புதன், நவம்பர் 07, 2012

அப்பன் சொன்ன கதை.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

ஒவ்வொருத்தனுக்கும் போறாத காலமுன்னு ஒன்னு வரும், சில பேருக்கு மட்டும் அந்தகாலம் போய்கிட்டும், வந்துகிட்டும் இருக்கும். அது தலைவிதியின் அடிப்படையிலானது. வரனும்னு இருந்தா வந்துதான் ஆகும், படனும்னு இருந்தா பட்டுத்தான் ஆகனும். இதுமாதிரியான போறாத காலத்துல, தன்னுடைய தலையில எழுதியிருக்கும் விதியைப் பற்றி எங்க அப்பா சொன்ன கதை இது.

முன்னொரு காலத்துல ஒரு மந்திரவாதி இருந்தான். அவனுக்கு மனிதர்களுடைய தலையெழுத்த பற்றி தெரிஞ்சிக்கனும்னு ரொம்ப நாளா ஆராய்சி பண்ணிக்கொண்டிருந்தான். இதற்காக அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று அங்க இருக்கும் மண்டை ஓட்டின் சில பகுதிகளை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பான்.

நிறைய நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, தலையில எழுதியிருப்பதை படிக்ககூடிய அளவிற்கு அவனுக்கு வெற்றிகிடைத்தது. அதை வைத்துக் கொண்டு, எல்லா மண்டை ஒட்டையின் தலை எழுத்தினை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொருத்தனுடய கஷ்டங்களும், சோதனைகளும் அவர், அவர் தலையில் எழுதியிருந்தது. எல்லா மண்டை ஓட்டின் இறுதியிலும் “கஷ்டங்கள் முடிந்தது” என்று எழுதியிருந்தது. ஆனால் ஒரே ஒரு மண்டை ஓட்டுல மட்டும் “கஷ்டம் இன்னும் இருக்கிறது” என்று எழுதியிருந்துச்சு.

மந்திரவாதிக்கு ஒரே குழப்பம், “என்னடா இது, நாம ஆராய்ச்சி செய்த மண்டை ஓட்டுகளிலேயே, இந்த மண்டை ஓட்டுடைய மனிதனுக்குத்தான் அதிக, அதிகமான கஷ்டம் இருந்திருக்கிறது, ஆனாலும் செத்தபின்னாடியும், கஷ்டம் தொடரும்னு எழுதியிருக்கே? அது எப்படி சாத்தியம்?. செத்த பின்னாடியும் இவன் என்ன கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறான்?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டு, விடை கிடைக்காமல் போக, சரி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்க வச்சி ஆராய்ச்சி பண்ணலாம் என்று வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.


வீட்டுல் இதற்காக ஒரு தனி அறையை உருவாக்கி, அதில் அந்த மண்டை ஓட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை சென்று ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

இவனுடய நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, மந்திரவாதியின் மனைவி இவன் மேல் சந்தேகப்பட்டு, இவன் இல்லாத ஒரு நாளில், பக்கத்து வீட்டுக்காரியை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் போய் பார்க்கும் போது, இந்த ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.

“என்னக்கா இது, இந்த மண்டை ஒட்டையையா இப்படி ரகசியமா பாதுகாத்துகிட்டு இருக்காரு? அப்படி யாருடையதா இருக்கும்?” என்று பக்கத்துவீட்டுக்காரியிடம் மந்திரவாதியின் மனைவி கேட்க.

“அடி போக்கத்தவளே, இது கூடவா தெரியல, இது உன் புருசனோட கள்ளக்காதலி மண்டஓடுடி, அதுனாலதாண்டி உன் புருசன் உனக்கு தெரியாம, அவ ஞாபகம் வரும் போதெல்லாம் பார்த்துட்டு, பார்த்துட்டு போறான், இது இருக்குற வரைக்கும் உன் வாழ்க்கை நல்லா இருக்காதுடி, பார்த்துக்கோ” என்று ஏத்திவிட.

மந்திரவாதியின் மனைவி, மண்டை ஓட்டை எடுத்து, உரலில் போட்டு, உலக்கையால் குத்து, குத்து என குத்துவதை அங்கு வந்த மந்திரவாதி காண, பதறிப்போய் மனைவியை தள்ளிவிட்டு, நொருங்கி கிடந்த மண்டை ஓட்டை ஒட்டவைத்து பார்த்தபோது, அதில் எழுதியிருந்தது “கஷ்டங்கள் முடிந்தது” என்று. அதுமாதிரித்தான் என் விதியும்.. நான் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்கனும்னு இருக்கு. அனுபவிச்சுத்தான் ஆகனும் என்று சொல்ல, கதையை கேட்டவன், என்னவோ அவன் தலையில் உலக்கையால் குத்துவாங்கியது போல ஃபீல் பண்ணிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

எங்கப்பா எப்போதும் தொழுதபின்பு பிராத்தனை செய்யும் போது, “இறைவா, எனக்கு சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுத்துவிடாதே” என்று கேட்பதற்கு பதிலாக “இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக” என்று பிராத்தனை செய்துகொள் என்றே கூறுவார்.

ம்ம்ம்ம்ம்.......எவ்வளவோ பார்துட்டோம், இத பார்திடமாட்டமா என்ன????????

“இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக"

-------------------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், நவம்பர் 01, 2012

சொந்த ஊரில் பிறந்த நாள்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
"என்ன யாஸிர், துபாயில் இருந்து எப்ப வந்த?"

"ஒரு வாரம் ஆச்சு?"

"எத்தன நாள் லீவு?"

"இல்ல்ல்ல்ல்ல….முடிச்சிட்டு வந்திட்டேன்?"

“என்ன்ன்ன்ன முடிச்ச்ச்ச்சிட்ட்ட்டுடுடு வந்திட்டியா……………?” இந்த ரியாக்சன் என் அப்பாவோட ரியாக்சன் இல்ல, எங்க அப்பாவோட பிரண்டோட ரியாக்சன்.

பொதுவா அவர் வீட்டு முன்னாடி உள்ள ஒரு திண்டில் தான் நண்பர்கள் ஒன்று கூடுவோம். இந்த ரியாக்சன் கொடுத்தபின்னாடி அவரின் அறிவுரைகளைக் கேட்ட பின்பு, அவர் எப்பவெல்லாம் வீட்டில் இருக்கமாட்டார் என்பதை தெரிந்து கொண்டு மறைமுகமாக ஒன்று கூடிக்கொண்டிருக்கின்றோம். இந்திராக்காந்தி எமர்ஜென்ஸி காலத்தில் தி.மு.க காரன் வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சு, எங்க வாழ்க்கை.

ஒரு உண்மையைச் சொல்லக்கூட வழியில்லாமல் போயிடுச்சு. இவர்கிட்ட என்ன வந்திரப்போகுதுன்னு எண்ணி “கத்தாரில் எனக்கு வேலை கிடச்சிடுச்சு, என்னுடைய சர்டிஃபிக்கெட்டை அந்த நாட்டு எம்பசியில் அட்டஸ்டட் பண்ண கொடுத்திருக்கிறேன், வந்தவுடனே கிளம்பிவிடுவேன்னு” சொன்னேன். இதைக் கேட்டுவிட்ட பின்பு அவருடைய முகத்தை பார்த்த போதே தெரிந்துவிட்டது அவர் என்னை நம்பவில்லை என்று. என்னடா இது நாம உண்மையைச் சொன்னாலும் நம்பாம இருக்காறேன்னு வருத்தத்துல வந்து நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்து உறுப்பினர்களிடம் சொல்ல “எப்படி நம்புவாரு, எப்படி நம்புவாருங்குறேன், நீ சொன்னதத்தான் அவர்கிட்ட 5 வருசமா மண்ட மகன் சொல்லிக்கிட்டு இருக்கான், பின்ன உன்னை எப்படி நம்புவாரு?”

“ஓ, இந்த படம் 5 வருசத்துக்கு முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சா?” என நானே நொந்துகொண்டேன்.

வளைகுடா நாட்டில் இருக்கும் போது, ஒரு வருசம் ஓடுறதே தெரியாது. ஆனா இங்க ஒரு மாசத்துக்கு மேல இருக்கமுடியல, கரண்ட் கட்டை சமாளிக்க இன்வெர்ட்டர் மாட்டினா, ச்சார்ச் ஆகுறதுக்கு கூட கரண்ட் இல்ல. மழையில்லாம குற்றாலத்துல தண்ணியில்ல, மழை பெய்த பின்பு, குற்றாலத்துல ஏற்பட்ட வெள்ளத்துனால குளிக்குறதுக்கு அனுமதியில்ல. இப்படி வாழ்க்கை இல்ல, இல்லன்னே போய்கிட்டு இருக்கு.

இவ்வளவு துன்பத்துக்கு இடையிலும், பிறந்த நாள் அன்றைகாவது சந்தோசமாக இருக்க பக்காவா பிளான் பண்ணிவச்சிருந்தேன். “கல்யாண நாளை மறந்தாலும் மறப்பனே ஒழிய, உங்க பிறந்த நாளை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.” என்று என் மனைவி போன பிறந்த நாளில் (கல்யாணத்துக்கு முன்னாடி) சொன்ன போது “இறைவா யு ஆர் கிரேட், எனக்கு இப்படி ஒரு மனைவியை கொடுத்ததுக்கு நன்றி, நன்றி, நன்றி” ன்னு பிளக்ஸ்ல அடிச்சு ஒட்டாத குறைதான். ஆனா இன்றைக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவா, சொல்லுவான்னு காலையில இருந்து பின்னாடியே சுத்துரேன், ம்ம்ம்ம் ஒன்னும் நடக்கல. எப்போதும் எக்ஸ்ட்ராவா (extra) திட்டுறவ, இன்னைக்குன்னு பார்த்து எக்ஸ்ட்ராடுனரியா (extraordinary) திட்டுறா. வீட்டுல இருக்குறவங்க நான் பிறந்ததையே மறந்துட்டாங்க, பிறந்த தேதியையா ஞாபகம் வச்சியிருக்க போறாங்க, ஆகையால் அதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
யாரு சொன்னாலும், சொல்லலைன்னாலும் என் நண்பர்கள் சொல்ல மறக்கமாட்டானுங்க என்ற நம்பிக்கையில், பேஸ்புக்கை பார்க்க, கரண்ட் எப்படா வரும் என்று எதிர்நோக்கி காத்திருந்து, பேஸ்புக்கை ஓப்பன் பண்ணினா, “இறைவா, யு, ஆர் டபுள் கிரேட், பொண்டாட்டி விசயத்துல கொஞ்சம் என்னை சுரண்டிப் பார்த்துட்டாலும், நண்பர்கள் விசயத்துல கைவிடல”. இதுவரைக்கும் “ஹாய்”ன்னு சொல்லாத நண்பர்கள் கூட “பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று போட்டு என்னை தேம்பி, தேம்பி அழவைத்துவிட்டார்கள்.

“பக்ரீத் அன்று நான் மட்டன் சாப்பிட்டேன்” னு பேஸ்புக்கில் போஸ்ட் பண்ணினா, அத பாடகி சின்மயி பார்த்துட்டு போலிஸுல போய் புகார் கொடுத்திடுமோன்னு பயந்து, பேஸ்புக் அக்கவுண்டையே தூக்கிறலாமுன்னு தோன்றிய எனக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்களை கண்டவுடன், இந்த மாதிரியான நண்பர்களின் வாழ்த்துக்களை பெற, குண்டா சட்டத்துல கூட கைது ஆகலாமுன்னு முடிவுபண்ணிட்டேன். காலேஜில படிக்கும் போதுதான் நான் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தேன். அதுவும் எனக்காக அல்ல, நண்பர்களுக்காக. ஆம், நண்பர்களின் பிறந்த நாள் டிரீட்டில் முதல் பந்தியில் உட்கார்ந்து, கடைசி பந்தியில் எழும் நான், “நான் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடமாட்டேன், எனக்கு அதுவெல்லாம் பிடிக்காதுன்னு” சொன்னா அவ்வளவுதான், எல்லா பிராண்ட் செருப்பு நகல்கள் என் மூஞ்சியில் இருக்கும். அதுக்கு பயந்தே பிறந்த நாளை கொண்டாடினேன்.

இந்த பிறந்த நாள்த்தான் என் நண்பர்கள் சுற்றியில்லாமல் இருக்கும் பிறந்த நாள். நண்பர்கள் சுற்றியிருந்துட்டா ஒவ்வொரு நாளும், நமக்கு பிறந்த நாள் தான்.

------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், அக்டோபர் 01, 2012

ரெண்டுங்கெட்டான்....

சில பேரை பார்க்கும் போது நமக்கு ரொம்ப பொறமையா இருக்கும், கையில பத்து பைசா சேமிப்பு இருக்காது, ஆனா அவ்வளவு சந்தோசமா இருக்கானுங்க, ஆனா பத்து லட்சம் பேங்க் பேலன்ஸ் இருந்தும் மனசு, பணத்துக்கு பல்லக்கு தூக்குகிறது. பணம் சார்ந்து வாழும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இருப்பதில்லை. எனக்கு தெரிந்த ஒரு நண்பன், மத நம்பிக்கை அதிகமுள்ளவன், வெளிநாட்டில் தான் பார்த்த ஆசிரியர் பணியை துறந்து, உள்ளூரில் 50 மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்துக் கொண்டிருக்கின்றான். என்னால நம்முடியாத, அதே சமயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு நண்பன் அவன். யோசிச்சிப் பார்த்தா, அவனுக்கு வேலையின்னு பெருசா எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை, யாரிடமும் போய் நின்று நான் பார்த்ததும் இல்லை, ஆனாலும் எந்த மூலையில் போராட்டம் என்றாலும் கொடியை தூக்கி பிடித்துக் கொண்டு முன்னாடி நிற்பான். எவனுக்காவது கஷ்டம் என்று வந்தால், கண் இமைக்கும் நேரத்தில் முதல் ஆளாக வந்து நிற்பான். அவனால் எப்படி முடிகின்றது என்றால், “எல்லாம் இறைவன் செயல்என்று பதில்வருகிறது.

இவனுடைய வாழ்க்கையில ஒரு சதவீதம் நாமும் வாழ்ந்து பார்திடலாமுன்னு, அக்காள் மகளுக்கு அல்ஜீப்ரா சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டு புத்தகத்தை இரண்டு வாரத்துக்கு முன்னாடி வாங்குனவன்தான்,“சந்தைக்கு போகனும், ஆத்தா வைய்யும், காசு கொடு ஸ்டைல்ல காலாண்டு பரிட்சை லீவு முடிஞ்சிருச்சு, ஸ்கூலுக்கு போகனும் புக்க குடு ன்னு வாங்கிட்டு போயிட்டாள் என் மருமகள். 4 மணிக்கு அமெரிக்காவை எதிர்த்து நடக்கும் போராட்டதிற்கு செல்லவேண்டும் என்று நினைக்கும் போதுதான் பேய் தூக்கம் வருது. வாழ்க்கையில் எதை நோக்கிய இலக்கில் என் கால்கள் செல்கின்றது என்று நினைக்கும் போது ஒரு வித பயம் வருகின்றது.

ரோட்டில் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டிருந்த போது, மடித்துக் கொடுத்த பேப்பரில் ஒரு நடிகரிடம் கேட்ட கேள்வியை நான் என்னைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேன் அடுத்த பத்தாவது வருடத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?” சத்தியமா என்னால பதிலே சொல்லமுடியல. இத நான் என் நண்பனிடம் சொன்னேன். அவன் ரொம்ப கூலா சொன்னான் என்ன, நீ இப்ப கத்தார் வேலைக்கு டிரை பண்ணிக்கிட்டு இருக்க, பத்துவருசம் கழிச்சு பஹ்ரயினுக்கு டிரை பண்ணிக்கிட்டு இருப்ப, அப்புட்டுத்தான்”. கேட்டுவிட்டு ஹி, ஹின்னு சிரிச்சாலும், அப்படித்தான் இருக்குமோ என்ற நடுக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

5 லட்சம் கையில இருந்தால் தான், இந்தியாவுல சொந்த தொழில் பத்தி எதுவும் யோசிக்க முடியும் என்று சொன்ன பக்கத்து வீட்டுக்காரன் இப்போ ஆமாண்டே சொன்னேன், எப்போ…. டீ 2 ரூபாயா இருக்கும் போது, இப்போ டீ எம்பூட்டு தெரியுமுல, போ, போயி மேற்கொண்டு பத்து லட்சம் சம்பாதிச்சுட்டு வா, அப்பமும் டீ இதே ரேட்டுல இருந்தா பாப்போம்என்று மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லிட்டாரு. வரக்கூடிய காலங்களில், சிக்கனமா இருந்தால் தான் முடியும்னு சொல்லுறது எல்லாம் வேலைக்கு ஆகாது, வரும் காலங்களில் சிக்கன் என்பது முடியாத ஒன்று அதற்கு பதிலாக உழைப்பை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். எட்டு மணி நேரம் வேலை பார்த்தா, இனி பத்து மணி நேரம் வேலை செய்யனும் அப்பத்தான் வாழமுடியும் அத விட்டுட்டு, அஞ்சு புரட்டாவுக்கு பதிலா மூனு புரட்டா சாப்பிட்டு மிச்சம் புடிச்சா, பத்தாவது நாளு நோயில படுத்துருவஎன்று அவர் சொல்ல, சொல்ல, தாடியில்லாத தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் மாதிரி தெரிஞ்சாரு.

வாழ்க்கை என்பது மைண்ட் ஓரியண்டட், மணி ஓரியண்டட், என்ற இரண்டு வகைப்படுகின்றது, முதல் நண்பன் மைண்ட் ஓரியண்டட், தன்னுடைய மனதுக்கு பிடித்தமான வாழ்க்கை வாழ்கின்றான். அவனுக்கு ஜீன்ஸ் பேண்ட் போடனும் என்கின்ற வாழ்க்கை தேவையில்லை, சாதாரன வேஷ்டி சட்டை போதுமானது, அவனுடைய மனசை அவன் அப்படி பக்குவப்படுத்திக் கொண்டான், ஆகையால் அவனுடய வாழ்க்கைக்கு பணம் என்பது குறைவான தேவை. மனசு நிறைஞ்ச வாழ்க்கை என்பது மட்டுமே அவனது தேவை.

பக்கத்து வீட்டுக்காரர் மணி ஓரியண்டட். காசு இல்லன்னா கண்ணு இருட்டிரும். சாகும் போது பத்து வீட்டுக்கு சொந்தக்காரனா, பத்து கோடி சம்பாதிச்சவனா இருந்திருக்கவேண்டும் என்பது இவருடைய தேவை. நான் எந்த மாதிரி என்றால், இரண்டுமாதிரியும் கிடையாது அதுதான் என் பிரச்சனையே. எனக்கு வேஷ்டி உடுத்தமுடியாது, ஜீன்ஸ் தான் போடமுடியும், அதே சமயத்தில் பத்து வீட்டுக்கு சொந்தக்காரனா சாகவும் விருப்பமில்லை. இப்படி இரண்டும் கெட்டானுக்கு எப்போதும் பிரச்சனைதான். மேல் சொன்ன இரண்டு வகை மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கையில் ரொம்ப தெளிவா இருப்பாங்க, நல்லபடியா போய் கொண்டிருக்கும்.

ஆனால், ஆடையுடனோ அல்லது அம்மண்மாகவோ நிற்காமல் மேல மூடிகிட்டு, கீழ தொறந்து போட்டு நிற்கிற என்னமாதிரி ஆளுங்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை என்பது ஒரு யுகம், பயந்து பயந்தே சாகவேண்டும். இந்த கேட்டகிரியில் உள்ள மக்கள் ரொம்ப அதிகம். அவனுடய வாழ்க்கைய வாழ்வதா? இவனுடைய வாழ்கைய வாழுவதா? என்று யோசிச்சு முடிவு பண்ணுவதற்குள், முடி நரைத்துவிடுகின்றது.

இவன் நல்லவன்னு சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும், கெட்டவன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து செத்துவிடவேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய மனநிலை.


------------------------------------------------------------------------------யாஸிர்.


திங்கள், ஆகஸ்ட் 27, 2012

விடை கொடு அமீரகமே...


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
நான் அமிரகம் வந்த புதிதில், பழக்கமான அனைவரிடமும் கேட்பது “நீங்க இங்க வந்து எத்தன வருசம் ஆச்சு?”. ஒருத்தன விடுறது கிடையாது எல்லாரிடமும் கேட்டாகிவிட்ட கேள்வி. இப்போதும் எவனாவது இந்த கேள்விய கேட்டா, ஆடு சந்தைக்கு புதுசுன்னு நாம முடிவு பண்ணிக்கொள்ளலாம். 5வருசம், 7வருசம், 10வருசம் ஆச்சு தம்பின்னு சொல்லும் போது, வந்து பத்து நாள் கூட இருக்க முடியலியே இவங்க எல்லாம் எப்படித்தான் இத்தன வருசம் இருக்குறானுங்களோன்னு ஒரே பிரமிப்பா இருக்கும். இது எல்லாம் துபாய் செட் ஆகுற வரைக்கும் தான். அப்புறமா கம்பெனிக்காரன் ‘தம்பி ஒரு வருசம் ஆகிடுச்சு, வெக்கேசன் போறியா இல்ல டிக்கெட் காச வாங்கிட்டு இங்கேயே இருக்கியா?’ அப்பிடின்னு போன் பண்ணி கேட்டபின்னாடி தான் தெரியும், ஓஹ் ஒரு வருசம் படம் ஓடிரிச்சான்னு. 

துபாய் செட் ஆகுற வரைக்கும்தான்னு சொன்னேன், எப்படீன்னு சொன்னேனா?. ம் சொல்லுறேன். நமக்கு துபாய் செட் ஆகிடுச்சா?, ஆகலையா? என்பதை நாமே கண்டுபிடிச்சுடலாம். ரோட்டுல போகிறப்ப பிலிப்பினோ பொண்ணுங்க தெரியக்கூடாத பாகங்களை நல்லா தெரியுறமாதிரி டிரெஸ் போட்டு போகின்றபோது ‘ச்ச்சீய்ய்ய் என்ன டிரெஸ்ஸுடா இது?’ அப்படின்னு நமக்கு சொல்ல தோனுச்சுனா துபாய் உனக்கு இன்னும் செட் ஆகலன்னு அர்த்தம். அதே மாதிரியான பொண்ண பார்த்து ‘ம்ம்ம்ம் என்ன...... டிரெஸ்ஸ்ஸ்ஸுடா...... இது?’ ன்னு இழுத்து சொல்ல தோனுதா, கங்குராஜுலேசன் நீங்க துபாய்காரனாகிட்டீங்க. பெரிய பெரிய மால் எல்லாத்தையும் மல்லாக்க படுத்துக்கிட்டு பாக்குறது, மெட்ரோ ரயில் டிரைவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்க அவர தேட அலையுறது, ஒரு புரோட்டா 1 திருகாம்ஸ்னு சொன்னா ‘அடேங்கப்பா 15 ரூபாயா?’ ன்னு வாய பொழக்குறது இது எல்லாம் முதல் மாச சம்பளம் எடுக்கும் வரைக்கும்தான், அப்புறமா எல்லாம் அன்லிமிடட் புரோட்டா, சால்னா தான்.

நான் இங்க வந்து 4 வருசம் ஆகுது, இது என்னோட இரண்டாவது கம்பெனி, முதல் கம்பெனி இந்தியாவில், அங்கயும் 4 வருசம் இருந்தேன். ஆனா முதல் 4 வருசம் என்னோட வசந்த காலம்முன்னு சொல்லுவேன். அந்த 4 வருசம் ஏதோ 40 வருசம் மாதிரியான உணர்வு. வேலையில கற்றுக்கொண்டது கொஞ்சம் என்றாலும் அது அங்க மட்டும் தான். ஆனா இங்க வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொண்டது அதிகம், 4 வருசம் என்பது எப்படி போச்சுன்னே தெரியல. ஏதோ ஒரு மாசத்துக்கு முன்னாடி விமானத்துல வந்துட்டு, திரும்ப போகுற ஒரு உணர்வுதான். அதிக சோம்றியாக்கிய, கற்றுக் கொண்டதை மறக்க செய்யும்படியான வேலையாக இருந்தது நான் இங்கு பார்த்த வேலை. அதனால இந்த வேலையை விட்டுவிட்டு போகுற பீலிங்க் கொஞ்சம் கூட இல்லை. ஆனா சில நல்ல உள்ளங்களின் அன்பை இனி நேரடியாக பெறமுடியாமல் போனில் மூலமாகமட்டுமே பெறப்போவதை எண்ணி அதிக, அதிக வருத்தம். 
கஷ்டத்துக்காக வந்தோம், இஷ்டப்பட்டு அல்ல என்று பலரது வாழ்க்கை நஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. நானும் அப்படித்தான், கஷ்டம் ஒரு பச்சோந்தி, நிலைமைக்கு தகுந்தவாரு மாறுபடும். பத்தாயிடம் சம்பாதிக்கும் போது, கஷ்டத்தின் மதிப்பு 50 ஆயிரமாக இருந்தது. 50 ஆயிரம் சம்பாதிக்கும் போது, கஷ்டத்தின் மதிப்பும் கூடி லட்சமாக முகம்காட்டுகிறது. ஆக கஷ்டம் என்பது மாறாதது, நிலைக்கு ஏற்ப பரிணாமம் அடைகின்றது அவ்வளவுதான். 

என்னமோ இப்படியெல்லாம் எழுதுவதால், இந்த தம்பி இந்தியாவுக்கு போயி பொண்டாட்டி நகையை வச்சு, பக்கத்து வீட்டுக்காரி பேருல கன்ஸிட்ரக்சன் கம்பெனி ஆரம்பிக்க போகிறான்னு மட்டும் நனெச்சுடாதீங்க. போயிட்டு வாரேன்னு தான் சொல்லியிருக்கேனே தவிர, போறேன்னு சொல்லல. இந்தியாவில் மன்மோகன் சிங்குடன் இருந்து நிதி நிலையை சீராக்க ஒன்னும் நாங்க அங்க போகல பாஸ். திரிஷ்ஷா இல்லன்னா திவ்யா அப்படீங்குறமாதிரி, துபாய் இல்லன்னா கத்தார் என்ற நிலைதான் இப்ப நமக்கு. யாருக்கு தெரியும் மறுபடியும் திரிஷா தான் நமக்கு ஏத்தவங்கன்னு தெரிஞ்சா, கொஞ்சம் கூட கூசாம வந்து நிப்போம்.

நான் பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, துபாயில் இருந்து நண்பர்களின் போன் வரும் அப்பவெல்லாம் ‘என்ணடா எப்ப துபாயிக்கு வார?’ என்ற கேள்விகள் எழும். ‘வருவோம் கொஞ்ச நாள் ஆகட்டும்’ என்று சொன்னதுண்டு. துபாய்க்கு வருவதற்கு முன்னாடி நல்லா ஊரை சுத்தி பார்த்துக்க, ஒரு தடவ துபாய்காரண்ட பாஸ்போர்ட கொடுத்துட்ட, அம்புட்டுத்தான், நம்ம வாழ்க்கை இனிமே இங்கேயேதான் என்று சிரிச்சிக்கிட்டு சொன்னது, இங்க பல பேருக்கு உண்மையாகியிருக்கு.

கத்துக்கிட்டதுன்னு சொன்னா, சமையல். என்னனே தெரியாம சமைப்போம், ஆனா ‘என்னே டேஸ்டு’ ன்னு சாப்பிடுறவங்க சொல்லும்படி வைப்போம். கத்தரிக்கா, முருங்கக்காய் போட்டு, மிளகாய் பொடி போட்டா சாம்பார். கத்தரிக்காய்க்கு பதிலா கறிய போட்டா மட்டன் குழம்பு. எங்க சமையலின் கைப்பக்குவத்தினை எங்க வயிற்ருப்பகுதியின் வட்ட அளவு சொல்லும். இதில் மட்டும்தான் எங்களுக்கு டபுள் புரமோசன் கிடைக்கும். பேண்ட் சைஸ் 28 ஆக இருந்தால், 32 ஆகும். 32 ஆக இருந்தால் 36 ஆக மாறும். 

(கஷ்டங்கள் தொடரும்)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

மாணவனின் கேள்வியும், சோனியாகாந்தியின் பதிலும்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சோனியா காந்தி ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதித்திருந்தார். அதன்படி மாணவர்கள் தத்தம் கேள்விகளுடன் தயாராகி இருந்தனர். சோனியா சொன்னபடி துள்ளியமாக சொன்ன நேரத்திலிருந்து தாமதமாக வந்தார்.

சோனியா : உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் பெருமகிழ்சியடைகின்றேன், அத்துடன் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். உங்களது கேள்விகளை நீங்கள் கேட்களாம்.

பாபர் : எனக்கு 3 கேள்விகள் உள்ளன, அதற்கு உங்களது பதிலை அறிய ஆசைப்படுகின்றேன்.

கேள்வி 1. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அதிக அளவில் நடந்தும், இந்திய அரசாங்கம் அதற்கு ஆதரவாக லோக்பால் மசோதாவை இன்னும் நிறைவேற்றாதது ஏன்?

கேள்வி 2. இந்தியாவில் விவசாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, அதனை மேம்படுத்த இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கேள்வி 3. வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சோற்றுக்குப் பதிலாக, செல்போன் வழங்குவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்?

ட்ட்ரீங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் (ரீசர்ஸ் பெல் அடிக்கின்றது)

சோனியா : ஓஹோவ்................. ரீசர்ஸ் பெல் அடிச்சிடுச்சே. சரி எல்லோரும் வெளியே போய்விட்டு வந்தவுடன் நம்ம நிகழ்ச்சி மறுபடியும் தொடரும்.

15 நிமிடம் கழித்து மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது.

சோனியா : ஓகே, நீங்கள் கேட்கும் கேள்விகளை கேட்களாம். அடுத்து யாரு?

ராமன் : எனக்கு 5 கேள்விகள் உள்ளன, அதற்கு உங்களது பதிலை அறிய ஆசைப்படுகின்றேன்.

கேள்வி 1. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அதிக அளவில் நடந்தும், இந்திய அரசாங்கம் அதற்கு ஆதரவாக லோக்பால் மசோதாவை இன்னும் நிறைவேற்றாதது ஏன்?

கேள்வி 2. இந்தியாவில் விவசாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, அதனை மேம்படுத்த இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கேள்வி 3. வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சோற்றுக்குப் பதிலாக, செல்போன் வழங்குவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்?

கேள்வி 4. எப்போதும் அடிக்கும் ரீசர்ஸ் பெல் ஏன் இன்று அரை மணி நேரத்திற்கு முன்பாகவே அடித்தது?

கேள்வி 5. முன்பு உங்களிடம் கேள்வி கேட்ட என் நண்பன் பாபர் இப்போது எங்கே?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், ஜூலை 16, 2012

நாய் பொழப்புடா இது.....


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இறைவன் அருமையான இந்த உலகத்தை மனிதனுக்காகவே படைத்தான். உலகத்தை உருவாக்கியவுடனே அவன் மனிதனை உருவாக்க விரும்பாமல், மனித ஜாதி இந்த உலகில் நல்ல முறையில் வாழ அவனுக்கு துணையாக சில மிருகங்களை படைத்தான்.

முதல் நாள் ஒரு பசுவை உருவாக்கினான். பின்பு அதனிடம் “ஏய் பசுவே! உன்னை நான் படைத்ததற்கான காரணம், நீ பூமியில், விவசாயின் கட்டளைப்படி நடந்துகொள்ளவேண்டும், அவனுடய தொழுவத்தில் இருந்து, வெயிலில் கஷ்டங்களை அனுபவித்தாலும், மனிதனுக்கு பால் கொடுத்து அவனுக்கு துணையாக இருக்க வேண்டும், இதற்காக உனக்கு 60 ஆண்டுகால வாழ்க்கைய தருகிறேன்என்று கூறினான்.

அதற்கு பசு, இறைவனிடம் “பிரபு, தாங்கள் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கின்றேன், ஆனால் இந்தமாதிரியான ரணமான வாழ்க்கைக்கு எனக்கு 60 வருடம் என்பது அதிகம், ஆகையால் 20 ஆண்டுகளை நான் எடுத்துக் கொண்டு, 40 ஆண்டுகளை திரும்ப கொடுத்துவிடுகின்றேன் என்றது. இறைவனும் பசுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்.

இரண்டாவது நாள், ஒரு குரங்கினை படைத்தான், அதனிடம் “குரங்கே, நீ மனிதனுக்கு வேடிக்கை காட்டவும், சில செயல்களை செய்து அவர்களை சிரிக்கவைக்கவும் படைக்கப்பட்டிருக்கின்றாய், அதற்காக உனக்கு 20 ஆண்டுகால வாழ்க்கையை உனக்கு பூமியில் நான் அளிக்கின்றேன். என்றான் இறைவன்.

அதனைக் கேட்டுக்கொண்ட குரங்கு, இறைவனிடம் “இறைவா, மற்றவர்களை மகிழ்விப்பது என்ற பணி எனக்கு கொடுக்கப்பட்டதற்கு எனக்கு சந்தோசம் தான், ஆனால் 20 ஆண்டுகாலம் என்பது அதிகம், ஆகவே அதனை 10 ஆண்டுகளாக குறைத்து அருளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இறைவனால் குரங்கின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மூன்றாவது நாள், இறைவன் மனிதனுக்காக நாயைப் படைத்தான். மேலும் அதனிடம் “வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்க, வேகமாக வரும் புது நபர்களை வீட்டு முற்றத்திலே நிருத்த, மெதுவாக செல்பவர்களை வேகமாக ஓடவைக்க உன்னை படைத்துள்ளேன். நீ வீட்டின் வாசற்படியில் கிடந்து அவர்களுக்கு உதவ வேண்டும், இதற்காக உனக்கு நான் 20 ஆண்டுகால வாழ்க்கையை அளிக்கின்றேன் என்றான். இதனைக் கேட்ட நாயோ “மற்றவர்கள் கூறியதைப் போன்றே நானும் கூற ஆசைப்படுகின்றேன். 20 ஆண்டுகாலம் என்பது எனக்கு அதிகம், ஆகவே எனக்கும் 10 ஆண்டுகளாக என் வாழ்க்கையை குறைத்து அருளும்படி வேண்டுகின்றேன் என்று வேண்டியது. இறைவனும் அதற்கு சம்மதித்தான்.
இறுதியாக, இறைவன் மனிதனைப் படைத்தான். அனைவரிடமும் சொன்னைப் போல் மனிதனிடமும் “உண்டு, உறங்க, மகிழ்ச்சியாக இருக்க, திருமணமுடித்து குழந்தைக்களைப் பெற்றுக் கொள்ள உனக்கு பூமியில் 20 ஆண்டுகால வாழ்க்கையை தருகின்றேன் என்றான்.

இதனைக் கேட்ட மானிடன் “ஓ மை காட், இவ்வளவு செயல்களை நான் பூமியில் செய்ய எனக்கு வெறும் 20 ஆண்டுகள் போறவே போறாது, ஆதலால் பசு கொடுத்த 40 ஆண்டுகள், குரங்கு, நாய் திரும்ப கொடுத்த பத்து, பத்து ஆண்டுகளை எனக்கே வழங்கிட வேண்டுகிறேன், மை லாட். இறைவனும் மனிதனின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு, பசு, குரங்கு, நாய் திரும்ப கொடுத்த வருடங்களை மனிதனுக்கே கொடுத்து அனுப்பினான்.

ஆகையால்தான் நாம் முதல் இருபது வருடங்களில் உண்ண, உறங்க, விளையாடி பொழுதை கழிக்கின்றோம். பின்பு அடுத்த 40 வருடங்களில் பசுவைப் போல வெயில், மழை பாராது உழைத்து, நமை அண்டியிருப்பவர்களுக்காக வாழ்கின்றோம். அடுத்த 10 வருடத்தில் குரங்கைப் போல பேரக்குழந்தைகளுக்கு வேடிக்கைகள் காட்டி, மகிழச்செய்கின்றோம். இறுதியான 10 ஆண்டுகள், வீட்டிற்கு வெளியே கட்டிலில் கிடந்தபடி நாயைப் போல, வீட்டிற்கு வருகிறவர், போகிறவர்களை நிறுத்தி கேள்விகேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

--------------------------------------------------------------------------------------யாஸிர்.