ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

சதுரகிரி மலையும் எம்.ஜி.ஆரும்.


 நான் இஞ்சினியரிங் அரியர்ஸ் இல்லாமல் முடித்ததில், பலருடைய பங்கு பாதிக்கு மேல் இருந்தது. முதல் வருசம் கம்யூட்டர் லேப்பில் பிட் கொடுத்த ஜி.கார்த்திகேயனிலிருந்து, C, C++ லேப்பில் பார்முலா எழுதிக்கொடுத்த பொன்மணி பிரியா, கடைசி பரீட்சைக்கு பேப்பர் காட்டிய காஞ்சனாதேவி வரை அனைவருக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பட்டவன். பதிலுக்கு, எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கு நான் முன்சென்று உதவினாலும், செண்டம் எடுக்க முயற்ச்சிப்பவர்கள், என்னை செல்லமாக தவிர்த்துவிடுவார்கள். மேலே சொன்னவர்களோடு சேர்த்து சிலருக்கும்கூட, எனக்கு உதவிசெய்யும் பாக்கியம் கிடைத்திருந்தது, ஒரு எக்ஸாமில் எல்லாமே அவுட்டாப் சிலபஸ், கண்டிப்பாக ரி-எக்ஸாம் வரும் ஆகையால் எதையாவது எழுதி பக்கத்தை நிறப்ப ஆசிரியர் கேட்டுக்கொண்டார். வேறு வழியில்லாமல் என்னோட பஞ்சில் வலதுபுறம் இருந்த கம்யூட்டர் டிபார்ட்மெண்ட் ஜீனியர் பேப்பரில் கைவைக்கும்படி ஆகிவிட்டது.

இவர்கள் எல்லோரும் விஜயகாந்த் படத்தில், எப்போதாவது வரும் காமெடியன்கள் போல. ஆனால் டைரக்டர் ராஜேஷ் படத்தில் வரும் சந்தானம் மாதிரி, எல்லா எக்ஸாமிற்கும் என் நிழல் மாதிரி கூட இருந்தவன் நாகவிஜயராஜன். ----என்டே தளபதி----. கொஸ்டின் பேப்பர், மெயின் ஷீட், அடிசனல் ஷீட் என கொடுத்து கொடுத்து சிவந்த கை அவனது. அதற்கு கைமாறாக, மிமிக்கிரி என்ற பெயரில் போடும் மொக்கைகளையும், புரியாத பட்டினத்தார் பாடல்களையும் சிரித்துக்கொண்டே கேட்கவேண்டும். சில சமயங்களில் இதற்கு நாம் அரியரே வைத்திடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் இஞ்சினியரிங்கை 7 வருடத்தில் முடிக்கவேண்டும் என்ற செய்தி என்னை கலவரப்படுத்தியது.

காக்க காக்க படம் பார்த்ததில் இருந்து, ‘’சூர்யா மாதிரி இருக்கேனா?’’ என்று கேட்டு அடிஷனலாக கொடுமைசெய்தான். ‘’லிப்ஸ்டிக் போட்டா ஜோதிகா மாதிரிகூட இருப்படா’’ என்று சொன்னாலும் சிரிப்பான். என்னை பாஸாக்கி விடவேண்டும் என்பதற்காக மட்டும், எக்ஸாம் டைமில், சிவில் புத்தகங்களை படிப்பான். ஆனால் மற்றநாட்களில் ஐ.எப்.எஸ் படிப்பிற்காகவே ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். அது அவன் கனவாக இருந்தது. அவன் ரூமிற்க்கு போனால், பட்டினத்தார் புத்தங்களும், ஐ.எப்.எஸ் புத்தகங்களும்தான் செல்பில் இருக்கும் மற்ற புத்தகங்களை தேடினால்தான் கிடைக்கும்.

இவ்வளவு நல்ல நண்பனோட, புதுவீட்டு கிரகபிரவேசத்துக்கு என்னால் போகமுடியவில்லை. எனக்கு அது ரொம்ப வருத்தம். என்னைக்காவது ஒரு நாள் அவன் வீட்டிற்கு போகவேண்டும் என்ற எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் குடும்பத்தில் ஏதோ நேத்திக்கடனுக்காக சதுரகிரி மலைக்கு, சாமி கும்பிட போகிறோம் என்று சொன்னான். புரோகிராம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்றதால் நானும் வருகிறேன் என்று சொன்னேன். எனக்குப் பின்பு, ஒவ்வொருவராக பெயர் கொடுக்க, எண்ணிக்கை பத்து, பதிமூன்றுக்கு மேல் ஆனது. நம்ம கூட உட்கார்ந்து சாமி படம் பார்த்தவங்களுக்குள் இவ்வளவு பக்தியா என்று என்னால் நம்பவே முடியவில்லை. அப்புறமாகத்தான் தெரிந்தது எல்லாம் கிடாய் வெட்டி, கறிசோறு திங்க பெயர்கொடுத்தவர்கள் என்று.

அதுவரைக்கும் சதுரகிரி மலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. சனிக்கிழமை படைபரிபாளங்களுடன் அவன் வீட்டில் இறங்கி, இரவு சாப்பாட்டை ஒரு தட்டில் நாலுபேர் வீதம் சாப்பிட்டு, கதை, கேலி, கிண்டல் என அன்றய இரவு இன்பமயமானதாக இருந்தது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து, குழித்து, சூடான சில பல இட்லிகளை உள்ளே தள்ளி, கோவிலுக்கு போவதற்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்தோம். ஏற்கனவே, ஒரு 50, 60 பேர்களை ஏற்றிக்கொண்டு எங்கள் முன்பாக அந்த லாரி நிற்க, எங்களுக்கு பயங்கர சந்தோசம். என் வாழ்க்கையில் நான் லாரியில் போனதே இல்லை. மாட்டு வண்டி என்றால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும். கலர், கலரான பட்டு சேலைகளில் பெண்களை கண்டபோது, பாரதிராஜா படம் பார்த்தது போல இருந்தது. அந்த கூட்டத்தில் நாங்கள் மயில் ஸ்ரீதேவியை, ஹே மய்யில், ஹே மய்யில் என தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் எல்லாமே மயில் அம்மா காந்திமதியாகவே இருந்தது.

லாரியில் ஏறுவதற்காக நாகுவின் கட்டளைக்காக காத்திருந்தோம். ஆனால், நாகவிஜயராஜன் முகம் ரொம்ப வாடிப்போய் இருந்தது. விசாரித்ததில், ‘’நீங்க எல்லாம் பரவாயில்லடா, மிதுன் பெரியவீட்டு பையன் அவன் எப்படிடா லாரியில................’’ என இழுத்துக்கொண்டிருந்தான். அவன் லாரியில ஏறலன்னா, லாரிய அவன் மேல ஏத்துவோம் என நக்கல் பண்ணினாலும், நாகு சமாதானம் ஆகவில்லை. ஆனால், அவன் யாரை நினைத்து வருத்தப்பட்டானோ அந்த மிதுன்தான் ஊருக்கு முதலாவதாக ஏறி, மற்றவர்கள் ஏற கை கொடுத்துக்கொண்டிருந்தான். நாகு ஹேப்பி அண்ணாச்சி, லாரி கிளம்பியது. போர வார பொதுமக்களுக்கும், பஸ்களுக்கும் கை ஆட்டிக்கொண்டும், வணக்கம் தெரிவித்துக்கொண்டும் சென்றோம்.

கிரிஷ்ணங்கோவில் வரை லாரி சீராக சென்றது. அங்கிருந்து வத்ராயிருப்பு ரோட்டை பிடித்ததில் இருந்து, லாரியில் இந்தப் பக்கம் நின்றவன் அந்தப் பக்கமும், அந்தப் பக்கம் நின்றவன் இந்தப் பக்கமுகாக குலுங்கி, குலுங்கி சென்றது. இறுதியாக ஒரு இடத்தில் லாரி நின்றது. எங்கடா கோவில் என்று தேடிப்பார்த்தோம். எங்களுக்கு புலப்படவில்லை. மலையும், மலைசார்ந்த இடமுமாக இருந்தது. சுத்தி பச்ச பசேல் என ரொம்ப வித்தியாசமான பாலுமகேந்திரா லோகேஷன். கூட வந்த ஒருவரிடம் கோவில் எங்க பாஸ்? என்று கேட்டோம். அவர் மலை உச்சியை காட்டினார். ‘’ஒஹோ, அப்ப இங்க டீ குடிக்க நிப்பாட்டி இருக்கோமா?’’ என்று கேட்டேன். இல்ல தம்பி, இதுவரைக்கும்தான் வண்டி போகும், கோவிலுக்கு நாம நடந்துதான் போகனும்னு சொன்னாரு. கோவிலுக்கு வந்திருந்ததால், கொஞ்சம் பொறுமையுடன் பதில் சொன்னார், ஆனால் அவருடய கண்ணில் கெட்டவார்த்தைகள் கொப்பளித்ததை என்னால் காண முடிந்தது. 

பூமிதி திருவிழாவுக்கு வந்த கவுண்டமணி மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை. பதிமூனு பேரும் ஆள், ஆளுக்கு மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம். ஆடு பலி கொடுப்பது, மற்றும் சில காரியங்கள் எல்லாம் அந்த மலையின் அடிவாரத்திலேயே நடந்தது. அந்த நேரத்தில் ஒரு பாட்டி சதுரகிரி மலையின் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் பற்றிய பெருமைகளை எல்லாம் சொல்லியது. பாட்டிகள் கதை சொல்லி கேட்பது என்பது அவ்வளவு இனிமையானது. அதுவும் இதுமாதிரியான வரலாறு, புராணங்கள் என்றால் விட்லாச்சாரியார் படம் பார்ப்பதுபோல. மாட்டுக்காரர் பச்சைமால் பற்றிய கதைகள் எல்லாம் சொன்னார். இன்னமும், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் எல்லாம் இந்த மலையில் வாழ்வதாக கூறினார். நாங்க கொஞ்சபேர் மலை அடிவாரத்தில் ஒரு சின்ன குன்றின் மீது பேசி சிரித்துக்கொண்டிருந்தோம், தாகம் வரவே, தண்ணீர் கேட்க அங்கு இருந்த ஒரு சின்ன குடிலுக்கு சென்றோம்.

அந்த குடிசையில் யாருமே இல்லை, ரொம்ப சின்ன குடிசை, பார்க்கும் போதே ஏதோ வயதானவர்கள் வசிப்பதாகவே தோன்றியது, மிஞ்சிப்போனால் 4 பாத்திரங்கள், ஒரு தகர பெட்டி இருக்கும். எல்லாமே அழுக்குப் படிந்தே இருந்தது, ஒன்றைத் தவிர. அந்த ஒன்று எம்.ஜி.ஆர் போட்டோ. அதற்க்கு கீழே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு வைக்கப்பட்டிருந்த சந்தன, குங்கும பொட்டின் ஈரம்கூட காயாமல் இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த குடிசை இருக்கும் நிலையை வைத்துப் பார்க்கும்போது, அந்த விளக்கிற்கு ஆகும் எண்ணெயின் செலவே மிக அதிகம். அதுவரை எனக்கு எம்.ஜி.ஆரின் மீது எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் இருந்ததில்லை. அந்த நிகழ்வு என்னை ரொம்ப பாதித்தது.

கோவிலுக்கு சென்ற வயதான பெரியவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது, மலையேற ஆயத்தமானோம். முதலிலேயே வேகம் கூடாது என்று பாட்டி சொல்லியதால், நாங்கள் மெதுவாகவே மலை ஏறினோம். ஆர்வக்கோளாரில் ஆக்ஸ்போர்டு டிகிரி வாங்கிய மிதுன் படுவேகமாக பாய்ந்து, பாய்ந்து சென்றான். பாதை ஒத்தயடி பாதையாகவே இருந்தது, அதுவும் பாறைகளாகவும், மர வேர்களாகவும், செங்குத்தாகவும் இருந்தது. அரை மணி நேரம் ஆனது, ஒரு மணி நேரம் ஆனது கோவில் வருவதாகத் தெரியவில்லை. எதிர் வந்த பாட்டியிடம் இன்னும் எவ்வளவு தூரம் பாட்டி மேலே போகவேண்டும்? என்று கேட்டோம். இப்பதான தம்பிகளா ஏறவே ஆரம்பிச்சிருக்கீங்க என்று சொல்ல. மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போச்சு. நெக்ஸ்ட், ரெஸ்ட் என்று அரை மணி நேரம் உட்கார்ந்து பின்பு நடக்க ஆரம்பித்தோம்.

நம்ம மிதுன், போன ஸ்பீடுக்கு இன்நேரம் சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டு இறங்கி வந்துகொண்டிருப்பான்!!!!! என்று பேசிக்கொண்டிருக்கும் போது, பாதையின் பக்கவாட்டில் கொஞ்ச உசிரோடு ஒரு பாடி கிடந்தது, எங்கயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு திருப்பி போட்டுபார்த்தா. நண்பர் மிதுன். இதெல்லாம் உனக்கு தேவையா? என்று திட்டி தண்ணிகுடிக்க வைத்து இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு நாங்கள் ‘’சித்தன் போக்கு சிவன் போக்கு என்று மேலே ஏறினோம்’’. 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான அந்த செங்குத்தான பாதையின் பாதிவழியில் போகும்போது, செத்துப்போன என்னோட பாட்டி பேராண்டின்னு மேல இருந்து கூப்பிட்டமாதிரி ஒரு பிரம்மை. அல்லே இல்ல எனக்கு. திரும்ப தரையப் பார்த்தாத்தான் நிஜம் என்ற ஜென் நிலையில் இருந்தேன். 

போகிற வழி எல்லாம் சில சாமிகளின் சிலையும், சித்தர்களின் சிலையும் இருந்தது. இறுதியாக சுந்தரமகாலிங்கம் சாய்வாகவும், அதற்கு எதிரே சந்தனமகாலிங்கம் சந்தனத்தோடும் காட்சியளித்தனர். நாளைக்கு நடக்கவிருக்கும் ‘’பிரிகாஸ்டு கான்கிரீட்’’ கிளாஸ் டெஸ்டை ரத்து செய்ய வேண்டுமாறு நாகுவிடம் ஆப்ளிகேசன் கொடுத்தேன். (டெஸ்ட் நடந்தது, பேப்பரை பார்த்தபின்பு, மறுவாரம் ரி-டெஸ்டின் மூலம் தப்பித்தோம்.)

இன்னும் மேலே போனால் பெரிய மகாலிங்க கோவிலை காணலாம் என நாகு சொல்ல, இன்னும் பத்து அடி மேல் பக்கமா எடுத்துவைத்தால் ஒரேடியாக மகாலிங்கத்திடம் போய்விடுவேன். அடுத்த அட்டம்டில் அவரைப் பார்த்துக்கொள்ளலாம் என, பெ.மகாலிங்கத்தை ஆப்சனில் விட்டுவிட்டு கீழே இறங்கிய போதுதான் எவ்வளவு கடுமையான பயணம் என்பது புரிந்தது.

7 மணிக்கு ஏறிய மலையில் இருந்து இறங்கி வந்து, சாப்பிட 3 மணி ஆனது. மதம் அனுமதிக்காததால் என்னைத் தவிர அனைவருக்கும் கறி சோறு பரிமாரப்பட்டது. எனக்கு ரசம் சோறு. இடதுபக்கம் திரும்பினால், ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான், முனி......................... என எல்லா ராஜ்கிரண்களும் அங்குதான் இருந்தார்கள். 



----------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

12 கருத்துகள்:

  1. ஹா ஹா சுவையான அனுபவம் உங்கள் பதிவைப் படித்த எனக்கு.
    மலை மேலே ஏறுவது மட்டும் எத்தனை கிலோமீட்டர் வரும் ?என்னையும் போகவேண்டுமென்று வீட்டில் கேட்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஷ்டப்பட்டு ஏறுனா தூரம் வெகு குறைவுதான். நாங்கள் கஷ்டப்பட்டு ஏறினோம். கேட்டவரை 14 கிலோமீட்டர் என்று நினைக்கிறேன். உண்மையில் காணவேண்டிய இடம்.

      நீக்கு
  2. யாருமே இல்லாத குடிசையில் சுத்த பத்தமா இருந்த எம்.ஜி.ஆர் பத்தி சொல்லி ஆரம்பிச்சிட்டு, ஒண்ணுமே சொல்லாம போய்டீங்களே ?......
    நல்லாத்தான் வாழை பழத்தை வேற்ற மாதிரி எழுதுறீங்க..... வாழ்க...வளர்க

    பதிலளிநீக்கு
  3. அவருடைய கண்களில் கெட்டவார்த்தை கொப்பளித்ததை என்னால் பார்க்க முடிந்தது(பார்ரா)
    நகைச்சுவையோடு ஒரு ஆன்மிகப் பயணம்
    நன்றிங்கண்ணா!!!

    பதிலளிநீக்கு
  4. குப்பைத்தொட்டில குப்பை ரொம்ப கம்மிய இருக்கு
    கு(ட்)ப்பை பதிவுகளை போடலாமே???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சினிமா குப்பைகளுக்கானது. விமர்சனம் செய்கிற அளவுக்கான படங்களை காணும் போது குப்பைகளின் எண்ணிக்கை கூடலாம்.

      நீக்கு