செவ்வாய், ஜூலை 25, 2017

அவர் பீட்டி (P.T) வாத்தியார்.

எவ்வளவு அவசர வேலையாக வெளியே சென்றாலும் சரி, ஏதாவது ஒரு விளையாட்டுத் திடலைக் கண்டால் ஒரு நொடியாவது நம்முடய வேகம் தடைபடும். அங்கு யாராவது விளையாடினால், 5 நிமிடமாவது பார்க்கத் தோன்றும். அதுவும், நாம் விரும்பும் விளையாட்டு என்றால் ‘’ஸ்கோர் என்னாச்சு தல?’’ என்று கேட்டுவிட்டு நம்மை அறியாமலேயே அரை மணி நேரமாவது ரசித்து நிற்போம். எனக்கு, ஜித்தாவில் ரொம்ப பிடித்த விஷயமே ஒரு ஏரியாவில் குறைந்தது 4 புட்பால் திடலாவது இருக்கும். சாயங்காலங்களில் வயது வித்தியாசமே இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
உடல் எடையை குறைப்பதற்காக மாலை நேரங்களில் ஜாக்கிங்க் போகிறேன். போகும் வழியில் இருக்கும் கிரவுண்டில் அரபிக்காரர்கள் புட்பால் விளையாடுவார்கள். ‘’பார்ப்பதற்கே மனசுக்கு சந்தோஷ் சுப்ரமணியமா இருக்கே, கொஞ்ச நேரம் விளையாடினால் மனசு லேசா லேசாகுமே’’ என ஏங்கிய நாட்கள் உண்டு. அன்று, ஜாக்கிங்க் போகும் போது பந்து மைதானத்தை விட்டு பறந்து என் பக்கத்தில் வந்தது.  பந்தை தூக்கிப் போடும்படி ஒரு அரபி பையன் சைகை காட்டினான். நானும் ரொம்ப சந்தோசமாக பந்தை உதைத்தப் பின், கால் ரொம்ப லேசாக இருந்தது. “அதெப்படி? மனசுதானே லேசாகனும்’’னு நீங்க யோசிப்பது புரிகிறது. பட், பறந்தது பந்து அல்ல என்னோட வலது கால் ஷு (SHOE). கடைசியில் நான் பந்தை கையில் எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, அவன்  ஷுவை எத்தி தள்ளினான். அந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்பு, அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.
எல்லாப் பள்ளிகளிலும் மைதானம் இருக்கும் ஆனால் நான் 9 டு 12 வரை படித்த பள்ளிமட்டும்தான் மைதானத்திற்கு உள்ளே இருந்தது. எங்க விளையாட்டு வாத்தியார் பெயர் நெல்லை நாயகம். பல மாணவர்களோட ஆதர்ச நாயகன். எங்க செட்டிலும் சரி, எங்கள் முன்னாடி செட்டிலும் சரி +2 முடித்தபின்பு, குறைந்தது 4 மாணவர்களாவது விளையாட்டு வாத்தியாருக்கு (Physical Training) படித்தார்கள் என்றால் அது, இவருடய இன்ஸ்பிரேசனால் தான். பெரிய சைஸ் கடாயை கவுத்தி வைத்தது போல இருக்கும் அவர் வயிறு. சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், தும்பிக்கையில்லா புள்ளையார் மாதிரி இருப்பார்.  ஆனால், குனிந்து முட்டி மடங்காமல் கால் விரலைத் தொட்டு விடுவார். கெட்ட வார்த்தை பேசினால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏனென்றால் அனைத்து கெட்டவார்த்தையையும் அவர் மட்டும்தான் பேசுவார்.
பாடங்களை முடிக்கவில்லை என்பதற்காக, பீட்டி வகுப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டார். ‘’போன மாசம் எவனும் நல்லா விளையாடல, அதனால உங்க கிளாஸ தாங்கன்னா, உ கெமிஸ்ட்ரி வாத்தியான் தருவானால? பெற என்ன மயித்துக்கு அவனுக்கு நாங் குடுக்கனும்?’’ என்று கெத்தாக பேசக்கூடிய மனிதர். கெமிஸ்ட்ரி வாத்தியாருக்கு பீட்டி பிரியடை கொடுக்கமாட்டார் என்பதைத் தாண்டி, இவரை கொண்டாட ஒரு மாணவனுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். நாங்கலெல்லாம் கொண்டாடினோம் அந்த மனிதரை. மழைக் காலங்களில் கூட யாருக்கும் தன்னுடய கிளாஸை கொடுப்பதில்லை. மழை நாட்களில் கிளாஸ் ஈஸா தியான மண்டபமாக இருக்கும். நிறைய அட்வைஸ் கொடுப்பார், விளையாட்டு சம்பந்தமாக பேசுவார். ‘’ஒரு நாளைக்கு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை படி, வருச கடைசில உனக்கு 365 வார்த்தை கிடைக்கும், அவ்வளவுதாம்ல இங்கிலீஷு’’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அப்படிக் கத்துக்கொண்டதுதான் ‘’ஏக் காவ்மே ஏக் கிஸான் ரெஹதாத்தா’’
அந்த ஸ்கூலில் பெரிய பேஸ்கட் பால் கிரவுண்ட் உண்டு. சேர்ந்த பல மாணவர்கள் அந்த கிரவுண்டைப் பார்த்து அதில் விளையாடுபவர்களைப் பார்த்து சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். நான் உட்பட. 9ம் வகுப்பு சேந்த புதிதில் யார், யாருக்கு எந்த விளையாட்டில் இஷ்டம் என்று தெரிந்து கொண்டு, லிஸ்ட் எடுத்தார். கிளாஸில் எல்லோரையும் உயரப்படிதான் உட்கார வைப்பார்கள். 9டி கிளாஸில் முதல் பெஞ்சில் நான் இரண்டாவது ஆள், அப்போ நான் கொஞ்சம் குள்ளமா இருப்பேன் (“இப்பவரைக்கும் நீ அப்படித்தானடா இருக்க?”ங்குற உங்களோட மைண்ட் வாய்ஸ் கேட்சிங்). என்னவிட குள்ளமா இருந்தவன் பெயர் மகாராஜா. பேஸ்காட் பால் விளயாட கை தூக்கினான். ‘’எந்திச்சு நிக்க வக்கில்லாதவனுக்கு வப்பாட்டி வக வகயா கேக்குதாம்’’ன்னு சொல்ல, அவனைப் பார்த்து கை தூக்க நினைத்தவன் அப்படியே கையை இறக்கிவிட்டேன். என்னவென்றே தெரியாமல் வாலிபாலுக்கு பெயர் கொடுத்தேன்.
வாலிபாலுக்கு எங்கள் பள்ளியில் முன்பாகவும், பின்பாகவும் இரண்டு கிரவுண்ட் உண்டு. பின்னாடி இருக்கும் கிரவுண்டில் மேடைபோன்ற திண்டு இருக்கும். அதில் இருந்துதான் நாங்கள் விளையாடுவதைப் பார்ப்பார். அவர் வயிறு இருக்கும் சைசிற்கு, பத்து மீட்டருக்கு சுத்தி கீழே என்ன இருந்தாலும் தெரியாது. அந்த திண்டின் மீது ஏறினால் 100 மீட்டர் சுற்றளவிற்கு எதுவும் தெரியாது. ஒரு தடவ சுந்தர்ராஜன் என்பனை கூப்பிட்டார்.  கூப்பிட்டு முடிப்பற்குள் திண்டின் பக்கத்தில் போய்விட்டான். சாரோட வயிரு சுந்தர்ராஜனை மறைக்க, அவன் நிர்பது தெரியாமல், மறுபடியும் ‘’அந்த அருதலிய வரச் சொல்லுல’’ன்னு சொல்ல, நாங்க எல்லோரும் ‘’அவ கீழதான் சார் நிக்கான்’’ன்னு சொன்னோம். ‘’மூதி, கூப்புட்டா, கண்ணு முன்னாடி வந்து நிக்கனும், அதவுட்டுட்டு காலு முன்னாடி, பூ# (18+) முன்னாடி வந்து நிக்கக்கூடாது’’ என்ற செம்மதுர தமிழோசை இன்னும் காதில் தேனாக சொட்டுகிறது.
‘’காலும், கையும் நம்ம இடத்தில் இருந்தாலும், கண்ணு மட்டும் எதிரி இடத்தில் எப்போதும் இருக்கனும்’’, ‘’கண்ணு ஒருத்தன பார்க்கனும், ஆனா கை, மூளை சொல்லுறத கேட்டு பந்த இன்னொருத்தங்கிட்ட அனுப்பனும்’’.......என பல டெக்னிக் எல்லாம் சொல்லுத் தருவார். அதை எல்லாத்தையும் கேட்டுவிட்டு கரெக்டா தப்பு பண்ணுவோம். சுத்தி இருக்கும் எல்லா ஊர் ஸ்கூலுக்கும் கூட்டிப் போய் மேட்ச் ஆடவைப்பார். மூன்று பிரியட் பெர்மிஷன் கேட்டுச் சென்றாலும் முதல் பிரியட் முடிவதற்குள் அடிச்சு துவச்சு மீன்பாடி வண்டில ஏத்திவிட்டுருவானுங்க. தோத்துப் போன பின்னாடி சார் திட்டுவாரோன்னு பயந்து போய் நின்னா ‘’விடுங்கல, ஜெயிச்சிட்டா அதுல கத்துக்க ஒன்னு இருக்காது, தோல்விலதாம்ல நெறய பாடம் தெரிஞ்சிக்கலாம், அடுத்த வாரம் வடகர மேட்சுல பாத்துக்கலாம்’’ என ஆருதல் சொல்லுவார்.  மூனு நாளு கழித்து கூப்பிட விடுவார் ‘’மேட்சுப் %&$%@& யாடா விளையாண்டிங்க, சூப்பிப் போனவ %*&%#க்கு எண்ண தடவுன மாதிரி.....................’’ன்னு ‘’டோட்டல் பேமிலி டேமேஜ்’’ஆகுற மாதிரி அர்ச்சனை நடக்கும்
எந்த ஊரு மேட்ச்சுக்குப் போனாலும், சாப்பாடில் மட்டும் குறையே இருக்காது. ஆம்லேட் என்றால் டபுள் ஆம்லேட்தான், புரோட்டா என்றால் கொத்து புரோட்டாதான். ஒவ்வொரு ஸ்கூலும் காலாண்டு இடைவெளியில், இவ்வளவு போட்டி நடத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் போட்டி நடத்தாமலேயே அவர்களுக்குள்ளாகவே, நீங்க வின்னர், நீங்க ரன்னர் என முடிவெடுத்து கல்வி விளையாட்டுத் துறையில் இருந்து சர்டிபிக்கேட் வாங்கிவிடுவார்கள். அதை காலை பிரேயரில் வைத்து எல்லோரயும் கை தட்டச் சொல்லி கொடுப்பார்கள். அந்த மாதிரியான அசிங்கம் கலந்த ஆனந்தம் கூட  ஒரு விதமான அனுபவம்தான். எங்க பீட்டி சாருக்கு வாலிபாலை விட பேஸ்கட் பால் கேமில்தான் அதிக ஆர்வம். அவர்களுக்கு தனி கோச்சிங்க் எல்லாம் கொடுப்பார். இப்போது எப்படி என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் பாஸ்கட் பால் ஸ்கூல் டீம் மொத்தம் பத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு டிஸ்டிக் லெவல் மேட்ச் எல்லாம் கிடைக்கும். அதுல நிறைய கப் வாங்கியிருக்கிறார்கள். வாலிபாலுக்கு எல்லாம் மேலே சொன்னா மாதிரி  ஏதாவது கிடைத்தால்தான் உண்டு. அவர் ரூமில் இருக்கும் கப்புகளை பார்க்கும் போது சொன்னார் “கப்பு வெயிட்டு கையோட நிக்கனும், தலைக்கு கொண்டு போனா, துதான் நம்ம கடைசி கப்பு”
வாலிபால் மேட்ச் என்றால் அதற்கு இரண்டு நாள் முன்பாக, ஸ்கூல் முடிந்தவுடன் சீனியருடனோ, அல்லது ஸ்டாப் டீம்வுடனோ பயிற்சி மேட்ச் நடக்கும். ஸ்டாப் டீமில் முருகன் சார்னு ஒருத்தர் இருந்தாரு. சத்தியராஜ் தோளில் ரகுவரன் ஏறி நின்றால் என்ன உயரம் இருக்குமோ அந்த உயரம். என்னோட உயரத்துக்கு நானெல்லாம் குறுக்கால கட்டியிருக்கும் நெட்டை டச் பண்ணாமலேயே அடுத்த கோர்ட்டிற்கு போய்விடுவேன். அவர்களோடு மேட்ச் ஆடச் சொல்லி கதற விடுவானுங்க. ‘’எத்தன பேருக்குள்ளது அத்துக்கிட்டு உருண்டு ஓடப்போகுதோ....’’ங்குற பீதிலேயே விளையாடுவோம். முருகன் சார் அவர் இருக்குற ஹைட்டுக்கு ஜம்ப் பண்ணி வேற அடிப்பாரு. 8000 கி.மீ ஸ்பீடுல பால் இறங்கும். அவரு ஜம்ப் பண்ண போறாருன்னு தெரிஞ்சுச்சுனாலே நாங்க கோர்ட்டுக்கு வெளியே போயிருவோம்.
என்னோட ஹைட்டுக்கு நான் ஒன்பதாவது வகுப்பில் இருந்து பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் வரை வாலிபால் ஜீனியர் டீமில்தான் விளையாடினேன். பனிரெண்டாவது படிக்கும் போது ஒன்பதாவது, பத்தாவது படிக்கிறவனுங்க கூட விளையாடனும். மேட்ச் எங்காவது போனால், நாயகம் சார் என்னை ஒன்பதாவது வகுப்பு மாணவன் என்றே பெயர் கொடுக்கச் சொல்லுவார். மற்றவர்களிடம் ‘’இவன ஒம்பதாப்புன்னு சொல்லித்தான் இறக்கியிருக்கேன், வெளயாடும் போது அண்ணே நொண்ணேன்னு கூப்பிட்டு என்னய மாட்டிவுட்டுராதியல’ன்னு சொல்லிவிடுவார். இதுதான் சந்தர்பம்னு, நேத்து வரை அண்ணன்னு கூப்பிட்ட பயலுக எல்லாம் ‘’எல’’, ‘’டேய்’’, ‘’மச்சி’’ன்னு கூப்பிட்டு வஞ்சம் தீர்ப்பானுங்க.
எங்களோட விளையாட்டு பீரியடுக்காக மற்ற வாத்தியார்களிடம் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். யாரும் இவர், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி வாத்தியார்களிடத்தில் பேசிப் பார்த்ததே இல்லை. தனக்கான இருக்கையை ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் ரூமிலேயே போட்டு அவர்களிடமிருந்து தனியாகவே இருந்தார். நான் காலேஜ் படிக்கும் போது எதேச்சயாக விளையாட்டு வாத்தியாருக்கு படித்த என் ஸ்கூல் சீனியரை சந்தித்தேன். விழுப்புரம் பக்கத்தில் வேலை கிடைத்தவுடன் நெல்லை நாயகத்தை சந்தித்தபோது அவர் சொல்லியதைச் சொன்னார். ‘’ரொம்ப சந்தோசண்டே, சில மயிராண்டிய வந்து ஒம்ம கிளாச தாரும் சிலபஸ் கவர் பண்ணனும்னு வருவான், எந்த கூ$#யானுக்கும் கொடுக்காத’’

வி மிஸ் யூ சார். 
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

4 கருத்துகள்:

  1. அருமை.. கட்டுரையில் வாய்விட்டுச் சிரிக்க குறைந்தது2-3 விஷயமாவது இருக்கிறது.. நான் உங்கள விட கொஞ்சம் பெட்டர். உயர வரிசையில் மூணாவது.. ஆனா பாருங்க, வருஷா வருஷம் 800 மீட்டர் ஓட்டப் பயிற்சியில், என்னைக் கவனிக்கவெனவே ஆள் இருக்கும்.. எல்லோரும் 4 ஆவ்து ரவுண்டு ஓடுகையில், நான் 3 ஓடத் துவங்கியிருப்பேன்.. - பாலா (பாலசுப்ரமணியம் முத்துசாமி)

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்ல அனுபவம் நான் அந்த காலத்துக்கு போயிட்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமை யசீர்.. இருந்தாலும் இம்புட்டு கெட்டவார்த்தையா பேசுவாரு.. டூ மச் ...

    பதிலளிநீக்கு
  4. படத்துல இருக்க மூணாவது ஆளு பொம்பள புல்லை போல இருக்கே.. அவங்களும் ஆடுனாங்களா?

    பதிலளிநீக்கு