புதன், பிப்ரவரி 08, 2017

செண்டிமெண்டல் இடியட்ஸ்.

பணநீக்க விவாத நிகழ்ச்சியில் ‘’பூக்காரி’’, ‘’மீன்காரி’’ என்று ஒருத்தர் பேசியதற்கு, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் ‘’பூக்காரம்மா’’, ‘’மீன்காரம்மா’’ என ஏன் கூப்பிடக்கூடாது? என கோபப்பட்டார். அது சமூக வலையதளங்களில் ரொம்ப பிரபலமான வீடியோவாகி பலரால் பகிரப்பட்டது. அப்படி பகிர்ந்தவர்கள் எல்லாம், ‘’பூ விக்கிரவங்க, மீன் விக்கிறவங்க என்ன கொறச்சலா?’’ என்று சோசியலிசம் பேசினார்கள். அதே சேகுவேராக்களும், காஸ்ட்ரோக்களும்தான் இன்று சசிகலாவை ‘’வேலக்காரி’’ எனவும் ‘’ஆயா’’ எனவும் அர்சணை செய்துகொண்டிருக்கிறார்கள்.
சோசியல் மீடியாவில் இருக்கும் அதிகமானவர்களுக்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் இருப்பதில்லை. லைக், ஷேர் இதைப் பொறுத்துத்தான் அவர்களின் கொள்கை, கோட்பாடுகள் எல்லாம்.  காங்கிரஸ்காரன் மோடியைப் பார்த்து ‘’டீ விற்றவன் எல்லாம் பிரதமரா?’’ என்று கேட்கும் போது வந்த கோவம், தி.மு.ககாரன் ‘’வேலைக்காரி முதல்வராவதா?’’ என்று கேட்கும் போது ஏன் வரவில்லை?. ஏன்னா நம்ம டிசைன் அப்படி. சசிகலா மீது ஆயிரம் விமர்சனங்கள், லட்சம் புகார்கள் இருக்கலாம் ‘’வேலைக்காரி’’ என்றால் அவ்வளவு இழக்காரமா என்ன?.
‘’சசிகலாவிற்கு நாங்கள் ஓட்டுப்போடவில்லை, அதனால் அவரை எங்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது?’’ என்று சட்டமன்ற தேர்தலில் ஓட்டே போடாதவர்கள் வளைகுடாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பொரும்புகிறார்கள். நான் கேட்கிறேன், முதன்முறையாக ஜெயலலிதா பன்னீர் செல்வத்தை முதல்வராக அமர்த்திய போது, நீங்கள் எல்லோரும் பன்னீர் செல்வம் முதல்வராக வேண்டும் என்றா ஓட்டு போட்டீர்கள்?. அன்னைக்கு பொங்கியிருந்தால் பொங்களாகி இருப்பீர்கள்.
சசிகலா  முதல்வராவதை எதிர்ப்பது எல்லாம் ஓகே, ஆனால் பன்னீர் செல்வத்தை எல்லாம் எப்படி / எந்த அடிப்படையில் ஆதரிக்கின்றீர்கள்? என்றே புரியவில்லை. ஒருவன் கண்ணீரோடு, கொஞ்சம் சோகமா நின்று பேட்டி கொடுத்தால் அவன் நல்லவன் என்பது சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்பது மாதிரியான முட்டாள்தனம்.  அடிமையா இருந்தவர்கள் எப்படி இன்னொரு அடிமையின் கீழ் இருப்பார்கள்?. ஓபிஎஸ், ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்றவர் என்றால் எந்த வகையில்? நிர்வாகத்தில் சிறந்தவர் என்றா? படித்த புத்திசாலியானவர் என்றா?. இல்லையே. ஜெயலலிதாவிற்கு சாவி கொடுத்தால் பேசுகிறமாதிரியான ஒரு பொம்மை தேவைப்பட்டது அந்த பொம்மைதான் பன்னீர் செல்வம். ஜெ உத்தரவு இல்லாமல் இவர் ஆட்சியில் இருக்கும் போது செய்த ஒரு நல்ல காரியம் சொல்லுங்கள் பார்ப்போம்?.
ஓபிஎஸ் விசுவாசமான ஆள் என்கிறார்கள், இருக்கலாம். அந்த விசுவாசத்தைத்தான், போன முறை 7 நாட்கள் வீட்டுச் சிறையில் வைத்து ஜெயலலிதா சோதனை செய்தார்.  விசுவாசத்தின் அடிப்படையில் பார்த்தால் பன்னீரை விட சசிகலாதான் உயர்ந்தவர். ஜெயலலிதா, வா என்றவுடன் கட்டின புடவையோடு மட்டுமல்ல,  கட்டுன புருசனையே விட்டுவிட்டு போனவர். இப்போது இருக்கிற பல எம்.எல்.ஏக்களை ஜெயலலிதாதான் தேர்வு செய்தார் என்று நீங்கள் நம்பினால் சத்தியமாக உங்களுக்கு, அ.தி.மு.க பற்றியும் தெரியவில்லை, மன்னார் குடி பற்றியும் தெரியவில்லை. 
‘’ஜெ இறந்த போது யாரும் அழவில்லை’’ என்று கூப்பாடு போடுபவர்கள், ஜெக்காக அழுத்தில் மேட்டூர் டாமே நிறைந்துவிட்டதா என்ன?.  டீலா நோ டீலா என்ற கேமில் இரண்டு மாதத்தில் டீல் படியாததால் வெளியே வந்தவர்கள். அவ்வளவுதான். அதற்காக அவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்றால் எப்படி?. ‘’எனக்கு மரியாதை தரவில்லை’’ ‘’என்னை மதிக்கவில்லை’’ என பல அமைச்சர்களின் பெயரைச் சொல்லும் பன்னீர், மதித்தவர்களின் சில பெயரையாவது சொல்லியிருக்கலாம் அல்லவா? ஏன் சொல்லவில்லை? ஏனென்றால் ஒரு பய மதிக்கவில்லை என்று அர்த்தம்.
ஜெ இறந்து ஒருவாரத்திலேயே ‘’கட்சியையும், ஆட்சியையும் சசிகலாதான் தலமை ஏற்க வேண்டும்’’ என்ற குரல் கிளம்பியது. ஆனால் பன்னீர் என்னவோ நேற்றுவரை இவரை அமைச்சர்கள் மதித்துவிட்டு இன்றுதான் மதிக்காதது போல பேட்டி கொடுப்பது பெரிய காமெடி.  அமைச்சர்களை விடுங்கள், முதலமைச்சரிடம்தான் காவல்துறை இருக்கும், அவர்களாவது மதித்தார்களா?. சட்டசபையில் தேசவிரோத கும்பல் என ஒரு போட்டோவைக் காட்டி இது காவல்துறை கொடுத்தது என்றார். அடுத்த பத்தாவது நிமிசம் பிரஸ்மீட்டைக் கூட்டி ‘’அப்படியான ஒரு புகைப்படத்தை நாங்கள் முதல்வருக்குக் கொடுக்கவில்லை’’ என்கிறார் காவல்துறை ஆணையாளர். இதுதான் பன்னீர் ஆட்சி செய்த லட்சணம்.
மெரினாவில் நேற்று பேசிய போது, சசிகலாவை ‘’சின்னம்மா’’ என்றே சொன்னார், அதிலிருந்தே அது ஒரு  பக்கா ஸ்கிரிப்ட் என்பது தெரிந்துகொள்ளலாம். எழுதியதை ஒப்பிப்பது போல இருந்தது.  ஹிந்தியில் எழுதி கொடுத்திருப்பானுங்க போல அதுதான் ஜெ சமாதி முன்னாடி நின்று தமிழிலில் ஒரு முறை கண்மூடி பேசிப்பார்த்திருப்பார். இது தெரியாம நம்மாளுங்க தியானம்னு கிளப்பிவிட்டுட்டானுங்க. ‘’ஆவி’’, ‘’ஆன்மா’’.... எல்லாம் இனி வேலைக்கு ஆகாது என்று தெரிந்துதான் லாரன்ஸே ‘’மொட்ட சிவா கெட்ட சிவா’’ன்னு போயிட்டாரு. இப்பவந்து அம்மா ஆன்மா சொல்ல சொல்லுச்சுன்னு சொல்லி கிச்சி கிச்சு மூட்டிக்கிட்டு. போங்க பன்னீர்.
கொஞ்சப் பேரு தீபாவை தலமை ஏற்க அழைக்கிறார்கள். அது அடுத்த நகைச்சுவை. அந்த அம்மா என்னவோ கொஞ்சம் நிருத்தி நிதானமாக பேசினால் ஜெயலலிதாவாகவே ஆனதான நினைத்துக்கொண்டிருக்கிறது. வார்டுனா என்ன?, வட்டச் செயலாளர்னா என்ன? என இன்னும் பல என்ன? பற்றி எந்த வெண்ணையாவது சொல்லிக் கொடுத்திருப்பாங்களா என்பது சந்தேகம்தான். சமூக வலைதளங்களை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி சசிகலாவிற்கு எதிர்ப்பு, பன்னீருக்கு ஆதரவு, தீபாவை முதல்வராக பெரிய ஆதரவு என்பதை ஒட்டுமொத்த மக்களின் முடிவாக முடிவு செய்கிறார்கள்?.
சமூக வலைதளங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், டெல்லியில் ஆம் ஆத்மி வென்றபோது, தமிழ்நாட்டு தேர்தலில் அவர்கள் 150 இடங்களில் வென்றிருக்க வேண்டும். கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையின் போது சகாயம் முதல்வராக வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன் மெரினா போராட்டத்தைப் பார்த்து ஆர் ஜே பாலாஜி முதல்வராக வந்திருக்க வேண்டும். இப்படித்தான் சென்னை வெள்ளத்திற்கு ரஜினிகாந்த் உதவி செய்யவில்லை என்று கூறி அவரோட கபாலியை கைமா செய்வோம் என்றார்கள். நடந்தது என்ன? அதுதான் தமிழ் திரையுலகின் வசூல் சாதனை படம்.
பன்னீரா? சசிகலாவா? என்றால் என்னை பொருத்தவரை சசிகலாதான். அட்லீஸ்ட் யாருக்கும் பயப்படாமல் ஆட்சி நடக்கும், குறிப்பிட்ட சிலர் கொள்ளையடிப்பார்கள், (நல்லவற்றிற்கு) அதிகாரத்தை தைரியமாக பயன்படுத்தலாம். இதே பன்னீர் என்றால், பயந்து பயந்து ஆளவேண்டும், எவன் எப்போ பிச்சிக்குவான்னு தெரியாது, யாரிடமும் மரியாதை கிடைக்காது (அவரும் எதிர்பார்க்க மாட்டார்), ஆதரவு கொடுக்கும் அத்தனை எம்.எல்.ஏக்களும் கொள்ளையடிப்பார்கள், ஏன்? என்று எதிர்கேள்விகூட கேட்கமுடியாது.   
சசிகலா வேண்டாம் என்றால், ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தலில் தோற்கடிப்போம் (1.5 லட்சம் மொத்த ஓட்டில், 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்பது வேறுவிசயம்). சசிகலா கொள்ளைக்காரி, கொலைகாரி என்றால் அப்போ ஜெயலலிதா மட்டும் யாரு?. பன்னீர் என்ன கை சுத்தமானவரா?. நிராகரிக்கும் பட்சத்தில் எல்லோரையும் நிராகரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரத்தம் - தக்காளி சட்னி மாதிரி பேசக்கூடாது.
அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க, அம்மா நாமம் வாழ்க. நமக்கு கடைசியில் நாமம் மட்டுமே வாழ்க வாழ்க.
----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

வியாழன், ஜனவரி 19, 2017

போராட்டம்.

ஒன்னு மட்டும் எனக்கு புரியவே இல்ல, நாம எதுக்கு எல்லா போராட்டத்துக்கும் நடிகர் நடிகையோட சப்போர்ட்டை எதிர்ப்பாக்குறோம்?. சினிமாக்காரன் கு பின்னாடி நின்னு போராட்டம் பண்ணினால்தான் மதிப்பா?. நேத்துவரை ‘’ரஜினி எதுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என கண்டனம் தெரிவித்தவர்கள், ஆதரவு தெரிவித்தவுடன் ‘’உன் ஆதரவு யாருக்கு வேண்டும், முதல்ல உன் மகளையும், மருமகனையும் பீட்டாவை விட்டு வெளியேறச் சொல்லு?’’ என அடுத்த கண்டனம். 

சினிமா துறை சார்ந்தவர்கள் அவர்களுடய தனிப்பட்ட ஈடுபாட்டின் பேரில் கலந்துகொள்வது என்பது வேறு, அவர்களை கட்டாயப்படுத்தி அல்லது கிட்டத்தட்ட மிரட்டி சப்போர்ட் செய்யவைப்பது என்பது வேறு. காவிரிப் பிரட்சனையில் சினிமாத் துறையின் அனைத்து போராட்டங்களும் / உண்ணாவிரதங்களும் மேற்கூறிய இரண்டாம் வகையே. அதன் மூலமாக நாம் சாதித்தது என்ன?. தண்ணீர் வந்துவிட்டதா?. மக்களின் போராட்டத்திற்கு அஞ்சாத அரசா, சினிமாக்காரர்களின் ‘உ.வி’க்கு அஞ்சி தண்ணி திறந்துவிடப்போகிறது?.

சல்லிக்கட்டு விவகாரத்தில்,  ஹிப் ஹாப் தமிழா ஆதி தவிர்த்து, இதனை ஆதரிக்கும் எந்த சினிமா பிரபலங்கள் மீதும் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆதி ஒருவர்தான் முதலிருந்தே இந்த விஷயத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் எல்லாம், தற்போதய போராட்ட வீரியத்தைக் கண்டு களத்திற்கு வந்தவர்கள். சிம்பு, ஜி.வி பிரகாஷ்சை எல்லாம் நம்புவது என்பது வளர்மதியை நம்பும் அதிமுககாரன் மாதிரிதான். சிம்பு பேட்டியை பார்க்கும்போதே இது பக்கா ஸ்கிர்ப்ட் என தெரியும், தெரியவில்லை என்றால் நம்மக்கு முன்னாடி ஒரு உணர்ச்சித் திரை இருக்கிறது என பொருள்படுக.

ஒரு தலமை இன்றி, எந்தவித சுய ஆதாயமும் இன்றி இவ்வளவு பெரிய போராட்டம் நடப்பது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம், அதிசயம். சல்லிக்கட்டு விசயத்தில் இது மிகப்பெரிய நம்பிக்கை தரக்கூடியது. களத்தில் போராடும் இளைஞர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். கூட்டம் கூடுவதோ அல்லது கூட்டுவதோ பெரிய விசயமில்லை, ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என நீண்டுகொண்டு போவதுதான் பிரமிப்பை தருகிறது.

இது சல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கான போராட்டம் மட்டுமில்லை.

சல்லிக்கட்டிற்காகத்தான் இந்த போராட்டம் என்றால் அது இரண்டு வருடத்திற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும். ‘’குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம், குனிந்த கதை போதும், பொறுமை மீறும் போது, புழுவும் புலியாகும்’’ என்ற சிட்டிசன் பாடல் வரியின்படி, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்ற ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த போராட்டம் இது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த போராட்டம் நடந்திருக்குமா? என்றால், என்னைப் பொருத்தவரை, நடந்திருக்கும் ஆனால் இந்த அளவிற்கு பெரிய அளவிற்கு நடந்திருக்காது.

பன்னீர் செல்வத்தினாலோ, அல்லது சசிகலாவாலோ இதை தடுத்திருக்க முடியுமா? என்றால்,  முடியும். ஆனால், அதில் ஏதாவது பிசுறு ஏற்பட்டால், அதை வைத்து மத்திய அரசு ஏதாவது செய்துவிடும் என்ற பயமோ அல்லது சசிகலா முதல்வராக கூடுதல் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற பயமோ காரணமாக இருக்கலாம். ‘’இல்லாட்ட மட்டும் கிளிச்சுத் தள்ளியிருப்பாய்ங்க’’ என்று உங்களுத் தோன்றலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னோடு (சவுதியில்) ஒரு கர்நாடகப் பையன் வேலை செய்கிறான், சல்லிக்கட்டிற்கான போராட்டம் பற்றி அவன் இன்றுதான் என்னிடம் ‘’ நீ ஏன் சல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என்று கேட்டான். ‘’ ’நானும் சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன், எதுக்கு கேக்குற?’’ என்று கேட்டேன். ‘’இல்ல என்னோட தமிழ் பிரண்ட்ஸ் எல்லோரும் சப்போர்ட் பண்ணி நிறைய போஸ்ட் போடுறாங்க ஆனா உன்னோட பே.புக்கில் அதுமாதிரி ஒன்னுமே இல்லையே அதனால கேட்டேன்’’ என்றான். ‘’ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உள்ள போஸ்ட்ட போய் பாரு, பொது சிவில் சட்டத்துக்கு எதிரா போஸ்ட் போட்டிருப்பேன்’’ என்றேன். அவனுக்கு புரியவில்லை என்பதிலிருந்து ‘’இன்னும் பயிற்சி வேண்டும்’’ என்று எண்ணிக்கொண்டேன்.

பொது சிவில் சட்டம் கொண்டுவந்துட்டா சல்லிக்கட்டு மாதிரி பண்பாடு, கலாச்சாரம், இனம், மொழி......etc., சம்பந்தமான ஆயிரம் அடையாளங்களை அழிச்சிடலாம். அதுக்கப்புறம் ‘’கம்பங்கூழ் நான் ஏன் குடிச்சு ஆரோக்கியமா இருக்கக்கூடாது?’’ன்னு நீ கேட்க முடியாது. ‘’கோக்’’தான் நீ குடிச்சு வயிறு புண்ணாகி சாகனும்னு அவன் சொல்லுறதத்தான் கேட்கணும். மாநிலத்துக்குன்னு எதுக்கு ஒரு அரசு வேண்டும்? அதற்கு என்று எதற்கு சில அதிகாரங்கள் வேண்டும்? என்பதை விளங்கவேண்டும். அதுபோன்ற மாநில அதிகாரங்களைக் கொண்டுதான் நாம் நம்முடைய வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாட்டை......etc காத்துக்கொள்ள முடியும்.

இனி மாநிலத்திற்கு ஒரு மண்ணும் கிடையாது எல்லா ஆணியையும் நாங்க புடிங்கிக்கிறோம்னு சொன்னா, சல்லிக்கட்டு மட்டும் இல்ல, நாம் கும்புடுற சுடல மாடசாமி, கரடி மாடசாமி எல்லாம் சாமியே இல்லன்னு சொல்லுவான். நாமளும் மூடிக்கிட்டு ‘’கும்புடுறேன் சாமி’’ன்னு கைகட்டி நிக்கனும்.. இங்க பலருக்கு ஏன் நீட் (NEET) மருத்துவத் தேர்வை எதிர்கிறார்கள்? என்றே தெரியவில்லை. கல்வி விசயத்துல மாநில உரிமையை பறிப்பதுதான் நீட் (NEET) தேர்வு முறை. தமிழகத்திற்கான மாணவர் எண்ணிக்கையில் குறைவு வராது, இது திறமையை கண்டறியும் தேர்வு என்று வடை சுடுபவர்களிடம் ஒன்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. அந்த திறமையை நாங்களே தேர்வு வைத்து கண்டுபிடிச்சிக்கிறோம். நீங்க ஒரு முடியையும் புடுங்கவேண்டாம். பொறியியல், மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டில் ஏற்கனெவே நடைமுறையில் இருந்ததுதான். அதையே நாங்க திரும்ப கொண்டுவந்துகொள்கிறோம்.

இந்த போராட்டம் விவசாயிகள் மரணத்திற்கும் மற்ற இன்ன பிற விசயங்களுக்கும் இனி நடக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஏதோ உணர்ச்சி வசத்தால் பேசுவதாகவே நான் கருதுகிறேன். அப்படி நடைபெற்றால் உண்மையில் சந்தோசம்தான். சல்லிக்கட்டில் சாதிய சார்பு இல்லாதது என்பதை ஒட்டுமொத்தமாக புறம் தள்ளிவிடமுடியாது, இது போராடுற பலபேருக்குத் தெரியும், இருந்தும் எல்லோரும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்க காரணம், இப்பவும் சொல்கிறேன் இது சல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டும் அல்ல, சல்லிகட்டின் பெயரில் நடக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம்.
       
காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் திட்டம், சம்ஸ்கிரத / இந்தி திணிப்பு, பொங்கல் விடுமுறை என வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்ச்சி வெடிப்பு. சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் இந்த எழுச்சி ஏற்பட்டது  எவ்வளவு உண்மையோ அதே அளவு அபத்தங்கள்தான் சல்லிக்கட்டை முன்வைத்துக்கொண்டு அங்கு நடந்துகொண்டிருப்பது. திரிசா, விஷால் மேட்டர், பஞ்சாப் அரசியல் கூட்டம் போட்டோவை மதுரை சல்லிக்கட்டு போராட்டம் என கூறுவது என எவ்வளவோ இருக்கிறது. முக்கியமான ஒன்று, தமிழகத்தில் இதுதான் முதன்முறையான அறப் போராட்டமாம்??? பார்த்தவுடனே தொங்கிரலாமுன்னு தோணுச்சு. மருந்திற்குக் கூட கூடங்குளம் போராட்டம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

‘’இந்த சுதந்திரத்தால் ஆதிக்க சாதியினர் கைதான் ஓங்கும், ஆகையால் ஆகஸ்டு 15 கருப்பு நாள்’’ என்று பேசிய பெரியாரை தேசதுரோகி என்ற நாம்தான், இன்று குடியரசு தினவிழாவை கருப்பு தினமாக கடைபிடிக்கச் சொல்கிறோம். லத்தி சார்ஜ்ஜை கண்டித்து தமிழ்நாடு இனி தனி நாடாகும் என்று கொதிக்கும் நாம் பெல்லட் குண்டில் செத்த காஷ்மீர்காரர்களைப் பார்த்து நகைத்தோம். எவ்வளவு நடைமுறை முறண் ?.  

தன்னோட உரிமையை பறிக்கும்போது, தன்னுடய கலாச்சாரத்தில் கைவைக்கும்போது, உணர்சியைத் தூண்டும்போது, அங்கு போராட்டம் / புரட்சி வெடிக்கும். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். இதுமாதிரியான போராட்டங்களை அரசு எப்படி கையாளுகின்றது பெல்லட் குண்டு வைத்தா? லத்தி ஜார்ஜ் செய்தா? அல்லது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டேவா? என்பதில்தான் அது காஷ்மீரா, தமிழ்நாடா இல்லை மற்றவையா என்பது தெரியும்.

ரெண்டு வருசத்துல 20க்கும் மேற்பட்ட அவசரச் சட்டம் போட்டவர்களுக்கு, சல்லிக்கட்டிற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டுவர முடியாதா?. முந்தய ஆட்சியில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டு தடைசெய்த நிலக்கரி ஏல முறையை, அவசர சட்டம் கொண்டு மீண்டும் ஏலம் விட்டவர்களால் இதற்கு ஒரு அ.சட்டம் கொண்டுவருவதா கஷ்டம்?

அரசியலை நாம் ஆழப் படிக்காவிட்டாலும் அளவாகவாது படிக்கவேண்டும்.

---------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், டிசம்பர் 27, 2016

பிங்கி.

மஞ்சள், பச்சை, ஊதா, பிங்க்....... என கலர் கலரா அந்த கோழிக் குஞ்சுகளைக் காணும் போதே மனசுக்கு, புது ரெண்டாயிரம் நோட்டுக்கு சில்லரை கிடைத்த மாதிரியான சந்தோசம் ஏற்படும்.  ஒரு காலத்தில் அதுதான் எங்க உலகம். கரடி பொம்மை எல்லாம் எப்படி மெஷினில் தயாராகிறதோ அதே போலத்தான், கரண்டின் மூலமாக ‘’கரண்ட் குஞ்சு’’ உருவாகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ‘’பச்ச சுட்சை போட்டால் பச்ச குஞ்சு வரும்’’, ‘’மஞ்ச சுட்ச போட்டால் மஞ்சள் குஞ்சு வரும்’’ என அரையடி அப்துல் கலாம்கள் கூறுவதை ‘’ஆ’’ ன்னு வாய் திறந்து கேட்டு நம்பிக்கொண்டிருந்தோம்.

டபுள் மீனிங் என்றால் ‘’எந்த ஊர்?’’ என்று எதிர் கேள்வி கேட்ட அந்த பால்யத்தில் ‘’என்னோட குஞ்சு வளந்திருச்சு”, ‘’உன்னோடது சின்ன குஞ்சு’’ ‘’அவன் குஞ்சு வெள்ளையா இருக்கும்’’ என பொது இடத்தில் பேசி பெரியவர்களிடம் மரண அடிவாங்கி இருக்கிறோம். ‘’எதுக்கு அடிக்கிறாரு?’’, ‘’அவர் குஞ்சு செத்துப்போயிருக்கும் அந்த கோவத்துல நம்மள அடிக்கிறாரு’’ என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வோம். பின்பாக, அடிக்கான உண்மையான காரணம் தெரிந்து அதிகம் கோவம் வந்தது. ‘’வராதா பின்ன...., நேத்திக்கு வரைக்கும் அந்த மர்ம தேசத்தை ‘’சக்கரை’’ என்ற பெயரில் அழைத்துவிட்டு, திடீரென 500, 1000 செல்லாது இனி 2000 தான்னு சொன்னா நாங்க என்ன தொக்கா?’’. என கோபத்தில் கத்தியபோது, சில நல்லுள்ளங்கள் எல்லை ராணுவ வீரர்களின் கதைகளைச் சொல்லி சமாதானம் செய்தனர்.

குஞ்சு என்பது கெட்ட வார்த்தையாகிவிட்டதால், இனி கோழிக் குஞ்சை, கோழிக் குட்டி என்றா சொல்லமுடியும்?. விவாதத்துக்கு சரி என்றாலும்  ‘’கலர் கலரான குட்டிகள்’’ என்று சொல்லும் போது, அது ‘’அண்டர் ஈவ்டீசிங் ஆக்ட் 420’’ பிரிவில் வரும். (என்னடா தமிழுக்கு வந்த சோதனை).

காலையில் குரான் கிளாஸுக்கு போய்விட்டு திரும்பும் போது, பள்ளிவாசலுக்கு பக்கத்தில் அந்த டீ கடை எதிரில் தான்,  கலர் கலரான குஞ்சிகள் விற்கப்படும். ஒவ்வொரு சல்லடைப் பெட்டியிலும் ஒவ்வொரு கலர் குஞ்சிகள் இருக்கும், இப்படியாக 4 அல்லது 5 அடுக்கு பெட்டிகளை டி.வி எஸ் 50 ல் கொண்டுவந்து பெரிய வட்டமாக அட்டையை தடுப்பாக வைத்து, அந்த குஞ்சிகளை சல்லடைப் பெட்டியில் இருந்து திறந்துவிடும் போது மெல்லிய ‘’கீச் கீச்’’ சப்தத்தோடு, அந்த சின்ன கால்கொண்டு குதித்து குதித்து வெளியில் ஓடி வரும் அழகே அழகு. எத்தனை கலர் இருந்தாலும், எனக்கு என்னவோ பிங்க் கலர் குஞ்சுகள் கூடுதல் அழகாகத் தோன்றும்.

ஒரு குஞ்சின் விலை 3 ரூபாய். பெரும்பாலும் யாரும் அப்படி 3 ரூபாய் கொடுத்து வாங்குவதில்லை. எல்லோருக்குமே, குலுக்கல் முறையில் வாங்குவதற்குத்தான் அவ்வளவு இஷ்டம். ஒரு டோக்கனுக்கு 50 காசு, குலுக்கலில் நம்பர் வருபவனுக்கு ரெண்டு கோழி குஞ்சு கிடைக்கும். ஆறு முறை தோற்பதற்குப் பதில், 3 ரூபாய் கொடுத்து ஒரு குஞ்சு வாங்க யாருக்கும் மனசு வராது. பத்து ரூபாய் போனாலும் குலுக்கலில் ஜெயிச்சு குஞ்சு வாங்குறதுதான் திரில்லே. அந்த இன்பம் அலாதியானது.

என்னோட முதல் குஞ்சுகள் அப்படி கிடைத்தவைதான். ரெண்டுமே பிங்க் கலரில் கொடுக்க மறுத்ததால், ஒரு பிங்க், ஒரு பச்சை என வாங்கிக்கொண்டேன். ‘’அந்த சின்ன வாயில் எப்படி முழு அரிசி போகும்?’’ என யோசித்து, அரிசியை ரெண்டாக உடைத்த சம்பவங்களும் உண்டு. இந்த விஞ்ஞானத்தை வீட்டில் செய்தால் வூடு கட்டிவிடுவார்கள் என்பதால் பள்ளியில் வைத்து செய்ய, பள்ளிக்கூடம் போகும் போதே கொஞ்சம் அரிசியை அள்ளிக்கொண்டு போவேன். இப்படி உடைக்கும் போது, லைட்டா பசி எடுக்கும் ஆகையால், வீடு திரும்பும்போது, அரிசியில் பாதிதான் இருக்கும்.

இந்த குஞ்சியோட ஸ்பெஸாலிட்டியே அஞ்சு நாளைக்கு மேல் உயிரோட இருக்காது. அதற்கு மேல் இருந்தால் பெரிய்ய ஆச்சர்யம்/திறமை/யோகம்.....தான். என்னோட முதல் குஞ்சில் ஒரு குஞ்சு, வாங்கி வந்த ரெண்டாவது நாளே இறந்துவிட்டது. பச்சை கலர் குஞ்சி என்பதால் பெரிய துக்கம் ஏற்படவில்லை. ஒருவேளை, பிங்க் செத்திருந்தால் பச்சையை நானே கொன்டிருப்பேன். அம்புட்டு பாசம் ‘’பிங்கி’’ மேல். ஆம் அது தான் அவள் பெயர்.  பச்சைக்கு என்ன பெயர் வைத்தேன் என்று ஞாபகம் இல்லை. ஒரு வேளை பெயர் வைப்பதற்கு முன்போ போய் சேர்ந்திருக்கலாம்.

பச்சை குஞ்சு செத்தபின்னாடி, எல்லோரும் பிங்கியும் செத்துவிடுவாள் என்றார்கள். அதற்கு காரணம், கலர் குஞ்சுகள் ஜோடியாகவோ அல்லது கூட்டமாகவோ இருந்தால்தான் உயிரோட இருக்குமாம். தனியாக இருந்தால் உடனே செத்துவிடும் என்பார்கள். அதனால்தான் இந்த கோழிக்குஞ்சுகளை வாங்கும்போது இரண்டாகவோ, மூன்றாகவோ வாங்குவார்கள்.

பூனை, காக்கா, அக்கா...... என எல்லோரிடமிருந்தும் என் பிங்கியை காப்பாற்ற படாத பாடு படவேண்டும். இந்த குஞ்சிகளுக்கு அதிகமா குளிரும் ஆகாது, அதிக வெயிலும் ஆகாது. நாம குஞ்சி வாங்குன சமயத்துலதான் வராத ‘’வர்தா’’ புயல் எல்லாம் வரும், ‘’அக்னி நட்சத்திரம்’’ ரி ரிலீஸ்ஸாகி ஓடும். என் கூட்டத்தில் எல்லோரிடமும் இந்த கலர் குஞ்சிகள் இருக்கும். டெய்லி ஒவ்வொருத்தன் வீட்டிலும் ஒரு இரங்கல் கூட்டம் நடக்கும்.

கொஞ்ச நாட்களுக்கு அப்புறம், வீட்டிற்குள் எங்கு போனாலும் என் பின்னாடியே வரும். பூனையிடமிருந்து தப்பித்து அந்த சின்ன காலால் குதித்து குதித்து உசுருக்கு பயந்து ஓடி வந்தது,  கோபத்தில் பூனையை அடிக்க கிளம்பி குப்புற விழுந்தது, நண்பனோட குஞ்சை காக்கா தூக்கிச் சென்றபோது, பத்து தெருவரை காக்காவை துரத்திச் சென்றது என எல்லாமே கண்முன் நிற்கிறது.

இதுதான் பிராய்லர் கோழி என்று தெரிந்திருக்கவில்லை. இது தனி இனம், வளர்ந்த பின்னாடியும் பிங்க் கலராகவே இருக்கும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். பிங்கி கொஞ்சம் வளர்ந்த பின்பு, சாயம் வெளுக்க ஆரம்பித்தது. அதற்கு பின்பாகத்தான் இது வளர்ந்த பின்பு பிராய்லர் கோழியாக வரும் என்ற உண்மை தெரிந்தது. சாயம் போகப் போக பிங்கியும் வளர்ந்தாள், சாயம் மொத்தமாக போன பின்னாடி ‘’பிங்கி’’ என்று அழைக்கமுடியாது, ஆகையால் ‘’வெள்ளச்சி’’ என்ற பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிங்கி வளர்ந்து பெரியவளா ஆனபின்பு பிராய்லர் கோழியாகத்தான் வருவாள் என்று தெரிந்த பின்பு, மூளையில் பிஸினஸ் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பித்தது. அப்போது பிராய்லர் கோழியின் விலை கிலோ 50 ரூபாய். இன்னும் ஐந்து மாதம் பிங்கியை வளர்த்தால் எப்படியும் ஒரு கிலோ தேரிவிடுவாள், அப்படியென்றால், ஐந்து மாதத்தில் லாபம்  47 ரூபாய். இதையே பத்து பிங்கி வாங்கினால் பிங்கி பிங்கி பாங்கி...............என்று லாபக் கணக்கை கைகொண்டு எண்ணி ‘’சொக்கா’’ ‘’சொக்கா’’ என சந்தோசம் அடைந்தேன். கனவில் பெரிய காரில் வந்து இறங்குவது போலவும், கதவை திறக்க ரெண்டு பாடிசோடாக்கள், குளிர்சாதன அறையில் என் பெரிய சேருக்கு பின்னால் பெரிய சைஸ் பிங்கியின் போட்டோ....................என கனவு கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடியது.

ஒரு முறை, கதவு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கையில் பிங்கியின் ஒரு கால் நஞ்சிவிட்டது. களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி தத்தித் தாவி நடந்த பிங்கியை 16 வயதினிலே சப்பாணி கமல் மாதிரி விஸ்கி விஸ்கி நடப்பதைப் பார்த்து கண்ணில் ஜலம் வச்சுட்டேன்.

எனக்கு ஒரு முறை காய்ச்சல் வந்த சமயம், பக்கத்து வீட்டு தாய் கிழவி அம்மாவிடம், ‘’தைலத்தை நல்லா ஆவி பறக்க தேச்சுவிட்டு, கணத்த போர்வையால நல்லா வேக்கும் வரை மூடி தூங்க வையு, மறுநாள் பேய்க் காய்ச்சனாலும் பின்பக்கமா ஒடிரும்’’ ன்னு சொல்லிச்சு, அதேமாதிரி காலையில் காய்ச்சலும் காணாமல் போச்சு. அதே முறையில் ‘’குணப்படுத்துறேன் பார்’’ என்று இருக்குற ‘கோடரி தைலம்’, ‘மீசைக்கார தைலம்’, ‘டைகர் பாம்’ என எல்லாத்தையும் எடுத்து பிங்கிக்கு தேய்த்துவிட்டேன். போர்வையால் பிங்கியை மூட முடியுமா? அதனால் ஒரு சின்ன பானையை வைத்து மூடினேன். ‘காற்று போகாமல் இருந்தால் தானே வேர்வை வரும்’ என்பதை யோசித்து பானைக்கு மேல் ஒரு 2 கிலோ எடைப் படியையும் வைத்துவிட்டு தூங்கினேன்.

மறுநாள் காலை, பிங்கி மர்கயா.

ப்பிங்கிய்.................ன்னு நான் கத்தும்போது கனவில் என் சீட்டிக்குப் பின்னால் இருந்த பிங்கியின் போட்டோ சைடாக தொங்கியது, பாடி சோடாக்கள் திறந்த கதவு மூடியது, வந்த கார் பின்னாடி நோக்கிச் சென்றது. ஸோ சாட். பிங்கியை எங்கள் வீட்டு தொழுவத்தில் புதைக்கும் போது, கோழி வியாபாரத்தில் கோடிஸ்வரனாகும் ஒருவனின் கனவும் சேர்ந்து புதைந்து போனது. KFC கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் ‘’பிங்கி மட்டும் இருந்திருந்தா இவனுங்க எல்லாம் இந்தியாவுக்குள்ள காலெடி எடுத்து வச்சிருக்க முடியுமா?’’ என்ற எண்ணம் வரும்.  ம்ம்ம்.........

இப்பவும் எங்காவது கரண்ட்/கலர் குஞ்சுகளைப் பார்க்கும் போதெல்லாம் பிங்கி ஞாபகமாகம் வரும். அதை தூக்கி தலையில் வைத்துக்கொள்வேன். அந்த பிஞ்சு கால் நகங்கள், வரண்ட என் தலையை வருடும்போது, இருண்ட இந்த உலகின் இனிமையான நினைவுகளை கிளரிக் கொடுக்கும்.
--------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், நவம்பர் 23, 2016

வழுக்கத்தலை வாலிபர் சங்கம்.

தலையில் முடியில்லாதவனோட வலி, இன்னொரு முடியில்லாதவனுக்குத்தான் தெரியும்.

என் வயது ஆண்கள் எல்லாம் இணையதளத்தில் எதை எதையோ தேடும் போது, நான் மட்டும் எனக்கு பொருத்தமான கெட்டப்பை தேடியே பல ஜி.பி டேட்டாக்களை காலி செய்திருக்கிறேன். இது இன்று அல்ல, இணையதளம் எனக்கு அறிமுகம் ஆன காலம் தொட்டு நடக்கும் நொஸ்டால்ஜிக் (Nostalgic) கதை. படிக்கும் காலங்களில், நிறம், உயரம், எடை போன்ற அம்சங்களை கொடுத்தால் நமக்குத் தேவையான தோற்றத்தை திரையில் காட்டும் இணையதளங்களை என் இமெயிலைவிட அதிகமாக ஓப்பன் செய்து பார்த்திருக்கின்றேன்.

ஊரே ஒன்று கூடி கம்யூட்டர் லேப்பில் வண்ணத்திரை நடிகைகளை வடியவிட்டு (வாயில்) பார்க்கும் அதே நேரத்தில்தான் கார்னர் ஓரத்தில் இருக்கும் கம்யூட்டரிடம் என் சோகத்தைச் சொல்லி, அழகு தோற்றம் பெற ஆலோசனைகள் கேட்பேன். அதை ஆலோசனை என்று கூற முடியாது, காளிதாஸ் படத்தில் காளியாயிடம் ‘’அறிவும், புத்தியும் கொடு, அது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?’’ என கேட்கும் சிவாஜி கணேசன் போல வேண்டி, ‘’யார் தருவார் இந்த அரியாசணம்’’ என்ற சக்ஸஸ் ரிசல்ட்டிற்காக கிடந்த தவம் என்றுதான் சொல்ல வேண்டும். 
   
எல்லா வெப்சைட்களும் சொல்லிவைத்தது போல, ‘’வழுக்கைத் தலைக்காரர்கள் தாடி வைத்தால் அழகாக இருக்கும்’’ என்றே சொல்லியது. முன்-சொட்டை என்றால், முழுதாடி. பின்-சொட்டை என்றால், பிரஞ்ச் பியர்ட் என்ற பஞ்சதந்திர தாடி என வகை வகையான தாடிகளை கம்யூட்டரில் கண்டு காண்டாகிக் கொண்டிருந்த காலம் அது. அந்த காலத்தில், ‘மீசை’க்காக  முக்கிக்கொண்டிருந்த நான், தாடிக்கு எங்கு போவேன்? யாரைக் கேட்பேன்?. இதுபோன்ற கொடுமையான நரக வேதனை, எனக்கு பெண் பார்த்து கட்டிவைத்தவர்களுக்குக்கூட வரக்கூடாது.

‘’ஒல்லியான உடல், 53 கிலோ எடை, வழுக்கை என்றோ இல்லை என்றோ உறுதிப் படுத்த இயலாத தலையுடைய சிம்மராசிக்கார்களே........’’ என்று ஆருடம் சொன்ன வெப்சைட்டை நம்பி மீசை எடுக்கத் தீர்மானித்தேன். ஆம், முதல் மீசை ஷேவிங். காலேஜ் முதல் வருடம், மீசையோடு இருப்பவர்களை தேடிப் பிடித்து ஷேவிங்க் செய்வதையே பார் டைம் ஜாப்பாக சில மாணவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். கடா மீசை வைத்திருந்தவனை எல்லாம், மீசை இல்லாமல் பார்ப்பது என்பது ரெக்கை படத்தில் லெட்சுமி மேனனை குளோசப்பில் பார்ப்பது போன்ற ஹாரர்ரான விஷயம். 

‘’மீசை எடுத்த பின்பு சும்மா ஹிந்தி ஹீரோ மாதிரி இருந்தேன்’’. என்று சொன்னால் நம்பவா போகுறீர்கள்?. இருந்தேன். ராசியான நம்பர் ஒன்பது என்று அங்கயும் இல்லாம, இங்கயும் இல்லாம. மீசை எடுத்த பின்புதான் ஞாபகம் வந்தது நாலு நாள் லீவிற்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது. மீசை இல்லாமல் எப்படி ஊருக்கு போவது?. ‘’ஊரே, செத்த விட்டிற்கு துஷ்டி கேட்க வருவதுபோல கிழவிகள் எல்லாம் சீலையால் மூக்கை பொத்திக்கொண்டு வருமே’’ என மனதில் எழுந்த பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலேயே பஸ் ஏறினேன்.

‘’என்றா, நம்ம வீர் வம்ச மீச எங்கடா?’’ என அப்பா கேட்கும் முன்பே, ‘’காலேஜ்ல சீனியர்ஸ் மீசை வைக்கக்கூடாதுன்னு சொன்னதால எடுத்திட்டேன்பா’’ என்று சமாளித்தேன். மீசை இல்லாமல் வெளியே போய் அசிங்கப்பட வெட்கப்பட்டு, நான்கு நாளும் வீட்டிலேயே இருந்தேன். அதைப் பார்த்த அம்மாவும், அக்காவும் ‘’புள்ள நம்மள நெனச்சு ஏங்கிப் போய் கெடந்திருக்கு, அதான் வீட்டையே சுத்தி சுத்தி வருது’’ என்ற பெருமை பீத்தல் வேறு. லீவு முடிந்து காலேஜ் செல்ல தயாரான போது அப்பாவும் என்னோடு வர ரெடியானார். விசாரித்த போது, ‘’எங்க காலேஜ்ல ராக்கிங் எல்லாம் கிடையாதுன்னு உங்க பிரின்ஸ்பால் பெரிய்ய இவனாட்டம் சொன்னான், இது மட்டும் என்னவாம்?’’ என மீசையைக் காட்டி நியாயம் கேட்க நின்றார்.

''நியாயம்டா'', ''நேர்மைடா'', ''நாக்கப் புடுங்குறமாதிரி கேட்பேண்டா''.... என நாட்டமை விஜயகுமார் மாதிரி விரைப்பாக நின்றவரைப் பார்த்து, அடுத்த வாரத்திற்கும் சேர்த்து ‘ஆய்’ வருவது போல வயிறு கலக்கியது. கபாலம் கலங்கியது. ‘’உங்க பையன் பெரிய ’இஞ்சினியர்’ ஆகி பக்கத்து கிராமத்துக்கு இலவசமா வைத்தியம் பார்க்கனும்னா, இத நீங்க பொருத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்’’ என அப்பாவின் அறிவு விளக்கில் எண்ணெய் ஊற்றி, ஞான ஜோதியை எரியவிட்டு பஸ் ஏறுவதற்குள், தலையில் இருந்த கொஞ்ச முடியும் விழுந்துவிட்டது.

‘’பின் வழுக்கை விழுந்தவர்களுக்கு தாடி இருந்தால் அழகாக இருக்கும்’’ என்ற சொட்டகிரஸ் விதிப்படி, உரம் போட்டு தாடி வளர்ந்து நிமிர்ந்தால், பின் வழுக்கை முன்னேறி முன் வழுக்கையாக மாறி இருக்கும். ‘’முன் வழுக்கையை மறைப்பது எப்படி?’’ என்ற அகழ்வாராய்ட்சியில் இறங்கினேன். ‘’சைடில் நன்றாக முடியை வளர்த்து அதை முன்பக்கமாக கொண்டு வந்து நிற்க வைக்க வேண்டும்’’ என்பதை கண்டறிந்து, கண்ணாடியில் சைடைப் பார்த்தால், சைடிஷ்ற்கு தொட்டுத் திண்ணும் அளவிற்குத்தான் இருந்தது. மிஸன் கேன்சல்.
  
ஆராய்ச்சி ஒரு புறம் நடந்த்கொண்டிருந்தாலும், காலம் என்னை கல்ஃபிற்கு (Gulf) கொண்டுவந்து சேர்த்திருந்தது. வளைகுடாவில் இந்த தலையுடன் வெளியே எங்காவது சென்றால், தெரிந்தவன் எல்லாம் ‘’கல்ஃப் கேட்’’டிற்கு போகச் சொன்னார்கள். நான் ‘கல்ப் கேட்’ என்றால் ஏதோ ‘இண்டியன் கேட்’ போல ஒரு இடம் அங்கு எவனாவது வழுக்கைக்கு லேஹியம் கொடுப்பான், வாங்கி நக்கிக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது அது ‘’விக்’’ வைக்கும் இடமென்று. ‘’தேவையானி புருசன் ராஜ்குமார்’’ என்று கேள்விப்பட்டதற்கு பின்பு, அன்றைக்குத்தான் இரண்டாவதாக அந்த வார்த்தையைச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை’’.

வழுக்கையாக இருக்கும் ஹாலிவுட் நடிகர்களைப் பார்த்து அவர்களைப் போல் நாமும் மாறிவிடலாம் என முடிவுசெய்து புரிந்த, புரியாத ஆங்கிலப் படங்களை எல்லாம் பார்த்தேன். அதில் அகப்பட்டவர்தான் நடிகர் ‘’வின் டீசல்’’. அவரைப் போல் நானும் மொட்டையடித்து, ஷேவிங் எல்லாம் செய்து கண்ணாடி முன்னாடி நின்றால், வின் டீசலை டீசல் ஊற்றி கொழுத்திப்போட்டது போன்று இருந்தது. வி.டீசலுடய தலையையும், முகத்தைப் பார்த்த நான் அந்த கட்டுடலில் வீங்கி இருக்கும் சதைப் பிண்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதன் விளைவு அது. நமக்கும் அது போன்ற வீக்கங்கள் வேண்டும் என்றால் பத்து பேர் கும்மினால் ஜிம்மிற்கு செல்லாமலேயே வரும். அதோடு வின் டீசல் கெட்டப் விண்ணுலக பதவி பெற்றது.

‘’ஜாசன் ஸ்டாத்தம்’’ மெக்கானிக் படத்தில் வரும் ஹீரோ. இவரும் நம்ம வ.வ.சங்க உறுப்பினர்தான். வின் டீசல் அளவிற்கு பழனி படிக்கட்டுகள் இருக்காது, ஆனாலும் கொஞ்சம் கட்டுமஸ்தான ஆளாகவே இருப்பார். இவர்தான் நமக்கு சரி என்று முடிவு செய்தேன். இவர் முதலாமவரைப் போல வழு வழு மொழு மொழு என்று இல்லை. 2 மி.மீட்டர் அளவிற்கு தலையிலும், கன்னத்திலும் முடிவைத்திருப்பார். ஆள் பார்க்க பேரழகாக இல்லாவிட்டாலும் அளவாக அம்சமாக இருப்பார். இவர் கெட்டப்பை பின்பற்ற கொஞ்சம் உடம்பு இளைக்கவேண்டியது இருந்தது.

பொதுவாக வழுக்கை உள்ளவர்கள் ரொம்ப ஒல்லியாகவோ, ரொம்ப குண்டாகவோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. எனக்கு அப்போது 78 கிலோ. ஜாசன் ஸ்டாத்தம் போன்று ஆக வேண்டும் என்றால் என் உயரத்திற்கு எடையை சுமார் 60 கிலோவாக குறைக்க வேண்டும். அப்போது பேலியோ மருத்துவ நூல்கள் எட்டிப்பார்க்காத காலம். 18 கிலோ குறைப்பது என்பது சோதனை, அதை சாதனையாக்கி காட்ட, ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும், இரண்டு மாதம் டார்கெட். என்று பக்காவாக பிளான் செய்து, ஜாக்கிங்க் ஷீ, ஜெர்ஸி எல்லாம் போட்டுக்கொண்டு ஓடினேன், ஓடினேன் அபுதாபியின் எல்லைக்கே ஓடினேன்.

முதல் வாரம் எல்லாமே ஷேமமாக நடந்தது, ஆனால் உடல் எடை குறையவில்லை. அடுத்த வாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. எடை இல்லை, ஓடும் தூரம். ஆம், 5 கி.மீட்டர் 4 ஆகி, 3 ஆகி இறுதியில் ஓட்டப் பயிற்சிற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. உணவு கட்டுப்பாட்டின் மூலமாக எடையை குறைக்க, சோற்றை விட்டு பர்கர் சாப்பிட்டேன். பன் ஐட்டங்கள் சாப்பிட்டதால் வயிறு சுருங்கியது ஆனால் ‘’பம்’’ பெருத்துவிட்டது. பாக்கிஸ்தானியர்கள் இருக்கும் கேம்பில் பெருத்த ‘பம்’முடன் இருந்தால், ‘’பம்’’ பப்படமாகிப் போகும். அதற்குப் பயந்தே மறுபடியும் பல முயற்சிகள் செய்து 65 கிலோவாக இழைத்தேன். ‘’ஜாசன் மாதிரி ஆகிவிட்டாயா?’’ என்று கேட்பவர்கள் மெயில் ஐ.டி அனுப்பவும், ஆல்பத்தை அனுப்புகிறேன்.

என்னதான் நாம் சில ஹேர் ஸ்டைல்களை கற்பனை செய்து வைத்திருந்தாலும் முடி வெட்டுபவனிடம் ‘’கிர்தாவை மேலே தூக்கு, மீசையை கீழா இறக்கு’’ என்றால் கத்தியை கழுத்தில் இறக்கிவிடுவானோ? என்ற மரண பீதி படுத்தி எடுக்கும். புதிதாக ஏதேனும் ஸ்டைலில் முடிவெட்ட வேண்டும் என்றால், ஊருக்குப் போகும் போது மட்டுமே முயற்சி செய்வேன். அங்கு ஒரு பார்பர் இருக்கிறார், வீடு வீடாக வந்து சிகை சேவை செய்வார். நம்முடைய கற்பனையை கத்திரிக்கோலில் உதவியால் கச்சிதமாக செய்துகாட்டுவார். கட்டணமும் பெரியதாக இருக்காது. ஒரு செண்ட் பாட்டில் மட்டும் அதிகமாக கொடுக்கவேண்டும்.

முதல் முதலாக அவரிடம் வெட்டும் போது, பாரதிராஜா படம் போலவே இருந்தது. வீட்டின் முற்றத்தில் தரையில் உட்கார்ந்தவுடன், கையில் கண்ணாடியை கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொன்னார். கரெக்சன் சொல்லும் அளவிற்க்கு எந்த குறையும் இல்லை. முடி வெட்டியபின்பு கையை தூக்கச் சொன்னார். நான் முருகன் அருள் வழக்குவது போல, மணிக்கட்டை மடித்து கையை உயர்த்தினேன். தூப்பாக்கியை தூக்கிக்காட்டும் போது கையை தூக்குவது போல தூக்கச்சொன்னார். “எதுக்கு?” என்று யோசிப்பதற்குள், கத்தி அக்குளிள் பாய்ந்துவிட்டது. ‘’யோவ், உன்ன யார்யா அங்க எல்லாம் முடிய எடுக்கச் சொன்னா?’’ என கோவத்தில் திட்டிவிட்டேன். (அங்கு முடியை எடுத்தால்தான் அவருக்கு ஒரு ஆத்ம திருப்தியாம்).

நான் சீரியசாக திட்டினாலும், அவர் ரொம்ப கூலாக ‘’சரி தம்பி எந்திச்சு, வேஷ்டிய........’’ என்று சொல்லி முடிப்பதற்குள் “யோவ், நான் கம்முக்கட்டுல கத்திய வச்சதுக்கே கடுப்புல இருக்கேன், நீ என்னடான்னா வேற எங்கயோ....... ’’ என நான் முடிப்பதற்கு முன்பாக சிரித்துக்கொண்டே ‘’இல்ல தம்பி, எந்திரிச்சு வேஷ்டிய உதருங்க, முடி கிடி ஒட்டியிருக்குமுன்னு சொல்ல வந்தேன்’’ என்றார். மூன்றாவதாகச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை””.
--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.