புதன், நவம்பர் 07, 2012

அப்பன் சொன்ன கதை.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

ஒவ்வொருத்தனுக்கும் போறாத காலமுன்னு ஒன்னு வரும், சில பேருக்கு மட்டும் அந்தகாலம் போய்கிட்டும், வந்துகிட்டும் இருக்கும். அது தலைவிதியின் அடிப்படையிலானது. வரனும்னு இருந்தா வந்துதான் ஆகும், படனும்னு இருந்தா பட்டுத்தான் ஆகனும். இதுமாதிரியான போறாத காலத்துல, தன்னுடைய தலையில எழுதியிருக்கும் விதியைப் பற்றி எங்க அப்பா சொன்ன கதை இது.

முன்னொரு காலத்துல ஒரு மந்திரவாதி இருந்தான். அவனுக்கு மனிதர்களுடைய தலையெழுத்த பற்றி தெரிஞ்சிக்கனும்னு ரொம்ப நாளா ஆராய்சி பண்ணிக்கொண்டிருந்தான். இதற்காக அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று அங்க இருக்கும் மண்டை ஓட்டின் சில பகுதிகளை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பான்.

நிறைய நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, தலையில எழுதியிருப்பதை படிக்ககூடிய அளவிற்கு அவனுக்கு வெற்றிகிடைத்தது. அதை வைத்துக் கொண்டு, எல்லா மண்டை ஒட்டையின் தலை எழுத்தினை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொருத்தனுடய கஷ்டங்களும், சோதனைகளும் அவர், அவர் தலையில் எழுதியிருந்தது. எல்லா மண்டை ஓட்டின் இறுதியிலும் “கஷ்டங்கள் முடிந்தது” என்று எழுதியிருந்தது. ஆனால் ஒரே ஒரு மண்டை ஓட்டுல மட்டும் “கஷ்டம் இன்னும் இருக்கிறது” என்று எழுதியிருந்துச்சு.

மந்திரவாதிக்கு ஒரே குழப்பம், “என்னடா இது, நாம ஆராய்ச்சி செய்த மண்டை ஓட்டுகளிலேயே, இந்த மண்டை ஓட்டுடைய மனிதனுக்குத்தான் அதிக, அதிகமான கஷ்டம் இருந்திருக்கிறது, ஆனாலும் செத்தபின்னாடியும், கஷ்டம் தொடரும்னு எழுதியிருக்கே? அது எப்படி சாத்தியம்?. செத்த பின்னாடியும் இவன் என்ன கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறான்?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டு, விடை கிடைக்காமல் போக, சரி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்க வச்சி ஆராய்ச்சி பண்ணலாம் என்று வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.


வீட்டுல் இதற்காக ஒரு தனி அறையை உருவாக்கி, அதில் அந்த மண்டை ஓட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை சென்று ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

இவனுடய நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, மந்திரவாதியின் மனைவி இவன் மேல் சந்தேகப்பட்டு, இவன் இல்லாத ஒரு நாளில், பக்கத்து வீட்டுக்காரியை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் போய் பார்க்கும் போது, இந்த ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.

“என்னக்கா இது, இந்த மண்டை ஒட்டையையா இப்படி ரகசியமா பாதுகாத்துகிட்டு இருக்காரு? அப்படி யாருடையதா இருக்கும்?” என்று பக்கத்துவீட்டுக்காரியிடம் மந்திரவாதியின் மனைவி கேட்க.

“அடி போக்கத்தவளே, இது கூடவா தெரியல, இது உன் புருசனோட கள்ளக்காதலி மண்டஓடுடி, அதுனாலதாண்டி உன் புருசன் உனக்கு தெரியாம, அவ ஞாபகம் வரும் போதெல்லாம் பார்த்துட்டு, பார்த்துட்டு போறான், இது இருக்குற வரைக்கும் உன் வாழ்க்கை நல்லா இருக்காதுடி, பார்த்துக்கோ” என்று ஏத்திவிட.

மந்திரவாதியின் மனைவி, மண்டை ஓட்டை எடுத்து, உரலில் போட்டு, உலக்கையால் குத்து, குத்து என குத்துவதை அங்கு வந்த மந்திரவாதி காண, பதறிப்போய் மனைவியை தள்ளிவிட்டு, நொருங்கி கிடந்த மண்டை ஓட்டை ஒட்டவைத்து பார்த்தபோது, அதில் எழுதியிருந்தது “கஷ்டங்கள் முடிந்தது” என்று. அதுமாதிரித்தான் என் விதியும்.. நான் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்கனும்னு இருக்கு. அனுபவிச்சுத்தான் ஆகனும் என்று சொல்ல, கதையை கேட்டவன், என்னவோ அவன் தலையில் உலக்கையால் குத்துவாங்கியது போல ஃபீல் பண்ணிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

எங்கப்பா எப்போதும் தொழுதபின்பு பிராத்தனை செய்யும் போது, “இறைவா, எனக்கு சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுத்துவிடாதே” என்று கேட்பதற்கு பதிலாக “இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக” என்று பிராத்தனை செய்துகொள் என்றே கூறுவார்.

ம்ம்ம்ம்ம்.......எவ்வளவோ பார்துட்டோம், இத பார்திடமாட்டமா என்ன????????

“இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக"

-------------------------------------------------------------------------------------யாஸிர்.

1 கருத்து:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு