புதன், மே 16, 2012

சைக்கிள் (மிதிவண்டி)


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக,

ஒரு சிறிய விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது, என் வீட்டு வாசல் படியில் என் சொந்தங்களுடன் சேர்ந்து ஒரு புது மிதிவண்டியும் என்னை புன்னகையுடன் வரவேற்றது. என் அக்கா பையனுக்காக வாங்கிய அந்த மிதிவண்டி, என் நினைவுகளை ஒரு மிதி மிதித்து சுமார் 23 வருடங்களுக்குப் பின்னால் தள்ளியது. இந்த காலத்து பசங்க எவ்வளவு கொடுத்து வச்சவங்க, சொந்தமாக ஒரு சைக்கிள் கனவு, ஆறாம் வகுப்பிலையே நிரைவேறிவிடுகின்றது. நாங்க ஆறாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு மணி நேரத்திற்கு சைக்கிளை வாடகைக்கு எடுக்க, சுமார் 3 மணி நேரமாவது, மணி அண்ணன் கடையில காத்துக்கிடக்கனும்.
ஒரு மணி நேரத்துக்கு எடுத்துவிட்டு, ஒரு 5 நிமிசம் கூடிவிட்டால் விடும் டோஸுக்கு பயந்து, பக்கத்து தெருக்களிலையே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கவேண்டும். 10 நிமிசத்துக்கு ஒரு தடவை அந்த வாடகை கடைக்கு போயி “மணியண்ணே, மணி என்ன? ன்னு கேட்டுக்கேட்டு ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் குறையில்லாமல் சுற்றி கொண்டு போயி நிப்பாட்டும் போது, என்னமோ நம்ம சொந்த வண்டிய, அடுத்தவங்கிட்ட சும்மா கொடுக்குற மாதிரியிருக்கும்.

கோடை விடுமுறையில, பொட்டப் புள்ளைங்க முன்னாடி சீன் காட்ட இந்த மாதிரி ஒரு மணி நேர மிதிவண்டிதான், நமக்கு உற்ற துணையாக இருக்கும். இரண்டு கைய விட்டு ஓட்டுரேன்னு சொல்லி, பல்ல உடச்சிக்கிட்டது, ஸ்பீடா போகிறேன் பாருன்னு, நேர போய் சாக்கடைக்குள்ள மூஞ்சி குப்புற விழுந்தது, கண்ண மூடிகிட்டு வண்டி ஓட்டுறேன் பாருன்னு, வடகம் ஊத்தி வச்சிருக்கும் பாய்களை நாசம் பண்ணுறதுன்னு, வாங்கிய வீரத்தழும்புகள் ரொம்ப, ரொம்ப அதிகம்.

சைக்கிள் செயின் கழண்டு போவது என்பது என்னமோ, அவன் பொண்டாட்டி தங்க செயின் கழண்டு காணாம போனமாதிரி ஒரு பீளிங்க் அந்த கடைக்காரன் கொடுக்குறத பார்க்கனுமே, அட அட அட....உலக நடிகர்கள் எல்லாம் ஒன்னா அவன் மூஞ்சில உக்காந்த மாதிரி, அப்படியிருக்கும். போனதடவ செயின கழட்டுனதால இந்த தடவை எனக்கு தரமாட்டான், அதுனால உன் பெயரசொல்லி வாங்கிட்டு வான்னு, பக்கத்துல இருக்குற நண்பனிடம் காசு கொடுத்து வாங்கிவரச்சொல்வது, அப்படி வாங்கிய வண்டியில, கடைக்காரன் நம்மகிட்ட நல்லா ஏமாந்துவிட்டான் என்ற தெனாவட்டுல, சிரிச்சிக்கிட்டே வண்டிய ஓட்டிக்கொண்டு போனதை எல்லாம் எப்படி நமக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடிகிறது!!!
இப்படியே வருடங்கள் உருண்டோடி, எங்க வீட்டுக்கும் சொந்தமாக ஒரு சைக்கிள் வந்து நின்றது. சின்ன வண்டிகளிலேயே பழக்கப்பட்ட நமக்கு பெரியவண்டியின் மோகம் ஆர்பரிப்பது தப்பில்லை, ஆனால் அதற்கு கால் எட்டவேண்டுமே என்ற அறிவு, ஏதாவது கல்லில் கால்வைத்து ஏறும் போது தெரிவதில்லை, மாறாக இரக்கத்தில் வண்டி வேகமாகமெடுத்து சொல்லும்போது, காலை ஊனமுயலும் போது முடியாமல், நமக்கு மேல் வண்டி வந்து கிடக்கும் போது அறிவது அறியாமை.

அதிகாலை 4 மணிக்கு மதுரைக்கு வியாபாரம் விசயமாக அப்பாவை பஸ்டாண்டில் விடுவதற்கு உடன்பிறப்புகளுக்குள் நிகழும் நான், நீ போர் இரவில் ஆரம்பித்து, முடிவும் நள்ளிரவில் கிடைத்துவிடும். அப்பாவை விட்டுவிட்டு வண்டியை திருப்பி எடுத்துக்கொண்டு வரும் வழியில் நாய்களின் பொதுக்கூட்டம் நடக்கும், “ஆஹா இப்படியே நாம போனோம்னா, நாய் நம்ம காலை கடிச்சுடுமேன்னு பயந்து, வேகமா வண்டிய ஓட்டி, நாய்க்கு பக்கத்தில் வந்தவுடன், காலை தூக்கி ஹாண்ட்பாரில் வைத்துக் கொண்டு எஸ்கேப் ஆவது என்னமோ, எண்கவுண்டரில் இருந்து எஸ்கேப் ஆன நிம்மதி.
எங்க ஊருல ஒருத்தரு இருந்தாரு, கிட்டத்தட்ட எங்களுக்கு அப்ப அவர்தான் சக்திமான், ஸ்பைடர்மேன், ரெட், எல்லோ ரேஞ்சர்.... எல்லாமே. அவர் ஒரு கையில பத்து பைசா பீடியிருக்கும், இன்னொரு கையில ஒரு சைக்கிள் அவர் தோளில் தொங்கிகொண்டிருக்கும். எனக்கு தெரிந்து சின்ன வயசுல நாங்க, தர்ஹா கொடிகட்டு யானைக்குப் பின்னால் போகிற அளவிற்குள்ள கூட்டம் அந்த சைக்கிள்காரருக்கு பின்னால் போகும். அங்க இங்க பார்பாரு, கொஞ்சம் கூட்டமான இடத்துல தோளில் கிடக்கும் சைக்கிளை எடுத்து சர்கஸ் பண்ண ஆரம்பிப்பார். இரண்டு கைய விடுவது, ஒரு காலில் ஏறி சீட்டின் மேல் நிற்பது, பல்லால் சைக்கிளை தூக்குவது......... இப்படியா அவர் செய்யும் செயல்களை, பள்ளிகளை மறந்து பார்த்து கைதட்டி, மிட்டாய் வாங்க வைத்திருந்த சில்லரைகளை அள்ளி வீசுவோம்.

டபுள்ஸ் வைச்சு பழகுறதுக்கு, இந்த அடிமைகளை தேடி அலையிறதுக்கே நமக்கு போதும், போதும்னு ஆயிரும். அப்படியும் மீறி சிக்கினவனை வைத்து, அவனுக்கே நாம தொழில் படிக்குறோம்ங்குறது தெரியாம, டபுள்ஸ் வைச்சி பழகனும். ஒருத்தன கீழ தள்ளிட்டோம், அவ்வளவுதான், நியூஸ் புதிய தலைமுறை சேனலைவிட வேகமாக பரவிவிடும், அப்புறம் ஒருத்தனும் பக்கத்துல வரமாட்டான்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!!!!! ன்னு பாட்டுபாடிக்கிட்டே அக்கா பையனின் வண்டியில் ஒரு ரவுண்ட் போக ஆசைப்பட்டு வண்டிய கீழ இறக்கியவுடன், அதைப் பார்த்துவிட்டு, கெக்கபுக்க, கெக்கபுக்கன்னு என் மனைவி சிரிக்க, பாட்டை பாடியபடி, சைக்கிளுக்குப் பதிலாக கேவலமா எனைப்பார்த்து சிரிச்ச என் மனைவியை மிதி மிதின்னு மிதித்து என் ஆசையை தீர்த்துக்கொண்டேன்.

-------------------------------------------------------------------------------------யாஸிர். 

4 கருத்துகள்:

  1. பசுமையான நினைவுகளை நகைச்சுவையோடு மீட்டுத் தந்துள்ளீர்கள். படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தமிழ் மீரான்,
      மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
    நகைச்சுவை நனேறு!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு