வியாழன், அக்டோபர் 13, 2016

குவைத் மஸாஜ் சென்டர்

வளைகுடாவில் நிதி நிலை நொண்டியடிப்பதால், புதிதாக துவங்க வேண்டிய ப்ராஜெக்ட் தள்ளிப்போனது. கம்பெனி கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்முன், ராஜினாமா செய்துவிடலாம் என்று எண்ணினேன். லீவ் லெட்டருக்கு எப்படி ‘அயம் சபரிங்க் ஃப்ரம் பீவர்’ரோ அதே மாதிரியான ஒரு ரிசைனிங்க் லெட்டர் டெம்லேட் இருக்கிறது. கம்பெனி பெயரை மட்டும் மாற்றினால் போதும், லெட்டர் ரெடி. இம்முறை டெம்லேட்டை கொஞ்சம் மாற்றி ‘இதைவிட நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைப்பதன் காரணமாக’ என்று எழுத நினைத்தேன். நினைக்கும் போதே, லெட்டரில் கம்பெனி முதலாளி காரிதுப்பும் வாடை வந்தது.

லெட்டரை அனுப்புவதற்கு முன்பாகவே, துபாய் ஆபிஸில் இருந்து, நான்கு மாத ப்ராஜெக்டுக்காக என்னிடமும், என் மேனஜரிடமும் ஜித்தா செல்லவதற்காக கேட்டார்கள். முதலில் ‘’’சௌதியா?’’ என்று யோசித்தாலும், 4 மாசம் அதுவும் ஜித்தா என்பதால் அரை மனதுடன் ஒ.கே ஒ.கே சொன்னேன். ஜித்தா செல்வதற்கு முன்பாக இரண்டு வாரம் இந்தியா செல்ல லீவு கேட்டதற்கு கம்பெனியும் ஒ.கே ஒ.கே சொல்லியது. என் பையன் நினைப்பு அதிகம் இருப்பதால் அவனுடன் இந்தியாவில் கொஞ்ச நாள் இருக்கப்போவதாகவும், சவுதி அவ்வளவாக இஷ்டம் இல்லை எனவும் மேனஜரிடம் முன்பு ஒருமுறை கூறியிருந்தேன்.

நான் இந்தியா சென்றுவிட்டு ஜித்தா செல்வதற்கு முன்பாகவே என்னுடய மேனஜர் அங்கு சென்றுவிட்டார். என்றாலும் இரண்டு வாரம் கழித்தே அவரை நேரில் காண முடிந்தது. என்னைப் பார்த்தபோது ‘’பையன் பாசத்துல நீ வரமாட்டாய் என்று நினைத்தேன்’’ என்று கூறினார். மேலும் குடுபத்தினர் நலம் விசாரித்தார். இவ்வளவு அன்பாய் இருப்பவரிடம் என் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியைச் சொன்னேன். இந்தியா செல்வதற்கு முன்பு ‘’’என் மகனை அதிகமாக தேடுகிறது, அவனுடம் கொஞ்ச காலம் இருக்கவேண்டும்’’ என்று நான் அவரிடம் சொன்னது நினைவிற்கு வந்திருக்கக்கூடும். ‘’மகிழ்ச்சி’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், பற்களை கடிக்கும் ‘நற’ ‘நற’ ஷப்தம் என் காதில் நன்றாகவே கேட்டது.

இரண்டே வாரத்தில் இரண்டாவது ரெடி பண்ணிய விஷயத்தைக் கேட்டதில் இருந்து, ஆபிஸில் எந்த வேலையை முடித்துக்கொடுத்தாலும் ‘’நீ ரொம்ப வேகமானவன்’’ என்றே புகழ்கிறார். எனக்குத்தான் எதைச் சொல்கிறார் என்றே குழப்பமாக இருக்கிறது. ஒருநாள் ‘’கற்பமான மனைவியை பக்கத்தில் இருந்து கவனிக்கும் ஆசை இல்லையா?’’ என்று மேனஜர் கேட்டார். ‘’முதல் நாலு மாசம் ரொம்ப கவனமா இருக்கனும்’’ (இரண்டு முறை வாசிக்கவும்) என்று டாக்டர் சொன்னதைச் சொல்லி, ‘’அதனாலத்தான் நான் ஜித்தா வந்தேன்’’ என்றும் சொன்னேன். ‘’நீ நாலு மாசம் கைல புடிச்சிக்கிட்டு இருக்க இந்த கம்பெனிதானா கெடச்சது?’’ (ஒரு முறை மட்டும் வாசிக்கவும்) மைண்ட் வாய்ஸ்னு நினைத்து அரபியில் நிஜமாகவே பேசினார். நல்லவேளை அரபியில் பேசியதால் எனக்கு புரியவில்லை ?!?!?!. 

ஜித்தா வந்த இரண்டு மாதம் கழித்து எங்களுடைய குவைத் திட்டத்தில் ஒரு பொறியாளர் 15 நாள் அவசர விடுப்பில் செல்லவேண்டி இருந்ததால், அந்த 15 நாட்களுக்கு அங்கு செல்ல கம்பெனி என்னுடய விருப்பத்தைக் கேட்டது. ‘’5 வருச ப்ராஜெக்டின் டிராயிங்கை பார்க்கவே ஒரு மாசம் ஆகும், 15 நாளில் நான் எப்படி / என்ன / எவ்வாறு ???’’ என பல கேள்விகளைக் கேட்டேன். ‘’உன்னைப் பற்றி சொன்னோம் ‘நீ வந்தா மட்டும் போதும்’’னு குவைத் ஆபிஸில் சொல்லியதாகச் சொன்னார்கள். நம்மளப் பத்தி சொல்லியும், ‘’குவைத் உங்களை அன்புடன் அழைக்கிறது’’ என்று சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை.  
  
‘’என்னயப் பத்தி என்ன சொன்னீங்க?’’ என்று கேட்டேன். ‘’உன்னுடய அறிவு, ஆற்றல், திறமை.....’’ என்று அவர் சொல்லும் வார்த்தைக்கும், நமட்டுச் சிரிப்பிற்கும் ஸிங்க்கே ஆகவில்லை. புரிந்துவிட்டது. ஆரம்பித்த உடனே நிறுத்திக்கொள்ளுமாறு கூறினேன். ‘’குவைத்துக்கு போடான்னா போகப்போறேன், அதற்கு எதுக்கு இப்படி?’’ என மனதில் நினைத்துக்கொண்டு. ஜித்தாவிற்கு சொன்னது போலவே குவைத்திற்கும் அதே ஒ.கே ஒ.கே. விசா, டிக்கெட் ஏற்பாட்டை எல்லாம் ஜித்தா H.R செய்துகொடுத்தார். H.R ஒரு பாக்கிஸ்தானி. அவரிடம் குவைத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பேசியபோதுதான், பாக்கிஸ்தானிகளுக்கு குவைத் செல்ல அனுமதியில்லை என்று தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் கண்டிப்பாக குவைத் நல்ல நாடாகத்தான் இருக்க முடியும் என முடிவுக்கு வந்தேன். என்னைப் போலவே ஆபிஸிலிருந்து முன்பு சென்ற சிலர் குவைத்தைப் பற்றி சொன்னதைச் சொன்னார். நான் ஆர்வக்கோளாறில் ‘’அப்போ அங்க எல்லாமே ச்சீப்பா கிடைக்குமா?’’ என்று கேட்டேன். அவர் என்ன நினைத்தோரோ தெரியவில்லை. ‘’சைத்தான்கி பச்சா’’ என்று கூறி வெடுக்கென எழுந்து சென்றுவிட்டார்.

மறுநாள், விசாவுடன் டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு ‘’உன்னுடய டிரிப் ஒரு வாரமாக மாற்றப்பட்டுவிட்டது’’ என்று கூறிவிட்டு ‘’வேறு எதுவும் என்னிடம் கேட்கனுமா?’’ என்றார். ‘’அடப்பாவி, ஒத்தக் கேள்விக்கே ஒரு வாரத்த முழிங்கிட்ட, இன்னொரு கேள்வி கேக்கவச்சி கொடுத்த டிக்கெட்ட திரும்ப புடுங்கிட்டு போகலாம்னு பாக்குறியா?’’ என மனசுக்குள் முனங்கிக்கொண்டே ‘’டாங்கியூ’’ என தலையாட்டினேன். குவைத்தில் பார்க்கவேண்டிய இடங்களை குறித்துவைத்துக்கொண்டேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், குவைத் நாட்டுக்காரன் இந்தியாவைப் பற்றி கேட்டுவிட்டால்? அதனால் இந்தியாவின் பிரதமர், அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதையும் ‘’இந்தியா இஸ் மை கண்டிரி, நலல பிகர்களைத் தவிர ஆல் ஆர் மை பிரதர் அண்ட் சிஸ்டர்ஸ்’’ என்ற ரைம்ஸ்ஸையும் மனனம் செய்துகொண்டேன்.

குவைத் ஏர்போர்டில் இறங்கியதுமே, யாரோ ஒருவர் என்னை பின்புறமாக இடித்துவிட்டார். அந்த யாரோ?, ஒரு பெண் என்பதை திரும்பிப் பார்க்கமலேயே உணர்ந்துகொண்டதில் இருந்து, அவள் எப்படி என்னை இடித்திருப்பாள் எனபதை யூகித்துக்கெள்ளுங்கள். வயிரு எரிந்தால் உங்கள் யூகம் ‘’சரி’’ எனக் கொள்க, இல்லை என்றால், வயிரு எரியும்வரை முயற்சி செய்யவும். ஜித்தாவில் பெண்கள் தெரிந்து இடித்தாலும் தெரியாமல் இடித்தாலும் நாம் தான் 10 முறை ‘’மாலிஸ்’’ சொல்லவேண்டும். அதே பழக்கத்தில் ‘’மாலிஸ்’’ சொல்வதற்கு முன்பாகவே, அந்த பெண் இரண்டு முறை தோளைப் பிடித்து ‘’ஸாரி’’ கேட்டுவிட்டார். ‘’நோ பிராப்ளம், வேண்டும் என்றால் கூட இரண்டு முறை இடித்துக்கெள்ளுங்கள்’’ எனக் கூறி பேக் ஷாட்டில் திரும்பி நிற்பதற்குள் சென்றுவிட்டாள். அவளைக் கண்டபின்புதான் ‘’இந்த உலகம் எவ்வளவு பெருசானது........’’. ஸாரி, ‘’அழகானது’’ என்பதை புரிந்துகொண்டேன்.

குவைத் ஏர்போர்டில் ஒரு பன்னாட்டு கடையில் 2 K.Dக்கு காபி குடித்தேன், வெளியே வந்தபின்புதான், அந்த காபியின் சௌதி மதிப்பு 25 ரியால் என தெரிந்துகொண்டேன். அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக 12 நாட்கள் காலை, மாலை டீ காசை மிச்சமாக்கினேன். ஒரு குவைத்தின் தினாரின் மதிப்பு, கிட்டத்தட்ட 12 சவுதி ரியால்களாம். K.D யில் அதாவது குவைத் தினாரில் செலவு செய்வதில் கடைசிவரை பெரிய அக்கப்போராகவே இருந்தது. சவுதியிலோ அல்லது துபாயிலோ ஒரு டீ குடித்தால் ஒரு திர்ஹம் ஆகும். ஆனால் குவைத்தில் அவர்கள் 100 கொடு 125 பில்ஸ் கொடு என குழப்பினார்கள் (நம் நாட்டில் பைசா போல அங்கு பில்ஸ்). எல்லா இடத்திற்கும் பஸ் வசதி இருந்தது. மாலை ஆபிஸ் முடிந்தபின்பு, ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி கடைசி ஸ்டாப் வரை சென்று சுற்றிப்பார்த்தேன். நான் இருந்த பகுதியில் (மஹ்பூலா) சலூன் கடைகளும், மஸாஜ் செண்டர்களும் அதிகம்.

முன்பு குவைத்தில் இருந்த ஒரு நண்பனை சாட்டிங்கில் பிடித்து, பேசிக்கொண்டிருந்தேன். ஆவனோ நான் எந்த மசாஜ் செண்டர் நன்றாக இருக்கும்? என கேட்பதற்குத்தான் சாட்டிங்க் செய்வதாக நினைத்து, இரண்டு மசாஜ் செண்டர்களின் பெயரை சொன்னான். அதற்கு ஒரு நாள் முன்பும் இதேபோன்ற ஒரு சம்பவம். எனது அப்பா, குவைத்தில் இருக்கும் எங்க ஊர்கார பையனின் போன் நம்பரை கொடுத்திருந்தார். அவரிடம் பேசும் போதும் கூட குவைத்தில் அதிகமாக செக்கிங்க் இருக்கும் அதனால் கொஞ்சம் உஷாராக இருக்கும்படி கூறினார். பொத்தம் பொதுவாக சொல்கிறார் என்று நினைத்து ‘’பிரட்சனை இல்ல பாய், எப்போதும் பாஸ்போர்டும், விசாவும் கையிலதான் இருக்கும்’’ என்று சொன்னேன். அதற்கு அவரோ ‘’இல்ல பாய், உங்க பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக ரொம்ப ரெட் லைட் ஏரியா இருக்கு அதான் சொன்னேன்’’ என்றார். அப்போதுதான் அந்த உஷாருக்கான அர்த்தமே விளங்கியது. இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது?. இப்படி தோளில் தொங்கப் போட்டுக்கொண்டு திருபவனாக அவர்களை நினைக்கவைப்பது எது?. இதையெல்லாம் யோசித்து யோசித்து தூக்கமே இல்லை.

அந்த கொடூற சம்பவத்திற்குப் பிறகு, பத்துமுறை முகத்தை கழுவி, மூஞ்சை கண்ணாடியில் பார்த்தேன். நூறு செல்பி எடுத்து நுட்பாமாய் ஆராய்ந்தேன். எந்த கோணத்தில் அவர்களுக்கு, என்னை அவ்வாறு நினைக்க வைக்கிறது?. விடையில்லை. நீங்கள் நினைக்கலாம், குவைத்தில் இருந்தது சைனிஸ் மசாஜ் செண்டர்கள், இப்போது சீனா பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பதால் நீ அங்கு செல்லவில்லை என்று. என்னைப் பற்றி இந்த உலகத்திற்கு நான் சொல்வது இதுதான் ‘’ஓ அறிவான சமூகமே, பாரதப் பிரதமரைப் போலத்தான் நானும், பேசுவேன் அன்றி செயலில் இறங்கமாட்டேன். இது நான் கடன் வாங்கிப் படித்த பல சரோஜாதேவி புத்தகங்களின் மீது ஆணை’’. 

ஜித்தாவிற்கு திரும்பிச் செல்ல குவைத் ஏர்போர்ட்டிற்கு வந்தேன். ‘’எங்கள் சேவையை பயன்படுத்துங்கள் வெறும் பத்து குவைத் தினார்’’ என்ற போர்டுடன் ஒரு பெண் நின்றிருந்தால். ‘’வெரும் பத்து தினாரா?’’ என்று அதிர்ந்து மறுக்கா வாசித்துப் பார்த்தபோதுதான் சேவைக்கு முன்பாக இருந்த ‘’விசா’’ என்ற வார்த்தை கண்ணில் தெரிந்தது. நல்லவேளை, மறுக்கா வாசித்தேன். இல்லையென்றால் ‘’உங்களுக்கு பத்து தினார் அதிகம் கொஞ்சம் குறைச்சிக்கலாமா?’’ எனக் கேட்டு மறுநாள்  ‘தினத்தந்தி’ தலைப்புச் செய்தியாகியிருந்திருப்பேன். ‘’ஆண்டவா இதேமாதிரி உன் புள்ளய பக்கத்துல இருந்து கடைசிவரை காப்பாத்துப்பா.......’’ன்னு பிராத்தனை செய்தே விமானத்தில் ஏறினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.  

17 கருத்துகள்:

  1. சாதரண விஷயத்தை மிகவும் நகைச்சுவையாக எடுத்து சொன்ன நடை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு கடந்து போய் அசிங்கப்பட்டது சாதரண விசயமாவா தெரியுது?. இதுக்கு பேசாம நீங்களும் மஸாஜ் சென்டருக்கு போகச் சொல்லியிருக்கலாம்.

      நீக்கு
  2. வாழ்த்துகள் நண்பரே. சவூதி, குவைத் இடங்களை சுற்றி பார்ப்பது போலவே இருக்கிறது. ஆங்காங்கே நாட்டு நடப்பையும் தொட்டு செல்வது அருமை.

    பதிலளிநீக்கு
  3. யாசிர்..

    என்ன ஒரு நகைசுவை ததும்பும் உணர்வான பதிவு. மிகவும் ரசித்து படித்தேன். வாக்கியத்திற்கு வாக்கியம் சிரிப்பு. மற்றும் அந்த இடங்களிலெல்லாம் வசித்து இருந்ததால் என்னால் என்னையே உம்மிடத்தில் வைத்து பார்க்க முடிந்தது.


    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னெண்ணா நீங்க எந்த நாட்டைப் பற்றி எழுதினாலும், அங்க இருந்ததா சொல்லுறீங்க. நீங்க போகாத நாடா சொல்லுங்க, கம்பெனியில எவனாவது லீவுக்கு போறானான்னு கேட்டு சொல்லுறேன்.
      வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  4. Very Good Writing Style with contents in correct perspective. Please keep it up.

    பதிலளிநீக்கு
  5. boss....Dubai all country massage centres welcomes you.....

    all services available at affordable rates......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. OUR SERVICES AT YOUR DOOR STEPS ALWAYS....
      MENU LIST.....

      1 HR STANDARD MASSAGE .................AED 150.00 (NON PEAK AED 89.00)
      1 HR AROMA OIL MASSAGE ................AED 180.00
      1 HR SPECIAL OIL MASSAGE ..............AED 190.00

      EXTRA SERVICE CHARGES ARE NOT INCLUDED.....CONSIDER TIPS ONLY.....
      MOROCCO BATH WITH SPECIAL MASSAGES WITH SALOON..........AED 450.00 (3 HR)
      FOR EXTRA MASSCURES AED 100.00 EXTRA...

      CC TO : YASIR HASANPPA@GMAIL.COM

      நீக்கு
    2. சாதாரண நேரங்களில் 89 என்பதை 69 என்று வாசித்துவிட்டேன். இருந்தாலும் கொஞ்சம் ரேட் அதிகம். சர்வீஸ் எப்படி? ஏதாவது சம்பிள் வீடியோ இருந்தால் மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். இதுபோன்ற பொதுச் சேவைகள் உங்களை எங்கயோ கொண்டுபோய் நிருத்தும். வாழ்த்துக்கள்

      நீக்கு
    3. THANKS FOR YOUR INTEREST ON OUR hIGH qUALITY sERVICES.
      AS A MATTER OF POLICY WE CAN NOT SHARE OUR CUSTOMER VIDEOS. SINCE YOU LOOK LIKE LIEF LONG CUSTOMER, HERE WITH WE ARE SHARING ONE SAMPLE VIDEO. PL DO NOT HESITATE TO VISIT US AS SOON AS POSSIBLE FOR REJUVENATE YOUR BODY AND SOUL.
      https://www.youtube.com/watch?v=C4gxIMdhB9w

      நீக்கு
  6. ரொம்ப குசும்புதான்யா உமக்கு, உமக்கெல்லாம் சவுதிதான் கரெக்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் கூண்டுக் கிளியைப் போல இருக்கேன்

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஒரு பிளான் இருந்துச்சு, ஆனால் இப்போது அங்கு கேளிக்கைகளுக்கு இடைக்கால தடையாம். தடையை எதிர்த்து கோர்டுல கேஸ் நடக்குது. வெற்றி நமதே.

      நீக்கு