வியாழன், மே 31, 2012

வழுக்கையில் முடி!, தொப்பையை குறைப்பது எப்படி?


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

தலைப்பில் உள்ள இரண்டு விசயங்களில் ஏதாவது ஒன்று சம்பந்தமான விளம்பரத்தினை நான் கண்டுவிட்டால், உடனே அந்த முகவரியை குறித்துவைத்துக்கொள்வேன். இல்லன்னா மூணு பக்கத்து விளம்பரத்துக்காக கொடுக்கப்படும் நோட்டிஸினை ஒரு வரி விடாம கடைசிவரி வரை படித்துவிட்டுத்தான் அந்த இடத்தினை காலி செய்வேன்.

இந்த குவாலிஃபிகேஸனோட இருக்குறது தமிழ் நாட்டில, ஏன்,  இந்த உலகத்திலையே என்னைத்தவிர ஒருவர் இருக்காருன்ன, அந்த பெருமை நம்ம பவர்ஸ்டார்க்குத்தான்.
வழுக்க எனக்கு எப்படி விழுந்தது, எப்ப விழுந்ததுன்னு தெரியல, ஆனா விழக்கூடாத நேரத்துல கரெக்டா விழுந்துச்சு. நான் ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் அதப்பத்தின கவல எனக்கு ஏற்பட்டது இல்ல, அதன் மூலமா அந்த காலகட்டத்துல எனக்கு வழுக்கை விழுந்திருக்க வாய்ப்பு இல்லன்னு தோனுது. காலேஜ் படிக்கும் போது, மொத்தமா, ஒரே நாள்ள விழுந்த ஃபீலிங்க்.

அய்யய்யோ முடி இல்லையேன்னு, நான் அதிகமாக கவலைப்பட்டது இல்லை, என் நண்பர் வட்டங்கள் என்னை சில சமயங்களில் “மொட்டப்பு ன்னு கேலி பண்ணி அழைக்கும் போதும் கூட, அதற்கெல்லாம் காரணம் நாம அவனுங்கள பண்ணுற அலப்பரைக்கும், கேலி, கிண்டலுக்கும், அட்லீஸ்ட் இப்படியாவது கூப்பிட்டு, அவங்க சந்தோசப்பட்டுக்கொள்ளட்டுமே என்ற ஒரு நல்ல எண்ணத்துல தான்.

ஒரு நாள் என் நண்பர்களுடன் மதியம் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, கை களுவுவதற்காக சென்ற இடத்தில், முகம்பார்க்கும் கண்ணாடி கரெக்ட தலைக்கு மேல இருந்துச்சு, அதுவும் லைட் எஃபக்டோட, அப்பத்தான் எனக்கு ஒரு உண்ம வெளங்குச்சு. நான் அதுவரைக்கும் எனக்கு கொஞ்சம் முடியில்லன்னு நினச்சுக்கிட்டு இருந்தேன், ஆனா முடியே இல்லன்னு அப்போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன். அதிகமா கவலைப்பட்ட காலங்கள் இல்லைன்னு சொன்னேன தவிற, கவலையேபட்டதில்லைன்னு சொல்லவில்லை.

முகம்பார்க்கும் கண்ணாடியில மண்டய பார்த்தப்பின்னாடி, ஒரே ஃபிலிங்க்ஸ், எங்கடா மருந்து கிடைக்குமுன்னு தேடி, மூலை, முக்கு, சந்து, பொந்து எல்லாம் தேடி அலையத்தொடங்கியாச்சு. அதுக்கு காரணம், ஒரு பிகர். அப்ப அய்யாவுக்கு லைட்டா லவ் மூடு ஸ்டார்ட்டாகியிருந்துச்சு. அவளுக்கு ஏகப்பட்ட போட்டி பாஸ், அதுல நாம இப்படி ஒரு குறையோட இருந்தா எப்படி?. அப்ப தேடத்தொடங்கியது தான் இன்னைக்கு வரைக்கும் முடிவே இல்லாம, தேடிக்கிட்டே இருக்கிறேன்.

தேய்க்காத எண்ணெயில்ல, பார்க்காத வைத்தியமில்ல, ம்ம்ம்ம்ம் வளரவேயில்லையே. சுத்தமான தேங்காய் எண்ணெயில ஆரம்பிச்சு, அமலா எண்ணெய், கேசவர்த்தினி எண்ணெய், கேரளா ஆயுர்வேத வைத்தியசாலை எண்ணெய், கோட்டக்கல் மூலிகை எண்ணெய்..............................இப்படியா எல்லா எண்ணயும் தேய்ச்சாச்சு, மண்ணெண்ணயத் தான் இன்னும் தேய்க்கல. கடைசியா இப்ப, இந்து லேகா எண்ணயில வந்து நிக்குது. மீசையில முடிமுளைக்குற சமயத்துல, மண்டயில உள்ள முடியெல்லாம் போக ஆரம்பிச்சுடுச்சு.
இதுக்கு இடைப்பட்ட காலத்துல எங்க பக்கத்து ஊர் இடைகாலில் ஒரு வைத்தியன், 30 நாளில் வழுக்கையில் முடி, ஸ்டாலினுக்கே முடி வளர வைத்த வைத்தியன்னு பேனர்கட்டி ப்ப்ளிசிட்டி பண்ண, ஹை ரெக்கமண்டேசன்ல அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் வாங்கி வைத்தியம் பார்த்தேன். கடைசில என்ன வச்சி அவன்தான் வளர்ந்தானே தவிர, அவனால எனக்கு ஒரு மயிரும் வளரல. 

‘உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சு?. எளவு வீட்டுல, துக்கம் விசாரிக்குற மாதிரியான, இந்த கேள்விய மட்டும் என்னால, இதுவரைக்கும் சகிச்சுக்கவே முடியல. அறிவாளிகளுக்கெல்லாம் அப்படித்தாண்டா, முடியிருக்காதுன்னு சொன்னா, உடனே அப்போ, அபுதுல் கலாம் என்ன முட்டாளான்னு கேட்குறானுங்க. இவனுங்களுக்கு விளக்கம் கொடுத்தே, எனக்கு அங்க அங்க இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் போயிடுச்சு.

எந்த பதில சொன்னாலும் ஒத்துக்கமாட்டாங்குறானுங்களேன்னு எண்ணி, இப்பவெல்லாம் அப்பன், பாட்டேன், பூட்டேன்னு எல்லாத்தயும் இழுத்துர்றது. யாராவது, அந்த கேள்விய இப்ப கேட்டாங்கன்னா, “எங்கப்பாவுக்கு இருந்துச்சா, எங்கப்பாவோட அப்பாவுக்கு இருந்துச்சா, எங்கப்பாவோட, அப்பாவோட, அப்பாவுக்கு........................... ன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, அப்பப்பான்னு அலரியடிச்சு ஓடிர்ரானுங்க.

வழுக்க என்பது இளைமயின் அடயாளமாம், இளநீர் வாங்கும் போது, நாம என்ன சொல்லி வாங்குவோம், ‘நல்ல வழுக்க இளநீயா பார்த்து கொடுப்பான்னு தானே. சோ, நாங்க, இப்ப இல்ல எப்பவுமே யூத்ஸ்தான்.
தொப்ப, இது எப்ப.......................ன்னு பாத்திங்கன்னா, கடந்த 3 வருசமாத்தான். காலேஜ் படிக்கும் போது, நான் வெறும் 47 கிலோ தான். அடிச்சா, அடி வாங்குற, இந்தியன் புருஸ்லி மாதிரி இருப்பேன். இது 2004ன் அப்டேட். அப்புறமா, விருது நகர்ல கொஞ்ச நாள் வேலை பார்க்கும் போது, ஒரு பாய் கடையில் அன்லிமிட்டெட் சாப்பாடு சாப்பிட்டு, கொஞ்சம் குண்டானேன். ஆனாலும், வயிறு கண்ரோலில் தான் இருந்துச்சு. அப்புறமா 4 வருசம் பெங்களூரில் இருந்தாலும், சாப்பாட்டுக்குன்னு ஒரு குறையும் இல்லை, இருந்தாலும் எனக்கு உடம்பு போடவேயில்ல.

துபாய்க்கு வந்ததிலிருந்து, பேய் தீணி, ஆனா வேலைன்னு பார்த்த, இந்தா, இந்த பிளாக் எழுதுறது தான். பின்ன எப்படி தொப்ப வைக்காம இருக்கும். இந்தியாவுல இருக்குற வரைக்கும், 15 மாடி கட்டிட்த்துல, படில ஏறி, இறங்கியே சாப்பிட்ட சாப்பாட்ட ஜீரணிக்க வச்சுருவானுங்க. ஆனா இங்க, ஹால்ல இருந்து க்க்கூஸுக்கு போறதுக்கு வண்டி. காலையில 7.00 மணிக்கு சீட்டுல உட்காருற நான், சாயங்காலம் 6.00 மணிக்குத்தான் எழுந்திருப்பேன்.

ஓடுன்னா உடம்பு குறையும்னு (யாரைக் கூட்டிக்கிட்டுன்னு எல்லாம் கேட்க கூடாது) சொன்னத கேட்டு, ஓட ஆரம்பிச்சா, ஷூ தேஞ்சது தான் மிச்சம், தொந்தி தேயல. டாக்டர்கிட்ட ஐடியா கேட்ட, ஓடனும் ஆனா, நீங்க ஓடுற மாதிரியெல்லாம் ஓடக்கூடாது, நாய் தொரத்துனா எப்படி ஓடிவீங்களோ, அப்படி ஓடி, நாக்கு தொங்கி, இளைச்சு நிக்கனும்னு சொன்னாரு. ஒரு நாள் ஓடும் போதே தெரிஞ்சு போச்சு, அப்படி ஓடியிருந்தா நாக்கு தொங்கி மண்டய போட்டிருப்பேன். வாரத்துல 2 நாள் விரதம், இரவு சப்பாத்தின்னு என்னலாமோ செஞ்சு பார்த்தாகிவிட்டது. ஒரு சேஞ்சும் இல்ல.

துபாயிக்கு வந்து, இரண்டு வருடம் கழித்து முதல் முதலா ஊருக்கு போனபோது, விமான நிலையத்துக்கு குடும்பமே வந்திருந்தது. திருவனந்தபுரம் ஏர்போர்டில் வெளியே வந்தவுடன், மாமான்னு கூப்பிட்டுகிட்டே வரும் அக்கா குழந்தைகள், நல்லா இருக்கியாப்பான்னு கண் கலங்கி நிற்கும் அம்மா, அக்கா, கையோடு, கை பற்றி தோளில் சாய்க்கும் அப்பா.........இப்படி கனவு கண்டு வந்து, ஏர் போர்டுக்கு வெளிய வந்து பார்த்தா, என்னய பார்த்தும், பார்க்காமலும் நிற்கும் குடும்பத்த பார்த்து அதிர்ந்து போனேன். என்ன விட்டு விட்டு எனக்கு பின்னாடி வந்த ஒல்லிக்குச்சி பயகிட்ட பேசினத பார்த்து, கடுப்பாகி, “டாடி அயம் ஹியர் அப்படிங்குறத தமிழ்ல சொல்லி, யாரு அவன்னு விசாரிச்சா, நீ தாண்டா அவன்னு நெனச்சு, பேசிக்கிட்டு இருந்தோம் சொன்னவுடன் புரிந்துவிட்டது, நாம எவ்வளவு மாறியிருக்கிறோம் என்று. என்னடா எப்படி இருக்கன்னு கேப்பாங்கன்னு பார்த்தா, என்னடா இப்படி இருக்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க?. வாட்ட சாட் இன்சிடண்ட்.....................

சமீபத்துல ஒரு நண்பருடைய பிளாக்கில், யோகா மூலமாக தொப்பையை குறைக்கலாமுன்னு, மனப்பாடம் செய்து, ரூமில் செய்யலாமுன்னு துண்ட எல்லாம் போட்டு உட்கார்ந்தா, தலைப்பு ‘தொப்பையை குறைப்பது எப்படிங்குறது மட்டும் ஞாபகத்துல இருக்கு, மற்றதெல்லாம் மறந்து போச்சு. மறுநாள் பிரிண்ட் போட்டு எடுத்துகிட்டு போயி செய்யலாமுன்னு இரவு 7.00 மணிக்கு உட்கார்ந்தா................... உட்கார்ரதுக்கே பத்து பாயிண்ட் இருக்கு.

இடது காலை, வலது தொடயில போட்டு, வலது காலை இடது தொடையில போட்டு, உட்காரவேண்டும். இடது கால் போச்சுன்னா, வலது கால் போகமாட்டேங்குது, வலது கால் போச்சுன்னா, இடது கால் மக்கர் பண்ணுது. இப்படியா போட்டு, போட்டு பாத்துக்கிட்டு இருக்கும் போது, ‘சரி, சரி, மணி 9.30 ஆயிடுச்சு, எந்திச்சு சாப்பிடவான்னு ஒரு குரல், எங்கயோ கேட்ட குரலுக்கு திரும்பி பார்த்தா, சிக்கென் 65 யுடன் பிரியாணியையும் மிக்ஸ் பண்ணி விளையாண்டு கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நடுவுல இருந்துக்கிட்டு, நான் இப்படி தொந்திய குறைக்கிறேன், தொப்பய கரைக்குறேன்னு சொல்லுறது நல்லவா இருக்கு.

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஏதோ அந்த இரண்டுக்கும் நான் வழி சொல்லப்போகிறேன் என்று என் ஜாதிக்கார, பாசக்கார பயலுகளுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்.


பிப்பிலிக்கா, பிலாப்பி.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

6 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    சீரியஸா ஏதோ சொல்ல வறீங்கன்னு நினைச்சு படிக்க ஆரம்பித்தேன்.நகைச்சுவையை இடையிடையே சேர்த்து நகைச்சுவையாய்(பிம்பிலிக்கி பிலாப்ப்பின்னு) முடிச்சிட்டீங்கள்.மிகவும் நல்லாயிருந்தது.
    நானும் துபாயில்தான் இருக்கிறேன்.என்னுடைய அனுபவமும் கிட்டதட்ட உங்களுடைய அனுபவம் மாதிரிதான்.அதுக்காக வழுக்கை இருக்குன்னு நினைக்காதீங்க.வழுக்கை விழுந்திட்டா பொண்ணு கிடைக்காம போய்டும்னு பயந்துகிட்டேயிருந்தேன் திருமணம் நடக்கும் முன்.ஆனால் இப்போ அந்த கவலையில்லை ஏனென்றால் எனக்குத்தான் திருமணம் முடிஞ்சிடுச்சுல்ல.
    அப்புரம் தொப்பை இல்லைன்னு சொல்லமுடியாது இருக்கு ஆனால் இல்லாததுபோல் காட்டிகொள்கிறேன்.நானும் எவ்வளவுநேரம் தான் மூச்சை இழுத்துபிடிச்சிகிட்டேயிருக்கிறது.
    என்ன பண்றது எல்லாம் வளைகுடா சாப்பாடும் தண்ணீர்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @சகோ ஷஃபி,

      மறுமொழியிட்டமைக்கு நன்றி, நான் இட்ட பதிவுகளிலேயே அதிகம் பேர் படித்த / பார்த்த பதிவு இதுதான், இதிலிருந்தே தெரியுது பவர்ஸ்டார்களின் எண்ணிக்கை.
      என் தலையை பார்த்துட்டு எனக்கும் எவனும் பொண்ணு கொடுக்கல. ஆனாலும் முறைபொண்ணை மடக்கி கிட்டத்தட்ட கட்டாய கல்யாணம் தான் பண்ணியிருக்கோம்.
      ஆமா, தண்ணி, தண்ணின்னு சொல்றீங்க எந்த தண்ணீர்ன்னு சொல்லலியே????

      நீக்கு
  2. நானும் உங்க கட்சிதான், உச்சந்தலையில் ஒளிவட்டம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு! தொப்பைய அப்பப்ப குனிஞ்சு பார்த்து எக்கி சமாளிக்க கொஞ்சம் கஷ்டமாக தானிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்சியில உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகுது போங்க. சில சமயத்துல என்ன கலர் பேண்ட் போட்டிருக்கோம் என்பதைக்கூட கண்ணாடியில பார்த்துதெரிந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது.
      மறுமொழியிட்டமைக்கு நன்றிகள் பல

      நீக்கு
    2. அடுத்த பதிவு ரெடியாகுதா யாஸிர், எங்களுக்கு பொழுபோக்கே உங்க பதிவு மாதிரி நகைச்சுவை பதிவுகளை படித்து ரசிப்பது தான்.

      நீக்கு
    3. என்ன வச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே!!!!!!!!!!!

      நீக்கு