வியாழன், பிப்ரவரி 08, 2018

தண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.


2007 பெங்களூர்ல வேலை பார்த்த போது, எங்க கம்பெனியில ஒரு ஸ்டோர் இன் சார்ஜ் இருந்தார். தண்டபானியோ, தண்டாயுதபானியோன்னுதான் அவரோட பெயர், நாம தண்டபானின்னு பிக்ஸ் பன்னிக்குவோம்.  வயசு 35 மேல இருந்தாலும் 25 வயசுன்னு சொல்லிக்கிட்டு திரியுவாரு. நாங்களும் நம்புற மாதிரியே நடிப்போம். நடிச்சுத்தான் ஆகனும், ஏன்னா? எங்களுக்கெல்லாம் கதை சொல்லுற ஒரே ஜீவன் (24 வயசுல என்ன கதைய கேட்டிருப்போம், அந்த கதைதான்). ஆளு பாக்குறதுக்கு அச்சு அசல் ‘’தல நம்ம பூச்சுப் பாண்டிய அந்த கட்டத்துர ஆளுங்க அடிக்குறாங்க’’ன்னு வின்னர் படத்துல வடிவேலுக்கு ஓப்பனிங் கொடுக்குறவன் மாதிரியே கருப்பா குள்ளமா இருப்பாரு.
புதுசா ஒரு சைட் ஆரம்பித்த நேரம், ஆள் இல்லாததால, எல்லாருக்குமே ரெண்டு, மூனு வேலை கூடுதலா இருந்துச்சு. ஆபிசில் இருப்பவன் சைட்டையும் பார்க்கனும், சிலருக்கு சைட் வேலையும் பார்த்துட்டு வாடகைக்கு வீடு தேடனும்.....இப்படி பல இருந்துச்சு. அப்படி அடிசனல் வேலையா தண்டபானிக்கு அக்கவுண்ட்ஸ் வேலைய கொடுத்தாங்க. அந்த கம்பெனியில இஞ்சினியருக்கு மெஸ் சைட்டுலேயே இருந்துச்சு. மெஸ்ஸோட வரவு, செலவு கணக்கு எல்லாத்தையும் தண்டபானி வச்சிருந்தாரு. மெஸ்ஸ ஒரு தென்காசிக்கார பாய் வச்சிருந்தாரு. மெஸ்ஸுல ஒரு பொண்ணு வேல செஞ்சுச்சு அத இந்த ரெண்டு பேரும் ..........................
அப்போ, இண்டெர் நெட் பார்க்க ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய். சி.டி வாங்கினா வாடகை 75 ரூபாய், ஆனா, தண்டபானி சொல்லுற கதைக்கு மட்டும் காசே இல்ல, சில சமயம் அவரே டீ வாங்கிக்கொடுத்து கத, கதையா சொல்லுவாரு. ‘’ஒரு தடவ ரானி மேரி காலேஜ் பொண்ணு என்னயவே லுக் உட்டுச்சு, பத்து நிமிசத்துல பிக்கப் பண்ணி, ஒரே வாரத்துல ‘’ப்ப்பிஷ்க்’’ ‘’னு சொல்லி வெட்டுற மாதிரி கையால சைகை செய்வாரு (அதாவது சோலிய முடிச்சுட்டாராமா). நான் சொல்லுறது ஒன் லைன், இந்த ஒன் லைன மூனு நாளா விருச்சு வெளா வெரியா சொல்லுவாரு. நாங்க வேற ரொம்ப காஞ்சி போயி இருந்தமா, அதனால் கண்ண விருச்சு எச்சிய முழுங்க முடியாம முழுங்கி ஒரு மாதிரியான போதையில அந்த காவியத்த கேட்போம். ‘’போன வாரம் பெங்களூர் வரும்போது பஸ்ஸுல .......’’ன்னு ஆரம்பிச்சா ‘’தெய்வமே போது தெய்வமே, இதே ஒரு மாசத்துக்கு தாங்கும்’’னு கும்பிடு போட்டு போவோம்.
மேனஜர் ரூமுக்கும், தண்டபானி இருக்கும் ஸ்டோருக்கும் ஒரு 300 அடி தூரம் இருக்கும். மேனஜர்கிட்ட டெய்லி ஸ்டாக் ரிப்போர்ட் காட்டி கையெழுத்து வாங்கனும். கையெழுத்து வாங்க வரச் சொல்லி போன் பண்ணினா அரை மணி நேரம் தாமதமாகத்தான் வருவாரு. இப்படி லேட்டா வர்றதுக்கு டெய்லி திட்டு வாங்குவாரு ‘’நடந்து வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு சார்’’னு காரணம் சொல்லுவாரு. ‘’அப்ப நாளையில இருந்து ஓடி வா’’ன்னு மேனஜர் சொல்லிட்டாரு. மறுநாள் ஓடி வந்த வேகத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிய படியே கையெழுத்து வாங்குனாரு. அன்னைக்கு மேனஜர் திட்டல, கையெழுத்தெல்லாம் போட்ட பின்னாடி ‘’நீ இனிமே ஓடியெல்லாம் வரவேண்டாம், நடந்து வந்தாலே போதும்’’ னு சொன்னாரு. தண்டபானிக்கு, நம்ம கடமை உணர்ச்சிய பார்த்துத்தான் அப்படி சொன்னாருன்னு நெனச்சி முடிக்கிறதுக்குள்ள ‘’ஓடி வந்தா கூட 15 நிமிசம் ஆகுது, அதுதான் நடந்தே வான்னு சொன்னேன்’’ன்னு மேனஜர் சொல்லிட்டாரு. இப்படி நிறைய அசிங்கப்பட்டாலும் ‘’ஹேய் ஹலோ நேத்து அசிங்கப்படுத்த வாரேண்டு வரவேயில்ல’’ந்னு தில்லா சொல்லுற ஆளு.
மெஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, சைட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல் இருந்துச்சு. அங்க ரெண்டு பருவ பொண்ணுங்கதான் சப்ளை செய்யும். ஒரு நாள் சாப்பிட போன போது ‘’வாங்க அங்கிள்? என்ன சாப்பிடுறீங்க அங்கிள்?’’ன்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அங்கிள் போட்டு பேசுச்சு. அன்னைக்கு சாப்பாடு தொண்டைக்கு கீழ இறங்கல. 24 வயசுல ஒரு 18 வயசு பொண்ணு நம்மள அங்கிள்ன்னு சொல்லிருச்சேன்னு நினைச்சு நினச்சு ரொம்ப பீல் பண்ணினேன். அதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல, ஆனா தண்டபானி காலையில ‘டீ’யில இருந்து நைட் டின்னர் வரை அங்கதான்னு கேள்விப்பட்டு, நான் தண்டபானிக்கிட்ட ‘’24 வயசுக்காரன் என்னயையே அங்கிள்னு கூப்பிடுதே, அப்போ உங்கள என்னன்னு கூப்பிடும்?’’ன்னு கேட்டேன்’ அத கேட்டதும் அவருக்கு  ரொம்ப கோபம் வந்திருச்சு. அதுனால எல்லோருக்கும் சொன்ன ‘’பரிமளா’’ கதைய எங்கிட்ட மட்டும் கடைசிவரைக்கும் சொல்லல.
மெரினா பீச்சில், நியூ இயர் பார்ட்டிக்கு வந்த பொண்ண உசார் பண்ண கதைய சொன்னார். அதுக்கு முன்னாடி நாங்களும் நியூ இயர் பார்டி, டான்ஸ், அந்த மாதிரி, இந்த மாதிரின்னு நிரய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனா போகுறதுக்கு பயம். தண்டபானி இந்த வருசம் உங்களுக்காக நான் இங்க இருக்குறேன், எல்லோரையும் எம்.ஜி.ரோடு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரு. அதிலிருந்து, ‘’எப்படா நியூ இயர் வரும், எம்.ஜி ரோடு போகலாம்’’ன்னு வெறியோடு இருந்தோம். நியூ இயருக்கு ரெண்டு மாசம் முன்னாடியே தண்டபானி தலமையில 8 பேர் கொண்ட குழு அமைச்சு, ‘’ஒவ்வொருத்தனயும் தாக்குறோம், கெடைக்கிற பொண்ணுங்கள தூக்குறோம்’’ந்னு சூழுரை எடுத்துக்கொண்டோம். நியூ இயர் பக்கத்துல வர வர ஒவ்வொருத்தனுக்கு ஆர்வம் பீரிக்கிட்டு வந்துச்சு, தண்டபானிக்கு மரியாதையும் கூடிக்கிட்டுப் போச்சு.
எதிர்பாராத விதமா, நியூ இயருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவசர வேலையா நான் ஊருக்கு போகும்படியா ஆகிடுச்சு. உடல்தான் ஊருக்கு போச்சே ஒழிய மனசு பூரா எம்.ஜி.ரோட்டுலயே இருந்துச்சு. நியூ இயர் முடிஞ்சு சைட்டுக்கு போனேன். எவனையும் பார்க்க முடியல. அதே நேரத்துல நியூ இயர் பார்ட்டியில ஒரு பொண்னோட டிரஸ்ஸ உருவிட்டானுங்கன்னு கேள்விப்பட்டு, ரொம்ப ஆர்வத்தோட, நேரா ஸ்டோருக்கு போய் தண்டபானிய பார்த்து ‘’என்னாச்சு சார்? எப்படி இருந்துச்சு?’’ன்னு கேட்டு நச்சரிச்சேன். எப்போதும் உட்கார்ந்து வேலை பார்க்கும் த.பானி அன்னைக்கு நின்னுக்கிட்டே எல்லாத்தையும் எழுதிக்கொண்டிருந்தார். ‘’போயா அப்புறமா சொல்லுறேன்’’ ன்னு மாறி மாறி சொல்லி அனுப்பிவிட்டார்.  
மதிய சாப்பாட்டில் ஒருத்தனை பிடித்து ‘’என்னடா எப்படி இருந்துச்சு, ஏதோ ஒரு பொண்ண டிரஸ்ஸ கழட்டிட்டானுங்களாமுள்ள’’ என கண்களை விரித்து கேட்டேன். ‘’அத எல்லாம் கேட்டியே, அதுக்கு அப்புறம் லத்தி சார்ஜ் பண்ணினத கேள்விப்பட்டியா?’’ந்னு எதிர் கேள்வி கேட்டுவிட்டு ‘’தண்டபானியா போய் பார்த்தியா?’’ன்னு கேட்டான். ‘’ஆமா, ஒன்னுமே சொல்லல, நின்னுக்கிட்டே வேலை செய்றாரு’’ன்னு சொன்னேன். ‘’எப்படி உக்காருவாரு, அதுதான் குண்டியிலேயே போட்டானுங்கள்ள’’ன்னு சொல்லி போலிஸிடம் அடிவாங்குன கதையை சொன்னான். மனசு கேட்காம தண்டபானிய போய் ஸ்டோரில் பார்த்தேன். பாவம் மனுசன் நின்னுக்கிட்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

3 கருத்துகள்:

  1. என்ன நண்பரே.. நான்கு மாதமாக ஒரு பதிவையும் காணோம்...

    பதிலளிநீக்கு
  2. இப்படி ஒரு மனிசனால எழுதமிடியுமா!! வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு!!! ������

    பதிலளிநீக்கு