திங்கள், அக்டோபர் 17, 2016

நா.முத்துக்குமார்.

கவிஞனாய் இருந்து ‘’இதயப் பசி, இரைப் பசி போக்கியதால் நீ தமிழகத்தின் தலைமகன்’’ என எவருக்கும் சொம்படிக்கவில்லை. ‘’என்னாச்சும்மா உங்களுக்கு, பயம்மா இருக்குமா எங்களுக்கு’’ என காஞ்சனா படத்தை கவிதையாக்க் கூறி நடிக்கவில்லை. இது போதாதா நா. முத்துக்குமாரை நல்ல கவிஞன் என புகழ்வதற்கு. விஞ்ஞானம், பொருளாதாரம், புவியியல், வேதியல் என அனைத்தும் சினிமா பாடல்களாகி வரும் சூழலில், குடும்பம், உறவு, காதல், நட்பு, பட்டாம்பூச்சு இவைகளைக் கொண்டு மட்டும் தமிழின் ஆகச்சிறந்த பாடல்களை உருவாக்கியவர். 

அன்றைக்கு செய்திகளை வாசிக்க நேரமில்லை, மேலோட்டமாக நோட்டமிட்டதில் முத்துக்குமாரின் புகைப்படங்களாகவே இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மூன்றாவதாக கவிஞருக்கு தேசியவிருது அறிவிக்க்பட்டிருப்பதாகவே  நினைத்தேன். சில மணிநேரம் கழித்து செய்தியைப் படித்து நொறுங்கிப் போய் நின்ற பலரில் நானும் ஒருவன். முத்துக்குமாரை நேசித்த பலருக்கும் தோன்றிய அந்த ‘வாழ்க்கை’ கவிதையே எனக்கும் நினைவில் வந்தது. ‘’ஆம், முத்துக்குமார் வாழ்க்கை எனும் சீட்டாட்டத்தில் கடவுளிடம் தோன்றுப்போனார்’’ என்பதை உணரவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இந்த கட்டுரையை பிழையின்றி எழுதவேண்டும் என்ற அக்கறை மட்டுமே தமிழை நேசித்த அந்த கவிஞனுக்கு நான் செய்யும் மரியாதை. 

‘’அனிலாடும் முன்றில்’’, ‘’வேடிக்கை பார்ப்பவன்’’ என நான் படித்த வெறும் இரண்டு புத்தங்களின் மூலமாக முத்துக்குமாரின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். ‘’எனக்காக மட்டுமே எழுதப்பட்ட புத்தகங்கள்’’ என்று இன்னும் நான் கொண்டாடுபவை அவை. உறவுகளின் உரசல், வாழ்க்கையில் உற்சாகமின்மை என பல துக்கமான நாட்களிலில் துணையாக நின்றவை அந்த புத்தகங்கள். தெரியாத ஊர், புரியாத இடம், தனிமையின் கொடுமை என வாழ்க்கை புதிர் போட்ட காலங்களை அந்த புத்தகங்களின் அத்தியாங்களைக் கொண்டு கடந்துவந்திருக்கின்றேன். இதுவரை நான் படித்த புத்தகங்களில் எதையும் திரும்ப படித்ததில்லை. ஆனால், இந்த இரண்டையும் திரும்ப திரும்ப படித்திருக்கின்றேன்.

சின்ன வயதில் தன் தாயை இழந்தவன் வலியை இதைவிட எளிதாக யாரால் உணர்த்திட முடியும்?.
'அழுது புரண்டு
நான் அலறிய ராத்திரிகளில்,
நிலா இருந்தது.
சோறும் இருந்தது.
ஊட்டத்தான் தாயில்லை!
தாயில்லா குழந்தையின் தந்தை எப்படி இருக்கவேண்டும்? என்பதை முத்துக்குமாரும் அவர் தந்தைக்குமான உறவு புரியவைக்கும். புத்தகத்தில் பத்து பக்கம் வாசித்தால் பல முறை ஒரு செய்தியாகவோ, சம்பவமாகவோ அவர் அப்பாவை மேற்கோள் காட்டியிருப்பார். லயித்த அப்பா பற்றிய வரிகள்
என் அப்பா
ஒரு மூட்டிய புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்றுவிடுவார். 

‘’அப்பா, இப்போது சொல்கிறேன், நான் படித்த புத்தகங்களிலேயே உங்கள் அனுபவம்தான் சிறந்த புத்தகம்’’

‘’இந்த உலகம் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது; அதிசயமாக இருந்தது; அதிர்ச்சியாக இருந்தது; அச்சமாக இருந்தது; தன் தந்தையின் கைவிரல்களைப் பற்றியிருந்ததால், எல்லாமே அனுபவமாக இருந்தது.’’

பெண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் வளர்ந்த ஒருவன், பெண்களைப் பற்றி ‘’இனி அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல, அக்கா வந்து போகும் வீடு’’ என எப்படி எழுதமுடிகிறது? என்றெண்ணி பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கின்றேன். வேடிக்கை பார்ப்பவன் என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றி எழுதியிருப்பார். எல்லாமே அற்புதம் என்றாலும், பள்ளிக்கு கூட்டிச் செல்லும் மாட்டுக்காரன் தன் மீன் குழம்புச் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டதை நிர்வாகத்திடம் கூறி வேலைவிட்டு அனுப்பியபின்பு, பெரியவனாகி அவரை தியேட்டரில் சந்திக்கும் போது மன்னிப்பு கேட்கும் அந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருக்கும். அவர் திருப்திக்காக ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டு ‘’கோன் ஐஸை டேஸ்ட்டு பார்த்தான். அதில் மீன் குழம்பு வாசம் அடித்தது!’’ என்று கவித்துவமாய் முடித்திருப்பார்.
இறந்த அன்றே முத்துக்குமார் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். என்றாலும் ஏனோ துக்கத்தில் வார்த்தை கிடைக்காமல் தமிழுக்கு தூரமாகியிருந்தேன். மேலும், ஊரே பேனாவில் கண்ணீர் நிரப்பி அவரைப் பற்றி எழுதும்போது நான் எழுத யாரும் வார்த்தைகளை விட்டுத்தரவில்லை. சில வார்த்தைகள் கிடைத்தாலும் நா.முத்துக்குமார் பற்றி பலர் எழுதியதை படித்துத் துடித்துப்போகவே நேரம் சரியாக இருந்தது. ஒரே ஒரு முறை ‘’கவிதை நல்லா இருக்கு’’ என்று பாராட்டியதற்காகவே ஒரு புதுக் கவிஞன் பக்கம் பக்கமாக எழுதியிருந்தான். அண்ணனாக, ஆசானாக, நண்பனாக, சக கலைஞனாக, தம்பியாக.....தன்னுடன் வாழ்ந்த முத்துக்குமாரைப் பற்றி பெரிய பெரிய ஆளுமைகள் கணினியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

முத்துக்குமார் இறந்தபின் மருத்துவம் படிக்காமேலேயே இங்கு நிறையப்பேர் கொடூற ஆயுதங்களால் உடற்கூறு செய்து மருத்துவ சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புகைத்துச் செத்தான், குடித்து அழிந்தான், காமாலையில் காலமானான், மன அழுத்தத்தில் மரணப்பட்டான், வேலைப் பழுவில் இறந்தான் என இன்னும் என்னன்னவோ... அவை பொய்களாகவோ அல்லது மெய்களாகவோ இருக்கலாம். ஆனால் அனைத்திலிருந்தும் நான் அறிந்தது ஒன்றுதான் ‘’முத்துக்குமார் திரும்பப்போவதில்லை’’. கவிஞர் இறந்த அன்று, தெரிந்தோ தெரியாமலோ எனது பையில் வேடிக்கை பார்ப்பவன் புத்தகம் இருந்தது. முதன்முறையாக ஏனோ அதைப் படிக்கப்பிடிக்காமல் கார்டூன் ஓவியமாய் இருக்கும் முத்துக்குமாரை திருப்பித் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.  

என்னோட மனைவிக்கு கல்யாண நாள், பிறந்த நாள் பரிசாக

நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சினுள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்

என்ற முத்துக்குமாரின் பாடல்வரிகளை களவாடி, நானே எழுதியதாகச் சொல்லி சேலை, மோதிரம் வாங்கிக்கொடுக்க ஆகும் பல ஆயிரம் ரூபாய்க்களைச் சேமித்ததுண்டு. ‘’நம்ம புருசன் கவிதை எழுதும் அளவிற்கு ஒர்த் இல்லையே’’ என்ற தோனல் வரும் போது அடுத்த கவிதையை திருட தூண்டுவாள்.
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

வீங்கிய முகமாய், வெளுரிய உடையுடன், சிவந்த கண்களுடன், நரை எட்டிப்பார்க்கும் தாடியுடன் கவிஞர் இல்லாவிட்டாலும் அவர் எழுதிவிட்டுச் சென்ற ஆயிரம் பாடல்களைக் கொண்டு என் போன்ற திருட்டுக் கவிஞர்களின் மூலமாக ஒவ்வொருவர் வீட்டின் சந்தோசங்களிலும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

--------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

3 கருத்துகள்: