில் அமைந்திருக்கும்.. பள்ளிக்கு பின்னாடி சின்ன ஓடை. முன்னாடி ஒரு ஆலமரம் அதன் அடியில் சின்ன புள்ளையார் கோவில். பக்கத்தில் உலகத்தில் எங்கயுமே கிடைக்காத நாலே நாலு திண்பண்டங்கள் கொண்ட ஒரு குட்டி பெட்டிக்கடை. எதிர்புற வலது பக்கத்தில் கரடிமாட சாமி, தெற்கில் சுடலைமாட சாமி என காவல் தெய்வங்கள், அதை ஒட்டி விளையாட்டு மைதானம் என்ற பெயரில் ஒரு புதர்காடு. சாலை இருபுறமும் புளியமரம் என இயற்கை சூழ் ரம்மியமான இடம். 
பின்னாடி இருக்கும் அந்த சின்ன ஓடையில் ஒரு நாளைக்கு 10.30, 1.00, 3.30 என்ற மூன்று வேளைகள் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். முனிசிபாலிட்டியில் திறந்துவிடுவதாக நினைக்க வேண்டாம், அதுதான் எங்கள் இண்டெர்வெல் பிரீயெட். அந்த ஓப்பன் ஏரியாவில் வானத்தைப் பார்த்துக்கொண்டு உச்சா போகுற சுகமே தனி. புள்ளையார் கோவிலில் அடிக்கடி பூஜை நடக்கும். ஆனால், புளியோதரையோ, பொங்களோ, பிரசாதமோ கொடுத்துப் பார்த்ததே இல்லை. அந்த காண்டு புள்ளையாருக்கே இருந்திருக்கும் போல, ஊரே ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ன்னு பூரித்த நாட்களில், டீச்சர்கள் ஆர்வத்தோடு தூக்குச் சட்டியில் கொண்டுவந்த பாலை துப்பி அனுப்பிவிட்டார். ‘’புள்ளையார் கோவமா இருக்காரு’’ன்னு புரிந்து அன்று நாள் மட்டும் சக்கரை பொங்கள் தந்தார்கள்.
ஒருநாள் தென்காசிக்கு போகும்போது பஸ்ஸில் பயங்கர கூட்டம், இடைகாலில் எங்க எட்டாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் ஏறினாங்க. அவங்க பெயர் வனஜா. பார்த்துவிட்டு பயங்கர சந்தோசம். ‘’என்னய ஞாபகம் இருக்குமா?, ஞாபகம் இல்லன்னா என்னா?, நான் உங்க ஸ்டூடண், இஞ்சினியரா இருக்கேன்னு சொல்லுவோம். ச்சே, ச்சே இஞ்சினியர்ன்னு சொல்ல வேணாம், நம்ப மாட்டாங்க. நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா டீச்சர்’’ன்னு கேட்கலாம்னு ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சேன். ‘’ஏய், அறிவிருக்கா இப்படி இடிச்சுக்கிட்டு நிக்க, கொஞ்சம் தள்ளி போவேண்டியதுதானே.........’’ “நவளு நவளுன்னா இங்க என்ன நாலு செண்ட் இடமா கெடக்கு...””என பக்கத்தில் இருந்த பெண்ணிடத்தில் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 20 வருசத்துக்கு முன்னால ‘’எல இத மட்டும் நீ நாளைக்கு படிக்காம வா, அப்பிருவேன் அப்பி’’ என கோவத்துல கத்துன அதே கம்பீர குரல் இன்னும் அப்படியே இருந்தது. ஒரு வேளை நான் குருடனாக இருந்திருந்தால் கூட குரலைவைத்து ‘’வனஜா டீச்சர்’’தான்னு சொல்லியிருப்பேன். டீச்சரோடு சரிக்கு சமமா சண்டை போட்ட பெண் ஆஜான பாகுவா, அமரேந்திர பாகுபலியையும், பல்வால் தேவனையும் ஒன்றாக கட்டிவைத்தது போல் இருதார். டீச்சரைப் பார்க்க ஒன் ஸ்டெப் முன்னாடி சென்ற நான், அந்த பெண்ணை பார்த்தபின்பு டூ ஸ்டெப் பின்னாடி வந்துவிட்டேன். டீச்சரிடம் குசலம் விசாரிப்பதை பார்த்துவிட்டு. இறங்கும் போது டீச்சர் மேலுள்ள கோவத்தையெல்லாம் ஆஜான பாகு என் மீது இறக்கிவிட்டால்????????. நினைத்த போதே ஒரு பக்க ஷோல்டர் இறங்கியது போல இருந்தது.
எட்டாம் வகுப்பில் அவங்கதான் எங்க கிளாஸ் டீச்சர். லேட்டா வருகிறவன், வீட்டுப் பாடம் செய்யாதவன், டீச்சர் இல்லாத நேரத்தில் பேசுகிறவன்.........என எல்லோருக்கும் 25 காசு ஃபைன். என் கூட படிஞ்ச 90% மாணவர்களுக்கு 25 காசு என்பது பெரிய விசயம். காசு எல்லாம் கிளாஸ் லீடரிடம் இருக்கும், தினமும் டீச்சரிடம் கணக்கு காட்ட  வேண்டும். அந்த காசு எல்லாத்தையும் மொத்தமாக சேர்த்து வருட கடைசியில் அதிகமாக முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள், தமிழில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, பேனா, பென்ஸில், ஸ்கேல்......என பரிசு வழங்குவார். எனக்கு ஒரு பேனா, இரண்டு பென்சில் கிடைத்ததாக ஞாபகம்.
5 நாள் சுடலைமாட சாமி கோவில்கொடை. 5 நாள் கரடிமாட சாமி கோவில்கொடை என வருடத்தில் அந்த 10 நாட்கள் மட்டும் பாடம் எதுவும் நடக்காது. நடக்காது இல்லை நடத்த விட மாட்டார்கள். பெரிய பெரிய கூம்பு ஸ்பீக்கர் எல்லாம் பள்ளி முன் இருக்கும் மரத்தில்தான் இருக்கும். பள்ளியில் கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் ஸ்பீக்கரில் சாமிப் பாட்டு ஆரம்பமாகிவிடும். அவர்கள் வைக்கும் சவுண்டிற்கு, சில மாணவர்களுக்குள் சாமியே இறங்கி ஆடியிருக்கிறார்.
இதுமாதிரியான ஒரு திருவிழா நாளில்தான், அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்து ‘’பையன் எப்படி படிக்கிறான்’’ன்னு டீச்சரிடம் கேட்க, ‘’படிப்பெல்லாம் நல்லாத்தான்  படிக்கிறான், கடையநல்லூர் குசும்புதான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு’’ன்னு சொல்லிடுச்சு. இதுதான் சந்தர்ப்பம்னு எங்கப்பா வீட்டுல இருந்து எழுதி எடுத்துட்டு வந்த மொத்த டயலாக்கையும் மூச்சுவிடாம சொல்லிட்டாப்புல. அதுல ஒன்னு, எங்கப்பா படிக்கிற போது எங்க தாத்தா அவர் கிளாஸ் டீச்சர்ட சொன்ன அந்த டயலாக் ‘’முட்டிக்கு கீழ விட்டு வெளுத்துருங்க டீச்சர்’’. சொல்லிவிட்டு பெரிய மனுஷன் திரும்பி போகவும், ஸ்பீக்கரில் ‘’கோட்டய விட்டு வேட்டைக்குப் போனா சுடலமாடசாமி, சுடலமாட சாமியும் நீதான்........’’ன்னு பாட்டு ஒலிக்கவும் சரியாக இருந்தது. அதுவரைக்கும் கையால அடிச்ச டீச்சர், அந்த சம்பவத்துக்கு அப்புறமா பிரம்பால பின்னி எடுக்கும்.
இப்படி ராஜமாதா சிவகாமிதேவி மாதிரி இருந்த எங்க வனஜா டீச்சரயே நிலைகுலையச் செய்து நாற்காலியில் தடுக்கி விழும்படி ஒரு சம்பவம் நடந்தது. அவன் பெயர் முத்துச்சாமி. அவன நாங்க செல்லமா சுருக்கி ‘’முச்சாமி’’ன்னு கூப்பிடுவோம். அவன் மூன்று நாள் ஸ்கூலுக்கு வரல. நாலாவது நாள் வனஜா டீச்சர் கேட்டுச்சு ‘’எ மூதி மூன்னாள்ளு வர்ல, எங்க கிளிக்க போன’’. முச்சாமி ‘’புண்ணு டீச்சர்’’ன்னு சொன்னான். ‘’மைனருக்கு, எந்த எடத்துல புண்ணு’’ன்னு டீச்சர் கேட்டுச்சு. ‘’அந்த இடத்துல டீச்சர்’’ன்னு முச்சாமி சொல்ல டீச்சருக்கு புரியல. ‘’அதுதான் மூதேவி எந்த இடத்துல’’ன்னு கொஞ்சம் சவுண்டா கேட்க, முச்சாமி ரொம்ப மெல்லுசா ‘’அந்த்த்த்த்த.....இடத்த்த்துல டீச்சர்’’ன்னு காலை ஒடிக்கு வைத்துக்கொண்டு இடுப்பை லைட்டா ஆட்டிச் சொன்னான்.
டீச்சருக்கு ‘’இடம்’’ புரிஞ்சு போச்சு. இருந்தாலும் முத்துச் சாமி மேல நம்பிக்கை இல்லை. பொய் சொல்லுவதாக நினைத்து ‘’அப்படியா, காட்டுடா, புண்ண பாக்கலாம்’’ன்னு டீச்சர் சொல்ல, அவனும் ‘’வேணா டீச்சர்’’ன்னு ரெண்டு, மூனு தடவ வெக்கம் கலந்த சோகமா சொன்னான். டீச்சர்க்கு கோவம் அதிகமாகி எழுந்து ‘’பொய் சொல்லுதியோ, அவுருல பாப்போம்’’ன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, முச்சாமி டவுசரை ..................... (எஸ் யூ ஆர் ரைட்). டீச்சர் பதறிப் போய் முகத்தை திருப்பிக்கொண்டு ‘’பரதேசி, பரதேசி, நம்புதேன், மூடுல மொதல்ல’’ன்னு சொல்லியவாரே நாற்காலியில் தடுமாறி விழுந்துவிட்டார். எங்களுக்கு அதைப் பார்த்து (அய் மீன், அந்த சம்பவத்தை பார்த்து) சிரிப்பு வந்தாலும் 25 காசு போய்விடுமே என்று பயந்து அடக்கிக்கொண்டோம். அடுத்த ஒரு வாரம் வனஜா டீச்சர் ‘’எப்ப என்ன நடக்குமோ’’ங்குற மாதிரியான பீதியான மனநிலையிலேயே இருந்தார்.
விசயம் அதோடு முடியவில்லை,
மதியம் பாடவேலையில் சாந்தி டீச்சர் கணக்கு பாடம் எடுக்க வந்தது. அல்ஜிப்ராவோ, ஏதோ ஒரு கணக்கு பாடம். எடுத்துக்கொண்டிருக்கும் போது ‘’முதல் கூட்டுத்தொகையை, ரெண்டாவது கூட்டுத்தொகையால் வகுக்க வேண்டும்’’ன்னு சொல்லிவிட்டு
‘’என்னடா முச்சாமி புரிஞ்சிச்சா, ‘’வகுக்க’’னும்டா ‘’வகுக்க’’னும், ‘’அவுக்க’’னும் இல்ல’’ என சொல்ல மொத்த கிளாஸும், வனஜா டீச்சர் சம்பவத்துக்கும் சேர்த்து சிரித்தது. (சாந்தி டீச்சர் கிளாஸுக்கு 25 பைசா ஃபைன் கிடையாது). பாவம் முச்சாமி சூம்பிப் போனான், ஏன்னா அவனுக்கு உண்மையிலேயே புண் இருந்தது. ‘’அது எப்படி உனக்கு தெரியும்?’’னு கேட்காதீங்க. உச்சா போகும் போது எல்லா நாளுமா வானத்தைப் பார்பார்கள்? சில சமயங்களில் கண்ணு அங்க இங்க போகத்தான் செய்யும்.
-----------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூன் 06, 2017

பாக்கிஸ்தானி ஜிந்தாபாத்.

ராகுல் டிராவிட் என்னைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ, அன்னையில இருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் கொறஞ்சு போச்சு.  ஆனா என்னைக்கு ‘வி. வி. எஸ். லட்சுமனனை’யெல்லாம் 20-20க்கு செலக் செஞ்சானுங்களோ அன்னைல இருந்து ‘’இந்த கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சாத்தான் என்ன?’’ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு
எங்க ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி இருக்கிறான். அவன் சொல்லித்தான் அன்று இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்பதே தெரியும். முன்னாடியெல்லாம் இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ‘’ஸ்கூல எப்படி கட் அடிக்கலாம்’’, ‘’எந்த தாத்தாவ சாவடிக்கலாம்’’.....என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரெடியாவோம். இப்போது அதுமாதிரியான பெரிய இண்டிரஸ்ட் யாருக்குமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பழைய கம்பெனியில் நான் கேம்பில் தங்கியிருந்தேன். என்னோட புராஜெக்ட்டில் அன்சர்னு ஒரு பாக்கிஸ்தானி இருந்தான். என்னய பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அனாத புள்ளய பாக்குறது மாதிரி ஆதரோவோடு பார்ப்பான். பேசும் போது கேன்ஸர் பேசண்டிடம் பேசுறமாதிரி ரொம்ப கருணையா பேசுவான்.   முதலில்,  ‘’நாம துபாய்க்கு புதுசுங்குறதுனால இப்படி ஆதரவா இருப்பதாக’’ நினைத்தேன்.
ஒரு நாள் என்னுடய கேபினுக்கு வந்தான். ஆதரவு ஐந்து கிலோவை, கருணை கால் கிலோவோடு பிசைந்து (எப்போதும் போல) பேசினான். அவன் பேசும் தோணியைப் பார்த்த போது, ஏதோ என்னிடம் கேட்பதற்கு தயங்கி நிற்பதுபோல் தெரிந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின்பு அவனாகவே கேட்டான். ‘’உனக்கு எப்படி இந்த சின்ன வயதில் சொட்டை விழுந்தது?’. ‘’அதே கேள்வி’’ நான்கு திசைகளிலிருந்தும் எக்கோ அடித்தது.  எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, இந்தியாவுல இருந்து ஓடி வந்தேனோ அதே கேள்வி. ‘சிவாஜி’ பட வசனம்போல ‘’இன்னும் எத்தனவாட்டிடா இந்த கேள்விய கேப்பீங்க”ன்னு என்னை நானே நொந்துகொள்வேன். ‘’எங்க வீட்டில் எல்லோருக்கு இப்படித்தான், எங்க தாத்தா, அப்பா, அண்ணன்....’’ என சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு அடுத்தது  எனது பரம்பரை பாரம்பரியம்தான்னு சொன்னேன்.
‘’நீ ஏன் விக்கு வைக்கக்கூடாது?’’ என்று கேட்டான். ‘’இல்லடா, விக்கு எல்லாம் சரிப்பட்டு வராது, அலர்ஜி பயம் இருக்கிறது, அதுமட்டுமல்ல எந்த இடத்திலாவது விக் கழண்டு விழுந்தால் ரொம்ப அவமானமாகப் போகும்’’ என்று கூறினேன். ‘’அப்படியெல்லாம் இல்லை, அலர்ஜி எல்லாம் வராது, கிளிப் டைப் விக் எல்லாம் இருக்கிறது, அது எங்கயும் கழறாது..’’ என கூறிக்கொண்டே ஆள் காட்டி விரலை அவனது காது பக்கத்தில் அழுத்தி விக்கை தூக்கிக் காட்டினான். ஆடிப் போனேன். யாரோ என் பிரடியில் விரகுக் கட்டையால் அடித்தது போன்று இருந்தது.
அப்பதான் தெரிந்தது அந்த ஷண்டாலன் கண்ணில் தெரிந்தது கருணை இல்லை அத்தனையும் குரூரம் என்று. அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். பாக்கிஸ்தான் உள்ளூர் மேட்ச்சைக் கூட விடாமல் பார்த்துவிட்டு, என்னிடத்தில் கமெண்டரி பண்ணிக்கொண்டிருப்பான். பக்கத்து ரூம் வேறு. இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் பிரியாணி சமைத்து வைத்து உலக பாக்கிஸ்தானிகளை எல்லாம் அழைத்து வந்து பெரிய கும்பலாக மேட்ச் பார்ப்பான்.
பாக்கிஸ்தான் தோற்றுவிட்டால், ஒரு குயர் நோட்டு, பேனாவுடன் அவன் ரூம் பக்கத்தில் நின்று கொண்டால் போதும். உருது, ஹிந்தி மொழிகளிலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் எழுதிவிடலாம். ‘’தற லோக்கல்’’ கெட்ட வார்த்தை தெரிந்துகொள்ளவும் ஒரு வழி உண்டு. ‘’இவன எதுக்கு எடுத்தோம்’’னு செலக்சன் போர்டுக்கும் தெரியாம, ‘’நம்மள எதுக்கு எடுத்தானுங்க’’ன்னு அவனுக்கும் தெரியாம ‘முஹம்மது கைப்’ மாதிரி கொஞ்சப் பேர் பாக்கிஸ்தான் டீமிலும் இருப்பான். அவனப் பத்தி அந்த நேரத்தில் அன்சரிடம் லைட்டா கிளறிவிடவேண்டும். நமக்கு சுட சுட ‘’தற லோக்கல்’’ கெட்டவார்த்தை டேட்டா பேஸ் தயார்.
இப்ப இருக்குற கம்பெனியில் ஒரு பாக்கிஸ்தானி இருப்பதாக சொன்னேன்ல, அவன் பெயர் நவீத். அவன் தான் என்னுடய அரபி டிரான்ஸ்லேட்டர். சில சமயங்களில் நான் பேசும் ஆங்கிலம் எதிர்தரப்பு அரபிக்காரனுக்கு புரிந்து ‘’ஒகே. ஒகே’’ என்பான். அந்த ‘’ஒகே ஒகே’’வைக்கூட நவீத் எனக்கு மொழிபெயர்த்து ‘’ஒகே ஒகே’’ என்பான். அந்த அளவிற்கு வெகுளி. நிறைய பாக்கிஸ்தானிகள் வெகுளிகள் தான் (நான் பார்த்தவரை). கொஞ்சம் வயதானவர்களை ‘’சாச்சா” (சித்தப்பு) என்றோ ‘’ஜனாப்’’ (உயர்திரு) என்றோ கூப்பிட்டுவிட்டால் ரொம்ப குஷியாகிவிடுவார்கள். தனியா ஒரு பாக்கிஸ்தானி சாப்பிட்டு பார்த்ததில்லை. ஒரு ரொட்டி என்றாலும் நாலு பேர் சுத்தி இருந்துதான் சாப்பிடுவார்கள்.
இங்கு முக்கால்வாசி டாக்ஸி டிரைவர்கள் பாக்கிஸ்தானிகள் தான். பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் ‘’மதராஸி’’ என்றால் தெரியவில்லை. எல்லோருக்கும் ரஜினிகாந்த்தை தெரிந்திருக்கிறது, ஆனால் அவர் படம் பார்த்ததில்லையாம். ‘’ஏக் து ஜே கேலியே’‘ படம் தெரிகிறது ஆனால் அதில் நடித்தவர்தான் கமல் என்று தெரியவில்லை. ‘’அந்த படத்தில் கமல் பேசுவாறே அந்த பாஷைதான் எங்க பாஷை’’ என்பேன்.  ‘’இல்ல இல்ல’’ என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்பார்கள் (அந்த படத்தில் கமல் அதிகமாக ‘’இல்ல இல்ல’’ன்னுதான் சொல்லுவாராம்)
நவீத், நிறைய விசயங்கள் பேசுவான். எல்லா நாட்டு செய்திகளைப் பற்றியும் தெரியும். என்னோட மேனஜெர் ஒரு ஜோர்டானி. அவரிடம் பேசும் போதுகூட அந்த நாட்டு அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாத சில விசயங்களைச் சொல்லுவான். ஜோர்டான் பற்றி தெரிந்து வைத்திருப்பவன் பக்கத்து நம் நாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டானா?. சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிமானிடேசைசேசன், மாட்டுக்கறி.......என எல்லாத்தைப் பற்றியும் கேட்பான்.
ஒருமுறை ‘’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதில், எங்க நாட்டுமேல உங்களுக்கு பயங்கரமா கோவம் இருக்குமே?’’ன்னு கேட்டேன். ‘’எங்க கோவத்தை விடு, உங்க நாட்டுலேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததுக்கான ஆதரம் கேட்டும் கொடுக்க முடியாம மோடி கோவமா இருக்காறாமே?’’ன்னு திருப்பிக் கேட்டான். ‘’இது எப்ப.......???’’ன்னு தெரியாம பேந்த பேந்த முழுத்தேன்.
‘’இந்தியாவில், மாட்டுக்கறி மேட்டரில் முஸ்லீம் அல்லாதவர்கள் கூட நிறைய போராட்டம் செய்கிறார்கள். அதுமாதிரி அவங்களோட பிரட்சனைக்கு முஸ்லீம்கள் நீங்க போராடுவீங்களா?’’ன்னு கேட்டான். ‘’பாலுங்குறது உங்க பேரு, தேவர்ங்குறது நீங்க வாங்கின பட்டமா?’’ன்னு கேட்டுவுடனே பொழேர் பொழேர்னு அறை விழுமே. அதுமாதிரி இருந்துச்சு எனக்கு, ஆனா பதில் சொல்லியாகனுமே.
‘’நாங்களும்..........போர்ராட்டம்........ பண்னுவ்வோம்ம்ம், ஆனா போலிஸ் எங்களை மட்டும் துறத்தி துறத்தி அடிக்கும்’’ன்னு இழுத்து சொன்னேன்.
 ‘’எதுக்கு?’’ன்னு கேட்டான்.
‘’ஆமா , அவர்களுக்கு பிரட்சனைன்னா குரான், ஹதீஸ்ஸை ஆராய்ந்து, உலமாக்கள் சபை, ஜமாத் எல்லாத்தையும் கலந்து ஆலோசித்து போராட்டம் பண்ண சென்றால்........., ‘’ஏண்டா போராட்டம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இப்ப எங்கடா வந்திங்க’’ன்னு கேட்டு போலிஸ் ஓட ஓட விரட்டி அடிக்கத்தானே செய்யும்’’ன்னு சொன்னத கேட்டு ரொம்ப நேரம் சிரிச்சான்.
நவாப் ஷெரீப் ஆட்சி பற்றி கழுவி கழுவி ஊற்றுவான். அரசை விமர்சிக்கும் போது, யாரும் ‘’ஆன்டி பாக்கிஸ்தானி, இந்தியாவுக்கு போ’’ன்னு சொல்லமாட்டாங்களான்னு கேட்டேன். ‘’ஆண்டி ஆண்டிதான் அதுல என்ன பாக்கிஸ்தான் ஆண்டி, இந்தியா ஆண்டி’’ன்னு கண்ணடித்தான்.
இந்த விஷயத்துல பூராப் பயலும் நம்மள மாதிரியே..............

---------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், மே 23, 2017

அப்துல்லா

நான் இப்போது, ஜித்தாவில் ஒரு பர்னீச்சர் ஷோ ரூம் புராஜெக்டில் இருக்கிறேன். அது ஒரு ஸ்வீடன் கம்பெனி என்றாலும் வியாபார ஒப்பந்தப்படி சவுதி நாட்டில் ஒரு பெரிய பணக்காரரின் கீழ் வருகிறது. கான்ட்ராக்டரை மேற்பார்வை இடும் வேலை எங்கள் கம்பெனிக்கு. எங்களை மேற்பார்வை இடுவதற்காக கிளைண்டில் இருந்து இரண்டு பேர் உண்டு. அதில் ஒருவன் பெயர்தான் அப்துல்லா.
அப்துல்லா, சென்ற வருடம்தான் இஞ்சினியரிங் முடித்துள்ளான். வயது என்ன 23 இருக்கும். எனக்கு அவனுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம். (‘’அப்படியென்றால் உன்னோட வயது 13 தானா?’’ என்று கேட்கவேண்டாம்). ஆனால் பார்பதற்கு எனக்கு அண்ணன் போல் இருப்பான். அவனுக்கு அரபி மொழியைத் தவிற எதுவும் தெரியாது. எனக்கு அரபியில் எதுவுமே தெரியாது. என் பெயரையே நான் தமிழில்தான் சொல்லுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என் மேனாஜர் என்னிடம் ‘’இன்று என்ன வேலை நடந்தது? நாளை என்ன வேலை ஆரம்பம்? என்பதை அவனிடம் விளக்கவேண்டும்’’ என்றார்.
‘’விளங்கிடும்’’ என்றேன்.
‘’என்ன?’’ என்று திரும்பக் கேட்ட மேனஜரிடம், ‘’இல்ல, விளங்குவது போல் விளக்கிவிடலாம்’’ என்று தலையை ஆட்டி ஆட்டிக் கூறினேன். சீமான் ‘’பச்சை தமிழன்’’ என்றால், அப்துல்லா ‘’அடர் பச்சை அரபி’’. இஞ்சினியரிங்க் கூட அரபி மொழியில்தான் படித்திருக்கிறான். ‘’டைல் புளோரிங்க்’’ ‘’வால் பிளாஸ்டரிங்க்’’ என்பது கூட அவனுக்கு அரபியில்தான் தெரியும்.
அவனை சமாளிக்கும் வேலை என் தலையில் வந்தபின்பு, நான் செய்த முதல் காரியம் அரபி டிரான்ஸிலேட்டர் டவுன்லோடு செய்ததுதான். ‘’ஆங்கிலம் தெரியாது, இவனெல்லாம் என்ன படித்திருப்பான்’’ என்று எதிலும் அவனை அலட்சியம் செய்த என் போன்றவர்களுக்கு செருப்பால் அடித்தது போல் ஒரு சம்பவம் நடந்தது. ஷோ ரூமில் சில மாற்றங்கள் செய்யும்படி கிளைண்ட் சொன்னார்கள். நாங்களும் காண்டிராக்டரிடம் சொல்லி அதை முடிக்கச் சொன்னோம்.
ஆனால் அப்துல்லா, ‘’இதை இப்படி செய்தால் இங்கிருக்கும் மொத்த எடையும் இந்த பகுதிக்கு வரும், அங்கு ஒரு கதவு வேறு இருப்பதால் அதனால் அந்த எடையை எடுத்துக்கொள்ள முடியாது.....................’’ என படம் வரைந்து பாகங்கள் குறிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அரபியில் சொன்னாலும், எனக்கு அவன் வரைந்த படத்தைப் பார்த்து புரிந்துகொண்டேன். எல்லோரும் ஆடிப் போய்விட்டோம். அன்னைக்கு அவன் அதை தடுத்திருக்கவில்லை என்றால், இன்று மோடிக்கு ‘’சவுதி சிறையிலிருந்து உயிரைக் காக்குமாறு’’ மனு அனுப்பிக்கொண்டிருந்திருப்பேன்.    
மொழிக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று படித்திருந்தாலும், நேரில் உணர்ந்த தருணம் அது. அஞ்சு வருசம் அரியர் வைத்து எழுதும் சப்ஜெக்டை எல்லாம் ‘’இதெல்லாம் உங்க ஊருலதாண்ட பஸ்ஸு, சவுதியில இதுக்கு பேரு குப்ப லாரி’’ன்னு பிரிச்சு மேய்வான். இதுக்கும் அவன் ஆவரேஜ் ஸ்டூடண்டாம். சீமான்னு நெனச்சவன் சர்.சி.வி.ராமனா தெரிஞ்சான்.
அப்துல்லாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயங்கரமான ஆர்வம். ‘’நான் உனக்கு அரபி கத்துத் தாரேன், நீ எனக்கு இங்கிலீஷ் கத்து கொடு’’ன்னு சொன்னான். ‘’அதுக்கு முதல்ல உனக்கு இங்கிலீஷ் தெரிஞ்சுருக்கனுமே’’ன்னு உங்களுக்கு தோணுனதுமாதிரி எனக்கும் தோனுச்சு. ‘’நான் பேசுவதுதான் இங்கிலீஷ்னு நெனக்கிறவன் ஆசையில ஏன் மண்ணள்ளிப் போடனும்’’னு விட்டுட்டேன். அவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவான், நான் அவனிடம் அரபியில் பேச வேண்டும் என்பதுதான் டீல்.
ஒருமாதிரியான வேற்றுமொழிப் படங்களைத்தான் சப் டைட்டில் இல்லாமல் பார்ப்பேன். சப் டைட்டில் இல்லாமல் அரபியை கற்றுக்கொள்வது எனக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால் அப்துல்லாவிற்கு அப்படி இல்லை. பய பயங்கர ஸ்மார்ட். அதிக முன்னேற்றம். நம்மா நாக்கு இன்னும் ‘’அக்கிள் மாபி’’ ‘’சுகுல் கலாஸ்’’ ரேஞ்சிலேயே நிக்குது.
அவனிடம் நிறைய பேசும்படி ஆனது. கிளைண்ட் கூட இருப்பதினால், மேனஜரும் ஒர்க் விசயமாக விவாதிப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் மியா கலீபா கலைச் சேவையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்போம். பேசிய பின்புதான் தெரிந்தது,  இன்னும் அப்துல்லா அந்த விசயங்களில் அப்டேட் ஆகவில்லையென்று. லுசி சென், ஷாசா க்ரெய், சன்னி லியோன்....பற்றி சொல்லி சில வெப் ஐடிகளையும் கொடுத்திருக்கிறேன்.
செல்லப் பெயராக அவனுக்கு நாங்கள் வைத்திருப்பது ‘’அதிர்ச்சி அப்துல்லா’’. எதெர்கெடுத்தாலும் அதிர்ச்சியாகி, கண்களை விரித்து ‘’வல்லா...’’என்பான். எங்கள் கல்லூரியில் பெண்களும் படிப்பார்கள் என்றபோது ‘’வல்லா..’’ என்று அதிர்ந்தான் பொருத்துக்கொண்டேன். ‘’வல்லா...உங்க அப்பாவிற்கு ஒரு மனைவிதானா’’ என்று அதிர்ந்தான் பொங்கிவிட்டேன்.
அப்துல்லாவின் அப்பாவிற்கு மூன்று மனைவிகள், சவுதி, அபுதாபி, பஹ்ரைன் என ஒவ்வொரு நாட்டிலும் ஒன்று. நான்காவது என்று கேள்விப்பட்டால் மவுத்தாகிவிடுவாய் என்று அவன் அம்மா எச்சரித்ததால் அடங்கியிருப்பதாக சிரித்துக்கொண்டே சொன்னான். எனக்கு அவன் சிரிப்பைப் பார்த்து ஆச்சிரியமாக இருந்தது. ‘’எப்படி உன்னால் இதை ஈஸியாக எடுத்துக்கொள்ள முடிகிறது?’’ என்று கேட்டால், ‘’அது அவர் வாழ்க்கை, அவர் வாழ்கிறார், எந்த விதத்திலும் எங்களுக்கு குறைவைக்கவில்லை. ஒரு வேளை என் அம்மாவிற்கு வருத்தம் இருக்கலாம், ஆனாலும் அவள் சம்மதத்துடன்தான் மற்ற திருமணங்களும் நடந்தது’’ என்றான்.
அவன் அப்பா பெரிய பிசினஸ் மேன், கொஞ்சம் பணமுள்ள ஆளும் கூட, அதனால் மூன்று மனைவிகள், அவர்களின் குழந்தைகளை எந்த குறையின்றி கவனித்துக்கொள்கிறார். அப்பாவிடம் பணம் இருக்கிறது என்பதற்காக இங்கு யாரும், அப்பாவை நம்பி இருப்பதில்லையாம். அவனவன் சம்பாத்தியத்தில்தான் அவனவன் கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமாம். நம் நாட்டின் முறைக்கு நேர் எதிர் இங்குள்ள கல்யாண சம்பர்தாயம். எல்லா செலவும் மாப்பிள்ளயோடது. தனி வீடு, மணமகளுக்கான நகை, கல்யாண செலவு.... என அனைத்தும். கல்யானத்திற்கே பெரிய தொகை தேவைப்படும் என்பதற்காகவே நான் வேலக்கு வந்ததாகக் கூறினான் அப்துல்லா.
அடிக்கடி நம்பிக்கை இன்றி ‘’ஒரே கிளாஸ்?, கேள்ஸ்ஸும் இருப்பாங்களா?’’ என்று கேட்டு அதிர்ந்தவனுக்கு என்னுடய கிளாஸ் குரூப் போட்டோவைக் காட்டினேன். அதிலிருக்கும் அனைவரையும் பார்த்தபின்பு ‘’இதுக்கு பேசாம நீ சவுதியிலேயே வந்து படிச்சிருக்கலாம்’’னு சொன்னான். ‘’உனக்கு எத்தனை தம்பி தங்கை’’ என்று கேட்டேன். இரண்டு மூன்று தடவைக்கு மேல் விரல்களை மடித்து மடித்து எண்ணிக்கொண்டிருந்தான்.
அப்துல்லாவிற்கு இந்தியாவின் கடற்கரை சுற்றுலாத் தளங்களுக்கு வர மிகவும் ஆசை. கல்யாணமாகி ஹனிமூனுக்கு கோவா வருவதாகச் சொன்னான். இப்படித்தான் இருக்கும் ‘’கோவா’’ என்று நெட்டில் சில போட்டோக்களை காண்பித்தேன். அதில் சில பெண்கள் பிகினியில் குளிப்பது போல் இருந்தது. ‘’இப்படி இருக்குமா?’’ என்று அதிர்ச்சியாய் கேட்டான். ‘’இது என்ன பிரமாதம் இத விட ஒரு ஸ்பெசல் அய்ட்டம் ஒன்னு இருக்கு?’’ன்னு ஒன்னொரு போட்டோவைக் காண்பித்தேன். கல்யாணத்திற்கு முன்பாகவே கோவா வருவதாக சொல்லியிருக்கின்றான். 
-------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், மே 17, 2017

அந்த ரசத்த ஊத்தூ....


எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, காலேஜ் முடிக்கும் போது என்னோட எடை 52 கிலோ, பெங்களூரில் நாலு வருசத்தில் அது 58 கிலோவானது. அதற்குப் பின்பு எடை படிப்படியாக கூடினாலும், கடைசி மூன்று வருடங்களாக 69 கிலோதான். 69 கிலோவாக இருந்தது எனபதைவிட, 69 கிலோவாக இருக்கும்படி வைத்துக்கொண்டேன். ஏன்னா, 69 என்பது ஒரு கிக்கான நம்பர் என்பதற்காக. மே 13, சன்னி லியோனின் பிறந்த நாள் என்று தெரிந்த இந்த சமூகத்திற்கு 69ன் மகிமையை மேற்கொண்டு விளக்க விருப்பமில்லை.

அடிக்கடி எடை பார்க்கும் பழக்கம் இல்லை. விமானத்தில் லக்கேஜ் 30 கிலோவிற்கு மேல் அனுமதிப்பதில்லை என்பதால் ஊருக்குச் செல்லும்போது, லக்கேஜ் எடைபார்க்கும் சமயத்தில் மட்டும் என்னுடய எடையையும் பார்த்துக்கொள்வேன். இந்த முறையும் 69. சொந்த சமயலினால் நாவில் ஏற்பட்ட சூனியத்தை, ஊரில் இறங்கியதும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பரிகாரம் செய்யவேண்டும் என்று எண்ணினேன். இந்த எண்ணம் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதுதான்.

காலையில் புரோட்டா என்றால், மூழி கடை, தோசை என்றால் தென்காசி தோசை கார்னர். மதியம் சைவம் என்றால் ராஜ் மெஸ், அசைவம் என்றால் அல்மாசி ஹோட்டல். இரவு, பார்டர் ரஹ்மத் புரோட்டாவுடன் நாட்டுக்கோழி பிரை. இந்த மாதிரி லிஸ்ட் ரொம்ப பெருஸ்ஸா இருக்கும். ஆனால், ‘’என்னாது புரோட்டா பத்து ஓவாயா?’’ என விலைவாசியை நினைத்து ஏங்கும் போதே லிஸ்ட் தனக்குத் தானே தீவைத்துக்கொள்ளும்.

எங்க அம்மாவிடம் ஒரு ஸ்பசாலிட்டி இருக்கு. ‘’என்னடா சமைக்கனும்?’’ ன்னு கேக்கும்போது, ‘’எதாவது சமம்மா’’ன்னு சொல்லிறனும். அதவிட்டுட்டு, அத பண்ணு, இத பண்ணுன்னு சொல்லிட்டா, சோலி சுத்தம். ‘’புள்ள ஆச ஆசயா கேட்டுட்டா’’ன்னு பரபரப்புல பால் ஊத்தாமலே பால் பாயசம் வைக்கும். இப்படித்தான் ஒருதடவ, ‘’இறால் குழம்பு சாப்பிட்டதே இல்ல’’ன்னு சொல்ல, பாதி ராத்திரில எங்க அப்பாவ எழுப்பிவிட்டு இறால் வாங்கிவரச் சொல்லி, இறால் குழம்பு வச்சிச்சு. ஆனா, வாய்லதான் வைக்கமுடியல. அன்னையோட இறால் திங்குற ஆசை விட்டுப்போச்சு. இன்னமும் சூப்பர் மார்க்கெட்ல, இறால்ல பாக்கும்போதெல்லாம், அந்த ஃபன்னி இன்சிடெண்ட்தான் ஞாபகம் வரும்.

இம்முறை, டெங்கு காய்ச்சல் காரணமாக, ஜமாத் ‘’இறைச்சி, மீன் சாப்பிட வேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. பொதுவா ஜமாத் ஏதாவது சொன்னால் எவனும் மதிக்கிறது இல்லை. ஆனா இந்த விஷயத்தில் ‘’ஜமாத் சொன்னதே கட்டளை, கட்டளையே அதன் சாசனம்’’னு குனியச் சொன்னால் குப்புறவே படுத்துவிட்டார்கள். ‘முள்ளங்கி’ய வச்சு தொக்கு செய்யலாங்குற விசயமே எனக்கு இந்த தடவதான் தெரியும்.  ‘கொள்ளு’ங்குற ஒரு ஐட்டம் குதிரை திங்குறதுன்னு கேள்விப்பட்ட எனக்கு, கொள்ளுத் துவயல வச்சே மூனு நாள் சோறு போட்டாங்க. மறுநாள், அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி ‘’கொள்ளுச்சட்னி’’ங்குற பெயருல தோசைக்குத் தந்தாங்க.

சவ்சவ், கொத்தவரங்காய், தடிமங்காய்....என ஒன்னாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் பார்த்த அனைத்தும் நான் சாப்பிடும் தட்டில் ஒருநாள் கெடக்குமென்று கனவுகூட கண்டதில்லை. ஏழு தலைமுறைக்கு முன்பாக நாங்கள் சைவ பிள்ளைமார்களாம், முன்பு ஒரு முறை அப்பா சொன்னார். எனக்கு என்னவோ இந்த முறை கர்வப்சி முறையில் திரும்ப சைவ பிள்ளைமார்களாகவே மாறிவிட்டதுபோல் ஆகிவிட்டது. ஹரே ஓ சம்போ.

இன்னும் ரெண்டுநாள் இருந்திருந்தா, புண்ணாக்குல பாயாசம், தவிடுல புளிக்குழம்புன்னு தர லோக்கலுக்கு போயிருப்பாங்க. ‘’நான் அடிச்ச பெல்லு, ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ, அரசாங்கத்துக்கு கேட்டுருச்சு, அடிச்சாம்பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரு’’ன்னு வடிவேல் சொன்னதுமாதிரி ‘’நான் கதரி அழுதது கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கம்பெனிக்காரனுக்கு கேட்டிருச்சு, அடிச்சாம் பாரு மெயிலு’’ன்னு கிளம்பி ஓடிவந்துட்டேன்.

பையன் ஒரே வெஜ்ஜா சாப்பிடுறானேன்னு கொஞ்சம் இரக்கப்பட்டு இரண்டு கல்யாண வீட்டு விருந்திற்கு போகச் சொன்னார்கள். முன்னாடி கல்யாண வீட்டு விருந்துன்னா குஸ்கா சோறு, முதல் ரவுண்ட் மட்டன் குழம்பு, ரெண்டாவது ரவுண்ட் தால்சா சாம்பார்னு ரவுண்ட் கட்டி சாப்பிடலாம். இப்ப எல்லா கல்யாண வீட்டிலும் பிரியாணி என்றாகிவிட்டது. முதல்ல சொன்ன ஐட்டங்களில் இருக்கும் டேஸ்ட் பிரியாணியில் இருப்பதில்லை. ரெண்டு கல்யாண வீட்டிலுமே விருந்து பரிமார வெளி ஆட்களுக்கு கான்ராக்ட் விட்டிருந்தார்கள்.

ஏதோ, கட்சி பொதுக்கூட்டத்திற்குப் போய், பிரியாணி பொட்டலத்தில் சாப்பிட்டது போலாகிவிட்டது. ‘’வாங்க’’ என்று அழைப்பதற்கு சொந்தக்காரர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லை. கேட்டரிங்க் ஆட்கள் முதல்தடவை வந்து பிரியாணியை தட்டுவதோடு சரி, அதற்கு பின்பு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. தண்ணி வேண்டும் என்றாலோ, அல்லது சாம்பார் வேண்டும் என்றாலோ கத்தி அழைத்தபின்பு ஏனோ தானோ என்று வந்து விழம்பிவிட்டு போவார்கள்.

முன்னாடியெல்லாம், விருந்து நடக்கும்போது, சாப்பாடு பரிமாறுவது எல்லாமே சொந்த பந்தங்கள்தான். போதும் என்றாலும் ‘’அவரு அப்படித்தான் சொல்லுவாரு கொஞ்சமா வச்சிவுடு’’ என ஒரு பெரியவர் சொல்லிமுடிப்பதற்குள், சோறு இலையில் விழுந்துவிடும். அந்த கவனிப்பிற்காகவே பெல்டை லூஸ் செய்து இலையில் இருப்பதை காலி செய்யவேண்டும். கான்ராக்ட் ஆட்கள் பரிமாருவதையாவது பொருத்துக்கொள்ளலாம், ஆனால் அவனுங்க போட்டுவருகிற கம்பெனி டீ சர்டைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கர்மம் என்ன கலர்னே கண்டுபிடிக்க முடியவில்லை. ‘’துவைச்சாவது போட்டுவரலாமேடா’’ன்னு சொல்லத் தோனும்.

ஊரில் இருந்து கிளம்பும் போது, லக்கேஜை வெயிட் பார்த்தபின்பு எனது வெயிட்டை பார்த்தேன். 74 கிலோ. முப்பது நாளில் எப்படி 5 கிலோ கூடியது என்று மயக்கமே வந்தது. எடை கூடியதுகூட எனக்கு கவலையில்லை ஆனால் 69 போய்விட்டதே என்ற கவலைதான் கண்ணை கெட்டியது. ‘’நம்மள பிரிஞ்சி போறத நெனச்சுத்தான் புள்ள கவலப்படுது’’ன்னு அம்மாவோட அன்பு அட்ராசிட்டி வேறு. இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து கக்கா போகும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, பேலன்ஸ் மிஸ் ஆவதில் இருந்தே தெரிந்தது எடை கூடிய விசயம். ஆனால் 5 கிலோ என்பது மெடிக்கல் மிராக்கிள்.

முன்னாடி, ஊருக்குப் போனால், தாலுகா ஆபிஸ், ரெஜிஸ்டர் ஆபிஸ், பேங்க், லைசன்ஸ் ரினிவல், நகராட்சி என எங்காவது ஒரு வேலை இருக்கும். சாப்பிட்டபின்பு அங்க இங்கன்னு அலையும்போது எடை அதிகமாக வாய்ப்பு இருந்ததில்லை. இந்த முறை வெயில் விட்டு விளாசியதால் வெளியே எங்கும் நகரவில்லை. சாப்பாடு, தூக்கம், தூக்கம் சாப்பாடு என்றே நாட்கள் ஓடியது. இருந்தாலும் கத்தரிக்காய், முட்டைக் கோஸ், பீக்கங்காய் எல்லாம் சாப்பிட்டு 5 கூடியதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை.

எவன் எப்படிப் போனா என்ன நீ அந்த ரசத்த ஊத்து...........ன்னு வஞ்சனயே இல்லாம திண்ண நான், 69 யை மீட்டெடுக்க இப்போது வாக்கிங், ஜாக்கிங்க், டயட்டிங்ன்னு தீயா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். 

----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், பிப்ரவரி 08, 2017

செண்டிமெண்டல் இடியட்ஸ்.

பணநீக்க விவாத நிகழ்ச்சியில் ‘’பூக்காரி’’, ‘’மீன்காரி’’ என்று ஒருத்தர் பேசியதற்கு, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் ‘’பூக்காரம்மா’’, ‘’மீன்காரம்மா’’ என ஏன் கூப்பிடக்கூடாது? என கோபப்பட்டார். அது சமூக வலையதளங்களில் ரொம்ப பிரபலமான வீடியோவாகி பலரால் பகிரப்பட்டது. அப்படி பகிர்ந்தவர்கள் எல்லாம், ‘’பூ விக்கிரவங்க, மீன் விக்கிறவங்க என்ன கொறச்சலா?’’ என்று சோசியலிசம் பேசினார்கள். அதே சேகுவேராக்களும், காஸ்ட்ரோக்களும்தான் இன்று சசிகலாவை ‘’வேலக்காரி’’ எனவும் ‘’ஆயா’’ எனவும் அர்சணை செய்துகொண்டிருக்கிறார்கள்.
சோசியல் மீடியாவில் இருக்கும் அதிகமானவர்களுக்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் இருப்பதில்லை. லைக், ஷேர் இதைப் பொறுத்துத்தான் அவர்களின் கொள்கை, கோட்பாடுகள் எல்லாம்.  காங்கிரஸ்காரன் மோடியைப் பார்த்து ‘’டீ விற்றவன் எல்லாம் பிரதமரா?’’ என்று கேட்கும் போது வந்த கோவம், தி.மு.ககாரன் ‘’வேலைக்காரி முதல்வராவதா?’’ என்று கேட்கும் போது ஏன் வரவில்லை?. ஏன்னா நம்ம டிசைன் அப்படி. சசிகலா மீது ஆயிரம் விமர்சனங்கள், லட்சம் புகார்கள் இருக்கலாம் ‘’வேலைக்காரி’’ என்றால் அவ்வளவு இழக்காரமா என்ன?.
‘’சசிகலாவிற்கு நாங்கள் ஓட்டுப்போடவில்லை, அதனால் அவரை எங்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது?’’ என்று சட்டமன்ற தேர்தலில் ஓட்டே போடாதவர்கள் வளைகுடாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பொரும்புகிறார்கள். நான் கேட்கிறேன், முதன்முறையாக ஜெயலலிதா பன்னீர் செல்வத்தை முதல்வராக அமர்த்திய போது, நீங்கள் எல்லோரும் பன்னீர் செல்வம் முதல்வராக வேண்டும் என்றா ஓட்டு போட்டீர்கள்?. அன்னைக்கு பொங்கியிருந்தால் பொங்களாகி இருப்பீர்கள்.
சசிகலா  முதல்வராவதை எதிர்ப்பது எல்லாம் ஓகே, ஆனால் பன்னீர் செல்வத்தை எல்லாம் எப்படி / எந்த அடிப்படையில் ஆதரிக்கின்றீர்கள்? என்றே புரியவில்லை. ஒருவன் கண்ணீரோடு, கொஞ்சம் சோகமா நின்று பேட்டி கொடுத்தால் அவன் நல்லவன் என்பது சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்பது மாதிரியான முட்டாள்தனம்.  அடிமையா இருந்தவர்கள் எப்படி இன்னொரு அடிமையின் கீழ் இருப்பார்கள்?. ஓபிஎஸ், ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்றவர் என்றால் எந்த வகையில்? நிர்வாகத்தில் சிறந்தவர் என்றா? படித்த புத்திசாலியானவர் என்றா?. இல்லையே. ஜெயலலிதாவிற்கு சாவி கொடுத்தால் பேசுகிறமாதிரியான ஒரு பொம்மை தேவைப்பட்டது அந்த பொம்மைதான் பன்னீர் செல்வம். ஜெ உத்தரவு இல்லாமல் இவர் ஆட்சியில் இருக்கும் போது செய்த ஒரு நல்ல காரியம் சொல்லுங்கள் பார்ப்போம்?.
ஓபிஎஸ் விசுவாசமான ஆள் என்கிறார்கள், இருக்கலாம். அந்த விசுவாசத்தைத்தான், போன முறை 7 நாட்கள் வீட்டுச் சிறையில் வைத்து ஜெயலலிதா சோதனை செய்தார்.  விசுவாசத்தின் அடிப்படையில் பார்த்தால் பன்னீரை விட சசிகலாதான் உயர்ந்தவர். ஜெயலலிதா, வா என்றவுடன் கட்டின புடவையோடு மட்டுமல்ல,  கட்டுன புருசனையே விட்டுவிட்டு போனவர். இப்போது இருக்கிற பல எம்.எல்.ஏக்களை ஜெயலலிதாதான் தேர்வு செய்தார் என்று நீங்கள் நம்பினால் சத்தியமாக உங்களுக்கு, அ.தி.மு.க பற்றியும் தெரியவில்லை, மன்னார் குடி பற்றியும் தெரியவில்லை. 
‘’ஜெ இறந்த போது யாரும் அழவில்லை’’ என்று கூப்பாடு போடுபவர்கள், ஜெக்காக அழுத்தில் மேட்டூர் டாமே நிறைந்துவிட்டதா என்ன?.  டீலா நோ டீலா என்ற கேமில் இரண்டு மாதத்தில் டீல் படியாததால் வெளியே வந்தவர்கள். அவ்வளவுதான். அதற்காக அவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்றால் எப்படி?. ‘’எனக்கு மரியாதை தரவில்லை’’ ‘’என்னை மதிக்கவில்லை’’ என பல அமைச்சர்களின் பெயரைச் சொல்லும் பன்னீர், மதித்தவர்களின் சில பெயரையாவது சொல்லியிருக்கலாம் அல்லவா? ஏன் சொல்லவில்லை? ஏனென்றால் ஒரு பய மதிக்கவில்லை என்று அர்த்தம்.
ஜெ இறந்து ஒருவாரத்திலேயே ‘’கட்சியையும், ஆட்சியையும் சசிகலாதான் தலமை ஏற்க வேண்டும்’’ என்ற குரல் கிளம்பியது. ஆனால் பன்னீர் என்னவோ நேற்றுவரை இவரை அமைச்சர்கள் மதித்துவிட்டு இன்றுதான் மதிக்காதது போல பேட்டி கொடுப்பது பெரிய காமெடி.  அமைச்சர்களை விடுங்கள், முதலமைச்சரிடம்தான் காவல்துறை இருக்கும், அவர்களாவது மதித்தார்களா?. சட்டசபையில் தேசவிரோத கும்பல் என ஒரு போட்டோவைக் காட்டி இது காவல்துறை கொடுத்தது என்றார். அடுத்த பத்தாவது நிமிசம் பிரஸ்மீட்டைக் கூட்டி ‘’அப்படியான ஒரு புகைப்படத்தை நாங்கள் முதல்வருக்குக் கொடுக்கவில்லை’’ என்கிறார் காவல்துறை ஆணையாளர். இதுதான் பன்னீர் ஆட்சி செய்த லட்சணம்.
மெரினாவில் நேற்று பேசிய போது, சசிகலாவை ‘’சின்னம்மா’’ என்றே சொன்னார், அதிலிருந்தே அது ஒரு  பக்கா ஸ்கிரிப்ட் என்பது தெரிந்துகொள்ளலாம். எழுதியதை ஒப்பிப்பது போல இருந்தது.  ஹிந்தியில் எழுதி கொடுத்திருப்பானுங்க போல அதுதான் ஜெ சமாதி முன்னாடி நின்று தமிழிலில் ஒரு முறை கண்மூடி பேசிப்பார்த்திருப்பார். இது தெரியாம நம்மாளுங்க தியானம்னு கிளப்பிவிட்டுட்டானுங்க. ‘’ஆவி’’, ‘’ஆன்மா’’.... எல்லாம் இனி வேலைக்கு ஆகாது என்று தெரிந்துதான் லாரன்ஸே ‘’மொட்ட சிவா கெட்ட சிவா’’ன்னு போயிட்டாரு. இப்பவந்து அம்மா ஆன்மா சொல்ல சொல்லுச்சுன்னு சொல்லி கிச்சி கிச்சு மூட்டிக்கிட்டு. போங்க பன்னீர்.
கொஞ்சப் பேரு தீபாவை தலமை ஏற்க அழைக்கிறார்கள். அது அடுத்த நகைச்சுவை. அந்த அம்மா என்னவோ கொஞ்சம் நிருத்தி நிதானமாக பேசினால் ஜெயலலிதாவாகவே ஆனதான நினைத்துக்கொண்டிருக்கிறது. வார்டுனா என்ன?, வட்டச் செயலாளர்னா என்ன? என இன்னும் பல என்ன? பற்றி எந்த வெண்ணையாவது சொல்லிக் கொடுத்திருப்பாங்களா என்பது சந்தேகம்தான். சமூக வலைதளங்களை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி சசிகலாவிற்கு எதிர்ப்பு, பன்னீருக்கு ஆதரவு, தீபாவை முதல்வராக பெரிய ஆதரவு என்பதை ஒட்டுமொத்த மக்களின் முடிவாக முடிவு செய்கிறார்கள்?.
சமூக வலைதளங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், டெல்லியில் ஆம் ஆத்மி வென்றபோது, தமிழ்நாட்டு தேர்தலில் அவர்கள் 150 இடங்களில் வென்றிருக்க வேண்டும். கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையின் போது சகாயம் முதல்வராக வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன் மெரினா போராட்டத்தைப் பார்த்து ஆர் ஜே பாலாஜி முதல்வராக வந்திருக்க வேண்டும். இப்படித்தான் சென்னை வெள்ளத்திற்கு ரஜினிகாந்த் உதவி செய்யவில்லை என்று கூறி அவரோட கபாலியை கைமா செய்வோம் என்றார்கள். நடந்தது என்ன? அதுதான் தமிழ் திரையுலகின் வசூல் சாதனை படம்.
பன்னீரா? சசிகலாவா? என்றால் என்னை பொருத்தவரை சசிகலாதான். அட்லீஸ்ட் யாருக்கும் பயப்படாமல் ஆட்சி நடக்கும், குறிப்பிட்ட சிலர் கொள்ளையடிப்பார்கள், (நல்லவற்றிற்கு) அதிகாரத்தை தைரியமாக பயன்படுத்தலாம். இதே பன்னீர் என்றால், பயந்து பயந்து ஆளவேண்டும், எவன் எப்போ பிச்சிக்குவான்னு தெரியாது, யாரிடமும் மரியாதை கிடைக்காது (அவரும் எதிர்பார்க்க மாட்டார்), ஆதரவு கொடுக்கும் அத்தனை எம்.எல்.ஏக்களும் கொள்ளையடிப்பார்கள், ஏன்? என்று எதிர்கேள்விகூட கேட்கமுடியாது.   
சசிகலா வேண்டாம் என்றால், ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தலில் தோற்கடிப்போம் (1.5 லட்சம் மொத்த ஓட்டில், 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்பது வேறுவிசயம்). சசிகலா கொள்ளைக்காரி, கொலைகாரி என்றால் அப்போ ஜெயலலிதா மட்டும் யாரு?. பன்னீர் என்ன கை சுத்தமானவரா?. நிராகரிக்கும் பட்சத்தில் எல்லோரையும் நிராகரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரத்தம் - தக்காளி சட்னி மாதிரி பேசக்கூடாது.
அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க, அம்மா நாமம் வாழ்க. நமக்கு கடைசியில் நாமம் மட்டுமே வாழ்க வாழ்க.
----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

வியாழன், ஜனவரி 19, 2017

போராட்டம்.

ஒன்னு மட்டும் எனக்கு புரியவே இல்ல, நாம எதுக்கு எல்லா போராட்டத்துக்கும் நடிகர் நடிகையோட சப்போர்ட்டை எதிர்ப்பாக்குறோம்?. சினிமாக்காரன் கு பின்னாடி நின்னு போராட்டம் பண்ணினால்தான் மதிப்பா?. நேத்துவரை ‘’ரஜினி எதுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என கண்டனம் தெரிவித்தவர்கள், ஆதரவு தெரிவித்தவுடன் ‘’உன் ஆதரவு யாருக்கு வேண்டும், முதல்ல உன் மகளையும், மருமகனையும் பீட்டாவை விட்டு வெளியேறச் சொல்லு?’’ என அடுத்த கண்டனம். 

சினிமா துறை சார்ந்தவர்கள் அவர்களுடய தனிப்பட்ட ஈடுபாட்டின் பேரில் கலந்துகொள்வது என்பது வேறு, அவர்களை கட்டாயப்படுத்தி அல்லது கிட்டத்தட்ட மிரட்டி சப்போர்ட் செய்யவைப்பது என்பது வேறு. காவிரிப் பிரட்சனையில் சினிமாத் துறையின் அனைத்து போராட்டங்களும் / உண்ணாவிரதங்களும் மேற்கூறிய இரண்டாம் வகையே. அதன் மூலமாக நாம் சாதித்தது என்ன?. தண்ணீர் வந்துவிட்டதா?. மக்களின் போராட்டத்திற்கு அஞ்சாத அரசா, சினிமாக்காரர்களின் ‘உ.வி’க்கு அஞ்சி தண்ணி திறந்துவிடப்போகிறது?.

சல்லிக்கட்டு விவகாரத்தில்,  ஹிப் ஹாப் தமிழா ஆதி தவிர்த்து, இதனை ஆதரிக்கும் எந்த சினிமா பிரபலங்கள் மீதும் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆதி ஒருவர்தான் முதலிருந்தே இந்த விஷயத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் எல்லாம், தற்போதய போராட்ட வீரியத்தைக் கண்டு களத்திற்கு வந்தவர்கள். சிம்பு, ஜி.வி பிரகாஷ்சை எல்லாம் நம்புவது என்பது வளர்மதியை நம்பும் அதிமுககாரன் மாதிரிதான். சிம்பு பேட்டியை பார்க்கும்போதே இது பக்கா ஸ்கிர்ப்ட் என தெரியும், தெரியவில்லை என்றால் நம்மக்கு முன்னாடி ஒரு உணர்ச்சித் திரை இருக்கிறது என பொருள்படுக.

ஒரு தலமை இன்றி, எந்தவித சுய ஆதாயமும் இன்றி இவ்வளவு பெரிய போராட்டம் நடப்பது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம், அதிசயம். சல்லிக்கட்டு விசயத்தில் இது மிகப்பெரிய நம்பிக்கை தரக்கூடியது. களத்தில் போராடும் இளைஞர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். கூட்டம் கூடுவதோ அல்லது கூட்டுவதோ பெரிய விசயமில்லை, ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என நீண்டுகொண்டு போவதுதான் பிரமிப்பை தருகிறது.

இது சல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கான போராட்டம் மட்டுமில்லை.

சல்லிக்கட்டிற்காகத்தான் இந்த போராட்டம் என்றால் அது இரண்டு வருடத்திற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும். ‘’குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம், குனிந்த கதை போதும், பொறுமை மீறும் போது, புழுவும் புலியாகும்’’ என்ற சிட்டிசன் பாடல் வரியின்படி, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்ற ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த போராட்டம் இது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த போராட்டம் நடந்திருக்குமா? என்றால், என்னைப் பொருத்தவரை, நடந்திருக்கும் ஆனால் இந்த அளவிற்கு பெரிய அளவிற்கு நடந்திருக்காது.

பன்னீர் செல்வத்தினாலோ, அல்லது சசிகலாவாலோ இதை தடுத்திருக்க முடியுமா? என்றால்,  முடியும். ஆனால், அதில் ஏதாவது பிசுறு ஏற்பட்டால், அதை வைத்து மத்திய அரசு ஏதாவது செய்துவிடும் என்ற பயமோ அல்லது சசிகலா முதல்வராக கூடுதல் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற பயமோ காரணமாக இருக்கலாம். ‘’இல்லாட்ட மட்டும் கிளிச்சுத் தள்ளியிருப்பாய்ங்க’’ என்று உங்களுத் தோன்றலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னோடு (சவுதியில்) ஒரு கர்நாடகப் பையன் வேலை செய்கிறான், சல்லிக்கட்டிற்கான போராட்டம் பற்றி அவன் இன்றுதான் என்னிடம் ‘’ நீ ஏன் சல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என்று கேட்டான். ‘’ ’நானும் சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன், எதுக்கு கேக்குற?’’ என்று கேட்டேன். ‘’இல்ல என்னோட தமிழ் பிரண்ட்ஸ் எல்லோரும் சப்போர்ட் பண்ணி நிறைய போஸ்ட் போடுறாங்க ஆனா உன்னோட பே.புக்கில் அதுமாதிரி ஒன்னுமே இல்லையே அதனால கேட்டேன்’’ என்றான். ‘’ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உள்ள போஸ்ட்ட போய் பாரு, பொது சிவில் சட்டத்துக்கு எதிரா போஸ்ட் போட்டிருப்பேன்’’ என்றேன். அவனுக்கு புரியவில்லை என்பதிலிருந்து ‘’இன்னும் பயிற்சி வேண்டும்’’ என்று எண்ணிக்கொண்டேன்.

பொது சிவில் சட்டம் கொண்டுவந்துட்டா சல்லிக்கட்டு மாதிரி பண்பாடு, கலாச்சாரம், இனம், மொழி......etc., சம்பந்தமான ஆயிரம் அடையாளங்களை அழிச்சிடலாம். அதுக்கப்புறம் ‘’கம்பங்கூழ் நான் ஏன் குடிச்சு ஆரோக்கியமா இருக்கக்கூடாது?’’ன்னு நீ கேட்க முடியாது. ‘’கோக்’’தான் நீ குடிச்சு வயிறு புண்ணாகி சாகனும்னு அவன் சொல்லுறதத்தான் கேட்கணும். மாநிலத்துக்குன்னு எதுக்கு ஒரு அரசு வேண்டும்? அதற்கு என்று எதற்கு சில அதிகாரங்கள் வேண்டும்? என்பதை விளங்கவேண்டும். அதுபோன்ற மாநில அதிகாரங்களைக் கொண்டுதான் நாம் நம்முடைய வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாட்டை......etc காத்துக்கொள்ள முடியும்.

இனி மாநிலத்திற்கு ஒரு மண்ணும் கிடையாது எல்லா ஆணியையும் நாங்க புடிங்கிக்கிறோம்னு சொன்னா, சல்லிக்கட்டு மட்டும் இல்ல, நாம் கும்புடுற சுடல மாடசாமி, கரடி மாடசாமி எல்லாம் சாமியே இல்லன்னு சொல்லுவான். நாமளும் மூடிக்கிட்டு ‘’கும்புடுறேன் சாமி’’ன்னு கைகட்டி நிக்கனும்.. இங்க பலருக்கு ஏன் நீட் (NEET) மருத்துவத் தேர்வை எதிர்கிறார்கள்? என்றே தெரியவில்லை. கல்வி விசயத்துல மாநில உரிமையை பறிப்பதுதான் நீட் (NEET) தேர்வு முறை. தமிழகத்திற்கான மாணவர் எண்ணிக்கையில் குறைவு வராது, இது திறமையை கண்டறியும் தேர்வு என்று வடை சுடுபவர்களிடம் ஒன்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. அந்த திறமையை நாங்களே தேர்வு வைத்து கண்டுபிடிச்சிக்கிறோம். நீங்க ஒரு முடியையும் புடுங்கவேண்டாம். பொறியியல், மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டில் ஏற்கனெவே நடைமுறையில் இருந்ததுதான். அதையே நாங்க திரும்ப கொண்டுவந்துகொள்கிறோம்.

இந்த போராட்டம் விவசாயிகள் மரணத்திற்கும் மற்ற இன்ன பிற விசயங்களுக்கும் இனி நடக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஏதோ உணர்ச்சி வசத்தால் பேசுவதாகவே நான் கருதுகிறேன். அப்படி நடைபெற்றால் உண்மையில் சந்தோசம்தான். சல்லிக்கட்டில் சாதிய சார்பு இல்லாதது என்பதை ஒட்டுமொத்தமாக புறம் தள்ளிவிடமுடியாது, இது போராடுற பலபேருக்குத் தெரியும், இருந்தும் எல்லோரும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்க காரணம், இப்பவும் சொல்கிறேன் இது சல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டும் அல்ல, சல்லிகட்டின் பெயரில் நடக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம்.
       
காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் திட்டம், சம்ஸ்கிரத / இந்தி திணிப்பு, பொங்கல் விடுமுறை என வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்ச்சி வெடிப்பு. சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் இந்த எழுச்சி ஏற்பட்டது  எவ்வளவு உண்மையோ அதே அளவு அபத்தங்கள்தான் சல்லிக்கட்டை முன்வைத்துக்கொண்டு அங்கு நடந்துகொண்டிருப்பது. திரிசா, விஷால் மேட்டர், பஞ்சாப் அரசியல் கூட்டம் போட்டோவை மதுரை சல்லிக்கட்டு போராட்டம் என கூறுவது என எவ்வளவோ இருக்கிறது. முக்கியமான ஒன்று, தமிழகத்தில் இதுதான் முதன்முறையான அறப் போராட்டமாம்??? பார்த்தவுடனே தொங்கிரலாமுன்னு தோணுச்சு. மருந்திற்குக் கூட கூடங்குளம் போராட்டம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

‘’இந்த சுதந்திரத்தால் ஆதிக்க சாதியினர் கைதான் ஓங்கும், ஆகையால் ஆகஸ்டு 15 கருப்பு நாள்’’ என்று பேசிய பெரியாரை தேசதுரோகி என்ற நாம்தான், இன்று குடியரசு தினவிழாவை கருப்பு தினமாக கடைபிடிக்கச் சொல்கிறோம். லத்தி சார்ஜ்ஜை கண்டித்து தமிழ்நாடு இனி தனி நாடாகும் என்று கொதிக்கும் நாம் பெல்லட் குண்டில் செத்த காஷ்மீர்காரர்களைப் பார்த்து நகைத்தோம். எவ்வளவு நடைமுறை முறண் ?.  

தன்னோட உரிமையை பறிக்கும்போது, தன்னுடய கலாச்சாரத்தில் கைவைக்கும்போது, உணர்சியைத் தூண்டும்போது, அங்கு போராட்டம் / புரட்சி வெடிக்கும். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். இதுமாதிரியான போராட்டங்களை அரசு எப்படி கையாளுகின்றது பெல்லட் குண்டு வைத்தா? லத்தி ஜார்ஜ் செய்தா? அல்லது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டேவா? என்பதில்தான் அது காஷ்மீரா, தமிழ்நாடா இல்லை மற்றவையா என்பது தெரியும்.

ரெண்டு வருசத்துல 20க்கும் மேற்பட்ட அவசரச் சட்டம் போட்டவர்களுக்கு, சல்லிக்கட்டிற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டுவர முடியாதா?. முந்தய ஆட்சியில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டு தடைசெய்த நிலக்கரி ஏல முறையை, அவசர சட்டம் கொண்டு மீண்டும் ஏலம் விட்டவர்களால் இதற்கு ஒரு அ.சட்டம் கொண்டுவருவதா கஷ்டம்?

அரசியலை நாம் ஆழப் படிக்காவிட்டாலும் அளவாகவாது படிக்கவேண்டும்.

---------------------------------------------------------யாஸிர் அசனப்பா.