செவ்வாய், அக்டோபர் 06, 2015

ஹிந்தி சிக்காவ்.

என்னோட சேர்த்து ரூமில் மொத்தம் மூன்று பேர். ஒருவன் உத்திர பிரதேஷ், மற்றொருவன் பீகார். அது ஏன் என்று தெரியவில்லை, எல்லா பீகாரிகளும் தங்களை பீகாரி என்று சொல்லிக்கொள்வதற்கு விருப்பப்படுவதில்லை. நான் ரூமில் சேர்ந்த புதிதில் அந்த பீகாரி தன்னை, மும்பை என்றே அறிமுகப்படுத்திக்கொண்டான். உண்மையை எத்தனை நாள்த்தான் மறைக்கமுடியும். நாங்கள் இருப்பது மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு பிளாட், அதை ஒரு மலையாளி மொத்தமாக வாடகைக்கு எடுத்து, பேச்சிலர்களுக்கு கட்டிலுக்கு இவ்வளவு என்று வாடகைக்கு விட்டுக்கொண்டிருக்கின்றார். கிச்சனிலும் இரண்டு கட்டிலைப் போட்டு அதிலும் வருமானம் செய்துகொண்டிருந்ததால், அந்த பிளாட்டில் வசிப்பவர்களுக்கு சாப்பாடு ஹோட்டலில்தான்.

எங்களுடய ரூமில் பால்கனி இருப்பதால், அந்த இரண்டு ஹிந்திவாலாக்களும் அங்கு கரண்ட் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுவார்கள். இருவரும் (அவர்களும்) முஸ்லீம்கள் என்றாலும் மெஸ்ஸில் எப்போதும் வெஜ்டேரியனாகவே இருக்கும். கேட்கும்போதெல்லாம், உருளைக்கிழங்கு சப்ஜி, வெஜிடபுள் குருமா, பீன்ஸ் கிரேவி, பன்னீர் மசாலா, மட்டர் புலாவ், தால் பாலக்..... என வெஜ் அயிட்டங்களின் பெயர்தான் வருமேயொழிய, நான்வெஜ் அயிட்டங்களை கேள்விப்படுவது ரொம்ப அரிது. ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை பிரியாணி செய்வார்கள். செலவைக் குறைப்பதற்க்காக என்று சொல்லமுடியாது, ஏனென்றால் இங்கு வெஜ்க்கும் நான்வெஜ்க்கும் பெரிய விலை வித்தியாசம் இல்லை.

ஒரு நாள் நான் கேட்டேவிட்டேன் ‘’முஸ்லீமாக இருந்துகொண்டு எப்படி வெஜ்ஜிடேரியனா சாப்பிடுறீங்க? எதுவும் கொலஸ்ட்ரால் பிரட்சனையா?’’. அதற்கு பீகாரி ‘’இத நீ முஸ்லீம், ஹிந்து என்று பார்க்கக்கூடாது, வட இந்தியா, தென் இந்தியா என்ற கோணத்தில் பார்க்கவேண்டும், பொதுவாக வட இந்தியாவில் யாரும் அதிகமாக நான்வெஜ் சாப்பிடுவதில்லை, ஆனால் உங்க ஏரியவிலோ வாரத்துக்கு எட்டு நாள் கறியாத்தானடா திண்ணுறீங்க’’ என்று கழுவி ஊற்றினான். தமிழ்நாட்டுக்காரனை கொஞ்சம் கருணை அடிப்படையில் விட்டுவிட்டாலும், ஹைதராபாத்காரர்களை இந்த விசயத்தில் காரித் துப்பிக்கொண்டிருந்தான். ஓணானை எடுத்து வேட்டியில் விடுவதற்குப் பதில் ஜட்டிக்குள்ளேயே விட்டதுபோல் ஆகிவிட்டது.

பீகாரியும் நானும் அதிகமாக விவாதிப்போம், அவர் ஹிந்தியில் கேள்விகேட்பார் நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவேன். எப்போதாவது ஹிந்தியிலும் பேசிக்கொள்வோம். அரசியல், கம்யூனிசம், மதம், பெண்கள் இந்த தலைப்புகளில்தான் விவாதம் அதிகமாக இருக்கும். அரசியல், கம்யூனிசம், மதம் சம்பந்தமான விவாதங்களில் உ.பிக்காரன் பக்கத்திலேயே வருவதில்லை. பெண்களைப் பற்றி பேசும்போதும், மசாஜ் செண்டர்களைப் பற்றி பேசும்போது மட்டும், அவன் அணியில் உறுப்பினராகிக்கொள்வான். பீகாரி, பக்கா ஆன்மீகவாதி, ஐந்து வேளை தொழுகை, குரான் ஓதுவது, நன்மைக்காக சில நோன்புகள் நோற்பது என்று அனைத்தையும் கடைபிடிப்பவன். ஒரே ஒரு பெரிய குறை, இஸ்லாத்தைப் பற்றி அரைகுறை அறிவுடன், நான் சொல்லுறதுதான் இஸ்லாம் என்று கொல்லுவான். உ.பிக்காரனைப் பற்றி அதிகம் கூற ஒன்றுமில்லை ‘’கையப்புடுச்சி இழுத்தியா? என்ன கைய புடிச்சி இழுத்தியா?’’ ரகம்.

ஒருநாள் விவாதம் ஹிந்தி மொழிபற்றியதாக இருந்தது. அதைப்பற்றி ஹிந்தியில் அவர்கள் இருவருக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லா மாநிலங்களிலும் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டும்தான் முரண்டுபிடிப்பதாக அவர்களின் பேச்சு சென்றது. அதில் என்னுடய அபிப்பிராயத்தை அவர்கள் கேட்கவில்லை, அதில் நானும் தலையிட விருப்பமில்லை. ஏனென்றால் தமிழனுக்கே ஹிந்தி எதிர்ப்பிற்கும், ஹிந்தி திணிப்பிற்கும் இன்னும் வித்தியாசம் விளங்கவில்லை, இதில் ஹிந்திக்காரனிடம் எதை விளக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்தேன். ஒரு கட்டத்தில், நான் சும்மா இருந்ததால் அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற போக்கில் பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு மேல் சும்மா இருந்தால் ஆகாது, பொங்கி பொங்கல் வைக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.

முதலில், ‘’தமிழ்நாட்டில் ஹிந்தி படிப்பதற்கு எங்கும் தடையில்லை, கிட்டத்தட்ட எல்லா மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் ஹிந்தி விருப்ப பாடமாக உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருப்பின் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தடையுமில்லை’’ என்பதை விளக்கினேன். பின்பு ‘’தமிழ்நாட்டு போராட்டம்/எதிர்ப்பு என்பது ஹிந்தியை முதல் மொழியாக திணித்து தமிழை இரண்டாம்தர மொழியாக மாற்றும் மத்திய அரசின் கொள்கைக்குத்தான்’’ என்பதையும் விளக்கினேன் (இதை தமிழில் தமிழனுக்கு சொன்னாலே புரியாது, பின்பு எப்படி? ஆங்கிலத்தில் ஹிந்திக்கார விளக்கெண்ணெய்க்கு விளங்கப்போகிறது?). ‘’அதிலென்ன தப்பு?’’ என்று பீகாரி கேட்டான்.

‘’அத்தையை அம்மான்னு கூப்பிடுறது உங்களுக்கு வேணும்னா சரி என்று தோன்றலாம், ஆனா தமிழ்நாட்டுக்காரனுக்கு யாரை அம்மான்னு கூப்பிடனும்?, யாரை அத்தைன்னு கூப்பிடனும்னு? தெரியும்’’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன் (நல்லவேளை அவனுக்கு அ.தி.மு.க்காரனின் ‘’அம்மா’’ பற்றி தெரிந்திருக்கவில்லை). நான் இந்த விவாதத்தை ‘’புலி’’ பட ஆக்சன் காட்சிகள் போல் பேண்டசியாகத்தான் கொண்டுசெல்ல முயன்றேன், ஆனால் அது ‘’பாகுபலி’’ போர்க்காட்சிகள் போல் மாறிப்போனது. ‘’இந்தியர்கள் அனைவரும் ஒரே மொழியை கொண்டிருந்தால் நாம் முன்னேறலாம்’’ என்பது உ.பிக்காரன் வாதம்.

‘’பாக்கிஸ்தானில் அனைவருக்கும் உருது மொழிதான், அவர்கள் எந்த விசயத்தில் நம்மைவிட மேலோங்கி இருக்கிறார்கள்?, ஒரே மொழியைக் கொண்ட பல நாடுகள் பஞ்சத்தில் இருக்கத்தான் செய்கிறது? அறிவுக்கும் வளர்ச்சிக்கும்தான் தொடர்பேயொழிய, மொழிக்கும் வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.’’ என்று நான் வாதிட்டாலும், ஒரே மொழியின் கீழ் இந்தியர்கள் வருவது நல்லது என்றே இருவரின் வாதம் இருந்தது.

‘’இந்தியர் அனைவருக்கும் ஒரே மொழி என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், தமிழர்கள் குறுக்கே நிற்கவில்லை. ஆகையால் அனைத்து இந்தியர்களும் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவை தமிழால் இணைப்போம்’’ என்று கூறியவுடன் ‘’நாங்க ஏன் தமிழ் கற்றுக்கொள்ளவேண்டும்? நீங்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் இந்தியாவில் 80% பேருக்கு ஹிந்தி தெரியும்’’ என்று பதறிப்போய் பதிலுரைத்தான் பீகாரி.

‘’என்னோட மொழிய கத்துக்கமுடியாது சொல்லுற உன்னோட ஹிந்திய மட்டும் நான் ஏன் கத்துக்கனும்?, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், பொதுமொழியாக சைனிஷ் கொண்டுவா, நீயும் படி, நானும் படிக்கிறேன், ஆனாலும் அது என் தாய்மொழிக்க்கு அடித்தபடியாகத்தான் இருக்கும்’’ என்று என்னுடய வாதம் நீண்டுகொண்டே சென்றது.

‘’அப்படியென்றால், உன்னைப் பொருத்தவரை தாய் மொழிதான் முக்கியம், மற்றவையெல்லாம் அதற்க்கு அப்புறம்தான் என்கிறாயா? அப்படி என்றால் குரான் அருளப்பெற்ற அரபி மொழி சிறந்ததா? தமிழ் மொழி சிறந்ததா?’’ என்று கேள்விகேட்டான் பீகாரி. ‘’கண்டிப்பாக குரான் அருளப்பட்ட மொழி என்பதால் அரபி மொழிக்கு தனிச் சிறப்பு இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக அது என் தாய் மொழி தமிழுக்கு அடுத்துத்தான்’’ என்றேன்.

‘’நீ ஒரு காஃபிர், இறை மறுப்பாளன், முஸ்லீமே அல்ல, முனாபிக், அல்லாஹ்வால் அருளப்பெற்ற குரான் மொழி அரபியை விட எப்படி மற்ற மொழி சிறந்தது?’’ என்று கூறி என்னிடம் கோபம்கொண்டான். ‘’முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்ததால் அவருக்கு இறைவைன் குரானை அவரது தாய் மொழி அரபியில் அருளினான், இதே அவர் மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் ரஷ்யனில் குரான் வந்திருக்கும் அவ்வளவுதான். மேலும் குரானில் எந்த இடத்திலும் அரபி மொழிதான் சிறந்தது என்று இல்லை. முஹம்மது நபியின் இறுதிப் பேருரையில் கூட ‘’இஸ்லாத்தில், அரபிமொழி பேசுகின்ற எந்த ஒருவரும், அரபிமொழி பேசாத மற்றவருக்கு உயர்ந்தனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை’’ என்றே கூறினார். அரபியோ, அரபியரோ மற்றவரை விடச் சிறந்தவர் என்றால் முஹம்மது நபி ஏன் அவ்வாறு கூறவேண்டும்?, ஆகையால் நபி கூறாத ஒன்றை கூறுவதால், நீ தான் முனாபிக், நீ தான் காபிர்......’’ என்று பதிலுக்கு நானும் கோபம்கொண்டேன்.

ஆனாலும் அவன் கேட்பதாக இல்லை, கடைசிவரை ‘’ஹிந்தி சீக்கிரம் சிக்காவ், மெரினா பீச்சில் உக்கார்ந்து பானி பூரி விக்காவ்’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.


-----------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

10 கருத்துகள்:

  1. பஹூத் அச்சா "பதிவு" யாசீர் பாய்! பஹூத் அச்சா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியவாத் விசுஜி. ஆப்கா கமெண்ட்லே யாசிர் பகுத் குஷியாகுறான்.

      நீக்கு
  2. அன்புள்ள யாஸிர்,

    இன்றுதான் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம். உங்களது எழுத்து நல்ல நகைச்சுவையுடன் இரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது. 2013 வரையிலான உங்களது பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். படிக்கும் பொழுதே எனது பள்ளிவாழ்க்கையையும், சிறு வயது முதல் இன்று வரை தொடரும் இஸ்லாமிய நட்புகளையும் எனது மனம் அசை போட துவங்கிவிட்டது. இன்னும் கூட நிறைய சொல்லலாம் தான் ஆனால் இஸ்க் இஸ்க் கில் வருவது போல் உங்களை காய்ச்சலில் தள்ளும் எண்ணம் இல்லையாதலால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். வாழ்த்துக்கள்! தொடரட்டும் தங்கள் எழுத்து.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகா சீனிவாசன்,
      2013 க்கு அப்புறமாக படிக்கவேண்டாம், இல்லையென்றால் கமெண்ட் போட்டதற்கு வருந்தும்படியாகிவிம். தேவையில்லாமல் இஸ்கை நியாபகப்படுத்திவிட்டீர்கள், இன்னும் அந்த நர்ஸ் அக்காவே என் கண்ணுக்குள் நிற்கிறார்.
      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. Correcta sonnenga gee.
    Inga palar indiakarenala Hindilia pesaranga. Evano namaku munnadi vanthavan Indiala ellarum Hindi than pesuvanganau sollerupan pola. Why blood, same blood mathirithan nama kathaiyum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல அரபிக்காரன் கையில 30 நாளில் ஹிந்தி கற்றுக்கொளவது எப்படி? என்ற புத்தகம் இருக்கிறது. அந்த புக்ககூட மலையாளிதான் சப்ளை பண்ணுறான்.

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. நல்ல பதிவு. மிகவும் ரசிக்கும்படியாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. very nice article, i like very much your writing style

    A Abdul Rahim

    பதிலளிநீக்கு