புதன், நவம்பர் 09, 2011

நட்பைக் கூட கற்பாகத்தான் எண்ணுவேன்........


ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும், நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக.


இரண்டு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்ட்து, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு தண்ணீர் குடிப்பதில் தகறாரு ஏற்பட, ஒருவர் தன்னுடைய நண்பனை அடித்துவிடுகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த நண்பர், அந்த பாலைவன மணலில் ஏதோ எழுதிவிட்டு, அந்த இட்த்தை விட்டு நகர்கின்றார், அதை கண்ட பின் தொடர்ந்து வந்த அவரது நண்பர், என்ன எழுதினான் என்று பார்க்கையில் “என் நண்பன் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டான் என்ற வார்தையைப் பார்கின்றார்.

ஒருவருக்கொருவர் பேசாமலேயே, மீண்டும் பயணத்தை தொடர்கின்றார்கள்

சற்றும் எதிபாரத நேரத்தில், அடி வாங்கிய நண்பர் ஒரு புதைகுழியில் மாட்ட, கன்னத்தில் அறைந்த நண்பனோ, தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நண்பனை காப்பாற்றுகின்றார். இந்த சம்பவம் நடந்த பின்பு, ஒரு பாறையில், புதைகுழியில் விழுந்த அந்த நண்பன் மீண்டும் ஏதோ எழுதுவதைக் கண்ட அவருடைய நண்பர், அருகில் வந்து பார்த்தார் “என் நண்பர் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுதியிருந்த்தைக் கண்டு, அவரிட்ம் வினவினார்.

நான் உன்னை அடித்ததை மணலில் எழுதிவிட்டு, உயிரைக் காப்பாற்றியதை மட்டும் பாறையில் ஏன் எழுதினாய்?

என்ன இருந்தாலும் நீ என் நண்பன், ஏதோ ஒரு கோபத்தில் அடித்துவிட்டாய், அது நான் பாலைவனத்தில் எழுதிய எழுத்து போல, கொஞ்ச நேரத்தில் என் மனதில் இருந்துவிட்டு மறைந்துவிட வேண்டும் என்றும், என் உயிரைக் காப்பாற்றியதை நான் என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில், இந்த பாறையில் எழுதிய எழுத்து போல மறையாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தேன் என்று சொன்னாராம்.

இது நட்புன்னா எந்த மாதிரியான மனதோடு இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு சின்ன கதை. இந்த மாதிரி பல கதைகள் நம்மள்ள பல பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்த உலகத்தில் பல விதமான உறவுகள் இருந்தாலும் கூட நட்பு என்றும் எல்லோருக்கும் சிறப்பான விஷயம் தான். பல விதமான உறவுகளில் மாற்றம் வந்தாலும் கூட நட்பு என்றும் நட்பாகவே தொடர்கின்றது.

கணவன்-மனைவி, அண்ணன்-தம்பி, பெற்றோர்-பிள்ளைகள், காதலன்-காதலி..... இந்த வித உறவுகளில் வார்த்தைகள் கூட ஒன்றாக இருப்பதில்லை, ஆனால் நட்புக்கு, நண்பன்-நண்பன், தோழன்-தோழன், தோழி-தோழியாகத்தான் இருக்க வேண்டும். வார்த்தைகளில் கூடத்தான் எத்த்தை பிணைப்பு!.

நண்பனை அழைக்கும் முறை வேண்டுமென்றால், தோழா, நண்பா என்பதில் இருந்து, மச்சி, மாம்ஸ், சித்தப்புன்னு மாறியிருக்கலமேயொழிய, அதன் இலக்கணம் என்றுமே ஒன்றாகத் தான் இருக்கின்றது, இருந்த்து, இருக்கும்.

மாற்றங்கள் இந்த காலத்துக்கு தேவையான ஒன்றுதான். அது எந்த மாதிரியான மாற்றம் என்பது தான் முக்கியம். அப்பாவை மாற்றி இப்போ பெருசுன்னு சில பிள்ளைகள் அழைப்பதுவும் மாற்றம் தான், அது நல்லவிதமான மாற்றமா?. தன் நண்பனை உறவுகளின் பெயரில் அழைப்பது என்பது அவனையும் என் குடும்பத்தில் ஒருத்தனாக நினைக்கின்றேன் என்பதாக நினைக்கத் தோன்றும்.

தன் நண்பனை அவன் மச்சான்னுதான் அழைப்பான், அனால் அவனின் தங்கை முறைப் பெண்ணாக இல்லாமல் தங்கச்சியாகத்தான் இருக்கும், அவனின் பெற்றோர் இவனுக்கு அப்பா-அம்மாவாகத்தான் இருக்கும். வித்தியாசம்னு பார்த்தா, ரஜினிகாந்த் நடிச்ச பில்லாவுக்கும், அஜித் நடிச்ச (சரி நடந்த) பில்லாவுக்கும் உள்ள வித்தியாசம் தான், கூலிங்க் கிளாஸ், கோட் வேணும்னா மாறி இருக்கும். ஆனா கரு என்னமோ ஒன்னு தான்.

ரத்த சொந்தங்களினால் ஏற்படும், பயனைவிட, துயரம் அதிகமானதாக இருக்கும், அல்லது சரி சம்மாக இருக்கும். நட்பில் மட்டும் தான், துயரத்தை விட, பயன்கள் அதிகமானதாக இருக்கும். வேலையாகவோ, கடனாகவோ என்பது அது அவனின் நண்பன் மூலமாகவோ, அல்லது அவனிட்த்திலோ தான் இருக்கும்.

ரஜினிகாந்துக்கு, சத்திய நாராயனா என்ற அண்ணன் மட்டும் இருந்திருந்தாலும் அவர் “ஸ்டார் ஆகியிருந்திருப்பார். ஆனால் ராஜ் பகதூர் என்ற நண்பனின் நட்பால் மட்டுமே அவர் இப்போது “சூப்பர் ஸ்டாராக இருக்கின்றார்.

எனக்கு தெரிந்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி தவிர்த்து, எந்த ஒரு கல்லூரியிலும் எவரும் ஜாதி, மதம் பார்த்து நட்பு கொள்வதில்லை. “நீயா நானா கோபிநாத் ஒரு கல்லூரி மேடையில் சொன்னது போல முன்னாடி நீ, மறவர், கோனார், ஜயர், பள்ளர்...... நான் வன்னியர், யாதவர், துலுக்கர் .... என்றால், கல்லூரிக்கு வந்த பின்னாடி நீ மாமன், நான் மச்சான் தான் அவ்வளவு தான்.

என் நண்பன்.
7ம் வகுப்பு, புது ஊர், புதிய பள்ளியில் முதல் நாள், மதிய வேலை மூன்றாம் பாடவகுப்பு, உடற்கல்வி பாடம், விளையாட்டிற்காக அங்குள்ள ஒரு சிறு மைதானத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள், யாரும் அறிமுக இல்லாத காரணத்தால், நான் தனியாக இருந்து அங்குள்ள கரடி மாட சாமி சிலையை வெரித்து பார்த்துக்கொண்டிருக்க,

“உனக்கு கபடி தெரியுமா? வா எங்க கூட வந்து விளையாடு ன்னு ஒரு குரல், அவன் முகம் கூட பார்க்காமல், “வேண்டாம் அடுத்து பார்கலாம் என்று அனுப்பிவைத்தேன்.

“ம்ம்ம்ம் சரி கோ கோ விளையாடத்தெரியுமா மீண்டும் அதே குரல், நான் தனியாக உட்கார்ந்திருப்பதற்கு என்னைவிட அதிகம் வருந்தியவன்.

“தெரியும் ஆனா...... அடுத்து பார்கலாம் என்று மறுபடியும் முகம் பார்க்க்கூடத் தோனாமல் கிட்ட்த்தட்ட விரட்டிவிடும் தோனியில் சொல்லி அனுப்பினேன்.

மழையில் நினைந்து மைதானம் பாதி சேராகவும், மிச்ச பாதி முட்புதர்களாகவும் இருக்க, ஆத்திரத்தின் பங்காளி, முட்டிக்கொண்டு வர, வேறு வழியின்றி முட்புதருக்குள் சென்று, செடி கொடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கும் வேலையில், ப்ப்ப்ப்பீபீபீபீபீபீ.. ஒரு விசில் சப்தம் கேட்டு, வந்த ஒன்னுக்கு பாதியில் வந்த பாதையில் திரும்பி விட, எவண்டா அவன்னு திரும்பி பார்த்தா, விளையாட்டு வாத்தியார்.

காரடி மாட சாமி சிலை பக்கத்துல, அருவா இல்லாத அய்யனார் சாமி மாதிரி நின்னுகிட்டு அவர் நிக்கிற இடத்துக்கு வரச்சொன்னார். அவர் விசில் ஊதுன ஊதுல, பய்ந்து போயி ஆட்டுன ஆட்டுல, பேண்டுல எல்லாம் ஈரம் ஆகிடிச்சு. அப்படியே அவர்கிட்ட போன போது, காதை பிடிச்சு திருகிகிட்டே “இது மைதானமா இல்ல ஒன்னுக்கு போற கக்கூஸான்னு கேட்டார்.

“மைய்ய்ய்ய்ய்ய்தாஆஆஆஆனம்ம்ம்ம்ம்ம்ம்ம் னு அழுதுகிட்டே சொல்ல

எல்லா மாணவர்களும் பார்துக்கொடு இருக்க, மீண்டும் அதே குரல்

“சார் இவன் புது பையன், இன்னைக்குத்தான் வந்திருக்கான், அவனுக்கு தெரியாதுன்னு எனக்காக பரிந்து பேசி என் காதையும் என்னையும் காப்பாற்றினான். அவன் மட்டும் அந்த நேரத்துல அங்க வரலன்னா, அன்னைக்கு என்காதை சாப்பாடு கொண்டுபோன டிபன் பாக்ஸ்ல தான் கொண்டுவந்திருக்கனும்.

கண்கள் முழுவதும் கண்ணீர் இருக்க, அப்பதான் பார்த்தேன் அவன் முகத்தை.

சத்திய சீலன், என் நண்பன்.

ஏதாவது ஒரு நண்பனுடைய பிரிவு, நம்மளை உருத்திக் கொண்டே இருக்கும். எனக்கு இவனுடைய பிரிவு.

இரண்டு வருட பழக்கம் மட்டும் தான். அவனுடைய குடும்ப சூழ்நிலையால் அவனால் படிப்பைத் தொடர முடியவில்லை. இன்னும் என்பள்ளி நண்பர்களைப் பார்கச் செல்லும் போதெல்லாம் மீண்டும் அவனை பார்த்துவிட மாட்டோமா என்கின்ற ஆவலில் என் கண்கள் அவனைத் தேடிக்கொண்டே இருக்கும்.

இரண்டு வருட பழக்கத்தை புதுபித்துக் கொள்ள, 15 வருடமாக தேடிக் கொண்டிருப்பதிலிருந்தே புரிந்துவிட முடியும், அவன் எப்படி என்று, தனியாக லிஸ்ட் போட தேவையில்லை.
பிப்பிரவரியில் என் கல்யாணத்திற்கு எந்த விலை கொண்டும் அவனை அழைத்து வந்துவிட வேண்டும் என்பது என் ஆசை. (இன்ஷா அல்லாஹ்)



தோல்வியில் துவண்டால்
தோள் கொடுக்க ஆயிரம் தோழன் உண்டு.
தோல்வியை தோற்கடிப்போம்
தோழனின் துணைகொண்டு.
----------------------------------------------------------------------நட்புடன்-யாஸிர்

2 கருத்துகள்:

  1. இந்த பதிவ படிச்சுட்டு அபிப்ராயம் சொல்லலன்னா நான் இந்த பேர வச்சுக்கிட்டதுக்கே அர்த்தமில்ல.கல்யாணம் எப்பம்?.கேள்விக்கு பதில் சொல்லாம வேலைக்கு சேரணும்னு வைராக்கியமா இருந்து வேலையில சேர்ந்தது மாதிரி சத்தியசீலனை பார்க்கணும்னு வைராக்கியம் வையுங்க.command பகுதியில இருக்க word verification ஐ எடுங்க.

    பதிலளிநீக்கு
  2. @சேக்காளி,

    மறுமொழியிட்டமைக்கு ரொம்ப நன்றி,
    கண்டிப்பா பத்திரிக்கையடித்தவுடன் வீடு தேடி வரும். அதற்கு முன் முகவரியை தெரியப்படுத்தவும்.
    நம்பிக்கையிருக்கின்றது சத்திய சீலனை கண்டுவிடுவேன் என்று. பிராத்திக்கவும்.

    அரை மணி நேரம் தேடியும், நீங்க சொன்ன word verification ஐ கண்டுபிடிக்க இயலாமைக்கு வருந்துகின்றேன். புது பையன் என்பதால், சத்திய சீலன் போல் எனக்கு உதவவேண்டி----யாஸிர்

    பதிலளிநீக்கு