திங்கள், ஜூலை 25, 2016

வந்துட்டேண்ணு சொல்லு.

என்னோட கல்யாணத்திற்கு நான் ஊருக்கு போயிருந்த சமயம், சொந்தக்காரங்க யார்? யாருக்கு நான் நேரப் போய் அழைக்கவேண்டும் என்ற லிஸ்டை எங்க அப்பா எங்கிட்ட கொடுத்தாங்க. ‘’நான் இன்னாருடய பையன், எனக்கு கல்யாணம், எல்லோரும் வந்து சிறப்பிக்கனும்’’ என்று சொல்லிய முக்கால்வாசி வீட்டில் ‘’என்னது? அவரோட பையனா? நான் இதுவரைக்கும் உன்ன பார்த்ததே இல்லையப்பா?’’ என்ற ரியாக்சன்தான் வந்தது. அமைதின்னா அம்புட்டு அமைதி, இத எதுக்கு சொல்லுறேன்னா....

இந்தமுறை ஊருக்கு சென்ற முதல் நாளில் இருந்து, டாக்ஸி பிடித்து திரும்ப போகும்வரை ‘’உன் பையன் எம்புள்ளய குத்திட்டான், கைய கடிச்சிட்டான், முடிய பிடிச்சு இழுத்துட்டான், கண்ண நோண்டிட்டான், நகத்த வச்சி கீரிட்டான்.....’’ என்று என் பையனைப் பற்றி சொந்தம், அக்கம் பக்க வீட்டு புகாருக்கு காது கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது. தட் ‘’அந்த தெய்வத்தின் மகனா இவன்.....? நெவர்’’ பீலிங்க்.

முன்னாடியெல்லாம், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவன் ஊருக்கு வந்தால், அவனைப் பார்க்கவரும் முதல் ஆட்கள், சொந்த பந்தங்களாகத்தான் இருப்பார்கள். ஆனா இப்போ, புரோக்கர்கள்தான் முன்னாடி வந்து நிற்கிறார்கள். ‘’அந்த ஏரியாவுல ஒரு பிளாட் வருது’’ என சொன்னவருடன் சென்று பார்த்தால், நாங்கள் கிரிகெட் விளையாடிய குளம்!, என்னங்க குளத்த காட்டுறீங்க? என்று கேட்டாள், அதுதான் சொன்னல்ல தம்பி இது ‘’ஏரி’’யான்னு என்று தலையை சொரிந்தவாரே பதில் வருது. சரி, கடையநல்லூரிலேயே ஹாட்டான இடத்தில் ஒரு பிளாட் இருக்குன்னு சொன்னீங்களே அத காட்டுங்கன்னு கேட்டா, சுடுகாட்டை காட்டுறானுங்க. இதை எல்லாம் பார்க்கும்போது

‘’எனது புறநகர் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை
தவளைகளே!’’
கவிஞர் சுகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருது.

ஒருநாள் மதுரைக்கு போயிருந்தேன். பஸ்ஸில் ஸ்மார்ட் போன் இல்லாதவன் முகம் எல்லாம் அவ்வளவு பிரகாசமா இருந்தது. ஸ்மார்ட் போன் வச்சிருக்குறவன் எல்லாம் கொஞ்சம் உர்ர்ர்ர்ன்னே இருந்தானுங்க. சுவாதி மேட்டரோ, ஒய்.ஜி மகேந்திரனோ, குண்டுவெடிப்போ பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்கள் எவரும் பொதுவெளியில் விவாதிப்பதாக தெரியவில்லை. புதிய விடியலுக்காக திருநீரோடு அந்த அதிகாலையிலும் தான் உண்டு, தன் வேலயுண்டு என்று உலகம் பரபரப்பாகவே இருந்தது. பேஸ்புக் காட்டும் உலகத்திற்கும், நிஜமான உலகத்திற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?.

ஒருவன் அனுமார் வேடம் போட்டு பிச்சை எடுப்பதை பார்த்தேன், எவனும் காசு போட்டதுபோல் தெரியவில்லை. ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது அனுமார் கிராபிக்ஸ் போட்டு ‘’இதை பத்து செகண்டுக்குள் மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் நல்ல செய்தி வரும்’’ என்ற போஸ்டை மாஸ்டர் டிகிரி படித்த பல பேர் ஷேர் செய்வதை பார்த்திருக்கிறேன். இந்த கேட்டகிரியில் என்னோட பிரண்ட் ஒருவர் இருக்கிறார், அவர் பண்ணிய ஷேருக்கு இந்நேரம் ‘’நல்ல செய்தி’’ நாலாயிரம் ஏக்கர்ல இருக்கணும் ஆனா பாருங்க எப்ப பேசினாலும் அவரோட கஷ்டத்தை கண்டெய்னர், கண்டெய்னரா வந்து இரக்குவார். இப்படித்தான் இன்னொருவன், ‘’இதுதான் பழைய மெக்கா’’ என்று ஒரு சதுர கட்டிடம், அதை சுற்றி ஒரு 30 ஆட்கள், ஒரு கிணறு இருக்கும் படத்தை போட்டிருந்தான். அனுமாரை பத்தி சொன்னால்தான் பஞ்சாயத்தாகும், இது நம்ம பங்காளிங்கதானன்னு நெனச்சு ‘’அப்ப கிணத்து பக்கத்துல நிக்குறதுதான் முஹம்மது நபியா?’’ன்னு கேட்டுட்டேன். ஒன்னு ஆமான்னு சொல்லனும் இல்ல, இல்லைன்னு சொல்லனும் அதவிட்டுவிட்டு என்னை காபிர் என்று சொன்னான். இங்க நாம உண்மையச் சொன்னாலோ அல்லது அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றாலோ தேஷ்ஷ துரோகியாகவோ, காபிராகவோ மாறவேண்டியிருக்குது. இருந்தாலும் ‘லத்திக்கா’ பவர்ஸ்டார் படம், ‘லிங்கா’தாண்டா சூப்பர்ஸ்டார் படம்னு சொல்லுவது நமது கடமையில்லையா?.

சுவாதி கொலையக் கண்டித்து ‘’ஓ திறமையற்ற அரசாங்கமே...” என்று நீட்டி நிமித்தி ஒரு கட்டுரை எழுதி பிளாக்கில் போடுவதற்கு சற்று முன்பாக பிலால் மாலிக் என்ரியாகிவிட்டார். அந்த சூழ்நிலையில் அதை போஸ்ட் செய்தால், ‘’இவன் யார்?’’ என்று என் பேண்ட் ஜிப்பை அவிழ்த்துப்பார்க்கும் அவலம் நடந்திருக்கும். ஒரு வேலை பிலால் மாலிக் என்ரி இல்லாமல் இருந்து, என் போஸ்ட்டை பலபேர் படித்திருந்தால் அ.தி.மு.க அரசாங்கமே ஆட்டம் கண்டிருக்கும். இன்நேரம் பன்னீர் பதவி ஏற்று இருந்திருப்பார். என்ன சொல்ல, எல்லாம் பன்னீரின் போறாத காலம்.

இடைப்பட்ட காலங்களில் கொஞ்ச கட்டுரைகள் எழுதினேன். ஆனால், என்னுடய மெடிக்கல் இன்சூரன்ஸ், கை, கால் முறிவுக்கு கவராகாது என்று தெரிந்துகொண்டதால் அவற்றை போஸ்ட் செய்ய இயலவில்லை.

கொஞ்ச காலமாக வாழ்க்கை என்னை மூத்திர சந்துக்குள் வைத்து கும்மிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையை எதிர்த்து நெஞ்ஞை நிமிர்த்தி நின்றால் அது குஞ்ஞிதபாதத்தில் எத்தி மிதித்து மீன்பாடி வண்டியில் ஏற்றி இப்போது சவுதி ஜித்தாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன். அதாவது வாழ்க்கை ஜெயிப்பதை ரத்தக்களரியோடு வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

9 கருத்துகள்:

  1. பதிவு படிப்பதற்கு சுவைபட இருந்தது சொல்லி சென்ற விதம் மனதை கவர்ந்தது குட்

    பதிலளிநீக்கு
  2. யோவ் போய்யா
    எத்தனை தடவ சும்மா வந்து பழைய பதிவை பாக்கிறது
    இனி மேல் ஒழுக்கமா மாசம் மூணு நாலு பதிவு எழுதல

    அந்த பிலால் மாலிக்கே நீதான் சொல்லுவோம்

    அன்புடன்
    ஷரீப்

    பதிலளிநீக்கு
  3. நல்லா எழுதுற யாசிர், முத்தலிப்
    இவங்கல்லாம் எழுதலன்னா நாங்க எங்க போவம்
    எங்களுக்கு யாரை தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தெரியாம நானே உங்களுக்கு காசு கொடுத்து கமெண்ட் போடச்சொன்னதுமாதிரி தெரியுது.

      நீக்கு
  4. //பேஸ்புக் காட்டும் உலகத்திற்கும், நிஜமான உலகத்திற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?.// நிதர்சனமான உண்மை தேர்தல் நேரத்தில் தான் தெரிந்தது. நண்பர் பாவா ஷரீப் சொல்வது போல நீங்கள் உண்மையாகவே நன்றாக எழுதுகிறீர்கள். நிசப்தம் Blogகிர்க்கு அடுத்து உங்களுடையது வாசிப்பதற்க்கு நன்றாக உள்ளது. Continue writing sir.

    பதிலளிநீக்கு