வியாழன், பிப்ரவரி 02, 2012

கூடங்குளம் – எதை நோக்கி????????


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
புது புது பிரட்சனைகள் வரும் போது, மக்கள் பழைய பிரட்சனைகளை மறந்துவிடுவார்கள். ஆனால் முல்லை பெரியாரு பிரட்சனை முடிந்த பின்னாடியும், அதற்கு முந்தய (தென்கோடி தமிழனின்) பிரட்சனையாக இருந்த கூடங்குளம் பிரட்சனை இன்னும் வீரியம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. எனக்கு தெரிந்து கூடங்குளத்து பிரட்சனையை ஒரு தலைபட்சமாகவே பார்க்கும் பத்திரிக்கை என்றால் அது, தினமலராகத்தான் இருக்கும். காங்கிரஸ் அரசை இந்த ஒருவிசயத்திற்காக மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்கின்றது.

என்னுடைய அறிவுக்கு எட்டியவரை, நான் அணு உலைக்கு ஆதரவாளன் தான். அதே சமயத்தில் அதன் எதிர்பாளர்களுக்கு எதிராக நிற்கக்கூடியன் அல்ல. எதிர்பாளர்களின் உயிர் பயத்திற்கு மரியாதை கொடுப்பது மற்றும் உணர்வுக்கு மதிப்பளிப்பதும் அவசியம் தான். ஆனால் எத்தனையோ கட்ட பேச்சுவார்தைகள் முடிந்தும் இன்றளவும் முடிவு எட்டப்பட்டாதது துரதிஷ்டம்.

காலங்கள் மாற, மாற நவீன தொழில் நுட்பங்கள், விஞ்ஞானங்கள் மாற்றம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றன, அதனுடன் நாம் நம்மை இணைத்துக் கொண்டு செல்லும் போதுதான் அதன் பலனை அடையமுடியும். எங்க ஊரில், ரயில்வே ஸ்டேசன் 2 கி.மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. எப்போதாவது இரயிலுக்கு செல்லவதற்கு தயாராகும் போது, என்னடா இது எவ்வளவு தூரம் இருக்கின்றது, இது நம்ம பஸ் ஸ்டாண்டை ஒட்டியிருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஏன் 2.கி.மீட்டர் தூரத்தில் அது அமைக்கப்பட்டது என்ற காரணத்தை எங்க ஊரு பெரியவர்களிடம் கேட்கும் போதுதான் தெரிந்தது, முதலில் இரயில் பாதை ஊருக்கு பக்கத்தில் தான் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டதாம், ஆனால் அன்றய அறிவுஜீவிகள், அதனுடைய உண்மையான பலன்/பயன் தெரியாமல், ஓ, ஓன்னு சப்தம் வரும், யாராவது பாதையை கடந்து செல்லும் போது ரயில் ஏறி செத்துவிடுவார்கள், அதிர்வு ஏற்பட்டால் விவசாயம் பாதிக்கும்....... என்று அதி பயங்கர யோசனையை தெரிவித்து, ஊருக்குள் வருவதை தவிர்த்துவிட்டார்கள்.
அதே போலத்தான் இதுவும், இன்றய தேவைக்கு நம் நாட்டிற்கு முக்கியமான ஒன்று அணு உலை. அதனுடைய ஆதாயங்களை பார்த்து அதற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். எனக்கு ஒரு நாளைக்கு 10 நிமிடம் கூட கரண்ட் கட் ஆககூடாது என்று நினைப்பவர்கள், அணு உலைக்கு எதிராக நிற்பது என்பது விந்தையாக உள்ளது. எனக்கு பசி அடங்கவேண்டும் ஆனால் நான் சாப்பிடமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்.

இன்னும் போபால் அணு உலையின் தாக்கத்தினை மட்டும் பேசிக் கொண்டு, அதன் கொடுமைகளை மனதில் வைத்துக் கொண்டு நவீன அறிவியலின் முறையில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குள அணு மின் நிலையைத்தினை எதிர்த்து நின்று போராடுவது, எத்தனை சரி என்று தெரியவில்லை. டெல்லியில் விமான விபத்து ஏற்பட்டு விட்டது, சென்னையில் கப்பல் தண்ணீரில் மூழ்கிவிட்டது என்று எண்ணிக் கொண்டு, பயணத்தினை தவிர்த்தால் நாம எப்படித்தான் வெளி நாட்டிற்கு போகுறது?????. இப்படி நவீன விஞ்ஞானத்தினை குறை சொல்லிக்கொண்டேயிருந்திருந்தால், இன்னும் கோவனத்துடன் தான் தமிழன் இருந்திருப்பான்.

சிம்பொணி இசை ஆல்பம் செய்துவிட்டபின்பு இளையராஜா, அது பற்றிய ஒரு பத்திரிக்கை பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார், பொதுவாக இந்தமாதிரியான சிந்திப்புகளில், பத்திரிக்கைகாரர்கள் கேள்வி கேட்பார்கள், அவர் பதிலளிக்கவேண்டும். ஆனா நம்மாளுங்களுக்கு சிம்பொனின்னா என்னனு எவனுக்கு தெரியும், பாவம் இளையராஜா மட்டும் அவராகவே இரண்டு மணி நேரம் பேசிவிட்டு போய்விட்டார். அது மாதிரித்தான், பல கட்டபேச்சுவார்தைகள் பலனளிக்காமல் போனதற்கு ஒரு வேலை, விஞ்ஞானிகள், யுரேனியம், டெட்ரானியம்,...... என்று அவர்களின் பாஷையில் பேசியிருந்திருக்கலாம், உயிருக்கு என்ன உத்திரவாதம் என்று கேட்க சென்றவனுக்கு, யுரேனியம், டெட்ரானியம் அவங்கள்ளாம் யாரு?ன்னு கேட்கத்தான் தெரியும்.
இப்போது இந்த அணுவுலைக்கு எதிரான போராட்டம், எங்கே மதக்கலவரமாக மாறிவிடுமோ என்ற அச்சப்பாடு ஏற்படுகின்றது. இதுவரை எங்கிருக்கின்றார்கள் என்றே தெரிந்திராத ஒரு பிரிவு அமைப்பினர், சில பாதிரியார்கள் மூலமாகத்தான் இந்த போராட்டம் நடைபெருகின்றது என்று அறிந்துகொண்டு, நாட்டின் நலம் காக்க வந்திருக்கின்றோம் என்று வந்து நிற்பது உச்சகட்ட நகைச்சுவை. பாவம் அவனுக்கு தெரியவில்லை 50%மான அவர்களின் மக்களும் அந்த போராட்டக் குழுவுக்குள் உண்டு என்று. திருநெல்வேலி மாவட்ட செயலாலர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ்ஸார் சிலர் அணுவுலையை உடனே திற என்ற கோஷத்துடன் வெரும் 10 பேருடன் அலைகடலென திரண்டு வருவது அய்யோ பரிதாபம்.

இந்த மாதிரியான செயல்கள், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம். எதிர்பவர்களின் போராட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அல்லாது, சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என்று தேர்வு செய்து அவர்களிடம், அரசாங்கம் தன்னுடைய பாதுகாப்பு அம்சங்களை தெளிவுபடித்தி, அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். அதைவிடுத்து வெட்டருவா, வேல்கப்போடு பேச்சுவார்த்தைக்கு போனால், நாளை அணுவுலை போராட்டம் என்பது மதக்கல்வரம் என்றாகிவிடும். திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்ன தீர்வுகளையும் ஆராய்ந்து பார்க்கலாம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை.

அணுவுலையால் நன்மைதான் என்று நல்லதே நினைப்போம்,  நல்லதே நடக்கும்.

------------------------------------------------------------------------------- யாஸிர்.

5 கருத்துகள்:

 1. இரயில் விபத்துக்களையும் விமான விபத்துக்களையும் அணு உலை விபத்தோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இரயில் நிலையங்களை தூரத்திலாவது வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார்களே. நிச்சயம் அவர்கள் நம்மை விட அறிவு ஜீவிகள்தான். அணு உலைகளின் பாதுகாப்பு, விபத்து ஏற்பட்டால் அதன் பாதிப்பு, விபத்து காப்பீடு பிரச்சினைகில், அணு உலைகளின் ஆயுட்காலம், பராமரிப்பு செலவு, குளிர்விக்கும் செலவு இப்படி எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன. விஞ்ஞானிகள் என்ன பாஷையில் பேசினாலும் எங்களை போன்ற பாமரர்களுக்கு புரியப் போவது இல்லை. தாங்கள் படித்த படிப்பு வீணாக போகக்கூடாது என்ற எண்ணம் விஞ்ஞானிகளுக்கு இருக்கும்வரை அவர்களால் மக்கள் மனங்களை புரிந்து கொள்ள முடியாது.

  பதிலளிநீக்கு
 2. @திரு. விஜய்,
  தங்களின் கருத்திற்கு மதிப்பளிக்கின்றேன்,

  இன்னும் சில காலங்கள் சென்ற பின்பு, நம்முடைய அடுத்த தலைமுறைகள் அணுவுலையினை சாதரனமானதாகத்தான் பார்ப்பார்கள் என்பது என் கருத்து, தாங்கள் கூறியது போல அணுவுலையின் செலவு என்பது அதிகம்தான், எந்த ஒரு அரசும் அத்தனை செலவுகள் செய்து, அதற்கு குறைவான பலனை அடைய முயற்சிக்காது. கண்டிப்பாக அதன் பலன் நமக்கு அதிகமானதாகவே இருக்கும். விஞ்ஞானப் படிப்பே இனி வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளது. பிறகு சிவில் இஞ்சினியர் படித்தவன் எல்லாம் செக்கு மாடு ஓட்டவேண்டுமா என்ன?.....
  விஞ்ஞானிகள் மக்களின் மனதினை புரிந்துகொண்டு, அவர்களின் அச்சங்ககளை கலையவேண்டும் என்பது தான் என் எண்ணமே அல்லாது வன்மையாக தினிக்கவேண்டும் என்பதில்லை.

  பதிலளிநீக்கு
 3. "பிளாஸ்டிக் கழிவுகளையே பாதுகாப்பாக அகற்ற தெரியாத இந்திய அரசு, அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவோம் என்று சொல்வது வேடிக்கையானது" என்று சொன்னாராம் அருந்ததி ராய்.

  எங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளை படிப்படியாக குறைத்து, மின்சார உற்பத்திக்கு மாற்று வழிகளை ஆராய்வோம் என்று சொல்கிறது செர்மானிய அரசு. ஏனெனில் அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்ததே அதன் காரணம். 80 வீதம் அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரான்ஸ், மாற்று வழிகளை தேட துவங்கியுள்ளது. ஆனால் இப்போது தான், இந்தியா இதன் பேராபத்தை உணராமல், மாற்று வழிகளை பெயருக்கு கூட ஆராயாமல் அல்லது தேடாமல் குருட்டாம் போக்கில் இவ்விஷயத்தில் செயல்படுகிறது.

  மின்சாரம் கிடைக்கும்; இலவச இணைப்பாக புதுப்புது நோய்களும் கிடைக்கும். இவர்களின் அணு உலை தரத்தை தான் கல்பாக்கத்திலே பார்த்தோமே. அரசாங்கம் எதற்கு தான் கவலைப்பட்டது? போபால் விஷ வாயு கசிவுக்கு காரணமானவர்கள் அல்லது பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?

  பொறுப்பற்ற அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு மக்களின் உயிர்களோடு விளையாட்டை ஆடப் போகிறதா இந்திய அரசு?

  பதிலளிநீக்கு
 4. @ உதயம்,
  தங்களின் கோபத்திற்கு செவிசாய்த்தவனாக, எனது கருத்துக்கள் இங்கே,
  மாற்று வழிகளை நாங்களும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றோம் என்று பிரதமரும் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார். நாம் அதற்கு முயற்சி செய்யாமல் இல்லை.
  முந்தய நிகழ்வுகளின் மூலமாக நாம் பாடம் கற்றுக்கொண்டு, தற்போதய அணுவுலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவே இதனுடைய விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
  மாற்று வழி கிடைக்கும் வரை இருட்டில்தான் இருக்கபோகிறேன் என்றால் என்ன சொல்லவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அணு உலைக்கு காட்டும் அதி தீவிரமான அக்கரையில் ஒரு சதவீதமாவது மாற்று வழிக்கு காட்டப்படுகிறதா?

   நீக்கு