திங்கள், ஜூலை 07, 2014

நோன்பும், நோன்புக் கஞ்சியும்.

இசையமைப்பாளர் அனிருத் போன்ற தோற்றத்தில் நோஞ்சானாக இருந்த நான், நோம்(ன்)புக் கஞ்சிக்காகவே நோம்பிருந்த இனிமையான காலங்கள் அது. ஆறாவது வகுப்பு வரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் பயின்ற போது, வெள்ளிக்கிழமைகள் மட்டும் நோன்பு வைத்ததுண்டு (அப்போதெல்லாம் எங்களூரில் இருந்த இஸ்லாமிய பள்ளிகளுக்கு வியாழக்கிழமை மதியமும், வெள்ளிக் கிழமையும் விடுமுறை). நோன்பு என்றால் அதிகாலை ஸஹர் உணவை சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம், விழிப்பது 12 மணி தொழுகைக்காக, பின்பு மறுபடியும் தூக்கம் அடுத்து விழிப்பது மாலை 6 மணிக்கு நோன்பு திறப்பதற்காக என்பதாகவே இருந்தது.

மற்ற நாட்களில் யாருக்கும் தெரியாமல் காலைப் பொழுதுகளில் தண்ணிரை குடித்துவிட்டு, மாலையில் நோம்புக் கஞ்சிக்காக அப்பாவுடன் குல்லாவை மாட்டிக் கொண்டு மசூதி சென்று ‘கள்ள கொட்றா’ குடித்ததுண்டு. கஞ்சு ஊற்றுவதற்கு மண்ணினால் செய்யப்பட்ட அந்த குவளைக்கு எங்கள் ஊறில் ‘கொட்றா’ என்று பெயர். ‘என்னப்பா உன் பையன் நோன்பா வச்சிருக்கான்?’ என ஆச்சிரியத்தோடு கேட்கும் கஞ்சி ஊற்றுபவனிடம், ‘ஆமாம், காலையில 4 மணியிலிருந்து 9 மணிவரை’ என வாய் கூசாமல் உண்மையை கூறிவிட்டு கொட்றாவைத் தூக்குவார், தாத்தா அரிச்சந்திரனின் அடுத்தவாரிசான என் தோப்பனார்.  என்னைப் போலவே சக பங்காளிகளும் அப்பா கைலிக்குப் பின்பாக பதுங்கி பதுங்கி வருவதைப் பார்த்தவுடன், அப்பா கையை விட்டு விட்டு ‘கள்ள கொட்றா அசோசியேசன்’ மெம்பர்களுடன் கூட்டாக உட்கார்ந்து நோற்காத நோம்பை கொண்டுவந்திருந்த வடை, ஊருகாய், ரஸ்னா, முருக்கு சமோசா போன்ற ஐட்டங்களுடன் முடிக்கமுடியாமல் முடித்துக்கொள்வோம்.  

'கோனன் பண்டாரி'யின் கைப்பக்குவ கஞ்சிக்கு, கொத்தடிமைகளாக மாறி கைமாறு செய்ய காத்திருந்த கனாக் காணும் காலங்கள். கறிக் கஞ்சிக்காகவும், போத்திஸ் கொடுக்கும் இத்துணூண்டு பூந்தி பொட்டலத்துக்காகவும் மட்டும் எங்கள் ஊரில் இருந்த அத்தனை பள்ளிவாசல்களையும் அறிந்து வைத்திருந்திருந்தோம். இன்ன தேதியில், இத்தனையாவது நோம்பு நாளில் மதினா நகர் பள்ளிவாசலில் பாயாசம் என்றும் அதன் மறு நாள் பெரிய தெரு பள்ளிவாசலில் பீப் சுக்கா எனவும், நஜாத் பள்ளிவாசலில் பஜ்ஜி சட்னி எனவும் பெரிய்ய ‘டேட்டா பேஸ்’ புத்தகமே எங்களிடம் இருந்தது.

அந்த இஸ்லாமிய பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் வரையில் முழுமையாக முப்பது நோன்புகளையும் வைத்திராத என்னை ஏழாவது வகுப்பில் வகையாக மாட்டிக்கொள்ள வைத்தது சுத்தி இருந்த சத்ய சீலன், மாணிக்க ராஜா, சங்கர், ஸ்ரீ ரங்க நாதன் எனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி கலிபாக்கள்தான். அந்தப் பள்ளியில் அலசி ஆராய்ந்து  பார்த்தால் ஐந்து முஸ்லீம் பசங்களுக்கு மேல் இருந்த நியாபகம் இல்லை. எனது வகுப்பில் நான் மட்டும்தான் இஸ்லாமியன் என்பது கூடுதல் தகவல்.

‘ஏண்டா நோம்பு வைக்கிறீங்க?’, ‘எப்படிடா தண்ணி கூட குடிக்காம இருப்பீங்க?’. ‘பள்ளிவாசல என்னடா பண்ணுவீங்க?’. ‘காலையில எத்தன மணிக்குடா சாப்பிடனும்?’ ‘ரொம்ப கிரக்கமா இருந்தா என்னடா பண்ணுவீங்க?’ என இஸ்லாத்தை கண்டுபிடித்த முகம்மது நபியின் முப்பதாவது வாரிசிடம் கேட்பது போல, கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்டும் கேள்வியும், காலாண்டு கேள்வித்தாளும் ஒன்று, எதுக்குமே எனக்கு பதில் தெரியாது. ‘நானே நோம்புக் கஞ்சிக்குத்தாண்டா நோம்பு வைப்பேன்’னு உண்மைய சொன்னா, பூரா ‘பாய்’ஸும் பேட் ‘பாஸ்’ன்னு நெனச்சிடுவானுங்களோன்னு பயந்து, ‘எனக்கு எழுத எக்கச்சக்கமா இருக்குது, நீ கேக்குறதுக்கு பதில் சொல்ல நிறைய நேரம் ஆகும் அதனால, நாளைக்கு ஒன்னுக்கு பெல் அடிக்கும் போது எல்லாத்தையும் சொல்லுதேன்’ என்று எஸ்ஸாகி, அப்பா முன்னாடி ஆஜர் ஆவேன்.

‘ஏம்பா நோம்பு வைக்கிறோம்?’, ‘எப்படி தண்ணி கூட குடிக்காம இருப்போம்?’. ‘பள்ளிவாசல என்ன பண்ணுவோம்?’. ‘காலையில எத்தன மணிக்கு சாப்பிடனும்?’ ‘ரொம்ப கிரக்கமா இருந்தா என்னப்பா பண்ண?’ என எல்லாக் கேள்விகளுக்கும் பதில் வாங்கி, மனப்பாடம் செய்து வைத்து, நண்பர்களுக்கு ஒப்பிப்பது என்பதுவாக இருந்தது என் பணி. அவர்களின் மூலமாகத்தான் எனக்கே இஸ்லாம் பற்றிய ஒரு சிறு அறிவு ஏற்பட்டது என்றால் அது கதையல்ல நிஜம்.

‘டேய், இனி முதல் பெஞ்சுல உட்காராத, நாலாவது பெஞ்சுல போய் குமார் பின்னாடி உட்காரு, அப்பத்தான் டீச்சர் பாக்காது’ என ரொம்ப அக்கறையாக நண்பன் சொல்ல,

‘எதுக்குடா’ன்னு நான் கேட்டேன்,

‘நோம்பு டயத்துல கிரக்கமா இருந்தா தூக்கிக்கோ’ என கறந்த பசும்பாலின் தூய்மையுடன் என் நண்பன் சொல்ல, அவர்களின் அந்த அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டு முதல்முறையாக முப்பது நோம்புகளையும் நோற்றேன்.

ராமாயணம் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே, ரமலான் மாதத்தின் சிறப்பை கேட்கும் நண்பர்களின் அறிவுப் பசி, சில நேரங்களில் வயிற்றுப் பசியை விட கொடுமையானதாக இருக்கும். அந்த மாதம் முழுவதும் தோழர்கள் என்னை எங்கும் தனியாக அனுமதித்ததே கிடையாது, ‘கெரங்கி கீழ விழுந்துட்டா?, ‘மயங்கி மண்ட போட்டுட்டா?’ என ரைமிங்காக எச்சரிப்பது திகில் படத்தைப் பார்ப்பது போல பீதியாக இருக்கும். வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்த போதும், கேள்விக்கு தப்பாக பதில் சொன்ன போதும், பாடத்தை கவனிக்காமல் இருந்த போதும் டீச்சர் அடிக்க வருகையில், ஒட்டுமொத்த வகுப்புமே எனக்காக எழுந்து “டீச்ச்சர்..........அவன்ன்ன்..... நோன்பு...........” என இழுத்து சொல்லும் போதுதான் நானே உணர்வேண், நான் நோன்பு இருப்பதை. அதற்கு தகுந்தாற் போல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு டீச்சர் அடியிலிருந்து அந்த ஒரு மாசத்துக்கு விடுதலை.

நான் படித்த ஊரில் ஒரு சின்ன பள்ளிவாசல் இருந்தது, அங்கு எப்போதும் கஞ்சியுடன் ஒரு வடையும், ஒரு சமோசாவும் உண்டு. எங்களது ஊரில் எதுவும் ஸ்பெசல் இல்லை என்றால் சின்ன ஜமாத்தில் சகலத்தையும் முடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்வது என வாடிக்கை. ஊரில் பாயாசம், பிரியாணி என ஸ்பெசல் ஐட்டங்கள் என கேள்விப்பட்டுவிட்டால் சொல்லி வைத்தாற்போல் 3 மணிக்கு கிரக்கமா..... வரும், டீச்சரும் ஒருவனை கூட அனுப்பி பஸ் ஸ்டாண்டில் என்னை விட்டு வரச் சொல்லும். இதுமாதிரி ஸ்பெசல் போடுகிற நாளில், புதுப் படம் ரிலீஸ் ஆன தியேட்டர் மாதிரி கூட்டம் அள்ளும், அந்த கூட்டத்தில், நமக்கும் ஒரு பாயாச கோப்பையையும், வீட்டுக்கு எடுத்துச் செல்ல கையோடு கொண்டு வந்த தூக்குச் சட்டிக்கு ஒரு கோப்பையையும் எடுத்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

நோம்பு நேரங்களில் நல்ல அமல்கள் செய்யவேண்டும், நல்லதையே பேசவேண்டும் என காலையில் அஸரத் வகுப்பு எடுத்திருந்தாலும், கூட்டத்தில் முண்டி சண்டை போடும் போது ‘....தா காலை மிதிக்காதடா’ ‘....ம்மா வேட்டிய உருவாதடா’ என்ற பொன்மொழிகளே சம்சாரிக்கப்படும். இப்பவெல்லாம் மண் சட்டி மலையேறிப் போச்சு. பாயாசம் போயே போயிந்தி. இன்று எப்போதாவது பிரியாணி பொட்டலம் கொடுப்பார்கள், எங்களிடம் இருந்த போர்க்குணம் எல்லாம் இப்போது இருக்கும் வாண்டுகளிடம் சுத்தமாக இல்லை. பரிதாபமாக பார்த்தால் பார்சல் பிரியாணியை நமக்கே தந்துவிட்டுப் போகும் அளவிற்கு போர்க்குணம் மங்கிப் போய்விட்டது.

காலேஜ் படிக்கும் போது நிர்வாகம் நோம்பு நோற்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆனாலும் நோன்பு முடிக்கும் போது கஞ்சி இல்லாமல் ரொம்ப குஷ்டப்பட்டேன். ஒரே ஒரு முறை காலேஜ்க்கு பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிவாசலுக்கு நோம்பு திறக்க சென்றாலும் கஞ்சியில் எங்க ஊரை மிஞ்ச இயலாமையால் வார வாரம் ஊருக்கே வந்துவிடுவேன். பெங்களூரில் வேலை செய்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த பள்ளிவாசலில் கஞ்சியுடன், வீட்டில் இருந்து கொண்டு வரும் பழங்களையும், இனிப்புகளையும் அனைவருக்கும் பங்கிட்டு அனைத்து தட்டுகளிலும் நிரப்பிவிடுவார்கள், சில சமயங்களில் இரவு சாப்பாடும் ஏற்பாடு செய்துவிடுவார்கள். இரவு சாப்பாடு என்று கேள்விப்பட்டுவிட்டால் அன்று பக்தி பழமாக, இல்லை இல்லை பக்தி பஞ்சாமிர்தமாகவே மாறிவிடுவேன்.

வெளிநாட்டில் இருந்து வரும் சொந்த பந்தங்களை திருவனந்தபுரம் ஏர்போட்டில் இருந்து தூக்கிவர ரமலான் மாதத்தில் மட்டும் முண்டியடித்து முன்னாடி போய் நிற்பதன் காரணம், அங்குள்ள பள்ளிவாசலில் கஞ்சியுடன், பயிறு, அப்பளம், துவையல் கொடுப்பதாக கேள்விப்பட்டதால்தான். அந்த கஞ்சியை கண்ணால் காண, கடல் கடந்துவருபவரை கூப்பிடச் சென்றால், அவரோ குடித்தால் கடையநல்லூர் கஞ்சியைத்தான் குடிக்கவேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு வண்டியை அடித்து ஓட்டிக்கொண்டு எங்க ஊர் பள்ளிவாசல் முன்னால் நிற்க, பாங்கு ஓசை கேட்க, என நேரம் கண கச்சிதமாக இருக்கும்.

‘முண்டாசுப் பட்டி’ முனீஷ்காந்த் மாதிரி சாப்பாடு போட்டா சம்பணம் போட்டு உட்கார்ந்துவிடுதன் காரணம் அனிரூத்தாக இருப்பவன் எப்படியாவது அர்னால்ட் மாதிரியான உடல்வாகுடன் உருவாக வேண்டும் என்ற லட்சிய வேட்கைதானின்றி வேறில்லை பராபரமே. ரமலான் மாதம் என்றாலும் கொண்ட கொள்கையில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கஞ்சியில் இருந்து அதிகாலை சாப்பாடு வரை வாய் அசை போட்டுக்கொண்டே இருக்கும். அபுதாபி வந்த பின்பு கஞ்சி கலாச்சாரம் இல்லை என்பதை அறிந்து ‘முஸ்லீம் நாடுன்னு சொல்லி வந்து இப்படி மோசம் போயிட்டோமே’ என கஞ்சிக்காக கதறியதுண்டு. ரமலானுக்கும், கஞ்சிக்கும் உண்டான பந்தத்தை எளிதாக விட்டுவிட என்னால் முடியவில்லை, அதனால் இப்போது நானே கஞ்சி சமைத்து நோன்பு திறப்பதுண்டு.

பழைய நல்ல விசயங்களில் சில, நம்முடய ஞாபகக் கதவுகளை தட்டுகிறது என்றால், அந்த நேரத்தில் ஒரு கெட்ட விசயம் நடந்திருக்க வேண்டும். அதுபோலத்தான் இந்த கஞ்சி மேட்டரும், நானே சமைத்த கஞ்சியை குடித்தபின்பு உருவான ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேதான் இது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

17 கருத்துகள்:

  1. appadiye ilamai kalangalai entha pasangum inri kondu vanthu irukkenga.
    roma feelings ah irukka.
    i miss nombu kanji here.

    பதிலளிநீக்கு
  2. எங்களிடம் இருந்த போர்க்குணம் எல்லாம் இப்போது இருக்கும் வாண்டுகளிடம் சுத்தமாக இல்லை. பரிதாபமாக பார்த்தால் பார்சல் பிரியாணியை நமக்கே தந்துவிட்டுப் போகும் அளவிற்கு போர்க்குணம் மங்கிப் போய்விட்டது''

    amamga ippo irukka pasangallukku oru pidippe illenga.

    பதிலளிநீக்கு
  3. அபுதாபி வந்த பின்பு கஞ்சி கலாச்சாரம் இல்லை என்பதை அறிந்து ‘முஸ்லீம் நாடுன்னு சொல்லி வந்து இப்படி மோசம் போயிட்டோமே’ என கஞ்சிக்காக கதறியதுண்டு. ரமலானுக்கும், கஞ்சிக்கும் உண்டான பந்தத்தை எளிதாக விட்டுவிட என்னால் முடியவில்லை, அதனால் இப்போது நானே கஞ்சி சமைத்து நோன்பு திறப்பதுண்டு. ''

    naanum romba miss panrenga.

    amam bro , abudhabi la enga irukkenga ? mussaffah va?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பின்னுடத்தில் இருந்து புரிகிறது நீங்க ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறீங்க என்று. வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நான் அபுதாபியில் கலீதியாஹ் பகுதியில் இருக்கின்றேன்.

      நீக்கு
    2. Naan JAFZA la work panren Bro. Week off la ellam abudhabi Mussaffah la iruppen en siru vayathu nanbar udan..

      நீக்கு
  4. கிட்டத்தட்ட என் வாழ்வில் என இஸ்லாமிய நண்பர்களுடனான சம்பவங்களின் தொகுப்பாகவே இந்த பதிவை பார்க்கிறேன்... நாங்களும் இப்படித்தான் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே இருப்போம்.. சலிக்காமல் பதில் கூறுவார்கள்.. முப்பது நாலும் நோம்புக் கஞ்சியுடன் மற்ற பதார்த்தங்களை வாங்க செய்த தரச் செயல்களை கூறுவார்கள்.. அப்போதெல்லாம் பொறாமையாக இருக்கும்... தினமும் நோன்பு திறந்ததும் ஒரு ஏழு மணிக்கு தவறாது நோம்புக் கஞ்சி கொண்டுவருவான் என நண்பன்.. எனக்கு நோம்புக் கஞ்சி என்றால் அவ்வளவு பிடிக்கும்.. சென்னை வந்ததும் பக்கத்து வீட்டு பாயம்மா கொடுத்தார்..மேடவாக்கத்தில் காஞ்சிப் போய்க் கிடக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  5. இந்த சமயத்தில் மட்டும் அல்ல... என்றும் எனது பக்கத்து வீட்டு சகோதரர்கள்...

    பதிலளிநீக்கு
  6. துபாய் தமிழ் பஜார்ல உள்ள குவைத் மஸ்ஜிதில் நம்ம ஊரு கஞ்சி கிடைக்கும் வாங்களேன் - bahurudeen

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கேள்விப்பட்டேன், கண்டிப்பாக ஒரு முறை முயற்சிக்கிறேன்.
      தகவலுக்கு நன்றி தோழர்.

      நீக்கு
  7. //பரிதாபமாக பார்த்தால் பார்சல் பிரியாணியை நமக்கே தந்துவிட்டுப் போகும் அளவிற்கு போர்க்குணம் மங்கிப் போய்விட்டது.//

    ha ha
    chance illa yasir
    super

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. BRO, intha nonbu kathayum konjam paarunga.

    http://muthaliblogs.blogspot.in/2014/06/ramzan-fasting.html

    பதிலளிநீக்கு