நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
இதப் பற்றித்தான் பதிவு எழுதனும்னு முடிவு பண்ணி, எழுத
ஆரம்பிச்சு, எழுதி முடித்தபின்னாடி படிச்சிப்பார்த்தா, வேறு ஒரு பதிவாக இருக்கும்.
மேல இருக்குற தலைப்பை வைத்துத்தான் முன் இரண்டு பதிவுகளையும் எழுத ஆரம்பித்தேன்,
படிக்கிறவனுங்களும் நம்மளமாதிரி பெரிய்ய விஞ்ஞானிகளாகத்தான் இருப்பார்கள் என்று
எண்ணி (இல்ல முடிவே பண்ணி) எளிதாக புரிந்துகொள்ள ஒரு சில உதரணங்களையும்
சம்பவங்களையும் எழுதும் போது, அதுவே ஒரு தனி பதிவாக போடவேண்டிய
கட்டாயமாகிவிடுகிறது.
காலேஜ் படிக்கும் போது, சனிக்கிழமை மட்டும் ‘ஃப்பிரி நைட்’,
அதாவது எங்க வேண்டுமானாலும் மேய்ந்துவிட்டு இரவு 12.00 மணிக்குள் ஹாஸ்டலுக்கு
வந்து விடவேண்டும். மற்ற நாட்களில், இரவு 8.00 மணிக்குள் ஹாஸ்டலில்
இருக்கவேண்டும். சனிக்கிழமை இரவு ஹாஸ்டலில் போடும் தக்காளி சாதத்துக்கு பயந்தே,
பலபேர் ‘பகவதி’ படத்துக்கு பல வாரம் போயிருக்கிறோம். எவ்வளவு மோசமா இருக்கும் அந்த
தக்காளி சாதம் என்பது பகவதி படம் பார்த்தவனுங்களுக்கு நல்லா புரிஞ்சியிருக்கும்.
அந்தமாதிரியான கஷ்ட காலத்தில்தான், ஒரு பாய் பிரியாணி கடையின் அறிமுகம் கிடைத்தது.
விருதுநகர் பழைய பஸ்டாண்ட் (அப்போ, அதுதான் புது பஸ்டாண்ட்)
காம்பவுண்ட் சுவரை ஒட்டிய கடை அது. ராஜஸ்தான் மார்பிள் தரை, குளு, குளு ஏ.சி,
சாப்பிடும் டேபிள் கிரானைடில் நம்ம முகமே தெரியும், அதுக்கு போடப்பட்ட சேரில்
உட்கார்ந்தால் ஒரு அடி கீழே போகுற அளவிலான குஷன் இருக்கும். பரிமார வைக்கப்படும்
தட்டு ஒவ்வொன்றும் முழங்கை அளவு விட்டமுடயது, ரம்மியமான அலங்கார விளக்குகள்,
பின்புறம் இளையராஜாவின் மெலோடி பாடல்களின் இசை........ என அசிங்கமாக இல்லாமல்,
அழகான கையேந்திபவன் அது.
சுத்தம், சுகாதாரம் என்றால் அங்க வந்துதான் கத்துக்கனும்,
“பாய் ஒரு பிளேட் 65” ன்னு சொன்னவுடனே, வேட்டியதூக்கிகிட்டு அரிப்பெடுத்த
தொடைப்பகுதியை சொறிஞ்சிக்கிட்டே, சிக்கன் 65யை தராசில் எடைப்போடும் காட்சி
இருக்கே, அட, அட, அட பம்பாய் படத்துல மனிஷா கொய்ராலா ஓடிவரும் காட்சியை விட படு
கவர்ச்சியா இருக்கும். ஹாஸ்டல் சாப்பாட்டை திண்ணு திரிஞ்சபயலுகளுக்கு அப்ப எது
கிடச்சாலும் தேவாமிர்தம்தான். அந்த நேரத்துல ∑(சுத்தம் + சுகாதாரம்)⅔ ங்குற பார்முலா எல்லாம் எடுபடாது. அப்போ எங்களுக்கு
இருந்த ஒரு பிரச்சனை என்னவென்றால், உட்கார்ந்து சாப்பிடும் இடம்தான். பாய் கடையில
பிளாஸ்டிக் சேர் மட்டும்தான் இருக்கும், அந்த சேரில் உட்கார்ந்தால் பாதி “கு”
வெளியிலதான் இருக்கும். ஒரு பிளேட் வெறும் பிரியாணி வாங்கி சாப்பிடுறவனுக்கு
பரவாயில்லை, ‘கு....’ ய சேர்ல வச்சி, பிரியானிய கையில வச்சி திண்ணிட்டு போயிரலாம்.
ராஜ்கிரண் ஸ்டைல்ல சாப்பிடுற நமக்கு அது எல்லாம் ஒத்துவராது.
ஹாஸ்டல்ல டைனிங்க் டேபிலில் சாப்பிட்ட எங்களுக்கு,
கொஞ்சம் சங்கூச்சமா இருந்தது. பிரியாணியை கையில வைத்திருந்தால், சிக்கன் 65 யை
எங்க வைப்பது?, பக்கத்துல இருக்குறவனிடம் கொடுத்தால் திருப்பி கொடுப்பான், ஆனா
தட்டுமட்டும்தான் இருக்கும், சிக்கன் 65?. இந்தமாதிரி பல கேள்விகுறிகளுக்கு பதிலாக
தியேட்டர்கள் கிடைத்தன. அப்பவெல்லாம், விஜய், அஜித் போட்டி போட்டுக்கொண்டு
மாசத்துக்கு ஒரு படம் விட்டுக்கொண்டிருந்தார்கள். முதல்வாரம் மட்டும் பயங்கர
கூட்டமாக இருக்கும், இரண்டாவது வாரம் எங்களமாதிரியான ஆட்களுக்கு பிரியாணி
திங்குறதுக்குத்தான். ‘அஜித். விஜய் படங்கள் ரிலீஸ் ஆன முதல்வாரத்துக்கு எங்க
போவீங்க?’ ன்னு ஒரு டவுட் வரும், வரணும். அந்த ரெண்டு பேரும் மாசத்துக்கு ஒரு படம்
விட்டா, இராம. நாராயணன் வாரத்துக்கு ஒரு படம் விட்டுக்கொண்டிருந்தார், ஸோ, முதல்
வாரம் அங்க ஈ அடிக்க ஆள் இருக்காது, அதுனால அந்த தியேட்டரில்தான் விருந்து.
ஒரு சமயம், பதிவா போகுற எல்லா தியேட்டர்களிலும்
கூட்டம், தேடி திரிஞ்சு ஒரு அதிக கூட்டமில்லாத தியேட்டருக்கு போயாச்சு, அவசரத்துல
போஸ்டர பாக்காம டிக்கெட் எடுத்து உள்ளேயும் போயாச்சு. படம் போட ஆரம்பிக்கவும்,
நாங்க பார்ஸலை ஓப்பன் பண்ணவும் கரெக்ட் டைமிங். ஒரு வாய் சோற்றோடு நிமிர்ந்து
பார்த்தா, படம் பார்க்க வந்தவங்க ஸ்கிரீனை விட்டு விட்டு எல்லோரும் எங்களையே
பார்த்தாங்க, எங்களுக்கு முதலில் ஒன்னுமே விளங்கவில்லை. அப்புறமா என்னடான்னு
பார்த்தா தியேட்டர்ல சாமி படம், சாமி படம் என்றால் ஷகீலா நடித்த சாமிபடம் இல்லை,
இது உண்மையான சாமி படம், ஏதோ அம்மன் படம், கூட்டம் குறச்சலாக இருந்தாலும்
எல்லோரும் குடும்பத்தோட விரதமிருந்து படம் பார்க்க வந்திருப்பானுங்க போல, பிரியாணி
வாசனையை நுகர்ந்ததும், கண்ணு சிவக்க பார்க்க, தியேட்டரில் அம்மன் ஈட்டியோட
குளோசப்ல காட்டுனது எல்லாம் ஒன்னாவந்து மிரட்ட ஆரம்பிச்சதனால, அங்க இருந்து
எஸ்கேப். அதுல ஒருத்தன் வாயில பிரியாணிய வச்சிக்கிட்டே “நாம வேணும்னா, வெஜ்டபிள்
பிரியானின்னு சொல்லுவோமா?” ன்னு சொன்னத எல்லாம் மறக்கவே முடியாது.
நவ் பேக் டு பாய் கடை
அந்த பாய்யிடம் 3 பெரிய அண்டா இருக்கும்,
அதுக்கப்புறம் இரண்டு சிரிய அண்டா இருக்கும். பெரிய அண்டா பிரியாணிக்கு, சின்ன அண்டா
ஒன்று சிக்கன் 65, இன்னொன்னு மட்டன். ‘அஸர்’ எனப்படும் 4.00 மணி தொழுகைக்கு
அப்புறமாக கடை போட்டு, பத்து மணிக்குள் அனைத்தையும் விற்று காலி செய்துவிடுவாராம்.
பாய் ரொம்ப பேசவே மாட்டார். ஸலாம் சொன்னால், ‘வ அலைக்கும் ஸலாம்” மட்டும் சொல்ல
வாய் திறப்பார். என்ன வேணும், எவ்வளவு வேணும் என்பதைக்கூட நாமதான் சொல்லனும். பாய்
பீஸ் அதிகமா வையுங்க என்று சொன்னாலும், பீஸ் அதிகமா வேண்டாம் என்று சொன்னாலும்
பாய் ரியாக்சன் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
ஸலாமுக்கு திரும்ப ஸலாம் சொல்வதனால், பாய் என்னமோ
எங்கிட்டமட்டும்தான் பேசுறாரு, அதுவும் அரபில என சுத்தியிருக்கும் கூட்டம்
நினைத்துக்கொண்டிருந்த விஷயமே எனக்கு ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. பாய்யிடம்
மூனு வெரைட்டியான பிரியாணி இருக்குது, நான்கு சிக்கன், மூன்று மட்டன், இரண்டு பீப்
பிரியணி வாங்கலாம் என, 250 கிராம் சிக்கன் 65, 250 கிராம் மட்டன் பிரைக்கும்
சேர்த்து ஆர்டர் கொடுக்கப்பட்டது. தியேட்டரில் போய் பிரித்துப்பார்த்தால் எல்லாம்
ஒரே ஐட்டம். அதுக்கப்புறமாகத்தான் தெரிந்தது, பாய் 3 அண்டா பிரியாணி எல்லாமே
ப்பீப் பிரியாணி என்று. மூச்சுவாங்கி ஆர்டர் சொல்லும் போது கூட மனுசன் வாய் திறந்து
ஒன்னும் சொல்லவே இல்லை.
பாய் பிரியாணியைப் பற்றி, அவர் பீப் கூட போடுவது
இல்லை பன்னி கறிதான் போடுகிறார் என்றும், நாய் பிரியாணிதான் போடுகிறார் என்றும்
தகவல் பரவ கொஞ்ச நாள், பாய் கடை பக்கம் தலைவச்சி படுக்கவில்லை. அந்த வீராப்பு
எல்லாம் வெறும் மூன்று வாரம்தான் அதுக்கப்புறம் எல்லோருக்கும் பாய் கடையை தேட
ஆரம்பித்துவிட்டது. ‘பாய் ஒரு முஸ்லீம், கண்டிப்பா பன்னி போடமாட்டார்”, “பாய்
நல்லவரும் கூட அதுனால நாய் கறியும் போடமாட்டார்” என நாங்களே முடிவு செய்து
மறுபடியும் படையெடுக்கத் துவங்கினோம். காலேஜ் எல்லாம் முடிந்து, விருதுநகரிலேயே
கொஞ்ச நாளைக்கு வேலை கிடைத்தது. அந்த நாட்களில் வந்த ரமலான் நோன்பு அதிகாலை
சாப்பாட்டை பாய் கடையில் இரவே வாங்கிவைத்துக்கொள்வேன்.
“பாய் ஸகருக்கு (அதிகாலை உணவு) சாப்பிடுவது,
கெட்டுப்போவதுல்ல?” என்று கேட்டால்.
வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் தலை ஆட்டுவார். (கெட்டுப்போவாதாம்மா)
“சாப்பிடுவதுக்கு நல்லா இருக்குமுல்ல?” என்று
மறுபடியும் எதையாவது கேட்டால்
மேலிருந்து, கீழாக தலையை ஆட்டுவார், அதிலிருந்து
‘நல்லாத்தான் இருக்கும்’ என சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பாய்கடை
பிரியாணியின் ருசியைப் பற்றி சொல்லவே இல்லையே? என்று நீங்க கேட்டீங்கன்னா, வருசம்
ஒன்பது ஆகியும் நாடுவிட்டு நாடுவந்து இந்த பதிவை எழுதும் போதுகூட வாய் ஓரமாக வடிகிற
என் எச்ச்சி சொல்லும் அதன் ருசியை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
அவருக்கு நினைத்தாலே இருக்கும் (ஜெயப்பிரதா) படம் ரொம்ப பிடிக்குமோ...?!
பதிலளிநீக்கு"நினைத்தாலே இனிக்கும்" ன்னு ஒரு படம் கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன நினைத்தாலே இருக்கும்?. என்னமோ போங்க, நம்ம பாய்க்கு ச.தேவிதான் பிடிக்கும் போல, அவரு கடைக்கு எதிரே என்னமாதிரியான பட போஸ்டர் ஒட்டினாலும் பெரிய அளவுக்கு எந்த ஜில்பான்ஸும் இருக்காது.
நீக்கு//அதுல ஒருத்தன் வாயில பிரியாணிய வச்சிக்கிட்டே “நாம வேணும்னா, வெஜ்டபிள் பிரியானின்னு சொல்லுவோமா?” ன்னு சொன்னத எல்லாம் மறக்கவே முடியாது. //
பதிலளிநீக்குசிரிப்பு வராமல் இருக்காது!!!
// திரும்ப ஸலாம் சொல்வதனால், பாய் என்னமோ எங்கிட்டமட்டும்தான் பேசுறாரு, அதுவும் அரபில என சுத்தியிருக்கும் கூட்டம் நினைத்துக்கொண்டிருந்த விஷயமே எனக்கு ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. //
நீக்குஉங்கள அரபு நாட்டு ஷேக்குன்னு நினைச்சிருப்பாரு!!!
//வருசம் ஒன்பது ஆகியும் நாடுவிட்டு நாடுவந்து இந்த பதிவை எழுதும் போதுகூட வாய் ஓரமாக வடிகிற என் எச்ச்சி சொல்லும் அதன் ருசியை.//
நீக்குஎல்லோரும்தான் சிற்றுண்டி சாலை பற்றிய பதிவுகள் போடுகிறார்கள். நீங்களும் போட்டுட்டீங்க. பாய் கடை
இப்பவும் அங்கே இருக்கா? அட்ரஸ் போடலையே?
அரபு நாட்டு ஷேக்குன்னு நினைச்சானோ, இல்ல அரக்கோணட்து பேக்குன்னு நினைச்சானோன்னு எல்லாம் தெரியாது, பிரியாணிக்கு காசு கொடுத்தா சரிதான்னு விட்டுவேன்.
நீக்குஇண்ட்லி, தமிழ்மணம் எதுலயும் சேர்க்கலையா யாசிர்?
பதிலளிநீக்குஅவங்க சேர்க்கமுடியாத அளவுக்கு மொக்கையாவா எழுதுறேன்?.
நீக்குநான் ஏற்கனெவே இணைந்திருக்கின்றேன்.