வியாழன், ஜூன் 26, 2014

ஏங்கித் திரிந்த காலம்.

ஊர் கூடி தேர் இழுத்து தெருவுல விடுவது போலவே, ஊர் கூடி முடிவெடுத்து “இங்க பாருல, உ மாமி பொண்ணுக்குத்தான் நீ புருசனா வேலை பார்க்கப்போற” என நிச்சயித்து தெருவில் விட்ட நேரம். திக்கு திசை தெரியா தி.மு.க காரன் போல அப்போது நான் இருந்தேன். கையில் துண்டு போட்டு விரல் பிடித்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு உடன்பாடு ஏற்பட்டு உருவான பந்தம். உருக்குலையாமல் மேல் சொன்ன டயலாக்கிற்கு தைரியமாக தலையாட்டி வைத்திருந்தேன். அன்று ஆட்டிய தலைதான் இன்னும் ஆட்டி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தை எவளிடமிருந்தாவது இன்று கேட்டிறாதா, நாளை கேட்டிறாதா என ஏங்கித் திரிந்த காலம். அந்த ஏக்கத்தினை வீட்டிலிருந்தோர் எட்டிப் பார்த்திருந்திருக்க வேண்டும், இனி விட்டால் ஏர்வாடிதான் என்றே எத்தனித்திருக்க வேண்டும். அதன் விளைவே துண்டுடன் கூடிய பேச்சுவார்த்தை. “ஈக்கினிசா” என்ற பட்டப்பெயருடன் இஞ்சினியரான தன் பையனுக்கு பெண் கொடுக்க பட்டத்து ராஜா பரிவாரங்களுடன் வருவார் என வாசலில் எட்டி எட்டி பார்த்து ஏமாந்து போன கதையை ஈஸ்ட்மெண்ட் கலரோடு பிளாஸ்பேக்கில் சென்று படம் காட்ட விருப்பமில்லை.

டிசம்பரில் ஒப்பந்தமான அக்ரிமெண்ட் படி குழி தோண்ட ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் இரண்டு மாதம் கழித்து தோண்டிய குழியில் தள்ளிவிட்டு மூடினார்கள். முன்வழுக்கை பின்னோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பொண்ணுக்காக யாசகம் செய்யாததுதான் குறை. முப்பது வயது அல்மோஸ்ட் முதிர்கண்ணன் ரேஞ்சுக்கு போன எனக்கு தோண்டிய பள்ளம் அழகானதா, அம்சமானதா என்று யோசிக்க நேரமில்லை, விழுந்துவிட்டேன்.

கல்லூரி முடித்து பெங்களூருக்கு வேலைக்கு சென்றிருந்த நேரம், யாரும் என்னை முஸ்லீமாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை. “எங்கம்மா சத்தியாமா நான் முஸ்லீம், முஸ்லீம்” என முக்கிக் கொண்டிருந்தாலும் யாரும் நம்பத்தயாரில்லை. உறுதிப்படுத்த ஒரு வழி இருந்தது ஆனால் அதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களின் சந்தேகத்திற்கு இரண்டு காரணங்கள் ஒன்று எனக்கு உருது தெரியாமல் இருந்தது, இரண்டாவது எனக்கு கல்யாணமாகமல் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பார்த்த முஸ்லீம் ஆண்களுக்கு 22 வயதில் குறைந்தது 2 வயது குழந்தையாவது இருக்குமாம். உருது மொழி பற்றி ஏதோ சொன்னார்கள் உருப்படியாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை (நமக்கு அதுவா முக்கியம்).

22 வயதில் கல்யாணம் என கேட்டவுடன், முஸ்லீமாக பிறந்ததற்கு பெருமையாக இருந்தாலும், தப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில் முஸ்லீமாக பிறந்துவிட்டோமே என்ற கோபம் தான் அதிகமாக இருந்தது. ‘நமது ஊரில் இஸ்லாத்தை தப்பாக பரப்பிவிட்டார்கள் பாவிகள்” என்று மேடை போட்டு முழங்க எண்ணினேன். பத்தாவது படிக்கும் போது புத்தகத்தை ஒரு கையிலும், பாவடையை மறு கையிலும் பிடித்துப் பார்த்த வகுப்புத் தோழிகளுகளை, நான் கல்லூரிக்குச் சென்று திரும்பிப் பார்க்கையில், புத்தகத்துக்கும் பாவடைக்குமான கை, கைக்குழந்தைக்கும் முதல் குழந்தைக்குமாக இருந்தது.

கல்லூரியில் கெமிஸ்ரி வகுப்பு வரும் போது எல்லாம் ‘சே நாமளும் பொட்டப்புள்ளையா பிறந்திருந்திருக்க கூடாதா?” என விட்ட பெருமூச்சிக்காற்று எந்த கார்பரேசன் தண்ணி குழாயிலும் வந்திருக்காது. “உங்களது பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்துவிடுங்கள், இல்லையேல் அவர்களது குற்றங்களுக்கு நீங்களும் பொருப்பாவீர்கள்” என நபிகள் நாயகம் கூறியது எப்படி நம்ம தகப்பனாருக்கு தெரியாமல் போனது? என பல முறை யோசைனையில் இருந்ததுண்டு. எனக்கு எப்படி நபிகளார் சொன்ன இந்த ஒரு விசயம் மட்டும் தெரிந்ததோ, அது போல இந்த ஒரு விசயம் மட்டும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஒன்னு சொல்ல மறந்திட்டனே, எங்கப்பாவுக்கு 21 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது (அது சரி).

‘”அந்த பொண்ணு உன்னத்தாண்டா பாக்குது” என என்னிடம் சொன்னவர்கள் எவரையும் வெறும் வயிற்றுடன் அனுப்பியது கிடையாது. பொய், சுத்தப் பொய் என தெரிந்தும் ஒரு அல்ப சந்தோசத்துக்கு அலைந்து கொண்டிருந்த அந்த காலங்களை திரும்ப கூப்பிட்டு மனத்திரையில் ஓட்டிப் பார்க்கும் போது, திரும்பி உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழ தோன்றும். என் நினைவு சரி என்றால் அது என் 25 ஆவது வயது “வயசு போய்கிட்டே இருக்கு, நிறைய இடத்தில் இருந்து பொண்ணு எல்லாம் வருது, சீக்கிரமா கல்யாணத்தை நடத்திடனும்” என அம்மா சொன்னாள். “இம்புட்டு வெயில்ல நீ எதுக்கு ரேசன் கடைக்கு போற, குடு நான் வாங்கிட்டு வாரேன்” என துள்ளிக்குதித்து ஓடிச் சென்று ஒரு கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் மண்ணன்னெய்க்காக மணிக்கணக்காக நின்றேன். வரிசையில் நின்ற போதெல்லாம் “நிறய வீட்டிலிருந்து பொண்ணு வருவதாகச் சொன்னாளே, அந்த வீட்டுல இருந்து வந்திருக்குமோ, இந்த வீட்டிலிருந்து இருக்குமோ” என்ற எண்ண ஓட்டத்தில், வரிசையின் நீளம் பெரிதாக தோன்றவில்லை.

அம்மா இரண்டு வீட்டைப் பற்றி சொன்னாள், இரண்டுமே எனக்கு பிடிக்கவிலை, “பொண்ணு எதுவுமே படிக்கலியே?” என நான் கூற, “உங்க அண்ண மட்டும் என்ன ஐ.ஏ.எஸ்ஸா படிச்சிருக்காரு?” என தூக்குச்சட்டியை தூக்கியபடியே அக்கா பக்கத்தில் வந்து அமர்ந்தாள். ‘பொண்ணு அண்ணனுக்கா...............?” என இழுத்தேன், அப்போதுதான் வளைகுடாவில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் உடன் பிறப்பும் ஒண்டியாக இருந்தது என் சிற்றரிவுக்கு ஞாபகம் வந்தது. சொந்தங்கள் கூடி பேசிய நேரத்தில் கூட்டத்தில், ஒரே ஒரு கண்ணியவானுக்கு மட்டும் என் கண்களில் ஊற்றெடுக்கும் கானல் நீரைப் பற்றி தெரிந்திருக்கும் போல “சின்னவனுக்கும் சேர்ந்து பொண்ணு பார்திடவேண்டியது தானே?” என ஒரு சரத்தை முன்மொழிய, அதை வழிமொழிய யாரும் இல்லாத்தால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. என்ன சொல்வது, நான் நடந்து போனா, சனியன் சைக்கிள்ல போய் சைடு ஸ்டாண்ட் போட்டு நிக்குது.

அடுத்த ஒரு வருடம் மறந்தும் கூட ஒரு காதல் படங்கள் கூட பார்த்திடவில்லை. எல்லாம் ஆக்சன், ஆக்சன், ஆக்சன் என எந்த ரியாக்சனும் இல்லாமல் வாழ்க்கை உருண்டு ஓடியது. திடீரென “உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவோமா?” என முகத்தைப் பார்த்து மை டியர் டாட் கேட்க, பதட்டத்தில் “எனக்கு எதுக்குப்பா..., இப்ப அவசரம் கொஞ்சம் பொறுத்து” னு சொல்லித் தொலைத்துவிட்டேன். பொறுத்தாங்க, பொறுத்தாங்க............ பொறுமைக்கு பெயர் எடுத்த அன்னை தெரசாவையே மிஞ்சிர அளவுக்கு பொறுமையின் எல்லைக்கே போய்விட்டார்கள்.

அடுத்த வருடம் திருமணம் இல்லை என்றால், அட்டம்ட் ரேப் கேஸில் ஆயுள் தண்டனை கைதியாகி இருப்பேன் என எண்ண ஓட்டம் ஓடோ ஓடு என ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வேலை ஸ்டெடியானவுடன் தான் பெண் பார்ப்பது என்பது வழக்கமாக இருந்தது, ஆனால் இப்போது உள்ள தலைமுறைகள் அப்படியெல்லாம் எங்களைப் போல மங்குனி அமைச்சர்களாக இல்லை. பெண் பார்த்தால் தான் வேலைக்கே போவேன் என அடம்பிடிப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

நம்ம கதைக்கு வருவோம்.

பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஒரு 10 வருசத்துக்கு பொறுத்துவிட்டு, நேரடியா 60 தாவது கல்யாணத்தை பண்ணிடலாங்குற முடிவு செய்யப்பட்ட போதுதான் டிசம்பர் டுவிஸ்ட். டிசம்பரில் முடிவு பண்ணியவர்கள் போன் நம்பரை வாங்கி தருவார்கள் என வெயிடிங் லிஸ்டில் இருக்க, மீண்டும் அன்னை தெரசாவின் அதே பொறுமை. டிசம்பரில் டிரங்க் கால் புக் பண்ணியவனுக்கு பிப்பிரவரி 14ல் தான் கனெக்சனே கொடுத்தார்கள்.

அதுக்கு அப்புறமா மாலை 6 மணி முதல் 8 மணி வரை பேக்ரவுண்டில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் லா, லா...தான். இப்படியாக மணிக்கணக்கில் பேசியபோது ஒரு நாள் "உங்க ஹாபி என்ன?” என்று என் மனைவி கேட்டதற்கு, சமைக்கத்தெரிந்த ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும் என்று எங்கயோ வடை மடித்து கொடுத்த பேப்பரில் படித்ததை வைத்து ‘சமைப்பதுதான் என் ஹாபி’ என்று சொல்லியிருந்தேன்.

கல்யாணத்திற்கு அப்புறமாக வாழ்க்கை ‘ஹேப்பி’யாக போகும் என்று நினைத்த எனக்கு, இப்போது ‘ஹாபி”யாக போய்கொண்டிருக்கிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

12 கருத்துகள்:

  1. I like the narration...keep it up

    பதிலளிநீக்கு
  2. நண்பர் யாஸிர்! உங்கள் எழுத்து நடை மிக ஜோராக இருக்கிறது. contentம் கனமாக ரசனையுடன் !!!!! பிரமாதம் போங்கள்...

    பதிலளிநீக்கு
  3. நண்பர் யாசிர், தங்கள் பதிவுகளின் ரசிகன் நான். இதை என் முகநூலில் பகிரலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் பதிவுகளை பகிர்வதன் மூலம், நிச்சயம் என் ரசனையின் மதிப்பு கூடும்.

    பி.கு. இந்த பதிவில், பொறுமை என்பது பொருமை-யாய் உள்ளது. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. அதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ, அதை பயன்படுத்தி இதை மட்டும் மாற்றினால், நகை நடை மிக்க தங்கள் பதிவுகள் எழுத்துப் பிழையற்ற பதிவுகளாகும். அதிகபிரசங்கித்தனமாக எண்ணாமல், ரசிக வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளவும்.

    என்றும் நட்புடன்,

    உ.வா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் உதயவனன்,

      ஒரு 'ரு' வில் உங்கள் பொறுமையை சோதித்ததற்கு மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. தங்கள் சித்தம் என் பாக்கியம்.

      நன்றி.

      நீக்கு
    2. தோழர் யாசிர்,

      நல்ல அரசனுக்கழகு, மக்களிடம் செவி சாய்ப்பது. நல்ல ப்ளாகருக்கு அழகு பின்னூட்டங்களுக்கும் குறிப்புரைகளுக்கும் மறு பதில் தருவது. என் குறிப்புரையை ஏற்று பதிவை நிகழ்நிலைப் படுத்தியமைக்கு நன்றிகள் பல.

      --
      உதயவானன் (உ.வா.)

      நீக்கு