செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

ஒரு கடிதம் இன் இங்கிலீஷ்.

நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

பள்ளிக்கூட வாழ்க்கை முழுவதும் தமிழ், தமிழ், தமிழ் தான். ஆங்கிலத்துக்கும் நமக்கும், ஆகவே ஆகாது. என்ன மாதிரியே எங்க கிளாஸ்ல 45 பேர் இருந்தோம். என் கிளாஸ்ல மொத்த மாணவர்களும் 45 பேர்தான். தமிழ் அம்மாவைப் பார்த்தா சாஷ்டாங்கமா வணக்கம் வைப்போம், அதே நேரத்துல இங்கிலீஸ் சாரைப் பார்த்தா எரிச்சலா வரும், ஏன்னா அவருக்கு இங்கிலீஸ்ல தான் வணக்கம் சொல்லனும். இதனாலயே அவரு அப்படிக்கா வந்தா, நாங்க இப்படிக்கா ஓடிருவோம். வணக்கத்துல என்னடா வந்திரப் போகுதுன்னு நீங்க கேக்கலாம், ஆக்சுவலா எங்களுக்கு, “குட் மார்னிங்க்” காலையில சொல்லுறது என்பது மட்டும்தான் தெரியும், இந்த “குட் ஆஃப்டர் நூன்”, “குட் ஈவினிங்க்” எப்ப சொல்லனும்னே தெரியாது, இந்த குழப்பத்துல தப்பா சொல்லிட்டா, அம்டுத்தேன், சாரு, சார சாரயா உட்கார்ர இடத்துல எஸ்ஸே எழுதிடுவாரு. அரசாங்க ஆஸ்பித்திரியில் அரிசி, பழம், 500 ரூபாயும் வாங்கிட்டு வருகிற தோனியில எவனாவது இடுப்ப புடிச்சிக்கிட்டு, குனிஞ்சி நடந்து வந்தா, இங்கிலீஸ் சாரைப் பார்த்துட்டு வந்திருக்காருன்னு எண்ணிக்கிடனும். “தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு” இப்படியாக நாங்க நீட்டி நிமிர்ந்து முழங்குனதுக்கு காரணம் தமிழ் மேல் கொண்ட பற்று அல்ல, ஆங்கிலத்தின் மேல் கொண்ட வெறுப்பு.

ஷேக்ஸ்பியர் கையில கெடச்சா, செருப்பாலயே அடிப்பேன்னு, ஷூவ கழட்டி காட்டின காலம் அது. ஆங்கிலம் எல்லாம் பெரிய மேட்டரே இல்லன்னு சொன்ன ஒரு மகானிடம் (அப்ப அப்படித்தான் தெரிந்தாரு) “அண்ணே!, இந்த எஸ்ஸே (Essay), பொயட்டரி (Poet), பேரகிராஃப் (Paragraph) எல்லாம் நான் மக்கப்பண்ணிருவேன், ஆனா லெட்டர் எழுதுறது மட்டும் என்னால புரிஞ்சிக்கவே முடியல, அது மட்டும் புரிஞ்சு நல்லா எழுதிட்டா ஒரு 10 மார்க் கிடைக்கும், எப்படியாவது எனக்கு அதமட்டும் சொல்லிக்கொடுங்க” ன்னு கெஞ்சுவேன். “அடப்பாவி!!!!!!!!! ஆங்கிலத்துல ரொம்ப ரொம்ப ஈஸியானது லெட்டர் எழுதுறதுதாண்டா, வா நான் சொல்லிக்கொடுக்கிறேன்” ன்னு சொல்லி உட்கார வச்சு சொல்லிக்கொடுத்தாரு. “யாருக்கு எழுதனும்னு கேள்வியிலேயே இருக்கும், அத அப்படியே எடுத்து ‘டு’ ல எழுது, ‘ஃப்ரம்’ ல உன்னோட விலாசத்த எழுது, இதுக்கே உனக்கு 5 மார்க் வந்திடும், அப்புறமா ‘ஹாய்’ னு ஆரம்பிச்சு நான் இங்க நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க, அங்க எல்லோரும் சுகமா? ன்னு எழுதிட்டு, மறுபடியும் கேள்வித்தாள்ல இருக்குற எது சம்பந்தமான விசயமோ அதை எடுத்து அப்படியே எழுதிரு. கடைசியில உங்கள் உண்மையுல்ல, அன்புடன்னு முடிச்சிடு, அவ்வளவுதான்”.

அது ஒரு மாதாந்திர தேர்வு, மொத்தம் 20 மார்க்குத்தான், ரெண்டே கேள்வி தான் ஒன்னு “எஸ்ஸே (Essay) ” அதுக்கு பத்து மார்க், இரண்டாவது “லெட்டர்” அதுக்கும் பத்து மார்க். எல்லா பரீட்சையைப் போலவும் நான் படிச்சிட்டு போன எஸ்ஸே (Essay) வரவில்லை. ஆனா அண்ணன் சொல்லிக்கொடுத்த லெட்டர் வந்திருந்தது. அவர் சொன்னமாதிரியே கேள்வித்தாளில் ‘யாருக்கு’, ‘என்ன காரணத்திற்காக?’ எல்லாம் அதுலேயே இருந்ததுகண்டு ஒரே மகிழ்ச்சி, அந்த கணம் அண்ணன் தெய்வமா தெரிஞ்சாரு. இனிமே இங்கிலீஸ் பரீட்ச்சைக்கு மட்டும் “அண்ணன் துணை” போட்டதுக்கு பின்னாடிதான் பரீட்சையே எழுதனும்னு எல்லாம் முடிவுபண்ணியாச்சு. அவர் சொன்னமாதிரியே, அனுப்புனர், பெறுனர், ஹாய், நீங்க நல்லா இருக்கீங்களா, நான் நல்லா இருக்கேன் எல்லாத்தையும் எழுதிவிட்டு, கேள்வித்தாளில் இருந்த காரணத்தையும் அப்படியே எழுதி, அன்புடன் எல்லாம் போட்டுவிட்டு லெட்டரை முடித்தேன்.

பரீட்சை முடிச்ச பின்பு, நண்பர்களோடு சேர்ந்து, எழுதுனதுக்கு மார்க் போட்டு பார்க்குறது வழக்கம், “உனக்கு எத்தணடா வரும்?” என்று நண்பன் கேட்க “எஸ்ஸே நம்மளை கவுத்திருச்சுடா, இருந்தாலும் சங்கர சுப்புவைப் பார்த்து அப்படி இப்படின்னு எழுதியிருக்கேன், அதுக்கு 8 மார்க் கிடைக்கும், அப்புறம் லெட்டர் சூப்பரா எழுதியிருக்கேன் அதுக்கு கண்டிப்பா 10 விழுந்திரும், அது குறையுறதுக்கு சான்ஸே இல்ல. எப்படியும் 20க்கு 18 மார்க் வரும்டா” ந்னு பெருமையா சொன்னேன். “டேய்.........18ன்னா 11001நூற்றுக்கு 90 மார்க்காடா?” ன்னு ஏங்கிப்போயிட்டான் என் நண்பன். ‘உனக்கு இங்கிலீஸ்ல மட்டும் மார்க் வராது, இப்ப அதுலயும் 90ன்னா இந்த தடவ நீதாண்ட முதல் ரேங்க், பாவம் ஜேம்ஸ் இந்த தடவ இரண்டாவது இடத்துக்கு போயிறுவான்” என்று மற்றொரு நண்பனின் பக்கவாத்தியம் வேறு. ஹைய்யோ, ஹைய்யோ ஒரே குஷ்டமப்பா!!!!!!!

மறுநாள், மதியம் கணக்கு பரீட்சை, பெரும்பாலும், மதியம் பரீட்சை இருந்தால், காலையில வகுப்புகள் நடத்தாமல், மதிய பரீட்சைக்கு படிக்கச் சொல்லிருவாங்க. ஆனா அன்று, ஆங்கில வகுப்பு இல்லை என்றாலும் கூட, அறிவியில் வகுப்பை கடன் வாங்கிவிட்டு, இங்கிலீஸ் சார் நேற்று நடந்த பரீட்சை பேப்பரை திருத்திக் கொண்டு வந்தார். பேப்பர் கொடுக்கப் போகிறார் என்றது எனக்கு ஆர்வம் அதிகமாகியது, காரணம் நேற்று ஜேம்ஸ்ஸும் மார்க் போட்டுப்பார்த்த போது அவனுக்கும் 90 மார்க் வந்தது. யார் முதல்மார்க் என்று காண கிளாஸே காத்திருந்தது. அவர் எப்போதும் கடைசி மார்க் எடுத்தவர்களில் இருந்துதான் ஆரம்பிப்பார். முதல் மார்க் வாங்கியவனுக்கு கடைசியாகத்தான் கிடைக்கும். சார் எப்போதும், 70 மார்க்குக்கு மேல் வாங்கியவர்களை ஒன்றும் செய்வதில்லை. அதற்கு கீழ் வாங்குபவர்களுக்கு மார்க்கின் அடிப்படையில் குண்டியில் வீக்கம் இருக்கும்.

45 பேர்களில் 40 பேருக்கு பேப்பரை கொடுத்தாச்சு அதில் 35 பேருக்கு கு. வீங்கியும் போனது. அதுவரையில், எனது, ஜேம்ஸ் மற்றும் இன்னும் மூன்று பேர்களின் பேப்பர் வரவில்லை. அடுத்து அடுத்து மற்ற மூன்று பேர்கள் வர, இறுதியாக எனது பேப்பரும், ஜேம்ஸ் பேப்பரும் பாக்கி, அந்த நேரத்தில் ஆபிஸ் பாய் வந்து தலைமை ஆசிரியர் கூப்பிடுகிறார் என்று சொல்ல, சார் பேப்பரோடு 5 நிமிடத்தில் திரும்ப வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். அவ்வளவுதான், ஒற்றுமையா இருந்த கிளாஸ் இரண்டாக பிரிந்தது, பாதிப்பேர் ஜேம்ஸ்ஸுக்காகவும், மீதிப் பேர் எனக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக கொடுத்தவனின் மார்க் 85, எப்படி பார்த்தாலும் நாம 85க்கு மேலதான். பார்த்திரலாம் இந்த பாட்ஷாவா இல்ல அந்த ஆட்டணியா ன்னு கிளாஸ்ஸே ஆவலாக இருந்தது. சார் வந்தார்.

அடுத்து யார் பேர சொல்லப்போகிறாரோ அவன் தோல்வி, “ஆண்டவா, உனக்கு 25 பைசா நத்தஹர் பள்ளிவாசல் உண்டியல்ல போடுறேன், கடைசி நானாகத்தான் இருக்கனும்” என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டிருந்தேன். அடுத்து சார் கூப்பிட்ட பேர் ‘ஜேம்ஸ்’.

இறைவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உன் கருனையே கருணை, என்று இறைவனுக்கு நன்றி கூறினேன். கிளாஸே என்னைப் பார்த்து உதட்டை மூடி, தலையை வலதுபுறமாக மேல் நோக்கி தூக்கி ‘ம்ம்ம்ம்” என்று சொல்ல, அடடா என்ன ஆனந்தம், பேரானந்தம் அது.  ஜேம்ஸ் பேப்பரோடு என் பக்கத்தில் வந்தான், அவனது மார்க் 92. அப்படின்னா நாம 92க்கும்  மேல. "உன்னால மட்டும் எப்படிடா யாஸிர்னு"  மனசுக்குள்ள நினச்சுக்கிட்டேன்.

இன்னும் ஒரே ஒருத்தனுக்குத்தான் பேப்பர் வரல இல்லையா, யாரு அது?” ன்னு சார் கேட்க, ஒட்டுமொத்த வகுப்புமே “யாஸிர்” ன்னு கத்துச்சு. அது எனக்கு என்னமோ குத்துச்சண்டயில கு.சண்டை வீர்ர் மேடைக்கு வரும் போது அவர் பேரை சொல்லுவது போல “யாஸிர்.....யாஸிர்......யாஸிர்......” என்று கேட்டது. நான் போய் சார் முன்னாடி புன்னகையுடன் நின்றேன்.

வட்டு எறிதலில் எப்படி உடம்பை வழைத்து வட்டை எறிவார்களோ, அதே மாதிரி, உடலை வழைத்து கையை முறிக்கிக்கிட்டு ஓங்கி ஒரு அறை செவில சேத்து உட்டாரு. “அப்பத்தான்ன்ன்ன்னு” அஞ்சு பெஞ்ச் தாண்டி பறந்து போய் விழுந்தேன். விழுந்தவன் காதை புடிச்சு தூக்கி, பிரம்பால பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திட்டாரு. மற்றவன் குண்டி எல்லாம் ‘சுமால் (Small)” “மீடியம்(Medium)” “லார்ஜ் (Large)” லேவலுக்கு வீங்கி இருக்க எனது பெட்டக்ஸ் மட்டும் “XXL” “XXXXXL” லெவலுக்கு வீங்கிடுச்சு.

ஏண்டா, சாலை, தெருவிளக்கு வசதி கோரி கலெக்டருக்கு, லெட்டர் எழுதுடாண்ணா, ஹாய், ஹவ் ஆர் யூ, அயம் ஃபைன் (hi, how are you, I am fine) னாடா எழுதுற, காவாளிப்பயல! உனக்கு கலெக்டர் குடும்பத்தோட அவ்வள்வு நெருக்கமோ “ஹவ் இஸ் யுவர் பேமிலி” (how is your family) ன்லா எழுதியிருக்க” என்று சொல்லி சொல்லி அடி பிருத்திட்டாரு.

இதெல்லாம் மன்னிச்சிருவேன், ஆனா.......

அய்யய்யோ இன்னுமா???????? ன்னு மனசுக்குள்ள நினச்சிக்கிட்டு, அடுத்த ரவுண்டுக்கு ரெடியானேன்.

எல்லாத்தயும் மன்னிச்சுருவேன், ஆனா கடைசில நீ எழுதுனதத்தாண்டா என்னால தாங்கிக்க முடியல” ன்னு சொல்லி அடுத்த 15 நிமிசம் நான் ஸ்டாப் கொண்டாட்டம்......

புரியுது, புரியுது......உங்க ஆர்வம் எனக்கு புரியுது. அந்த கடைசி வார்த்தை தானே....

Yours Lovely

Yasir

11 கருத்துகள்:

  1. Excellent writing. Couldn't control my laugh at the end. very nice

    Thanks
    Sakthi

    பதிலளிநீக்கு
  2. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சிரிப்பு தான் போங்க...yours lovely ரொம்ப அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி, உண்மையிலே நான் வேற ஒரு மேட்டரத்தான் எழுத நினைத்தேன், இங்கிலீஸ பற்றி சின்னதா ஒரு செய்தி சொல்லலாமுன்னு எண்ணி எழுதும் போதுதான் செய்திதாள் அளவுக்கு வந்திடுச்சு.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாக்கியம் ராமசாமியா???????. நான் பாக்கிய ராஜ்ன்னு வாசிச்சிட்டேன். நல்லவேளை முருங்கைக்காய் பற்றி பதிவு போடுவதில் இருந்து விடுதலை. நன்றிணா மறுமொழியிட்டமைக்கு.

      நீக்கு
  4. நண்பா யாசிர் first year கல்லூரி விடுதியில் உன்னோடு பேசியது போல் இருந்தது.மற்றவர்களை இப்படி இயல்பாக சிரிக்க வைபதற்கே நீ நூறு வருடங்கள் வாழ வேண்டும்.ஒரு கட்டுரையை தொடங்கியவுடன் அதை முடிக்கும் வரையில் வாசிப்பவர்களை
    கொண்டு செல்வது உனக்கு மிக எளிதாக வருகிறது.வாழ்த்துகள் நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி விடுங்கடா. 30வது வயசுலேயே கொலஸ்ட்ரால் வந்திருச்சு. மறுமொழிக்கு ரொம்ப நன்றி.

      நீக்கு