திங்கள், ஆகஸ்ட் 24, 2015

கந்தூரி விழா

எழுத்தாளர் சுஜாதா, வீட்டில் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும்படி வைத்திருப்பாராம்.  எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும் என்ற காரணமாம். அதனால்தான் அவரால் அதிக புத்தகங்களை படிக்கமுடிந்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல நாமும் முயற்சிக்கலாம் என்று, ரூமில் ஒரு புத்தகம், ஆபிஸில் ஒரு புத்தகம், தினந்தோரும் செல்லும் மச்சான் ரூமில் ஒரு புத்தகம், பார்க்கிங்க் கிடைக்காமல் காரில் இருக்கும் போது படிப்பதற்காக ஒரு புத்தகம்...... என எல்லா இடத்திலும் வைத்திருந்தேன். காரில் புத்தகம் வைக்கும் போது கொஞ்சம் ஓவராத்தான் போறோம்மோன்னு எனக்கே தோணுச்சு. ஒரு புத்தகத்தையாவது படிச்சியா? என்று நீங்கள் தமிழில் கேட்டால், நான் ‘லா’ என்று அரபியில் பதிலுரைப்பேன்.

நேற்று, ரூமில் வைத்திருந்த சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’ புத்தகத்தை படிக்க திறந்தேன். இஞ்சினியரிங் முதலாமாண்டு கெமிஸ்டரி புத்தகத்தை முதன்முதலாக திறக்கும் போது உடலில் சில வேதியல் மாற்றங்கள் உண்டாகி வந்தது பாருங்க ஒரு தூக்கம்......அதே தூக்கம் திரும்ப தேடி வந்தது. ஆனால் படித்த அந்த இரண்டு பக்கங்கள் என்னை, ஏர்கண்டிசனுடன் கூடிய என்னுடய டவுஸர் காலத்துக்கு இழுத்துச்சென்றது.

அந்த புளியமரம் தர்ஹாவின் காம்பவுண்டுக்கு உள்ளே இருந்ததா? வெளிப்புறமாக இருந்ததா? என்ற ஞாபகம் கூட இப்போது எனக்கு இல்லை. அதில் தான் கந்தூரியின் இரண்டாவது கொடியை கட்டுவார்கள். ரொம்ப வயதான மரம், கிழம் தட்டிய மனிதனின் தோல் போல இருக்கும். மரம் முழுவதும் செதில் செதில்களாக இருக்கும். அடிக்கடி பொக்கு கிளைகள் கீழே விழுந்த வண்ணம் இருக்கும். ஆனாலும் அதன் புளியம் பூவும், பழமும் இன்னும் நாவில் எச்சிலை ஊறச் செய்கின்றது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நாங்கள் அதைச் சுற்றி சுற்றியே இருந்தோம். எங்களை விரட்டி அடிக்க எத்தனையோ கட்டுக் கதைகள் சொன்னாலும் புளியமரமே கதி என்று கிடந்தோம். பொக்கு மரமாக இருந்ததால், பாம்பின் புகழிடமாகிவிட்டது. பின்பு ஒரு நாளில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் போது கை, கால், தலை, உடல் என வெட்டிச் சாய்க்கப்பட்ட மனிதனைப் போல் துண்டு துண்டாக கிடந்தது.

எங்கள் தெருவில் ஒரு அவுல்யாவின் அடக்கஸ்தலம் இருக்கிறது. இதுபோன்ற அடக்கஸ்தலங்களுக்கு தர்ஹா என்று பெயர். இவருடய பெயரிலேயே நிறைய தர்ஹாக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. எக்ஸாக்டாக எந்த இடத்தில் அந்த அவுல்யா முக்தியடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாரா? என்பதுகூட கேள்விக்குறி. பண்டைய காலத்தில் பெரிய நிலபிரபுகளிடம், நிலத்தை ஜமாத்திற்கு ஆட்டயப்போடுவதற்காக இதுபோன்ற அவுல்யாக்கள் தேவைப்பட்டார்கள்.  இவர்கள்தான் இஸ்லாத்தை ஊர் ஊராக சென்று பரப்பியவர்கள். அவர்களின் ஞாபகாற்தமாக அவர் நின்ற, திண்ற, உறங்கிய இடங்களை சமதியாக மாற்றி ஜாமாத் நிறைய சம்பாத்தியம் செய்துகொண்டிருந்தது.

இதுபோன்ற தர்ஹாக்களில் தொழுகை நடக்காது, ஏதாவது வேண்டுதல் இருந்தால், 50 மில்லி எண்ணெயை அங்கு இருக்கும் விளக்கில் ஊற்றிவிட்டு அந்த அவுல்யாவிடம் அல்லாவிடம் ரெக்கமண்டேசன் பண்ணச் சொல்வார்கள். வேண்டுதலைப் பொறுத்து, மில்லி லிட்டரின் அளவு கூடும். எண்ணெய் வாங்குவதற்காக பக்கத்திலேயே ஒரு கடை இருக்கும். நாம் ஊற்றிய எண்ணெய் இரவில் திரும்ப பாதி விலைக்கே அந்த கடைக்கு வந்து சேர்ந்துவிடும். சிலபேர்கள் அவுல்யாக்களையே அல்லா என நம்பி, விம்பி விம்பி அழுது பிராத்தனை செய்வார்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாருகள் செய்யும் தவறுக்கு, பாவம் அவுல்யா அல்லாவிடம் அடிவாங்கிக்கொண்டிருப்பார். ப்ளஸ் ஒன் படிக்கும் போது மாதத் தேர்வில் ஆங்கிலத்தில் ஜஸ்ட் 45 எடுத்தா போதும் என்று பிராத்தனை செய்து நானும் எண்ணெய் ஊற்றினேன். ஆனால் எடுத்த மார்க்கிற்காக அந்த வாத்தியார் அடித்ததில், பால் ஊற்றும் நிலைக்கு முந்திய நிலை வரை சென்று தப்பித்தேன். அன்றிலிருந்து அவுல்யா என்னிலிருந்து அப்பிட் ஆகிவிட்டார்.

வருடம் தோறும் இதுபோன்ற தர்ஹாக்களில் கந்தூரி விழா நடக்கும். கொடி எடுப்பது, சந்தனக்கூடு எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இது எதுவுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது கிடையாது, தர்ஹா உட்பட. இதுபோன்ற கந்தூரிவிழாவிற்கான காரணம் ரொம்ப எளிது. நாங்க எல்லாம் சுமார் 5 அல்லது 6 தலைமுறக்கு முன்பாக இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள்.  இஸ்லாத்திற்க்கு வந்த புதிதில், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது அனைவரும் கோவில் திருவிழாவிற்குச் செல்ல, பள்ளிவாசலில் கூட்டம் பல்லிழித்துக் கொண்டிருந்தது. மார்க்க அறிஞர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தயையும் இறக்கிப் பார்த்தும் பயனில்லை. இன்னும் பயிற்ச்சி தேவைன்னு புரிந்துகொண்டார்கள்.

இப்படி போனால் சரிவராது என்பதை உணர்ந்து, இஸ்லாத்திற்க்கு மாறியவர்களை இஸ்லாத்திலேயே பெவிக்கால் போட்டு உட்காரவைக்க, அறிஞர்களின் போர்டு மீட்டிங்கில் உருவானதுதான் இந்த கந்தூரி விழா. கிட்டத்தட்ட ஆடல், பாடல் தவிர்த்து அனைத்துமே கோவில் திருவிழாவை ஒத்தே கந்தூரி விழாக்கள் இருக்கும். தேருக்கு பதிலாக சந்தனக்கூடு போல. சில ஏரியாக்களில் தீ மிதி விழாக்கள் கூட கந்தூரி விழாக்களில் உண்டு.  சென்ற முறை கந்தூரி விழாவில், எங்கள் ஜமாத் தலைவர் ஆடிய குத்தாட்ட வீடியோவை பார்த்த போது வரும் ஆண்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்படி உண்டு என்றால், ரீட்டாவை புக் செய்ய சில பல போராட்டங்களை கையிலெடுக்கவேண்டும். ரெண்டு கொடி ஏற்றுவார்கள் முதல் கொடிக்கும் இரண்டாவது கொடிக்கும் பத்து நாள் இடைவெளி. பதினோராவது நாள் வெடியுடன் கந்தூரி இனிதே முடியும்.

வீட்டுக்கு வீடு பிரசாதமாக, ‘’மால்ஸா’’ கிடைக்கும் மாவில், வெல்லம் எல்லாம் போட்டு கொடுப்பார்கள், துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் பேமிலி என்றால் தேங்காய், பால், பழம் போட்டு ஒரு வகையான பிரசாதம் தருவார்கள். அதற்காகவே யானையில், கொடியை தூக்கிக்கொண்டு செல்லும் போது பின்னாடியே போகவேண்டும். இளவட்ட பசங்க எல்லோரும், தனது டாவு இருக்கும் வீட்டிற்க்கு முன்பாக வாத்தியக் கோஷ்டியை நிறுத்தி 10 ரூபாய் கொடுத்து நலந்தானா வாசிக்கச் சொல்லுவார்கள். எந்த வீடு, டாவு பெயர் என்ன? எனபதை விசாரித்து, அண்ணன் வரும் போது ‘’அண்ணேய் பாத்திமா அக்காவாண்ணே’’ என கோரஸாக சொல்லவேண்டும். இதெல்லாம் அவர் வாங்கி கொடுக்கும் கலர் தண்ணிக்காகத்தான் என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. ஆண்கள், அக்கா-தங்கச்சி வீட்டிற்கு கந்தூரி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அனுப்புவார்கள். அந்த பாக்ஸ் ஓலப்பாயில் செய்ததாக இருக்கும் அதில் இத்துப்போன இனிப்பு சேவும், செத்துப்போன ஜிலேபியுடன், சில மைசூர்பாகுவு இருக்கும்.

கொடி எடுப்பதற்க்கு முன்பாக, யானைக்கு பட்டு துணி, அலங்காரம் எல்லாம் செய்து தர்ஹாவிற்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்துவார்கள். பெயருக்கு ஏதோ அரபியில் ஓதி பழம் கொடுத்து யானையை ஒதுங்க சொல்லிவிட்டு அடுத்த அரை மணி நேரம் அமைதியே உருவான அவுல்யாவின் கல்லறைக்கு பக்கத்தில் டிரம்ஸ் கோஷ்டி ‘’நேத்து ராத்திரி எம்மா,,,,’’ போன்ற இரவு பனிரெண்டு மணிக்கு ஒலிபரப்பும் பாடல்களை மதியம் ஒரு மணிக்கு தெரிக்கவிட்டுக் கொண்டிருப்பார்கள்.  கல்லறையில் மல்லாக்க படித்திருக்கும் அவுல்யா குத்துப்பாட்டை கேட்டு கவுந்துபடுத்துவிடுவார்.

இரவில் சந்தனக்கூடு கொண்டு வரும் போது அதனுள் ஒருவர் நடந்துவருவார். உள்ளே இருப்பதால் நமக்கு அவரின் முகம் தெரியாது,. சந்தனக்கூடைச் சுற்றி கலர் கலர் பேப்பர்களும், லைட்டுகளும் மின்னும். முதலில் நான் ஏதோ எலக்ட்ரிசன் என்று எண்ணிக்கொண்டேன். பின்பு ஒரு நாளில்தான் தெரிந்தது, ஏதாவது வேண்டுதல் நிறைவேற அப்படி செய்வார்களாம். தீ பந்தம் சுற்றுதல் என்ற பெயரில் ச.கூடு முன்பாக எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். சிலம்பம் சுற்றுவதற்கு வெளியூர் ஆள் கிடைக்கவில்லை என்றால், எங்கள் ஊரில் யாரையாவது செட்டப் செய்து, போக்கிரி படத்தில் வரும் பஜக், மொஜக், டொஜக்.... ஸ்டைலில் மாறி மாறி அடித்துக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் கால ‘’கல்யாண மாலை’’ நிகழ்ச்சியே இந்த கந்தூரி விழாக்கள்தான். ஊரில் இருக்கும் அனைத்து பெண் பிள்ளைகளும் வந்துவிடுவார்கள். பெண்கள் வெளியில் தலைகாட்டுவதற்கான ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். பெண் போட்டோ கொடுத்து திருமணம் செய்யும் செய்யும் பழக்கமோ, மாப்பிள்ளை பெண் பார்க்கும் பழக்கமோ எங்கள் ஊரில் இல்லாததால், இது போன்ற சந்தர்பங்களில் பெண்களை செலக்ட் செய்து வீட்டில் பெரியவர்களிடம் கூறுவார்கள். அதனால்தான் கந்தூரி விழா முடிந்த மறு மாதம் கல்யாண சீசனாகவே இருக்கும்.

இஸ்லாத்தில் புரட்சி செய்ய கிளம்பியவர்கள், பெண்களின் கல்வி முன்னேற்றம் என பல காரணங்களினால் இப்போது கந்தூரி விழாக்கள் நீர்த்துப்போய்விட்டன. கந்தூரி விழா கூடாது என முழங்கும் புரட்சியாளர்கள்தான் பெண்களைக் காண முதல்வரிசைக்கு முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். தர்ஹா காம்பவுண்டில் ஜமாத்தின் கல்யாண மண்டம் வந்துவிட்டது. கோடி, கோடியாய் முழுங்கிவிட்டு இன்னும் முழுமை பெறாத அந்த கல்யாண மண்டம், தனக்கும் முழுங்கிய கோடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற தோறனையில் இருக்கின்றது.


---------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

4 கருத்துகள்:

  1. "பால் ஊற்றும் நிலைக்கு முந்திய நிலை" - இந்த நிலையை பற்றி கொஞ்சம் விவரமாக இன்னொரு பதிவை பாவ்டிங்கள். ரசித்து படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அவ்லிய்யாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கு சுகம்
    சகோ அந்த அவ்லியா பெயரை வெளியிடவும்
    பதிவு சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மாவுக்கு சுகமா? இது தெரியாமப் போச்சே......
      நத்தஹர் ஒலியுல்லா
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு