செவ்வாய், ஜனவரி 03, 2012

மெல்லத் தமிழினி?...........


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
மெல்லத் தமிழினி சாகும் என்ற கூற்று நடிகர் தனுஷின் பாடலைக் கேட்டபோதிலிருந்து, உண்மை என்று புலப்பட்டது. இதில் என்ன இருக்குன்னு இவ்வளவு அலப்பர பண்ணுரானுங்கன்னு பல நேரங்களில் தோன்றும், ஆனால் ஏதோ ஒருவகையில் அதனை அத்தனை பேரும் ரசிக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு பாடலாசிரியர், தனுஷின் இந்த பாடலைப் பற்றி குறிப்பிட்டு பேசும் போது “இதுவரை நிறையப்பேர் தமிழைத்தான் கொலைசெய்தார்கள், ஆனால் தனுஷ் மட்டும்தான் முதல்முறையாக ஆங்கிலத்தையே கொலைசெய்துள்ளார் என்று குறிப்பிட்டார். ஒரு கடுப்புல, தனுஷை பாராட்டுவது போல இருந்தாலும், மறைமுகமாக திட்டியுள்ளார் என்பது புலப்படும் நமக்கு.

2011ம் ஆண்டினை, சீரும் சிரப்புமாக வழியனுப்பிவிட்டு, 2012ம் ஆண்டினை புத்துணர்ச்சியோடு வரவேற்க நானும் எனது மாமி மகன்கள் இரண்டு பேருமாக, உலகத்தின் உயர்ந்த கட்டிடமான ‘புர்ஜ் கலிபாவிற்கு சென்றோம். துபையில் உள்ள அத்தனை பேரும் அங்குதான் கூடுவார்கள் போல, யாத்த்த்த்தி....... எம்பூண்டு கூட்டம், மெட்ரோ ரயில் நிலையத்திலேயே பலரது புத்தாண்டு துவங்கிவிட்டது. ஆம், எல்லாம் போட்ட மப்புல, மணி எத்தனை என்று தெரியாமலே ‘ஹேப்பி நியு இயர் ‘ஹேப்பி நியு இயர்ன்னு ஒரே அக்கப்போரு. ரொம்ப கஷ்டப்பட்டு நஞ்சு, நசுங்கி புர்ஜ் கலிஃபாவிற்கு செல்லுவதற்கு ஒரு 2 நிமிடத்திற்கு முன்னதாகவே புத்தாண்டு வந்துவிட்டது, என்னதான் நான் சிவகாசியில் படித்திருந்தாலும் இவ்வளவு வித, விதமான வான வேடிக்கைகளை பார்த்ததில்லை. அந்த 10 நிமிடம் அங்கிருந்தாவர்களுக்கு தரையில் என்ன நடக்கின்றது என்பது கண்டிப்பாக தெரிந்திருக்காது, பட்டிக்காட்டான் பர்கரைப் பார்த்தது போல “ஆ ன்னு பார்த்துகிட்டு நின்றார்கள் (நின்றோம்).
 எந்த திசை பார்த்தாலும் மனித தலைகள், போன நாங்க 3 பேரும், ஒன்னு சேருவதற்கே கிட்டதட்ட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. சரி வானவேடிக்கை மட்டும் தானா, வேறு ஏதாவது நிகழ்ச்சிகள் இருக்கின்றதா? என்று தேடித்தேடி அலைந்த போது நாங்கள் கண்டது ஒரு இசைக் கச்சேரி, ஆங்கில, அரபி,  ஹிந்தி பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்க, கிழேயுள்ள மக்களிடம் ஒரே ஆட்டம், கொண்டாட்டமாக இருந்தது. இரவு மணி 2 யை தொட்டபோது, இது தான் கடைசி பாடல், உங்களிடமிருந்து விடைபெருகின்றோம்,நன்றி, புத்தாண்டு தின வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு கடைசி பாடலை ஒலிபரப்பினார் ‘யோ, பாய்ஸ் ஐயம் சிங்க் ய சாங் வரி வந்த போது கூட்டத்தில் இருந்து அவ்வளவு சத்தம், என்ன பாடல்டா இதுன்னு யோசிக்குரதுக்கு முன்னாடியே ‘ஒய் திஸ் கொலவெறி ...... வரி வந்ததும், இதுக்கா இவ்வள்வு வரவேற்பு என்று எனக்கே ஆச்சர்யம். அரபி, ஹிந்தி பேசக்கூடியவர்களிடத்தில் இந்த பாட்டுக்குண்டான அறிமுகம் பற்றி கொஞ்சம் ஆடித்தான் போனோம். முந்தய பாடல்களுக்கு, எல்லோரும் டான்ஸ் ஆடி மகிழ்ந்தவர்கள், ஆனால் இந்த பாடலுக்கு, ஏதோ தேசிய கீதம் ஒலித்தது போன்ற உணர்வுடன், ஒன்று கூடி பாடிக்கொண்டிருந்தது, ஆச்சிரியத்தின் உச்சம்.

அந்த பாடலில், ஒரு இடத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறி டின்னு முழுவதுமாக வராமல், ‘ஒய் திஸ்.................. ஆ டின்னு வரும், அதிசயம் என்னன்னா அந்த இடத்தில கூட ஜெர்க் வாங்கமா, என் பக்கத்துல இருந்த ஒரு வேற்று நாட்டுப்பெண் பாடுனதுதான். இந்த பாடல், அவ்வளவு பிரபலம், இவ்வளவு பிரபலம் என்று பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும், நேரில் பார்த்தபோது தான் உணர்ந்து கொண்டேன். அந்த பொண்ணுக்கு ஒய் திஸ் எல்லாம் நல்லா வருது, ஆனா கொலவெறின்னு வரி வரும்போது என்னமோ அந்த வார்த்தைக்கு அர்தம் தெரிந்து, கொலவெலி, கொலவெலின்னு கொலவெறிபிடிச்சு பாடுச்சு (அது கூட நல்லாத்தான் இருந்தது).

இந்த ஒரு பாட்டவச்சிக்கிட்டு இனி தமிழ் வாழும்னு சொல்லுர, கேனைகளை வைத்துக் கொண்டு நம்மால தமிழ வளர்க்கமுடியாது. ஒரு தமிழனோட பாட்டு என்பதை தவிர, தமிழுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. வேற்று நாட்டுக்காரன் ‘அடடே பாட்டு நல்லா இருக்கே, இது எந்த மொழி பாடல்? ன்னு கேட்டா வேணும்னா தமிழ்ன்னு சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, பெருமைப் படக்கூடிய விசயம் ஒன்றும் இதனால் இல்லை.

2011, ஈரோடு புத்தக கண்காட்சியில் ‘மெல்லத் தமிழினி வாழும், சாகும் என்ற தலைப்பில், சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் ராசா மெல்லத் தமிழினி சாகும் தலைப்பில் உணர்ச்சிப் பூர்வமாக பேசினார். தமிழினை வளர்க்கும் தகுதி படைத்தவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும், எவ்வாறு தமிழின் நிலை இருப்பது என்பதனையும் பேசினார், தமிழ் அரசியலாகிப் போனதற்கு அசிங்கப்பட்டார். தமிழ் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிலபேர்களின் விசயங்களை என்னால் சொல்லமுயும் ஆனால் பயமாக இருக்கின்றது, அதைச் சொன்னால் நாளை நான் உயிருடன் இருக்கமாட்டேன் என்று சொன்னபோது தான் தெரிந்தது இனி தமிழைப் பற்றி பேசினால் உயிருக்கு ஆபத்து என்று. அவரைத் தொடர்ந்த பாப்பையா, ‘வீட்டில் உள்ளேயே தமிழ் செத்துப் போய்விட்டது என்றார். ‘நான் ஒரு தமிழ் வாத்தியார், என் வீட்டில் தமிழ் இருக்கிறதா?, என் சமையல் அறையில் தமிழ் இருக்கிறதா?. என்னை ஒரு பாத்திரம் விசில் போட்டு கூப்பிடுகின்றது வா, வாடா தமிழ் வாத்தி எனக்கு என்ன உன் தமிழின் பெயர் என்று கேட்கிறது, குக்கருக்கு என்ன தமிழ் பெயர்? சிலிண்டருக்கு என்ன தமிழில் பெயர்?... ‘ என்று அடுக்கிக்கொண்டே போனார்.

கூடுமானவரை, ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே, என் பதிவுகள், பிளாக்கில் இடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இன்று, எண்ணம் மடடும் தான் இருகின்றது,  செயலில், அது ரொம்ம கடினமானதாக இருக்கின்றது.

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் 2, 3 சீசன்கள் வந்துவிட்ட போதிலும், ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சி ஏனோ அடுத்த சீசன் இன்னும் வரவேயில்லை.
-------------------------------------------------------------------------யாஸிர்.

1 கருத்து:

  1. ஆதங்கத்தைப்பதிவு செய்த விதம் அருமை
    ஆயினும் தங்கள் பதிவினைப் படித்து முடிக்க
    இனித் தமிழ் சுகமாய் வாழும் எனத்தான்
    தோன்றுகிறது
    (காணொளிதான் தெரியவில்லை )
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு