செவ்வாய், ஜூலை 04, 2017

பிக் பாஸ்

2006 என்று நினைக்கிறேன், நான் பெங்களூரில் வேலை பார்த்த போது எனது டெல்லிவாலா மேனாஜர் மூலமாகத்தான் பிக் பாஸ் (ஹிந்தி) எனக்கு அறிமுகம். அதுதான் இந்தியாவிலும் முதல் பிக் பாஸ் என்று நினைக்கிறேன். பிக் பாஸின் ரூல்ஸ், மற்றும் அதில் பங்கு பெற்றவர்கள் பற்றி அந்த மேனாஜர் என்னை டிவியின் முன்வைத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். புரியவில்லை என்றாலும், இங்கிரிமெண்ட் டைம் என்பதால் ‘’வாவ்.... மெடிக்கல் மிராக்கிள்’’ என்று புகழ்ந்துகொண்டே இருப்பேன். சில வாரங்களுக்குப் பின்பு, மேனாஜர் என்னிடம் ‘’உனக்குப் பிடித்த கண்டெஸ்டண்ட் யாரு?’’ன்னு கேட்டார். நான் ‘’ராக்கி ஷவாத் (Rakhi Sawant)’’ன்னு சொன்னேன். அந்த பெயரைப் பார்த்தவுடனே கூகுள் சர்ஜ் பண்ணிப் பார்த்த உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும், நான் எதுக்கு அந்த பெயரைச் சொன்னேன் என்று. ஆக, அந்த வருஷ இங்கிரிமெண்ட் உ ஊ............
அன்று, 14 பங்கேற்பாளர்களையும் அறிமுகம் செய்த பின்புகூட, விஜய் டிவி பிக்பாஸை தொடர்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால், இன்று அடுத்த எபிஸோட் எப்ப வரும்?? என்று ஏங்கிக்கொண்டிருக்கக் காரணமே அந்த 15 வது பங்கேற்பாளர், ‘’நமீதா’’ தான். எனக்கு நமீதாவைப் பிடிக்கும் என்று சொன்னால், ஏனோ என் நட்பு வட்டாரங்கள் 90 வயது கிழவியை ரேப் செய்தவனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். நானும் பல முறை எனக்கு நானே ‘’ஏன் நமீதாவைப் பிடிக்கும்?’’ என்று யோசித்துப் பார்த்துவிட்டேன். ஆனால், சுவாதி-ராம்குமார் கொலைவழக்கு போல் விடை ஏதும் இல்லை. சமீபத்தில் தொல்.திருமாவளவன் ரஜினியின் அரசியல் வரவு பற்றி பேசினார். அதில் அவர் தமிழ்நாட்டில் நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும் போது, ‘’கரிஷ்மா’’ என்ற ஒரு வார்த்தயைப் பயன்படுத்தினார். காரணமே இருக்காது, காரணமும் தெரியாது ஆனால் ஒருவரைப் பிடித்திருக்கும், அதற்குப் பெயர்தான் கரிஷ்மா. அதே கரிஷ்மா கபூர்தான் என்னையும் ‘’உடல் மண்ணுக்கு உயிர் நமிதாவிற்கு’’ என்று கூவச் செய்கிறது.
நமீதா பிக்பாஸில் கலந்து கொள்கிறார் என்றவுடன் எனக்கு மிகப் பெரிய ஆறுதல். இனி எவனாவது என் மூக்கில் கை நீட்டி ‘’உனக்கு ஏண்டா நமீதாவைப் பிடிக்கும்?’’ என்று கேட்டால், ‘’போடா, போய் பிக்பாஸ் வீட்டில் நமீதாவின் அனுகுமுறையை பாருடா’’ன்னு தைரியமா சொல்லுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, பிக் பாஸ் முடியும் போது, ஒட்டு மொத்த தமிழ்நாடே நமீதாவைப் பற்றிய பெருமைகளைப் புரிந்து கொண்டு, ‘’சாரிடா யாஸிர்’’ன்னு என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும். எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் (சைஸ் பற்றி சொல்லவில்லை), ‘டாய்லெட் கிளீன் பண்ணுவது எப்படி?’ என்று பாடம் நடத்தும் அந்த பரந்த மனம் யாருக்கு வரும்?. தண்ணி சிக்கனம், சுத்தம், சுகாதாரம் பற்றி அந்த அழகுத் தமிழில் அறிவுரை கூறுவதை கேட்பதற்கே அகத்தியர் மீண்டும் பிறவி எடுக்க அப்ளிகேசன் பார்ம் பில் செய்துகொண்டிருப்பார்.
பிக் பாஸில், நமீதாவிற்கு அடுத்ததாக எனக்குப் பிடித்தது ஓவியா. அவர் அளவிற்கு உண்மையா பேசுறது, நடப்பது எனக்கு தெரிந்து யாரும் இல்லை. ‘’இது ஒரு கேம், இங்க நான் விளையாட வந்திருக்கேன், ஜெயிக்க வந்திருக்கேன். ஒரு பேமிலி உருவாக்கவோ, இல்ல பிரண்ட்ஸ் உருவாக்குவதற்கோ வரவில்லை’’ என பொட்டில் அடித்தது போல் சொல்லும் தைரியம் அங்கு யாருக்குமே இல்லை. லீடர் எந்தமாதிரி இருக்கனும்னு சிநேகனுக்கு சொல்லுவது, ‘’வேலை இருந்தால் வேலை செய்வேன், அதுக்காக வேலை செய்யுறமாதிரி நடிக்க முடியாது’’ என கெத்து காட்டுவது, ‘’தவறு பண்ணுங்க, ஆனா அதுல இருந்து கத்துக்கங்க’’ என பிலாஸபி பேசுவது என மனதை கவர்கிறார். சோம்பேரிக்கான விருதை நிராகரிக்கும் முறை அமேசிங்க். ஆரவ் உடனான ஒரு வெட்கக் குழைவு ஆசெம்.
‘’கடுப்பேத்துரானுங்க மை லாட்’’ கேட்டகெரியில் சிநேகன், காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி. சத்தியமா முடியலடா. சிநேகன் இன்னும் ‘’என்னாச்சுமா உங்களுக்கு’’ பீலிங்க்ல இருந்து வெளிய வரவேயில்ல. லீடர்னு சொன்னதும் ஏதோ கேங் ஸ்டார் லீடர் தோரணையில் திரிவது பெரிய குஷ்டம். லீடர்ங்குற பேருல செய்கிற ஒவ்வொரு செயலும், உடல் மொழியும் ரொம்ப வெருப்பேற்றுகிறது. ‘எலிமினேட் செய்ய நான் யாரைச் சொல்லுவேன்’னு அழுவதை எல்லாம் நாங்க தங்கப்ப தக்கத்துலேய பார்த்துட்டோம் மிஸ்டர் சிநேகன். அனுயா வெளியே போகும் போது, சிநேகன் செயலில் மட்டுமில்லை, பார்வையிலேயே ஒரு விஷமத்தனம் இருப்பதாக சொன்னது அவ்வளவு உண்மை. புன்னகை மன்னன் பட பாடலுக்கு சிநேகன் ஆடியதைப் பார்தத பின்பு, ‘’இந்த வார எலிமினேசன் நான்தாண்டா’’ன்னு கமல் எந்திருச்சு போயிருவாருன்னுதான் நெனச்சேன். நானா இருந்தா சிநேகன் காஸ்டூமை பார்த்த உடனே பால்டாயில் குடிச்சிருப்பேன். இருந்தாலும் கமலுக்கு பொருமை ஜாஸ்தி.
‘’நாங்க சினிமாவில் எங்களை நிரூபித்தவர்கள், அதனால் பிக்பாஸில் மூலமாகத்தான் பிரபலமாக வேண்டும் என்ற நிலை எங்களுக்கு இல்லை’’ என காயத்ரி ரகுராம், ஜீலியாவிடம் சொல்லும் போது ‘’இவ என்னத்த சினிமாவில் நிரூபித்தாள்’’ன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கேன், எழவு ஒரு வாரமாகியும் ஒன்றும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ‘’நேத்து ராத்திரி யம்மா...’’ பாடலுக்கு டான்ஸ் ஆடியதை பார்த்த பின்பும், ‘’மாஸ்டர்’’ன்னு கூப்பிடுறவன் வாயில் ஆசிட் அடிக்கனும்னு தோணுது. ‘’இதுக்குத்தான் இந்த எச்சய்ங்க கூட வரமாட்டேன்னு சொன்னேன்’’னு ஒரு பொன்மொழி உதிர்க்கும். என்னமோ விஜய் டிவிக்காரன் ‘’நீங்க வந்தாத்தான் முடியும்’’னு அவங்க வீட்டில் போய் நின்னது மாதிரி. மூணு வேல ஓசி சோறு, 100 ரூபா பேட்டா காசு கிடைக்கும்னு வந்துட்டு, இது பேசுற பேச்சு தாங்க முடியல. இதையெல்லாம் கூட பொருத்துக் கொள்ளலாம், ஆனால் பரணியிடம் ‘’நான் உங்க அம்மாவா இருந்திருந்தா செத்துப்போன்னு சொல்லியிருப்பேன்’’ன்னு சொன்னதைக் கேட்டு, என்னை அறியாமல் ஸ்கீரினில் காரி துப்பிவிட்டேன். ஒன்னு இது ‘’அம்மா’’ என்றால் அப்பாவின் மனைவி என்று நினைக்கக்கூடிய ஜந்தாக இருக்கும். இல்லை என்றால், அம்மாவின் வயிற்றில் பிறக்காமல், பேக்டரியில் அசெம்பிள் செய்ததாக இருக்கும். இந்த லட்சனத்தில் இவுகதான் இந்தவார தலைவி. ஹரே ஓ சம்போ.        
பிக்பாஸ் வீட்டில் இருக்குறதுலேயே ரொம்ப பொய்யா வாழ்வது ஜீலியா தான். அண்ணா, அக்கான்னு அழைப்பதில் ரொம்ப செயற்கைத் தனம் தெரியுது. ‘’என்னய ஏன்ணே நீ புரிஞ்சிக்கல’’ன்னு சிநேகனை கட்டிப் புடிச்சி அழும்போது. கர்மம்டான்னு இருந்துச்சு. தேவையே இல்லாம சிரிச்சிக்கிட்டு, பெப்பரப்பேன்னு............. அங்கயும் இங்கயும் நடக்குறத பார்க்கும் போது ரொம்ப எரிச்சலாகுது. ஜீலியா எலிமினேசன் லிஸ்டில் இருந்தாலும், அவரை விஜய் டிவி வெளியே அனுப்பாது என்றுதான் எதிர்பார்தேன். அதே போல் நடந்தது. இந்த வாரம் கூட பரணி லிஸ்டில் இருந்தாலும், கஞ்சா கருப்புதான் வெளியே போவார். ஏனென்றால், ஜீலியா, பரணியை வைத்துத்தான் அங்கு இருப்பவர்களை வெருப்பேற்றி டி.ஆர்.பி ரேட்டை அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல, பரணி, ஜீலியா இருவரும் நன்றாக அழுகிறார்கள் என்பது அவர்களின் கூடுதல் பலம், விஜய் டிவிக்கு அதுதான் தேவை. எவ்வளவு சீக்கிரத்தில் ஜீலியானா எலிமினேட் ஆகுறாங்களோ அவ்வளவு தூரத்துக்கு இருக்குற கொஞ்ச நெஞ்ச பெயரையும் காப்பாத்திக்கலாம்.
ஆர்த்தி, பரணி, சக்தி மூவரும் கமலைக் கண்டவுடன் என்னவோ கடவுளைக் கண்ட ரியாக்சன் கொடுப்பதெல்லாம் டூ மச். அதுலயும் ஆர்த்தி ஓவர் ஆக்டிங். எல்லோரும் ஹாலில் ஷோபாவில் கூடும் போது, ஆர்த்தி மட்டும் படுத்திருக்கா, உட்கார்ந்திருக்கா என்று தெரியாது. இம்ச எல்லா ஆங்கிளிலும் ஒரே சைசில் இருக்கிறது. கேமராவில் பிக் பாஸிடம், என்னவோ புருசனிடம் பேசுவது போலத்தான் பேசுது. ஷக்தி பரணியிடம் ‘’நானும் ரவுடிதான்’’ ரேஞ்சில் ‘’நான் பழைய மாதிரி இருந்திருந்தா என்ன நடக்கும்னே தெரியாது....’’ என பேசுவது சுட்டி டிவி பார்ப்பது போலவே இருந்தது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடன் ஆர்த்தி பிரிஜ்ஜை தேடினார், சிலர் பெட்ரூம், சிலர் பாத்ரூம் எங்கே? என தேட நடிகர் ஸ்ரீ மட்டும் வெளியே போக கதவைத் தேடினார். சாம்பு மகன் மாதிரி ‘’வாட் இஸ் தி புரசிஜர் டு எக்ஸிட் தி ரூம்’’ன்னே சொல்லிக் கொண்டிருந்தார். பாவம்.
இங்கு கமலைப் பற்றி சொல்லியாக வேண்டும். ரியாலிட்டு ஷோ என்றால், உண்மையில் நாம் எப்படியோ அப்படியே இருக்க வேண்டும். நடிக்கக்கூடாது. அது கண்டெஸ்டண்டிற்கு மட்டுமில்லை, ஹோஸ்ட் பண்ணும் கமலுக்கும் பொருந்தும். அமிதாப் பச்சனின் குரோர்பதி ஹிட்டுக்கு காரணமே, அமிதாப் நடிக்காமல் இருந்ததுதான். தமிழில் கூட பிரகாஷ் ராஜ் அப்படி இயல்பாக செய்திருந்தார். ஆனால் சூர்யாவோ ‘’ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்ல..’’ ரேஞ்சில் சிலுப்பினார். பிக்பாஸ் முதல் நாளில் கமல், ஏதோ ஒரு படத்தில் கமல்ஹாசனாகவே நடிப்பது போல நடித்து வெருப்பேற்றினார். போன வாரம் முழுவதும் உட்கார வைத்து கிளாஸ் எடுத்திருப்பார்கள் போல, இந்த வாரம் கலக்கினார். இருந்தாலும், என்னவோ உலகத்திலுள்ள அனைத்து விஷயங்களையும் தான் நடித்த 200 படங்களிலும் சொல்லிவிட்டது போல, ‘’என்னோட தேவர் மகன் படத்துல கூட....., என்னோட விருமாண்டில கூட ஒரு டயலாக்........, நான் நடிச்ச விஸ்வரூபம்ல.......’’.என மேற்கோள் காட்டி பேசுவது பெரிய அபத்தம்.   
கஞ்சா கருப்பு, வையாபுரி, ரைசா, ஜீலியா, பரணி,  அடுத்தடுத்த வாரங்களிலும், சிநேகன், காயத்ரி, சக்தி, ஆர்த்தி விஷக் கிருமிகள் அவர்களுக்கு பின் வெளியேற்றப்படலாம். நமீதா, ஓவியா, ஆரவ், கணேஷ் இறுதிவரை ஒரு டப் பைட் கொடுக்கலாம் என்பது என் கணிப்பு. பொதுவாக நான் கணித்தால் தலைகீழாகத்தான் நடக்கும். பார்க்கலாம்.................  
--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

6 கருத்துகள்:

  1. சாதாரண வீட்டு எந்த குடும்பத்து பெண் அந்நிய ஆட்களை கட்டிப்பிடிக்குது?! பருவம் வந்தபின் அப்பா, அண்ணனைக்க்கூட தொட்டு பேசாதுக. ஜீலி அனாயசமா எல்லாத்தையும் கட்டிப்பிடிக்குது

    பதிலளிநீக்கு
  2. என்னமோ தெரியல . உங்க பதிவை விரும்பு ரசித்து விழுந்து விழுந்து சிரிக்கும் நான் இந்த பதிவில் மட்டும் தயங்கினேன். இந்த நிகழ்ச்சியில் மேல் உள்ள வெறுப்பாய் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு