புதன், டிசம்பர் 16, 2015

நடிகன்னா மிதிப்போம்..

மழை வெள்ளத்தைப் பற்றி எழுதவில்லை என்றால் நீங்கள் ஒரு ‘’பிரபல வலைப்பதிவாளர்’’ கிடையாது, என்ற எழுதப்படாத விதியின் கீழ் இந்த கட்டுரை அவசரமாக எழுதப்படுகின்றது. ‘’ஆனா நீதான் பிரபல வலைப்பதிவாளரே கிடையாதே?’’ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ‘’பிரபலம்’’ என்பதை ஏற்கமறுப்பீர்கள் என்றால் ‘’ஓரளவு’’ என்பதை அதோடு இணைத்துக்கொள்ளவும் (அதுக்கும் கீழ் எல்லாம் இறங்க முடியாது). ‘’என்னடா? பிளாக் எழுத எதுவும் சப்ஜெக்ட் கிடைக்கலியா? கொஞ்ச நாளா எதுவும் எழுதல?’’ என்று சிலபேர் கேட்பதுண்டு. சப்ஜெட்டிற்கெல்லாம் பஞ்சமே கிடையாது. பேஸ்புக்கில் பத்து நிமிஷம் குந்தி இருந்தால் போதும், கொள்ள போஸ்ட் போடலாம். வர வர எழுதுவதற்கு கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறது.

சென்னை வெள்ளத்தைப் பற்றி வட இந்திய மீடியாக்கள் மூச் விடாதைத் பற்றி இங்கு பல பேர் பொருமுவதை என்னவென்று சொல்வதுதென்றே புரியவில்லை. சென்னை வெள்ளம் என்றுதான் சொல்ல சொல்கிறோமேயொழிய தமிழ்நாடு வெள்ளம் என்று இல்லை. சென்னை மூழ்கிய அதே நாளில்தான், கடலூரும் மூழ்கியது ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பேர் கடலூர் வெள்ளத்தைப் பற்றி பேசினோம்?, ஆக நாமேக்கே சென்னை வேறாகவும் கடலூரூர் வேறாகவும் தெரியும்போது வட இந்தியா மீடியா வந்து வட சுடவில்லை, சட்னி ஊத்தவில்லை என்று புலம்புவது என்ன நியாயம்?. நிவாரணப் பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டியதை வாய் கிழிய பேசும் நாம், காஷ்மீர் வெள்ளத்தில் தவித்தவர்களின் நிவாரணப் பொருட்களில் ‘’இது இந்தியாவின் பரிசு’’ என்று வாசகம் ஒட்டியபோது ‘’ஏன்?, காஷ்மீர் இந்தியாவில் இல்லையா?’’ என்று எதிர்த்து வாய் திறக்காதது எதற்கு?. அப்போது, நாம் மட்டும் அது வட இந்தியா என்று பார்க்கவில்லையா?.

ரஜினிகாந்தின் தற்போதைய சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடியாம். ஆனால் அவர் வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் பத்து லட்ச ரூபாயாம். என்னமோ இவனுங்கதான் ரஜினிகாந்த் அக்கவுண்ட்ஸை எல்லாம் ஆடிட் பண்ணமாதிரி அள்ளிவிடுறது. லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால், லாரன்ஸின் மூத்திரத்தை ரஜினிகாந்த் குடிக்கனுமாம். அதுசரி என்றால், ரஜினி படத்தின் 100 ரூபாய் டிக்கெடை 500 ரூபாய்க்கி வாங்கி படம்பார்த்த நாம் ரஜினி மூத்திரத்தைதான் குடிக்கவேண்டும். அவ்வளவு மூத்திரத்திற்க்கு பாவம் ரஜினி என்ன செய்வார்?. எல்லா நடிகருக்கும், பணக்காரனுக்கும் ஒரு டிரஸ்ட் இருக்கும், அது எதற்கு என்று எவனுக்காவது தெரியுமா?. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்குத்தான் என்று நாம சொன்னாலாவது புரியுமா?. இவனிடம் இவ்வளவு சொத்து இருக்கிறது, ஆகையால் இவன் இவ்வளவு ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு நீங்க யாருடா?. அப்படியென்றால், நான் நிதி கொடுக்கவேண்டும் என்றால் என்னுடய சம்பள ஸிலிப்பை யாரிடம் அனுப்பி, எவ்வளவு நிதி கொடுக்கவேண்டும்? என்று கேட்பது?.

கோச்சடையானில் பத்து கோடி, லிங்காவில் இருபது கோடி நஷ்டம் என்று ரஜினிகாந்த் அறிக்கைவிட்டால், அந்த நஷ்டத்தை கொடுக்க நாம் தயார் என்றால், ரஜினியை வெள்ள நிவாரண நிதிக்கு ஆயிரம் கோடி கொடுக்கச்சொல்லலாம். கவித்துவமான, காவியத்துவமான, இலக்கியத்துவமான ‘’லிங்கா’ படத்தை வெற்றி பெறச்செய்து வசூல் சாதனை படைக்கவைக்க நமக்கு துப்பு இல்லை, இந்த தள்ளாத வயதிலும், பாராசூட்டில் பாய்ந்து பாய்ந்து பைட் செய்த சாதனையை பாராட்ட துப்பு இல்லை. நிதி வேணுமாம் நிதி. தூக்கிப்போட்டு மிதி.

அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகேட்க வக்கில்லாத நாம், நம்முடைய கோபத்தை வெளிக்காட்ட ஒரு ‘’அமிதாப் மாமா’’ தேவைப்படுகிறது. அந்த ‘’அமிதாப் மாமா’’தான் இந்த நடிகர்கள். பொய்யையாவது கொஞ்சம் நம்பும்படி சொல்ல முதலில் கத்துக்கனும், ஒரு பொய்சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருந்தாத்தான் அதை கொஞ்சம் அறிவிருக்கிறவன் நம்புவான். இதெல்லாம் சதுரங்க வேட்டை படம் பார்த்தாலே புரியும். எங்க? நாமதான் எப்போ கபாலி ரிலீஸீன்னு காத்துக்கிட்டு இருக்கோமே. ஆர். ஜே பாலாஜி ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்ததாக ஒரு படிக்காத பக்கி  கிளப்பிவிட்டதை, கார்பிரேட் கிளர்கில் இருந்து கம்யூட்டர் இஞ்சினியர் வரை ஷேர் செய்திருக்கிறார்கள். ஷேர் செய்த எவனுமே ‘’ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்குற அளவுக்கு ஆர் ஜே பாலாஜியிடம் சொத்து இருந்தால், அவர் எதுக்கு சின்ன சின்ன காமெடி வேடத்தில் நடிக்கணும்?. கேவலம் உதயநிதியே ஹீரோவா நடிக்கும்போது, ஆர்.ஜே பாலாஜி ஹிரோவா நடிச்சிருப்பாரே?’’ என்ற ஒரு சின்ன கேள்விகூட அவர்களுக்கு எழவில்லை. ஏனென்றால், ரமணா படத்தி வருவது போல நாமெல்லாம் ‘’செண்டிமெண்டல் இடியட்ஸ்”. அதேமாதிரித்தான் ஷாருக்கான் 100 கோடி கொடுத்ததாக உடான்ஸ். அதில் 50 கோடி பணமாகவும், 50 கோடி பொருளாகவும் என்ற டீட்டெய்ல்லு வேற.

நடிகனோட தொழில் நடிக்குறது, அதை அவர்களை செய்யவிடவேண்டும். சும்மா, சும்மா, காவிரியில தண்ணிவரல, கக்கூஸ்ல கக்கா போகல என்பதற்காக எல்லாம் போராட்டம் செய்ய இழுத்தால் என்ன நியாயம்?. அப்படி போராட்டம் செய்ய வருகிறவனுக்கு காவேரி பற்றி தெரியுமான்னு கேட்டா, என்னோட அடுத்த பட ஹீரோயின்னுதான் சொல்லுவான். ஒரு படம் நல்லா இருந்தா, ஒருதடவை தியேட்டர்ல பாரு, அடுத்து டாரண்ட்ல நல்ல பிரிண்ட் வந்தவுடன் 10 தடவ பாரு. அதவிட்டுப்புட்டு, ‘’உங்கபடத்தை திருட்டு விசிடில பாக்குறது தப்பே இல்லடா?’’ என்று எதற்கு போஸ்ட்?, என்னமோ நேற்றுவரை எல்லா படத்தையும் தியேட்டர்ல போய் துட்டுகொடுத்து பார்த்தமாதிரி.

‘’தேரை இழுத்து தெருவில் விடுவது’’ என்று தமிழில் ஒரு சொல் உண்டு. நமக்கு கிடைத்த மற்றுமொரு அமிதாப் மாமாதான் கலெக்டர் சகாயம். நேர்மையான அதிகாரிக்கு சப்போர் செய்வதை விட்டுவிட்டு, எலக்சனில் நிக்கவைக்க ஒரு குரூப் கிளம்பி இருக்கு. அவர் எப்போது அரசியலுக்கு வருவதாக சொன்னார், இல்லை ஒரு அபிப்பிராயம் இருக்கிறது என்றாவது சொன்னாரா?.  அவர் அரசியலுக்கு வந்தால் எத்தனைபேர் தெருவில் இறங்கி அவருக்காக வேலை செய்வார்கள்? எவனும் செய்யமாட்டான். வேண்டுமென்றால் அவரைப் பற்றி பேஸ்புக்கில் பத்து போஸ்ட் போடுவான் அவ்வளவுதான். என்னமோ அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதுங்குறது அரிசி கடை ஆரம்பிக்கிற லெவலுக்கு போயிடுச்சு. இவனுங்க நம்பி சகாயம் அரசியலுக்கு வந்தால் ‘’நாம் பாட்டுக்கு ச்சேவனேன்னு தாண்டா இருந்தேன், யாரு வம்பு தும்புக்கும் போனேனா.......’’  என டிபாஸிட் போனபின்னாடி புலம்ப வேண்டியதுதான்.

சகாயம் அரசியல் வருவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அவர் யாரை நம்பி வரவேண்டும் என்பது ரொம்ப முக்கியம். பேஸ்புக்கில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவனையா? அல்லது தெருவில் நின்று அநியாயத்திற்கு எதிராக போராடுபவனையா?. பேஸ்புக்கில் இப்போது அவருக்கு ஆதரவாக போஸ் போடுபவன் எல்லாம், நாளை அவர் அரசியலுக்கு வந்த பின்னாடி புதுசு புதுசா கேலி செய்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு தேவை ஆயிரம் லைக். அவ்வளவே. 
   
சென்னையில் தண்ணீர் வற்றியவுடன் ‘’பிரே ஃபார் சென்னை’’ ‘’ஹெல்ப் ஃபார் சென்னை’’ புரபைலை மாற்றியாகிவிட்டது. ஆனால் கடலூர்?. நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை பேசினோம், கடலூரில் சொந்த ஜாதிக்கு மட்டும் நிவாரண பொருட்களை புடிங்கிய, புடுங்கிகளைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்?. சென்னை இழப்பிற்கும், கடலூர் இழப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தண்ணீர் சூழ்ந்த நிலையை வைத்துக்கொண்டு, இரண்டும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை மாற்றவேண்டும். இந்த வெள்ளத்தில், சென்னை மக்களின் வாழ்க்கையில் சில இழப்புகள் உண்டு, அதை அவர்கள் (90% பேர்) இரண்டு, மூன்று மாதங்களில் சரிசெய்துவிடமுடியும். ஆனால் கடலூர் அப்படியல்ல, எல்லாமே விவசாயிகள், ஏழைகள், இந்த வெள்ளத்தில் அவர்களின் மொத்த வாழ்க்கையுமே இழப்பு. தயவுசெய்து கடலூர் மக்களின் குடிசை வெள்ளத்தில் சென்றதை, சென்னை மக்களின் டி.வி, பிரிட்ஜ் ரிப்பேர் ஆனதோடு ஒப்பிடாதீர்கள்.

பீப் சாங் வந்து வெள்ளம் பற்றிய செய்திகள் கடந்துபோனது, ஆகவே சிம்பு அவர்களே இதுவும் ஒரு நாள் கடந்துபோகும். இறுதியாக, மதிப்பும், மரியாதைக்கும் உரிய மாண்புமிகு புரட்சித்தலைவி, தங்கத்தாரமை அம்மாவின் ஆணைக்கினங்க முடித்துக்கொள்கிறேன்.


------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், நவம்பர் 18, 2015

ஆஹாங்...

ஒரு படத்தில் வடிவேலு பிக்பாக்கெட் அடிப்பதற்காக, பிரசாந்த் பாக்கெட்டில் கை வைப்பார். ஆனால், பர்ஸுக்கு பதிலாக ஒரு தேள் கையோடு வந்து கொட்டும். ‘கீழவிடு தல’ என கத்தும் அஸிஸ்டன்டிடம், ‘’நான் எங்கடா புடிச்சிருக்கேன்?, அதுதாண்டா என்ன புடிச்சிக்கிட்டு இருக்கு’’ என்று வடிவேல் சொல்லுவார். அதுபோல, நான் பேஸ்புக்க வச்சிருக்கேனா? இல்ல, பேஸ்புக் என்ன வச்சிருக்கா?ன்னு எனக்கே தெரியல. வார இதழில் வரும் நல்ல போஸ்டைப் பார்த்து, புலங்காகிதமடைந்து, பேஸ்புக்கில் அவனுடன் ஃபிரண்ட்ஸானால், போக்கிரி படம் பார்த்துவிட்டு ‘விஜய்னா’வுக்கு ஃபேன் ஆனது போலாகிவிட்டது. வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்த அத்தனை போஸ்ட்டுகளும் அம்புட்டு மொக்கை.

சில பேர், ஷேர் பண்ணுகிற சரித்திரம், வரலாறு எல்லாம் வண்ட வண்டயாக இருக்கிறது. இருநூறு, முன்னூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கிபடித்த சரித்திர புருஷர்களின் வாழ்க்கையை, தரித்திரம் புடிச்சவனுங்க வேறுமாதிரி எழுதி ‘’ஆஹாங்’’ ரியாக்சனுக்கு உள்ளாக்குகிறார்கள். சிலர் எழுதும் வரலாற்று நிகழ்வுகள், ‘வரலாறு’ அஜித்தின் டான்ஸர் கெட்டப் போல, அதுவா? இதுவா? என குழப்பத்தை உண்டாக்கும். பேஸ்புக்கில் இருந்து வெளியேறிவிட பலமுறை முயற்சி செய்தும், ம்க்கும் எங்க?. -- அம்மா ஆட்சியில் கைது செய்து ஜாமினில் வெளியில் வருபவனை, கோர்ட்டில் வைத்தே அடுத்த கேஸில் அரஸ்ட் செய்வதுபோல, ஒரு முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

‘’தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹூ அலைவ ஸல்லம் கூறுகிறார் (அதாரம், @#$%)’’ என்ற போஸ்டைப் பார்த்துவிட்டு ‘ஒண்டர் புல்’ ‘ஃபெண்டாஸ்டிக்’ ‘ஆசம்’ என புகழ்ந்துகொண்டே ஷேர் செய்தவனைப் பார்த்தால், பொண்டாட்டி பேச்சைக் கேட்டு தனிக்குடுத்தனம் போனவன். ‘’யோக்கியன் மட்டும்தான் போஸ்ட் போடனும்னா, நீ மட்டும்தான் போடனும்’’ என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. ஆனால் நான், என் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு 80% அளவிற்காவது என்னைப்போல எதிர்பார்ப்பது தவறா?.

‘தவறவிட்ட பாஸ்போர்ட் உரியவரிடம் கிடைக்க, அதிகமாக ஷேர் செய்யுங்கள்’ என்று அந்த பாஸ்போர்டை போட்டோ எடுத்து ஒரு கும்பகோணத்துக்காரர், பேஸ்புக்கில் போஸ்ட் செய்கிறார். யாருடைய பாஸ்போர்ட் என்று அட்ரஸ் பார்த்தால், அதுவும் ஒரு கும்பகோணத்துக்காரனுடயது. எடுத்தவன் விளம்பரத்துக்காக அதை ஸ்கேன் செய்து, பேஸ்புக்கில் அப்லோடு செய்வதற்கு இருபது நிமிஷமாகியிருக்கும், அதற்கு அவன் நடந்து போய் கொடுத்திருந்தால் பத்து நிமிஷம்தான் ஆகும். இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆள் இல்லையா? என்றால். இதுதான் ‘’டிஜிடெல் இண்டியா’’ என்று கமெண்ட் போடுகிறார்கள். கருப்பா ஒரு பெண் படத்தைப் போட்டு ‘கருப்பா இருக்கும் எனக்கு லைக் கிடையாதா?’ என்று ஆயிரம் லைக் வாங்குகிறான். ஏண்டா? லைக்குக்கு டங்க தொங்கப்போட்டு டாக்கு மாதிரி திரியனும் என்று சொன்னால், லொல் லொல் என்று என்மீது விழுகிறார்கள்.

அக்கவுண்டை டி-ஆக்டிவ் பண்ணலாம் என்றால், சொல்லிவச்ச மாதிரியே, அந்த மாதத்தில்தான் என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொன்ன, அந்த பத்துப்பேருடைய பிறந்த நாளும் வரும். சரி, அடுத்த மாதம் செய்யலாம் என்றால், ‘ஈத் முபாரக்’. அதுக்கு அடுத்த மாதம் ‘ஹேப்பி தீபாவளி’, ‘தல தீபாவளி’...... இப்படின்னா? எப்படி? நான் டி ஆக்டிவேட் பண்ணி, நான்  சந்தோசமா இருந்து, மத்தவங்களையும் சந்தோசமா வச்சிக்கிறது. பேஸ்புக்கில் ‘’புரட்சிப் போராட்டம்’’ நடத்தினால், நம்மை பொங்கள் வைத்துவிடுவார்கள்.

போனமுறை ஊருக்கு சென்றபோது, ‘பேஸ்புக்குன்னா என்னப்பா? அதுல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கொடேன்?’ என்று எங்கப்பா கேட்டபோது, கண் இரண்டும் சைடில் சொருகி மயக்கமாகிவிட்டேன்’.  நாக்கு வரண்டு ‘’பேஸ்....பேஸ்பு....பேஸ்புக்கா?, அதபத்தி யாரு சொன்னா?, உங்களுக்கு எப்படி தெரியும்?’’ என்று அப்பாவிடம் கேட்டேன். ‘’இல்லப்பா. பள்ளிவாசல்ல எல்லோரும் அதபத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க, அதுதான் கேட்டேன்’’ என்று பதில் வந்தது. அதுதானே!! ஊரு உருப்படாம போகனும்னா அத பள்ளிவாசல்ல வச்சித்தானே பேசணும். அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில, அந்த  பிஞ்சு மனசுலயும் நஞ்ச விதச்சிட்டானுங்க பாவிங்க.  

பேஸ்புக்குல ஃபிரெண்டா இருக்குறவனுங்கதான் கடுப்பேத்துறானுங்க என்றால், பேஸ்புக்கும் அதனால் எவ்வளவு முடியுமோ ‘’சஜஸ்டட் வீடியோ’’ என்ற பெயரில் அவ்வளவு வெறுப்பேத்துகிறது. தலையில் முடிவளர வைக்கும் கருவி, மாற்று முடி ஆப்ரேஷன், முக சுருக்கத்தை நீக்கும் கிரீம்...... என வீடியோக்கள் திரும்ப திரும்ப வந்து வெறுப்பேற்றுகிறது. பேஸ்புக்கில் போட்டோக்களை அப்லோடு செய்தாலும் தலையில் தொப்பி போட்ட போட்டோவை மட்டும்தான் அப்லோடு செய்வேன். இவ்வளவு கவனமாக இருந்தும், பிறகு எப்படி கம்யூட்டர் ஜீக்கு நம்முடைய மொட்டைமாடி மார்பிள் தரையைப் பற்றி தெரியும்? என யோசித்து யோசித்து சுத்தி இருந்த கொஞ்ச முடியும் கொட்டிவிட்டது.

பிறந்த நாள் அன்று, கண்ணாடியில் முகத்தை கொஞ்சம் குளோசப்பில் பார்த்தபோதுதான், முகத்தில் ஏற்பட்ட சுருக்கத்தை கவனித்தேன். மறுநாள், பேஸ்புக்கை திறந்தால், வீடியோவில், ஒரு வயதானவரின் முக சுருக்கத்தில் ஒரு கிரீமை தடவி, ஃபூ, ஃபூ என ஊதியவுடன், முக சுருக்கம் ‘’ஹோகயா’’, ‘’இட்ஸ் கான்’’, போயே போச்சு’’. கண்ணாடியில் என் முக சுருக்கத்தை பார்த்தபோது சுருங்காத என் இதயம், பேஸ்புக் வீடியோவைப் பார்த்தவுடன் சுக்குநூறாகிப் போனது. விசயத்தை ஒரு நண்பனிடம் கூறி விளக்கம் கேட்டேன். அவன் ‘’டெலிபதி மாதிரி நம்மோட என்ன ஓட்டத்தை பே.புக் பிரதிபலிக்கும்’’ என்றான். அப்படியா? என ஆச்சிரியத்தில் அவன் கம்யூட்டரில் அவன் பேஸ்புக்கை பார்த்தேன். எனக்காவது சுருங்கிப்போன முகத்துக்கு கிரீம், அவனுக்கு..........(சொன்னால் கேவலம், அத விடுங்க). ‘’டெலிபதி மூலமாக நம்மை பற்றி பேஸ்புக் தெரிந்துகொண்டு, நமக்கு தேவையான வீடியோவை தருகிறது’’ என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியென்றால், என் மனைவி ஊரில் இருப்பதும் பேஸ்புக்கிற்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா?.

எங்கப்பா கேட்டது போலவே என் மனைவியும், பேஸ்புக்கைப் பற்றி கேட்டு ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்துதர வேண்டினாள். நான் எவ்வளவு சொல்லியும் கேட்பதாயில்லை. ‘’சரி, ‘பேஸ்புக்’ என ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதிகாட்டு, நான் உனக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணித்தருகிறேன்’’ என்று சொன்னேன். இரண்டு நாள் கழித்து ‘’வெட்டிப்பயலுங்க, முட்டாளுங்க, கேணப்பயலுங்க, ‘இன்னும் சில டாஷ் டாஷ்’ ங்கதான் பேஸ்புக் வச்சிருப்பாங்கலாமே, அப்படியா மச்சான்?’’ என்று கேட்டாள். இவ்வளவு கரெக்டா சொல்கிறாள் என்றால், ஏதோ டி ஆக்டிவ் செய்த பண்ணாடைதான் சொல்லியிருக்கவேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டு, ‘’ஆமா, தங்கம் ஒருத்தனை தவிற’’ என்று பதில் கூறினேன். அவள், அந்த ஒருத்தன் யார் என்று கேட்கவில்லை. இறைவன் அடுத்த பொய்யை விரும்பவில்லை போலும். காட் இஸ் கிரேட்.

அவளுடய மொபைல் பழுதடைந்ததால், என்னுடய மொபைலை கொடுத்துவிட்டு துபாய் வந்தேன். அதிலிருந்து பேஸ்புக் ஆப்பை டெலிட் செய்ய மறந்துவிட்டேன். தொழில் கற்றுக்கொள்ள அதை நோண்டிய போது ‘’A’’ என டைப் செய்து போஸ்ட் செய்துவிட்டாள். ஆபிஸில் வந்து கம்யூட்டரில் பேஸ்புக்கை ஓப்பன் செய்துபார்த்தால் ‘’A’’. வேக, வேகமாக அந்த போஸ்டை டெலிட் செய்துவிட்டு,  மனைவிக்கு போன் செய்து ‘அறிவிருக்கா?’ ‘புத்தியிருக்கா?’ என திட்டு திட்டு என திட்டினேன். அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, சொன்னாள் ‘’அந்த போஸ்டுக்கு லைக் கொடுத்த அந்த எட்டுப் பேரு யாரு?


-----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், நவம்பர் 09, 2015

ஷேம், ஷேம்....பப்பி ஷேம்.

 
பத்து நாட்கள் வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானாவாக போய்கொண்டிருந்தது. இப்படி பக்தன் பரவச நிலையில் இருப்பதை, ஏனோ பரலோகத்தில் இருக்கும் பரமபிதா விரும்புவதில்லை. விளைவு, சண்டையிட்ட மனைவி மறுபடியும் பேச ஆரம்பித்துவிட்டாள். கஷ்டங்களை கொடுத்து ‘கடவுள் உளேன்’ என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இதோடு, ரூமிற்கு இன்னொரு ஆள் தேடும் பெரும் கஷ்டம் வேறு.

என்னோடு ரூமில் இருந்த பீகாரிக்கும், உ.பிக்காரனுக்கும் சண்டை. அது ஒரு சிறிய சண்டையாகத்தான் இருந்தது. என்னுடய ஓட்டை ஹிந்தியைக்கொண்டு ‘சமாதானம் செய்துவைக்கிறேன்’ என்று நான் களத்தில் இறங்கிய பின்புதான் அது பெரிய சண்டையாகி, கைகலப்பில் முடிந்தது. கைகலப்பாகும் என்று தெரிந்தவுடனேயே களண்டுவிட்டேன். அதுதானே உலக வழக்கம். அதைவிடுத்து மீண்டும் ‘சமாதானம் செய்கிறேன்’ என்று முருக்கிக்கொண்டு நின்றிருந்தால், இந்நேரம் சமாதியாகி இருப்பேன்.  முடிவில் உ.பிக்காரன் ரூமை காலிசெய்து போய்விட்டான். இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.

உ.பிக்காரன் காலிசெய்த கட்டிலுக்கு, விசிட் விசாவில் வேலைதேடி வந்த ஒரு மலையாளி கிடைத்தான். நைட் ரெண்டு மணியாகிவிட்டால், ‘’அம்மு மோலேய்....அவிடிருந்து இவிட கொண்டுவரணும், இங்கிருந்து அவட கொண்டோனும்....அம்மு மோலே, மனசிலாயோ’’ என தூக்கத்தில் பினாத்திக்கொண்டிருப்பான். புதிதாக கல்யாணமாகி இருந்ததால் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தோம். மேலும், ரெண்டு மணிக்கு எழுந்து ‘’என்ன நடக்கிறது?’’ என்பதை வேவு பார்ப்பது முடியாத காரியம். அதோடு, இவன் அமுக்கு அமுக்கி பேசுவதால் எங்களின் தூக்கத்திற்கு பெரிய அளவில் தொல்லையில்லை எனவே நாங்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் கனவில், அந்த நம்பர் நடிகை வந்த நேரம், ‘’அம்மு மோலே, மனசிலாயோ...’’ சப்தம் கேட்டு நம்பர் காணாமல் போய்விட்டாள். பெருங்கோபம் கொண்டு, போர்வையை தூக்கிவீசி, சேட்டனை தும்சம் செய்ய தூக்கத்திலிருந்து பொங்கி எழுந்தால், மலையாளி புத்தகத்தை வைத்துக்கொண்டு யாருக்கோ பாடம் நடத்திக்கொண்டிருந்தான். மூஞ்சில் டார்ச் லைட் வெளிச்சத்துடன், லேப்டாப் முன்பாக குத்தவைத்து உட்கார்ந்திருந்த நிலையைப் பார்த்தபின்பு, என்னிடம் கோபம் போய், பயம் கவ்விக்கொண்டது. மறுநாள் விசாரித்ததில், அமெரிக்காவில் இருக்கும் ஒரு மலையாளி பேமிலியின் 10ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு கணக்கு பாடம் எடுப்பதை பார்டைம் ஜாப்பாக செய்துகொண்டிருக்கின்றானாம்.

உலகத்தில் இதுபோன்ற வேலைகள் இருப்பது பற்றி அப்போதுதான் எனக்கு தெரியும். நம்மிடம் கணக்கு பயிலவந்தால், நாம் கணக்கு பண்ணிவிடுவோம் என்பது தெரிந்துதான் யாரும் பக்கத்தில் கூட அண்டுவதில்லை. இவனை விரட்டிவிட்டால், அடுத்து ஆள்பிடிப்பதற்கு நாம்தான் கஷ்டப்படவேண்டும் என்பதை அறிந்து அவனின், இரவு இரண்டு மணி இம்சையை பொருத்துக்கொண்டோம். பேஜ்சிலர்ஸ் ரூமில் எல்லாமே டைமிங்க் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. காலையில் பாத்ரூம் போவதற்கு என்னுடய நேரம் 6.30 டு 7.00 வரை. எனக்கு பின்பு, பீகாரி செல்வான். மலையாளிக்கு வேலை இல்லை என்பதால், 7.30ல் இருந்து அவனுக்குத்தான்.

நாளை தனக்கு இண்டர்வியு இருப்பதால், பீகாரியின் பாத்ரூம் டைமில் அவன் செல்வதற்கு அனுமதிகேட்டான். அவனும் ஒ.கே சொல்லிவிட்டு, என்னிடம் அரைமணி நேரத்திற்கு முன்பாக 6.00 மணிக்கு பாத்ரூம் போகச்சொன்னான். நானும் சம்மதித்தேன். பேசியதுபோல நான் 6.00 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பீகாரி பாத்ரூமில் இருந்து வருவதற்கு முன்பாகவே ரூமைவிட்டு கிளம்பிவிட்டேன். மாலை, ரூமிற்கு வந்தவுடன், மலையாளி தனக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும், தான் இன்னும் இரண்டு நாட்களில் சார்ஜா செல்வதால் ரூமை காலி செய்வதாகவும் சொன்னான்.

அதற்கு நான், ‘’ரூமை காலிசெய்யவேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே சொல்லவேண்டும், இப்படி திடீரென காலிசெய்தால், ஏழு நாளில் எப்படி நாங்கள் அடுத்த ஆளை தேடுவது, எனக்கு பிரச்சனையில்லை என்றாலும், பீகாரி சம்மதிக்கமாட்டான்’’ என்று கூறினேன். ‘’பீகாரியிடம் ஏற்கனெவே போனில் பேசிவிட்டேன், அவன் ஒ.கே என்று சொல்லிவிட்டான்’’ என்று மலையாளி கூற எனக்கு ஒரே ஆச்சர்யம். ‘பீகாரி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசராச்சே எப்படி சம்மதித்தான்?’ என்று குழப்பம்வேறு. எப்போதும் ரூமிற்கு சீக்கிரம் வரும் பீகாரி, அந்த மலையாளி ரூமை காலிசெய்வதுவரை, நைட் லேட்டாகவே வந்தான்.

வெள்ளிக்கிழமை, மலையாளி ரூமை காலி செய்யும்போது, பீகாரி ரூமில் இல்லை. ‘’பிரத்தியேகம் ஆ சேட்டனிடம் நன்னி பரையனும், மறக்கரது, பிரத்தியேகம் பரயனும்’’ என்று அவனுடய நன்றியை கண்டிப்பா பீகாரியிடம் சொல்லவேண்டும், கண்டிப்பாக என்று திரும்ப திரும்ப சொன்னான். எனக்கு மண்டை வெடித்திடும்போல் இருந்தது. பீகாரி ரூமில் வந்ததும், மலையாளி பரஞ்ச பிரத்தியேக நன்னியைச் சொல்லிவிட்டு, அதற்கான காரணத்தைக் கேட்டேன். அவனும் சொன்னான் . --இதுதான் ரொம்ப பயங்கரமான இடம், மனச தேத்திக்கங்க--

சம்பவநாள் அன்று காலை 7.0 மணிக்கு குளித்து ரூமில் டிரஸ் மாற்றிக்கொண்டிருந்தான் பீகாரி. அவனது இடதுபுறம் மலையாளி கட்டில். பீகாரி பாத்ரூமிலிருந்து வரும்வரை, அவன் தூங்கிக்கொண்டு இருந்தானாம். ‘’இண்டர்வியு என்று சொன்னான், இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறானே???, சரி, டிரஸ் மாற்றிவிட்டு எழுப்பலாம்’’ என்று பீகாரி எண்ணிக்கொண்டே, லுங்கியை லூஸ் செய்து, பல்லில் கடித்துக்கொண்டு ஜட்டியைப் போட முயன்றிருக்கிறான். அப்போது, மலையாளி மொபைலில் அலாரம் கொடூறமான ரிங்டோன் சவுண்ட்டில் அலற, பீகாரி உடலெல்லாம் நடுங்கி, பயத்தில் பல்லில் இருந்த லுங்கி கீழே விட்டுவிட்டான்.  லுங்கி கீழே போகவும், மலையாளி கண் முழிக்கவும் ♫♪ தந்தன, தந்தன, தந்தன,  ஆ ஆ ஆ ஆ ஆ.... ♪♫.

நாங்கூட மலையாளி இண்டர்வியு போய்த்தான் ஆபர்லெட்டர் வாங்கினதா நினைத்தேன். இப்பதான தெரியுது, ஆபர்லெட்டரை பார்த்த பின்னாடிதான் இண்டெர்வியூக்கே பயபுள்ள போய்யிருக்குன்னு. இதுக்குத்தானாடா, பீகாரிக்கு அந்த பிரத்தியேக நன்றி???. அந்த சம்பவத்திற்கு பின்பு, சங்கூச்சத்தினால் பீகாரி அவன் முன்னால் செல்வதில்லையாம். அவன் ரூமை காலி செய்தவுடன்தான் பீகாரிக்கு ஒரு ஆசுவாசம். ஆனாலும் இன்னொரு ஆளுக்கு எங்கே போவது?. இண்டெர்நெட்டில் விளம்பரம் கொடுத்தும், தெரிந்தவர்களிடம் கேட்டும் ஒருவரும் அமைவதாக இல்லை. ரூம் காண வருகின்றவர்கள் அனைவரும் நொட்ட காரணம் சொல்லி தவிர்த்தார்கள்.

‘கிச்சன் இருந்தால் வரலாம்’ என்று சிலபேர் சொன்னார்கள், ஆனால் கிச்சனிலும் கட்டில்போட்டு ஓனரும், அவர்மேல் அவர் நண்பரும் படுத்திருப்பார்கள். அய் மீன், ஓனர் கீழ் கட்டிலிலும், அவர் நண்பர் மேல் கட்டிலிலும் படுத்திருப்பார்கள். சில பேர் ‘வாஷிங் மெசின் இருந்தால் வரலாம்’ என்றார்கள். சிலர் பக்கத்தில் புது பில்டிங்க் கட்டும் சப்தம் கேட்டு வரமறுத்தார்கள். ஒரு நாள் ஆபிசில் இருக்கும் போது பீகாரி எனக்கு போன் செய்து, ரூமிற்கு ஒரு பாக்கிஸ்தானி கிடைத்துவிட்டான், ஒரு மாசத்துக்கு அவனை வைத்து சமாளிக்கலாம் பின்பு வேறு யாராவது இந்தியன் கிடைத்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினான். நானும் சரி என்று கூறினேன்.

‘’பாக்கிஸ்தானியா? ஒரு ஓவருக்கு ஏழு பால்னு சொல்லி சண்டைக்கு வருவானுங்களே? எப்படி ஒரு மாசம் சமாளிப்பது?’’ என்ற யோசனையில் ரூம் கதவைத் திறந்தால், ஆறு அடி கட்டிலில் பாக்கிஸ்தானியின் கால் நாலு அடிக்கு வெளியே கிடந்தது. படுத்துக்கிடக்கும் போதே ஷங்கரின் படம் போல பிரம்பாண்டமாக இருந்தான். எழுந்து ‘’அஸ்ஸலாமு அலைக்கும் யாசிர் பாய், கியா ஆலே...’’ என்று கைகொடுக்க வரும்போது, பாகுபலி படத்தின் சிலையை நிப்பாட்டிவைத்ததுபோல் இருந்தான். இவன் கேட்டால் ‘’ஓவருக்கு பத்து பால் என்று சொல்லிவிடவேண்டியதுதான்’’ என அப்போதே முடிவுசெய்துவிட்டேன்.

‘’ஹரே அல்லாஹ், நம்மல் என்ன பாவம் பண்ணான்? நம்மல், ரூமிற்கு உயர்ந்த உள்ளம் கொண்ட ஒருவனை கேட்டான்? ஆனால் நிம்மல் உயர்ந்த உருவத்தை கொடுத்திருக்கான்‘’ என அல்லாஹ்விடம் பேசிக்கொண்டிருந்தேன். சைடில் பாக்கிஸ்தானி அவனைப் பற்றி ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தான். அதைக்கேட்டு நானும் ‘’ஒரு ஓவருக்கு பத்து பால்தான் ஜி’’ என்றே தலையாட்டிக்கொண்டிருந்தேன். ரூமிற்கு வந்த முதல் நாளிலேயே அவனுக்கு ரூமைப் பற்றி தெரிந்துவிட்டது. அவனுக்கு ரூம் பிடிக்கவில்லை. எனக்கு ‘’அப்பாட’’ என்று இருந்தது.  

கிச்சன் இல்லை, சாப்பாட்டிற்கு 400 திர்ஹம்ஸ் செலவாகும். வாஷிங்க் மெசின் இல்லை, லாண்டரிக்கு 100 திர்ஹம்ஸ் செலவாகும், ரூமில் லாக்கர் இல்லை. கட்டில் மட்டும்தான் உள்ளது மெத்தை இல்லை..................என எப்போது பார்த்தாலும் ஒரே புலம்பல். நானும் எத்தனை முறைதான் ’ஒரு ஓவருக்கு பத்து பால்தான் ஜி’’ என்று சொல்வது. கோபத்தில் விரலை மடித்து கையை முருக்கி ஓங்கி ஒன்ற டன் வெயிட்டில் குத்துவிடவேண்டும் என்று தோன்றும். மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு எக்ஸ்பயரி ஆனது நினைவுக்கு வந்தவுடன், டு ஸ்டெப் பேக். ‘’நாற்காலியில் ஏறினால்தான், குத்து அவன் நெஞ்சில் விழும்’’ என்பதிலிருந்து அவன் உயரத்தையும், ‘’நாற்காலி இல்லை என்றால், குத்து எங்கு விழும்’’ என்பதை யோசித்து என்னுடய உயரத்தையும் தெரிந்துகொள்ளவும்.

---------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

புதன், நவம்பர் 04, 2015

முஹம்மது ரெட்டி.

‘’யு.ஏ.யி’’ல் ரொம்ப கஷ்டமான விஷயம் ஓட்டுனர் உரிமம் எடுப்பது. இதை, டிரைவிங்க் லைசன்ஸ் எடுப்பது என்று தமிழிலும் கூறலாம். ரொம்ப ஈஸியான விசயம் பிலிப்பைன்ஸ் பெண்ணை செட் பண்ணுவது. இதை, செட் பண்ணுவது என்றுதான் தமிழிலும் கூறவேண்டும். மேலும், ‘’உன் அழகுக்கும், அறிவுக்கும் இரண்டுமே ஈஸிதானே ‘’ என்று கூறி எரியுற நெருப்பில் எர்வாமேட்டினை ஊற்றவேண்டாம். துபாய், அபுதாபி ஒரே நாட்டில் இருந்தாலும், துபாயில் ஒரு சிஸ்டம், அபுதாபியில் ஒரு சிஸ்டம். நான் டிரைவிங்க் லைசென்ஸ் எடுப்பதைப் பற்றி சொல்கிறேன். டி.லைசன்ஸ் எடுத்தால் உங்க வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி உண்டாகும் என எங்க கேப்டன் அண்ணாத்துரை மருக்கா மருக்கா சொன்னதால், லைசன்ஸ் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

இந்தியா லைசன்ஸை வைத்து, அபுதாபி லைசென்ஸ் எடுப்பது கொஞ்சம் எளிது என்ற முன்னோர்களின் அறிவுரைப்படி, கஷ்டத்தில் கபடியாட விண்ணப்பித்தேன். இந்தியாவில் இருக்கும் போது பைக் லைசன்ஸ் எடுப்பதற்காகத்தான் டிரைவிங்க் ஸ்கூலுக்குச் சென்றேன். அங்கு, பைக் லைசன்ஸிற்கு 2,500 ரூபாய், கார் லைஸன்ஸிற்கு 2,000 ரூபாய் என்று சொன்னார்கள். மேலும், கார் லைசன்ஸ் எடுத்தால் பைக் லைசன்ஸ் ப்ரியாக எடுத்துக்கொடுக்கப்படும் என்ற ஆபரைப் பற்றி சொன்னதால், கார் லைசன்ஸ் எடுத்தேன். எனக்கு, அந்த டிரைவிங்க் ஸ்கூல் ஜீப்பில், டிரைவிங் படிக்கப் போவது, ஏனோ கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் வாத்தியக் கோஷ்டிகளுடன் சொப்பன சுந்தரி காரில் போவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் சிலருக்கோ சொப்பன சுந்தரியிடமே போகிற உணர்வு.

அந்த ‘’L’’ போர்டு வண்டியின் தனிச் சிறப்பு என்னவென்றால், ரோட்டோரமாக எந்த டீக்கடையைப் பார்த்தாலும் வண்டி ஆஃப்பாகிவிடும். ஒரு டீ, ஒரு வடை சாப்பிட்ட பின்புதான் வண்டி மறுபடியும் ஸ்டார்ட் ஆகும். டிரைவிங்க் படிக்க 2,000 ரூபாய், டீ, வடைக்கு 5,000 ரூபாய் என மொத்தம் 9,000 ரூபாய் செலவு. ரோடு டெஸ்ட்டின் போது, ஆர்.டி.ஓ ‘’அடுத்த புளியமரத்து பக்கத்துல நிறுத்து’’ என்று சொன்னார், ஆனால் நான் புளியமரத்திலேயே நிப்பாட்டினேன். இருந்தும் லைசன்ஸ் கிடைத்தது. (இப்போது 2,000 தையும், 5,000 தையும் கூட்டிப்பாருங்கள் 9,000 வரும்). லைசன்ஸை கையில் தரும்போது டிரைவிங்க் ஸ்கூல் ஓனர் என்னிடம் சொன்னதுதான், எனக்கு அபுதாபியில் லைசன்ஸ் அப்ளிகேசனில் சைன் பண்ணும்போது நியாபகம் வந்தது. ‘’உன்னோட நல்ல நேரம் உனக்கு லைசன்ஸ் கெடச்சிருச்சி, இனி ரோட்டுல போறவனுக்கு கெட்ட நேரம் தான்’’.

இங்கு, முதல் ஒரு வாரம் தியேரி கிளாஸ் நடக்கும். அதில், ‘’ரைட்டுல இண்டிகேட்டர் போட்டா, ரைட்டுல திரும்பனும், லெப்டில் இண்டிகேட்டர் போட்டா லெப்டில் திரும்பவேண்டும், ஸ்பீடா போகனும்னா ஆக்ஸிலேட்டரை மிதிக்கனும், வண்டியை நிருத்தவேண்டும் என்றால் பிரேக்கை மிதிக்கனும்...’’ இதை கேட்கும்போதே சொல்லிக்கொடுப்பவனை தூக்கிப்போட்டு மிதிக்கனும்னு தோணும். இதுக்கு ஒரு எக்ஸாம், அதில் பாஸானவுடன் நேராக ரோடு டெஸ்ட்தான். இந்திய லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு தியேரி கிளாஸ் டெஸ்ட், சிக்னல் டெஸ்ட், பார்க்கிங்க் டெஸ்ட், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் எல்லாம் முடித்து ரோடு டெஸ்ட் வருவதற்கு, ‘’வாலு’’ பட ரீலிஸ் மாதிரி நாலு வருசம் ஆகிடும்.

ரோடு டெஸ்டிற்கு முன்னாடி ‘’L’’ போர்டு வண்டியில் நன்றாக பயிற்சி எடுக்கவேண்டும். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 60 திர்ஹம்ஸ். எங்க கம்பெனியில் எல்லோரும் ரெட்டியின் ‘’L’’ போர்டு வண்டியில்தான் டிரைவிங்க் கற்றுக்கொண்டார்கள். ஓட்டினா ரெட்டி வண்டியத்தான் ஓட்டுவோம் என்று சூழுரைப்பதற்குக் காரணம் ரெட்டி இந்தியர் என்பதால் அல்ல, பாக்கிஸ்தானி இல்லை என்பதால். இங்கு அதிகமாக ‘’L’’ போர்டு வண்டிகள் பாக்கிஸ்தானிகளிடம்தான் இருக்கும். அவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லிக்கொடுப்பதுபோல ’’ஏக் காவ்மே ஏக் கிசான் ரஹ தாதா’’ என்று ஓட்டிக்காட்டவேண்டும். மாறாக ‘’....................ரகு தாத்தா’’ என்று ஓட்டிவிட்டால், சோலி சுத்தம். ஒரு எல்லைதாண்டிய பயங்கரவாதம் நடந்துவிடும். 60 திர்ஹம்ஸ் கொடுத்து அடியும் வாங்கிவிட்டு ‘’பாருடா சீமான்ட சொல்லி திட்டசொல்லுரேன்’’ என அழுதுகொண்டே வரவேண்டும்.

ஆனால் ரெட்டி அப்படியல்ல, கலகலப்பு பட அமிதாப் மாமா மாதிரி. அடிவாங்குரதுக்குன்னு அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருப்பாரு. வண்டில ஏறுவதற்கு முன்னாடி, வண்டிய வெளிப்பக்கமா சுத்தி காட்டி ‘’இந்த பம்பர் பப்படமாக்கினது உங்க நண்பர் Mr.வித்யாதர், பின் கதவு பொளந்துக்கிட்டு நிக்குதுல்ல அது Mr.எல்லப்பா செஞ்சது, etc., என நண்பர்கள் வச்சி செஞ்ச கதையை சொன்னார். இப்படி பல பேர், அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சி எங்கிட்ட ஒரு மீன்பாடி வண்டில அனுப்பி வச்சாங்க.

முதல் நாள், “ஊர் லைசன்ஸ் வச்சி அப்ளைபண்ணி இருக்கீங்க, ஊர்ல நல்லா வண்டி ஓட்டுவீங்களா?’’ என்று கேட்டார். புளியமரத்தை காரில் தள்ளின உண்மையைச் சொன்னால், எக்ஸ்ரா 10 திர்ஹம்ஸ் கேட்டுவிடுவாரோ? என்ற டரியலில், ‘’விஷால் ஊருவிட்டு ஊர் போய் ரவுடிகளை அடிக்கிறதுக்கு நான்தானே வண்டில கொண்டுபோய் விடுவேன்’’ என்று சொன்னேன். ஆனால் அந்த பொய் பத்து நிமிடத்திற்குகூட தாக்கு பிடிக்கவில்லை. ரோட்டில், அடுத்த லேனுக்கு மாற, லெப்ட் இண்டிக்கேட்டர் போடச் சொன்னார். இண்டிக்கேட்டர் பட்டன், ஸ்டீரிங்கின் இடதுபக்கம் இருக்கும், நானோ வலது பக்கத்து பட்டனை அழுத்த, முன் பக்க வைப்பர் கனஜரூராக வேலை பார்த்துக்கொண்டிருந்தது. ஜீலை மாத 50 டிகிரி வெயிலில் வைப்பர் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டும் அழகை அபுதாபியே ஆனந்த புன்னகையுடம் பார்த்துக்கொண்டிருந்தது.

ரெட்டி முறைப்பதில் இருந்தே வைப்பரை ஆப் செய்ய சொல்வதை புரிந்துகொண்டு, வேறுபட்டனை அழுத்தினேன். இம்முறை சரியாக பின்புற வைப்பர் வேலை செய்தது. என்னுடய செயலில் அவருடய பொருமை கொஞ்சம் செயல் இழந்து போயிருக்க கூடும். நிருத்தும்படி சொன்னார். நிருத்தச் சொன்னால், ரோட்டு ஓரமாக பார்க்கிங்க் இண்டிகேட்டர் போட்டு நிருத்தவேண்டும் என்பது எனக்கு அப்போது தெரியாது, மேலும் கற்றுக்கொடுக்கும் ஆசான் சொல்லும்போது என்ன செய்வது? ‘’குருவே சரணம்’’ என்று கூறி, நடு ரோட்டில் பிரேக் போட்டு, ஹாண்ட் பிரேக்கையும் இழுத்துவிட்டேன். பிரேக் போட்டு ஒரு செகண்ட் கூட ஆகவில்லை சுற்றியும் ‘’க்க்கீய்ய்ய், க்கீய்ய்ய்.............’’ சவுண்டுகள். நல்லவேளை பின்னாடி வந்த லாரிக்காரன் சுதாரித்துக்கொண்டு சைடில் திரும்பிவிட்டான், இல்லை என்றால், ‘’குருவே சரணம்’’, குருவுக்கே மரணம் ஆகியிருக்கும்.

புளியமரத்தான் என்பது நான் சொல்லாமலே அவருக்கு புரிந்துவிட்டது, கலா மாஸ்டர் மாதிரி ஹிந்தியில், கிழி, கிழி என்று திட்டி கிழித்துவிட்டார். அவர் திட்டியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் எனக்கு ‘’உதர் போ, இதர் வா....’’ என்ற லெவலில்தான் ஹிந்து மாலும்ஹே. கொல்டிகள் எந்த பாஷையில் திட்டினாலும் அவர்களையும் மறந்து ‘’தெங்கனா கொடுக்கா’’ என்ற தெலுங்கு கெட்டவார்த்தை வந்துவிடும், ஆனால் ரெட்டி திட்டும் போது அந்த வார்த்தை வரவில்லை, அதிலிருந்தே அவர் கெட்டவார்த்தையில் திட்டவில்லை என்பது ரொம்ப ஆருதலாக இருந்தது. ரெட்டிக்குப் பதிலாக பாக்கிஸ்தானியிடம் மாட்டியிருந்தால் என் நிலை?. ஊரில் ‘’இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்’’ என பாத்திஹா ஓதி கறி, சோறு திண்டுகொண்டிருந்திருப்பார்கள்.

ஆளே இல்லாத ரோட்டில் கார் ஓட்டச் சொல்லிக்கொடுக்கும் போதே, ஒரு பாட்டில் தண்ணீரை ஒன்றாக குடிப்பார். ‘’U’’ டெர்ன், ரவுண்டா போர்ட் பற்றிய பயிற்சியின் போது, ஐந்து கேக், ரெண்டு பாட்டில் நிரைய தண்ணீர், ஒரு ஜீஸ் என மினி மெஸ்ஸையே காருக்குள் கொண்டுவருவார். இப்படித்தான் ஒரு முறை கத்தி கத்தி தொண்டை வரண்டு, ஆள் இல்லாத நேர் மெயின் ரோட்டில் வந்தவுடன் ‘’நேர பார்த்து வண்டி ஓட்டு’’ என்று சொல்லிவிட்டு, வாய் வைக்காமல் அன்னாந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் சர்வீஸ் ரோட்டில் ஒருவன் கொடூற வேகத்தில் மெயின் ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். சர்வீஸ் ரோடில் வருகிறவன்தான் நின்று வரவேண்டும் என்று மூளைக்குத் தெரிந்தும், மோதிவிட்டால்? நிலைமை மோசம் (அதனுடன் மோசனும்) போய்விடும் என்று மனசு சொல்லியது. நாமதான் பாட்ஷா மாதிரி மனச கேட்டு வேலை செய்றவங்களாச்சே, போட்டேன் பாருங்க பிரேக். க்க்கிகிகிகிரீரீரீரீச்ச்ச் என்ற சபத்துடன் வண்டி நின்றது. அப்பாட...!!!! வண்டி தப்பிச்சது என்று திரும்பினால், தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த குருஜி, குளித்து முடித்திருந்தார். அப்புறம் என்ன? அடுத்த அரைமணி நேரம் ‘’ஹர ஹர மகா தேவிக்கிய்....’’

ரொம்ப தங்கமான மனுசன் நம்ம ரெட்டி. ‘’ரெட்டிகாருன்னு கேள்விபட்டிருக்கேன், ஆனா ரெட்டியோட கார இப்பத்தான் பாக்குரேன்’’ என்று ஒரு ஜோக் சொன்னேன். இத தமிழில் படித்துவிட்டு ‘’இதெல்லாம் ஒரு ஜோக்காடா?’’ என தலையில் அடிக்கும் நீங்கள், ஹிந்தியில் நான் சொன்னதைக் கேட்டு  ரெட்டி சிரிச்ச சிரிப்பை பார்த்திருந்தால், கூட ஒரு பத்து கிளாஸ் போகலாம் என்பீர்கள். ஏதாவது ஒரு நாள் அதிசயமாக கொஞ்சம் வண்டிய அவர் சொல்லிக் கொடுத்தமாதிரி நல்லா ஓட்டுவேன், அன்னைக்கு நல்ல மூடில் பழைய விசயங்களை எல்லாம் பேசுவார். அப்போதுதான் அவரின் முழுப்பெயர் முஹம்மது ரெட்டி என்பதை தெரிந்துகொண்டேன். இஸ்லாத்தில் ஷியா, சுன்னா பஞ்சாயத்தே பெரிய பஞ்சாயத்தாக இருக்கையில், இதுல ரெட்டி வேறயா? என்று குழப்பத்தில் இருப்பதை ரெட்டி, வண்டி வடக்கும் தெற்குமாக நிலையில்லாமல் போவதின் மூலம் உணர்ந்து அந்த கப்பி பிளாஷ்பேக்கை சொன்னார். அவருடைய பழைய முதலாளியிடம் சண்டை போட்டதால், அந்த முதலாளி இவருடய பாஸ்போர்டை கிழித்துவிட்டானாம், பின்னர் தலைமறைவாகி, புது பாஸ்போர்ட் எடுக்க உருவாக்கிய பெயர்தான் முஹம்மது ரெட்டி.

எவ்வளவு மோசமா வண்டி ஓட்டினாலும், ‘’உன்னால முடியும், உன் பிரண்ட் வித்யாதருக்கு நீ எவ்வளவோ மேல்’’, ‘’கணேஷோட கம்பர் பண்ணினா நீ தான் பெஸ்ட்’’ என உத்வேகம் கொடுப்பார். அப்புறமாகத்தான் தெரிஞ்சுது, ‘’உன்னோட கம்பேர் பண்ணுறதுக்குகூட யாஸிர் லாயிக்கில்ல’’ என்று கணேஷ்யிடம் சொன்னது. கிட்டத்தட்ட அவரிடம் 70 கிளாஸ் பயிற்சி எடுத்து, ரோடு டெஸ்ட்க்கு போகும் போது, அவருக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது ‘’நான் பெயிலாயகிவிடுவேன்’’ என்று. ஆனா, விதி வலியது நான் பாஸாகிவிட்டேன். புளியமரத்துல நிப்பாட்டி லைசன்ஸ் வாங்க தெரிஞ்சவனுக்கு, கேவலம், லைட் போலில் வண்டிய முட்டுக்கொடுத்து நிப்பாட்டி லைசன்ஸ் வாங்க தெரியாதா?. தென்காசியில் பரமசிவன் என்றால் அபுதாபியில் அகமது. யார்கிட்ட?


----------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

ஞாயிறு, அக்டோபர் 18, 2015

ஆணாதிக்க ச(ண்)மூகம்.

இஸ்லாமிய சொற்பொழிவுகளை பார்ப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ அதிக ஆர்வம் ஏற்படுவதில்லை. ‘’சொற்பொழிவு’’ என்ற பெயரில் அத்தனையும் இரைச்சல். அவர்களின் அகராதியில் அது உணர்ச்சிவசப்பட்டு பேசுதலாம். வெள்ளிக்கிழமை தொழுகையில்கூட இமாம்களின் உரை அதே பாணியில் இருப்பதால், குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுச்செல்லும் நிலை. சுறா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஹைபிச்சில் பாடும்போது வடிவேலுவின் ரியாக்சன் போலவே என்னுடய ரியாக்சனும் இருக்கும்.

எப்போதும் போல எதார்த்தமாக பேசுவதில் அவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்மென்றே தெரியவில்லை, மைக் முன்பாக சென்றுவிட்டால் பாக்கிஸ்தான் தீவிரவாதியிடம் விஜயகாந்த் பேசுவது போல ஒரே காட்டுக்கத்தல். இதற்கு இடையில் மைக்கிலிருந்து ‘’குய்ய்ய்ய்.......’’ன்னு சவுண்ட் வேற. வீட்டிற்கு வந்தபின்பும் அந்த குய்ய்ய்ய்ங்க் சவுண்ட் நிற்பதில்லை. நான் உங்களை விஜயகாந்த் மாதிரி பேசவேண்டாம் என்று சொல்லவில்லை, ஏன் வல்லரசு விஜயகாந்த் மாதிரி பேசுறீங்க? வானத்தைப் போல பெரிய விஜயகாந்த் மாதிரி அமைதியா பேசுங்கன்னுதான் கேட்கிறேன்.

இதைப் பற்றி, வீட்டுக் கக்கூஸில் தண்ணீர் வரவில்லையென்றால்க் கூட, காவல்துறை கமிஷனர் ஆபிஸ் முற்றுகை போராட்டம் நடத்தும் ஒரு இயக்கத்தைச் சார்ந்த ஒருவனிடம் ‘’ஏன் பாய், இப்படி கத்தி பேசுறீங்க? கொஞ்சம் மெதுவா பேசுனா நீங்க சொல்லவரும் கருத்தும் விளங்கும், காதுக்கும் கொஞ்சம் நல்லா இருக்குமே’’ என்று கேட்டேன். அவனோ ‘’நபி அவர்கள் மக்களிடம் உரை நிகழ்த்தும் போது இப்படித்தான் சத்தமாகத்தான் உரை நிகழ்த்துவார், இது நபி வழி’’ என்று அறிவாளியாய் பதில் சொன்னான். அவனுக்கு கத்தி பேசுறதுக்கும் சப்தமா பேசுறதுக்குமான வித்தியாசமே விளங்கவில்லை. நபி காலத்தில் மைக், ஸ்பீக்கர் போன்ற சாதனங்கள் இல்லை, அதனால் அவர் ஒரு குன்றின் மீது ஏறி, தன்னுடய உரையை சப்தமாகத்தான் மக்களிடம் சொல்லியாகவேண்டும். இந்த குறைந்தபட்ச அறிவுகூட அந்த கொள்கை குன்றுக்கு இல்லை.

மேலும் ஏதாவது சொன்னாலோ அல்லது கேட்டாலோ, ‘’பாய், ‘பூ’வ ‘பூ’வுன்னும் சொல்லலாம், ‘புய்ப்பம்’ன்னும் சொல்லலாம், நீங்க சொல்லுறமாதிரியும் சொல்லலாம்’’ என்றே பதில் வருகின்றது. டாக்டர் ஹபிபுல்லா அவர்களின் ‘’மானுட வசந்தம்’ நிகழ்ச்சி பார்த்தாவது இவர்கள் திருந்தவேண்டும். பி.ஜெய்னுலாபிதின் செயல்பாடுகளின் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவரின் எதார்த்தமான பேச்சு எனக்கு பிடிக்கும். பி.ஜெ தவிர்த்து அவரின் விழுதுகள் அனைவருமே வெண்ணிடை ஆடை மூர்த்திகள்தான்.

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பேஸ்புக்கில், கிட்டத்தட்ட எல்லா பாய்களும் ஷேர் பண்ணிய வீடியோ ஒன்றில் ஒரு இமாம் எதையோ கூறிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். அந்த இமாம் ஒரு இளைஞர், சுமார் 30 வயதுதான் இருக்கும். தற்போது இவருக்குத்தான் கொஞ்சம் மார்க்கெட் அதிகம்போல, அதிகமாக இவருடய உரைகள்தான் பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவருடய பயான்கள் (உரைகள்) அனைத்தும் ‘’மெட்டி ஒலி’’ ரேஞ்சில் கண்ணீரும், கம்பளையுமாகவே இருக்கும்.

அந்த வீடியோவை பேஸ்புக்கில் முதலில் காணும் போது, அவருக்குத்தான் ஏதோ கஷ்டம்போல என்று எண்ணினேன். ஆனால், விஷயம் என்னவென்றால், விஜய் டி.வி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு முஸ்லிம் பெண் தனக்கு நடிகர் சூர்யாவைப் பிடிக்கும் என்றும், தன் தங்கைக்கு சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அந்த தங்கை, தனக்கு சிவகார்த்திகேயனை ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும், அவர்மாதிரித்தான் மாப்பிள்ளை வேண்டும் என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டதாகவும் கூறுகிறார். இவ்வளவுதான் மேட்டர். புறாவுக்கு போரா? பெரும் அக்கப்போராக அல்லவா உள்ளது என்பதைப்போல இதுக்கு ஒரு பஞ்ஜாயத்து.

‘’நம் இஸ்லாமிய சமூகம் எங்கே செல்கிறது?, பெண்கள் சீரழிந்துவிட்டார்கள், பெண்களுக்கு மார்க்கத்தின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது, கண்ணியத்திற்க்கு கூட ஸ்பெல்லிங்க் தெரியவில்லை, நம் சமூகம் எங்கே செல்கிறது, நம் சமூகத்துப் பெண்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள்......’’ என கையை நீட்டி நீட்டி பேசிக்கொண்டிருந்தார். அவர் கை நீட்டிய திசையில் நானும் ‘எங்கே செல்கிறது? எதை நோக்கி செல்கிறது?’  என்று எட்டிப் பார்த்தேன் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை.

குரான், ஆண்களையும் பெண்களையும் சமமாகவே கருதுகின்றது, ஆனால் இந்த இமாம்களோ, அறிவுரைகளை பெண்களுக்கு மட்டுமே கூறுகின்றார்கள். கண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு, குரானில் கூறும் கண்ணியம் பற்றி ஏன்  இந்த இமாம்கள் அதிகம் பேசுவதில்லை. ஆடைக்கட்டுப்பாடு, விபச்சாரம் என எல்லா விதிகளும் ஆண்களுக்கும் உண்டு. திருமணத்தில் ஆண்களுக்கு இருக்கும் உரிமை, பெண்களுக்கும் இருக்கின்றது. பெண்கள், அவர்களுக்கு பொருத்தமான ஆணை / விரும்பும் ஆணை மணக்கவேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது.

தனக்கு விருப்பமில்லாத ஒருவரை தன்னுடய தந்தை திருமணம் செய்துவைத்துவிட்டார் என்று நபிகளிடம் முறையிட்ட பெண்ணின் திருமண ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் கூறிய ஹதீஸ் (வரலாறு) தெரியாதா?. ‘கணவர்களுக்கு பெண்கள் மீது உரிமை இருப்பது போல பெண்களுக்கு அவர்களின் மீதும் உரிமை உண்டு (குரான் 2:228)’ என்பதை படிக்கவில்லையா?. திரும்ப, திரும்ப பெண்களின் ஒழுக்கம், கற்பு, கண்ணியம் பற்றிமட்டும்  பேசுவதாலேயே இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது என்ற தோற்றம் உண்டாகிறது.  

அந்த பெண் நடிகர் சூர்யாவோ, சிவகார்த்திகேயனோ தனக்கு கணவனாக வரவேண்டும் என்று கூறவில்லை, சூர்யா மாதிரி ஹேண்ட்சம்மாக, சி.கார்த்திகேயன் மாதிரி ஹீயுமரான, யாஸிர் மாதிரி ஸ்மார்ட்டான (ஒரு விளம்பரம்....) ஒரு கணவன் வேண்டும் என்றுதான் கேட்கிறாள். இதில் எந்த இடத்தில் அவள் இஸ்லாத்திற்கு மாறாக நடந்துகொண்டாள் என்பது புரியவில்லை.  அந்த பெண்களுக்கு எதிராக, அந்த இமாமின் சொற்பொழிவு வீடியோவை பேஸ்புக்கில் ஷேர் செய்த அத்தனை ஆண்களும் ‘அனுஷ்கா, ஹன்சிகா, நயந்தாரா.....’ மாதிரி பெண்தான் வேண்டும் என்று வீட்டில் மல்லுக்கு நின்றவர்கள்தான்.

சுருட்ட முடி, அடர்ந்த கண் இமை, சராசரி அளவை விட கொஞ்சம் பெரிய கண் (பூனைக் கண் என்றால் கூடுதல் நலம்). எடுப்பான மூக்கு, வட்டமான முகம், என்னை விட இரண்டு இஞ்ச் கம்மியான உயரம் என்று பெண்பார்க்கும் போது என்னுடய எதிர்பார்ப்பைச் சொன்னேன். அப்படி எல்லா தகுதியுமுள்ள பெண்கள் அனைவரும் ‘எடுத்து முடியுற அளவுக்கு முடி இல்லையென்றாலும் ஏத்தி சீவுற அளவுக்காவது மாப்பிள்ளைக்கு முடி இருக்கனும்’ என்று சொல்லி அசிங்கப்படுத்தியபோதுதான் தக்காளிச் சட்டினிக்கும், ரத்தத்திற்க்குமான வித்தியாசமே எனக்கு புரிந்தது.

--------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், அக்டோபர் 06, 2015

ஹிந்தி சிக்காவ்.

என்னோட சேர்த்து ரூமில் மொத்தம் மூன்று பேர். ஒருவன் உத்திர பிரதேஷ், மற்றொருவன் பீகார். அது ஏன் என்று தெரியவில்லை, எல்லா பீகாரிகளும் தங்களை பீகாரி என்று சொல்லிக்கொள்வதற்கு விருப்பப்படுவதில்லை. நான் ரூமில் சேர்ந்த புதிதில் அந்த பீகாரி தன்னை, மும்பை என்றே அறிமுகப்படுத்திக்கொண்டான். உண்மையை எத்தனை நாள்த்தான் மறைக்கமுடியும். நாங்கள் இருப்பது மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு பிளாட், அதை ஒரு மலையாளி மொத்தமாக வாடகைக்கு எடுத்து, பேச்சிலர்களுக்கு கட்டிலுக்கு இவ்வளவு என்று வாடகைக்கு விட்டுக்கொண்டிருக்கின்றார். கிச்சனிலும் இரண்டு கட்டிலைப் போட்டு அதிலும் வருமானம் செய்துகொண்டிருந்ததால், அந்த பிளாட்டில் வசிப்பவர்களுக்கு சாப்பாடு ஹோட்டலில்தான்.

எங்களுடய ரூமில் பால்கனி இருப்பதால், அந்த இரண்டு ஹிந்திவாலாக்களும் அங்கு கரண்ட் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுவார்கள். இருவரும் (அவர்களும்) முஸ்லீம்கள் என்றாலும் மெஸ்ஸில் எப்போதும் வெஜ்டேரியனாகவே இருக்கும். கேட்கும்போதெல்லாம், உருளைக்கிழங்கு சப்ஜி, வெஜிடபுள் குருமா, பீன்ஸ் கிரேவி, பன்னீர் மசாலா, மட்டர் புலாவ், தால் பாலக்..... என வெஜ் அயிட்டங்களின் பெயர்தான் வருமேயொழிய, நான்வெஜ் அயிட்டங்களை கேள்விப்படுவது ரொம்ப அரிது. ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை பிரியாணி செய்வார்கள். செலவைக் குறைப்பதற்க்காக என்று சொல்லமுடியாது, ஏனென்றால் இங்கு வெஜ்க்கும் நான்வெஜ்க்கும் பெரிய விலை வித்தியாசம் இல்லை.

ஒரு நாள் நான் கேட்டேவிட்டேன் ‘’முஸ்லீமாக இருந்துகொண்டு எப்படி வெஜ்ஜிடேரியனா சாப்பிடுறீங்க? எதுவும் கொலஸ்ட்ரால் பிரட்சனையா?’’. அதற்கு பீகாரி ‘’இத நீ முஸ்லீம், ஹிந்து என்று பார்க்கக்கூடாது, வட இந்தியா, தென் இந்தியா என்ற கோணத்தில் பார்க்கவேண்டும், பொதுவாக வட இந்தியாவில் யாரும் அதிகமாக நான்வெஜ் சாப்பிடுவதில்லை, ஆனால் உங்க ஏரியவிலோ வாரத்துக்கு எட்டு நாள் கறியாத்தானடா திண்ணுறீங்க’’ என்று கழுவி ஊற்றினான். தமிழ்நாட்டுக்காரனை கொஞ்சம் கருணை அடிப்படையில் விட்டுவிட்டாலும், ஹைதராபாத்காரர்களை இந்த விசயத்தில் காரித் துப்பிக்கொண்டிருந்தான். ஓணானை எடுத்து வேட்டியில் விடுவதற்குப் பதில் ஜட்டிக்குள்ளேயே விட்டதுபோல் ஆகிவிட்டது.

பீகாரியும் நானும் அதிகமாக விவாதிப்போம், அவர் ஹிந்தியில் கேள்விகேட்பார் நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவேன். எப்போதாவது ஹிந்தியிலும் பேசிக்கொள்வோம். அரசியல், கம்யூனிசம், மதம், பெண்கள் இந்த தலைப்புகளில்தான் விவாதம் அதிகமாக இருக்கும். அரசியல், கம்யூனிசம், மதம் சம்பந்தமான விவாதங்களில் உ.பிக்காரன் பக்கத்திலேயே வருவதில்லை. பெண்களைப் பற்றி பேசும்போதும், மசாஜ் செண்டர்களைப் பற்றி பேசும்போது மட்டும், அவன் அணியில் உறுப்பினராகிக்கொள்வான். பீகாரி, பக்கா ஆன்மீகவாதி, ஐந்து வேளை தொழுகை, குரான் ஓதுவது, நன்மைக்காக சில நோன்புகள் நோற்பது என்று அனைத்தையும் கடைபிடிப்பவன். ஒரே ஒரு பெரிய குறை, இஸ்லாத்தைப் பற்றி அரைகுறை அறிவுடன், நான் சொல்லுறதுதான் இஸ்லாம் என்று கொல்லுவான். உ.பிக்காரனைப் பற்றி அதிகம் கூற ஒன்றுமில்லை ‘’கையப்புடுச்சி இழுத்தியா? என்ன கைய புடிச்சி இழுத்தியா?’’ ரகம்.

ஒருநாள் விவாதம் ஹிந்தி மொழிபற்றியதாக இருந்தது. அதைப்பற்றி ஹிந்தியில் அவர்கள் இருவருக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லா மாநிலங்களிலும் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டும்தான் முரண்டுபிடிப்பதாக அவர்களின் பேச்சு சென்றது. அதில் என்னுடய அபிப்பிராயத்தை அவர்கள் கேட்கவில்லை, அதில் நானும் தலையிட விருப்பமில்லை. ஏனென்றால் தமிழனுக்கே ஹிந்தி எதிர்ப்பிற்கும், ஹிந்தி திணிப்பிற்கும் இன்னும் வித்தியாசம் விளங்கவில்லை, இதில் ஹிந்திக்காரனிடம் எதை விளக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்தேன். ஒரு கட்டத்தில், நான் சும்மா இருந்ததால் அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற போக்கில் பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு மேல் சும்மா இருந்தால் ஆகாது, பொங்கி பொங்கல் வைக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.

முதலில், ‘’தமிழ்நாட்டில் ஹிந்தி படிப்பதற்கு எங்கும் தடையில்லை, கிட்டத்தட்ட எல்லா மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் ஹிந்தி விருப்ப பாடமாக உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருப்பின் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தடையுமில்லை’’ என்பதை விளக்கினேன். பின்பு ‘’தமிழ்நாட்டு போராட்டம்/எதிர்ப்பு என்பது ஹிந்தியை முதல் மொழியாக திணித்து தமிழை இரண்டாம்தர மொழியாக மாற்றும் மத்திய அரசின் கொள்கைக்குத்தான்’’ என்பதையும் விளக்கினேன் (இதை தமிழில் தமிழனுக்கு சொன்னாலே புரியாது, பின்பு எப்படி? ஆங்கிலத்தில் ஹிந்திக்கார விளக்கெண்ணெய்க்கு விளங்கப்போகிறது?). ‘’அதிலென்ன தப்பு?’’ என்று பீகாரி கேட்டான்.

‘’அத்தையை அம்மான்னு கூப்பிடுறது உங்களுக்கு வேணும்னா சரி என்று தோன்றலாம், ஆனா தமிழ்நாட்டுக்காரனுக்கு யாரை அம்மான்னு கூப்பிடனும்?, யாரை அத்தைன்னு கூப்பிடனும்னு? தெரியும்’’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன் (நல்லவேளை அவனுக்கு அ.தி.மு.க்காரனின் ‘’அம்மா’’ பற்றி தெரிந்திருக்கவில்லை). நான் இந்த விவாதத்தை ‘’புலி’’ பட ஆக்சன் காட்சிகள் போல் பேண்டசியாகத்தான் கொண்டுசெல்ல முயன்றேன், ஆனால் அது ‘’பாகுபலி’’ போர்க்காட்சிகள் போல் மாறிப்போனது. ‘’இந்தியர்கள் அனைவரும் ஒரே மொழியை கொண்டிருந்தால் நாம் முன்னேறலாம்’’ என்பது உ.பிக்காரன் வாதம்.

‘’பாக்கிஸ்தானில் அனைவருக்கும் உருது மொழிதான், அவர்கள் எந்த விசயத்தில் நம்மைவிட மேலோங்கி இருக்கிறார்கள்?, ஒரே மொழியைக் கொண்ட பல நாடுகள் பஞ்சத்தில் இருக்கத்தான் செய்கிறது? அறிவுக்கும் வளர்ச்சிக்கும்தான் தொடர்பேயொழிய, மொழிக்கும் வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.’’ என்று நான் வாதிட்டாலும், ஒரே மொழியின் கீழ் இந்தியர்கள் வருவது நல்லது என்றே இருவரின் வாதம் இருந்தது.

‘’இந்தியர் அனைவருக்கும் ஒரே மொழி என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், தமிழர்கள் குறுக்கே நிற்கவில்லை. ஆகையால் அனைத்து இந்தியர்களும் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவை தமிழால் இணைப்போம்’’ என்று கூறியவுடன் ‘’நாங்க ஏன் தமிழ் கற்றுக்கொள்ளவேண்டும்? நீங்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் இந்தியாவில் 80% பேருக்கு ஹிந்தி தெரியும்’’ என்று பதறிப்போய் பதிலுரைத்தான் பீகாரி.

‘’என்னோட மொழிய கத்துக்கமுடியாது சொல்லுற உன்னோட ஹிந்திய மட்டும் நான் ஏன் கத்துக்கனும்?, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், பொதுமொழியாக சைனிஷ் கொண்டுவா, நீயும் படி, நானும் படிக்கிறேன், ஆனாலும் அது என் தாய்மொழிக்க்கு அடித்தபடியாகத்தான் இருக்கும்’’ என்று என்னுடய வாதம் நீண்டுகொண்டே சென்றது.

‘’அப்படியென்றால், உன்னைப் பொருத்தவரை தாய் மொழிதான் முக்கியம், மற்றவையெல்லாம் அதற்க்கு அப்புறம்தான் என்கிறாயா? அப்படி என்றால் குரான் அருளப்பெற்ற அரபி மொழி சிறந்ததா? தமிழ் மொழி சிறந்ததா?’’ என்று கேள்விகேட்டான் பீகாரி. ‘’கண்டிப்பாக குரான் அருளப்பட்ட மொழி என்பதால் அரபி மொழிக்கு தனிச் சிறப்பு இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக அது என் தாய் மொழி தமிழுக்கு அடுத்துத்தான்’’ என்றேன்.

‘’நீ ஒரு காஃபிர், இறை மறுப்பாளன், முஸ்லீமே அல்ல, முனாபிக், அல்லாஹ்வால் அருளப்பெற்ற குரான் மொழி அரபியை விட எப்படி மற்ற மொழி சிறந்தது?’’ என்று கூறி என்னிடம் கோபம்கொண்டான். ‘’முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்ததால் அவருக்கு இறைவைன் குரானை அவரது தாய் மொழி அரபியில் அருளினான், இதே அவர் மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் ரஷ்யனில் குரான் வந்திருக்கும் அவ்வளவுதான். மேலும் குரானில் எந்த இடத்திலும் அரபி மொழிதான் சிறந்தது என்று இல்லை. முஹம்மது நபியின் இறுதிப் பேருரையில் கூட ‘’இஸ்லாத்தில், அரபிமொழி பேசுகின்ற எந்த ஒருவரும், அரபிமொழி பேசாத மற்றவருக்கு உயர்ந்தனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை’’ என்றே கூறினார். அரபியோ, அரபியரோ மற்றவரை விடச் சிறந்தவர் என்றால் முஹம்மது நபி ஏன் அவ்வாறு கூறவேண்டும்?, ஆகையால் நபி கூறாத ஒன்றை கூறுவதால், நீ தான் முனாபிக், நீ தான் காபிர்......’’ என்று பதிலுக்கு நானும் கோபம்கொண்டேன்.

ஆனாலும் அவன் கேட்பதாக இல்லை, கடைசிவரை ‘’ஹிந்தி சீக்கிரம் சிக்காவ், மெரினா பீச்சில் உக்கார்ந்து பானி பூரி விக்காவ்’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.


-----------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.