செவ்வாய், மார்ச் 04, 2014

ஒன்பதாம் வகுப்பு ‘D’ பிரிவு.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
பத்தாவது வகுப்பு வரை இந்த வாத்தியார், இன்ன பாடம் தான் எடுப்பார் என்ற வரமுறைகள் எதுவுமே கிடையாது. முகத்தில் மடுவோடு வந்து ஹீரோயின் கையைப் பிடித்து இழுக்கும் வில்லனாக ஒரு சீன், மடு இல்லாமல் அதே ஹீரோயினை கையைத்தவிர்த்து மற்ற இடங்களில் பிடித்து ஆடும் ஹீரோவாக அடுத்த சீன் என எம்.ஜி.ஆர் டபுள் ஆக்டிங்க் படம் மாதிரித்தான். ஒன்பதாவது வகுப்பில் ஆங்கில சாராக பார்த்தவரை, பத்தாவது வகுப்பில் அறிவியல் ஆசானாக பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவருவதற்குள் அரையாண்டு பரீட்சையே வந்திடும். தமிழ் அய்யாவைத்தவிர மற்ற வாத்தியார்கள் எல்லாம் அப்ரிடி மாதிரி ஆல்ரவுண்டர்ஸ். சில சமயங்களில் 9C க்கு கணக்கு பாடம் எடுக்கவேண்டியவர் 9D க்கு எடுக்கவேண்டிய ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டிருப்பார் அதுவும் 10ம் வகுப்பு புத்தகத்தை வைத்துக்கொண்டு.

ஒன்பதாவது படிக்கும் போது எங்களுக்கு சமூக அறிவியல் வாத்தியார் பெயர், சாரி இனிசியல் சி.எஸ். ஒல்லியூண்டு தேகம், ஒன்னறை அடி அங்குல மூக்கு கண்ணாடி, 38 தான் சைஸ் என்றாலும் 48 சைசில் சட்டை போட்டுக்கொண்டு, எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிக் கொண்டுதான் பள்ளிக்கே வருவார். எங்கள் மேல் கோபம் வந்து, அவரை விட ஒல்லியான பிரம்பைக்கொண்டு அடிக்கவரும்போது, நாங்க எல்லோரும் அவரை நினைத்து கவலைப்படுவோம். கண்ணை மூடி, பல்லை இழுத்து கடித்துக்கொண்டே அடிப்பார், ‘எங்க பசங்களுக்கு வலிக்கப்போகிறதோ’ என்று நினைப்பாரோ என்னவோ, அடிவாங்கியவன் அப்படியே நிற்பான், அடித்த இந்த மனுசனை கைத்தாங்கலாக முதல் பெஞ்சுக்காரன் அவரோட சேருல கொண்டுபோய் இறக்கிவிடனும்.

“சுப்பிரமணியன்” இந்த பேருக்கு அப்படி என்ன மவுசுன்னே தெரியவில்லை. நான் படிக்கும் போது வகுப்புக்கு 5 சுப்பிரமணியர்கள் இருப்பார்கள். ஸ்கூல் மொத்தத்தில் சேர்த்தால் எப்படியும் 20 சுப்பிரமணிகளை அள்ளிவிடலாம். மாணவர் அட்டவனையிலேயே ரா. சுப்பிரமணியன், கா. சுப்பிரமணியன். ராம சுப்பிரமணியன். சிவ சுப்பிரமணியன் என பெரிய்ய லிஸ்டே இருக்கும். இதுல ஒரே இனிசியலில் இரண்டு சுப்பிரமணிவந்துவிட்டால் கா.சின்ன சுப்பிரமணி, கா. பெரிய்ய சுப்பிரமணி என அழைத்து அட்டனன்ஸ் போடுவார்கள். இதுல ஒரு சுப்பிரமணிதான் (இனிசியல் மறந்துவிட்டது) நம்ம சி.எஸ் வாத்தியாரோட ஆஸ்தான சீடன். சாருக்கு என்ன வேண்டு என்றாலும் சுப்பிரமணியனைத்தான் கூப்பிடுவாரு, சார் கூப்பிட்டுவிட்டால் நம்ம சு.ம அஞ்சு பெஞ்சு தாண்டியிருந்தாலும் பாய்ஞ்சி வருவான். சாருக்கு அய்யர் கடையிலிருந்து வடை, டீ, வாங்கிகொடுப்பது, பக்கத்து நாடார்கடையில் வீட்டு சாமான் லிஸ்டை கொடுப்பது என எல்லா வேலைகளும் அவன்தான், அவன்மட்டும் தான் செய்வான்.

எல்லா பாடங்களிலும் பப்படம் ஆகும் இந்த சுப்பிரமணி, சமூக அறிவியலில் மட்டும் நல்ல மார்க் வாங்குவான், சில சமயங்களில் முதல்மார்க்குக்காரனுக்கு போட்டியாக வந்துநிற்பான். ‘இவனுக்கு மட்டும் வாத்தியார் கொஸ்டின் பேப்பரை கொடுக்குறாருடா, அதுனாலத்தான் இவன் இவ்வளவு மார்க் எடுக்குறான்” என நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வோம். மற்ற பாடங்களின் பரீட்சை பேப்பரை கொடுக்கும் போது, ஒரே ஒரு சீட்டை நூல் போட்டு கட்டிகொடுக்கும் நம்ம சுப்பிரமணி, சமூக அறிவியலில் ஒரு குயர் நோட்டு அளவுக்கு எழுதி நூல் போட்டால் அந்துவிடும் என எண்ணி கயிறு வச்சி கெட்டிக்கொடுப்பான். ச.அ புத்தகமே 50 பக்கம்தான், ஆனா இவன் பரீட்சை பேப்பர் 75 பக்கம் இருக்கும்.

பள்ளிக்கூடத்திற்கு இன்ஸ்பெக்சன் நடந்த நேரம். எங்க வகுப்புக்கு மூன்றாவது பாடவேளையில் வருவார் என்று சொல்லப்பட்டது, அது சமூக அறிவியல் வகுப்பு. இன்ஸ்பெக்சனில் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டு என்று இரண்டு நாட்களாகவே எல்லா வாத்தியார்களும் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். சி.எஸ் வாத்தியார் நம்ம சுப்பிரமணியைத்தான் மலை போல நம்ம்பியிருந்தாரு. “டேய் சுப்பிரமணி, அவரு கேட்டு முடிக்கிறதுக்குள்ள டாண், டாண்ணு சொல்லிறனுமுடா” என பக்காவாக தயார்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால் ஆய்வாளர் எங்கள் வகுப்புக்கு வர தாமதமானதால், மூன்றாவது பிரியட் முடிந்து நாலாவது பிரியட் வந்துவிட்டது. அது தமிழ் பாடவேளை.

தமிழ் அய்யா, ஆய்வாளர் வருவதற்கு முன்பே எங்களிடம் திருக்குறளை நன்றாக படித்துவைத்துக்கொள்ளுங்கள், கண்டிப்பாக அவர் அதிலிருந்துதான் கேள்வி கேட்பார் என்று சொல்ல நாங்களும் தயாரானோம். ஆய்வாளர் வந்து, முதலில் ‘உரனென்னும்’ ‘இருமை’ என தோடக்க வார்த்தையைக்கூறி கேட்டுக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எல்லோருக்கு பதில் தெரிந்திருந்ததால், தெரிந்த அனைவரும் எழுந்து நின்றோம், எங்களுடன் நம்ம சுப்பிரமணியும் எல்லா குறளுக்கும் எழுந்து நின்றான். ‘உனக்கு எல்லாக் குறளும் தெரியும் போல, எங்க நீ உலகு என முடியும் பாடலை சொல்லு பார்ப்போம்?’ என ஆய்வாளர் கேட்க. மொத்த கிளாஸும் சு.மணியை நோக்கி திரும்பி இருக்க

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. குறளுக்குப் பதிலாக

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

குறளைச் சொல்ல, ஆய்வாளர் ஆடிப்போயிட்டாரு ‘என்ன தம்பி, ஒன்பதாவது வகுப்புல இருந்து ஒன்னாவது வகுப்புக்கு போயிட்ட?, இருந்தாலும் பாராட்டுக்கள்’ என்று சொல்ல சுப்பிரமணியை புடிக்கமுடியல.

அன்று மதியம், ச.அறிவியல் பரீட்சை பேப்பர் கொடுக்கப்பட சுப்பிரமணி மார்க் 85, முதல் மார்க் 88. மூனு மார்க்குதான் வித்தியாசம். பொதுவாக எடுக்குறது 2 மார்க் என்றாலும் 80 மார்க் என்றாலும், நம்ம சுப்பிரமணி தன்னுடய பரீட்சை பேப்பரை மட்டும் யாரிடமும் காட்டமாட்டான். எப்படியாவது கூட நாலுமார்க்கை வாங்கி ச.அ முதல் மார்க் எடுக்கவேண்டும் என சு.மணிக்கு ஆர்வமாகிவிட்டது. “டோட்டல் மிஸ்டேக்னா மட்டும் வரணும், எக்ஸ்ரா மார்க் கேட்டு எவனாவது வந்தான், அவ்வளவுதான், வீங்கிடும் வீங்கி” என சி.எஸ் சார் கண்டிப்புடன் கூறியது மற்றவர்களுக்குத்தான், சுப்பிரமணிக்கு அல்ல “சார், பால் விகிதம் கொஸ்டினுக்கு பத்து பக்கம் எழுதியிருக்கேன், நீங்க 14 மார்க்குதான் போட்டிருக்கீங்க, இன்னும் ஒரு நாலு மார்க் வேணும் சார்” என சார், சார்..................என்று தொந்தரவு செய்ததால், தொல்லை தாங்க முடியாமல் ‘நான் கரெக்டாதாண்டா மார்க் போட்டிருப்பேன், சரி கொண்டா பார்க்கலாம்’ என கேட்டு வாங்கி, ‘இவன் சரியா எழுதியிருக்கானான்னு பாருடா?, 18 மார்க் போடுறதுக்கு ஏதாவது இருக்கான்னு பாரு?” என கூறி, சுப்பிரமணியத்தின் பேப்பரை இவனுடய முதல் எதிரி, 88 மார்க் எடுத்தவனிடம் கொடுக்க. ‘சார் எனக்கு மார்க் எல்லாம் வேண்டாம், 85 யே போதும், பேப்பரை கொடுங்க’ என சு.ம மறுபடியும் தொந்தரவு பண்ணினான். ஆனால் இந்தமுறை வாத்தியார் கேட்பதாக இல்லை.

எப்படா சு.ம மாட்டுவான்னு எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன், பேப்பரை முழுவதுமாக படித்துவிட்டு, வாத்தியார் காதில் ஏதோ சொன்னான், வாத்தியாரும் வாங்கிபார்த்துவிட்டு, “சுப்பிரமணி, வா ராஜா, வா, எத்தன மார்க் வேணும்னு கேட்ட?’ என செல்லமாக அழைக்க, எப்போதுமில்லாமல் நம்ம சு.ம பம்பிபம்ம்பி போய் அவரிடம் நின்றான். எங்களுக்கு ஒன்னுமே புரியவில்லை. அப்புறமாக ‘இந்த மயிராண்டி என்ன எழுதியிருக்கான்னு வாசிக்காட்டுலே’ என்று பேப்பரை கொடுத்து வாசிக்க சொல்ல.

“பால் விகிதம் என்பது யாதெனில்................இப்படியாக ஆரம்பித்து அஞ்சாவது வரியில் இருந்து. அண்ணாமலை படத்தில் கூட ரஜினிக்காந்த், அன்னல் காந்தி குடிச்சது எல்லாம் ஆயிசு முழுக்க மாட்டுபாலுங்க என்று பாலைப்பற்றி பாடியிருக்கிறார். ரஜினியை அவர் நண்பன் ஏமாற்றிவிட்டார், உடனே ரஜினி சொந்தமாக பால் கடை வைத்து, பணக்காரர் ஆகி அவர் நண்பனை பழிவாங்குகிறார். மேலும் எங்கள் வீட்டுக்கு செல்லத்தாயிதான் பால் ஊத்துவார், அதில்தான் எங்கம்மா காபி போடுவார்கள். பாலில் இருந்து பால்கோவா தயாரிக்கலாம்..............................’ என யாருக்குமே பாலைப்பற்றி தெரியாத பலவிசயங்களை பத்து பக்கத்துக்கு எழுதியிருந்தான்.

எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு அடிக்கும் சி.எஸ் வாத்தியார் அன்னைக்கு ருத்ரதாண்டவமாடிட்டாரு.. ‘இத எழுதுனக்கு உங்களுக்கு 14 மார்க்கு பத்தாதுன்னு கூட நாலு மார்க்குக்கு எவ்வளவு தைரியாமாடா வந்திருக்க?’ என சொல்லிச் சொல்லி அடின்னா சும்மா ஊரப்போட்டு இரண்டு மணி நேரம் பின்னி எடுத்துட்டாரு. அதுக்கப்புறமா நிதானமா திருத்தி பேப்பரை கையில் கொடுக்கும் போது சுப்பிரமணியின் மார்க் 18. ‘சும்மா இருங்கடா’ என சொல்லுவதற்கு “சு” என்று ஆரம்பிக்கும் போதே, நம்மளத்தான் வாத்தியார் கூப்பிடபோறாரு என்று எண்ணி ஓடிப்போய் நிற்கும் சுப்பிரமணி அந்த சம்பவத்துக்கு அப்புறம், அவர் பக்கம் தலவச்சி படுக்குறதே இல்லை.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.