செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

டியர் மோடி

ஸ்ரீமான் மோடி அவர்களே.............. என்று தொடங்குவதற்கு என்னை மன்னிக்கவேண்டும், எனக்கும் தங்களை மோடிஜி என்றே அழைக்க ஆசை, ஆனால் அஜித்தின் தீவிர ரசிகரான நான் ‘’ஜி’’ படத்தை பார்த்ததிலிருந்து அந்த வார்த்தையை/எழுத்தை தவிர்க்கவே எண்ணுகின்றேன். தங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தால் அந்த காவியத்தைக் கண்டு என் மனதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். 

நான் அபுதாபியில் இருக்கின்றேன். பாருங்கள், நீங்கள் இங்கு வந்திருந்தபோது, நான் வேலை செய்யும் இடத்திற்கு மிக அருகில் தங்கியிருந்தது பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல் இருந்துவிட்டேன்.  தாங்கள் இருக்கும் இடம் முன்பே தெரிந்திருந்தால், பிரட்சனைகளைப் பற்றி பேசவேண்டும் என்றால் அனுமதி கிடைத்திருக்காது, செல்ஃபி எடுக்கவேண்டும் என்று கூறி என் நண்பனின் ஆப்பில் ஐபோன் 6 எடுத்துக்கொண்டு வந்து உங்களை சந்தித்து இருப்பேன். காலம் நம்முடய சந்திப்பை காலதாமதப்படுத்துவதை எண்ணி வருந்துகின்றேன்.

தங்களின் வருகையால், அபுதாபியில் கோவில் வரப்போகும் செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சி. முன்பு கோவில் செல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் துபாய் வரை செல்லவேண்டி இருந்தது. மாலையில் கோவில் செல்லவேண்டும் என்றால், அன்றய தினம் காலை, மதியம் எங்கள் மெஸ்ஸில் சைவ உணவாகவே இருக்கும். ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு வெள்ளிக்கிழமை மட்டன் பிரியாணி கிடைக்காதன் வலியை நீங்கள் உங்கள் கட்சியில் இருக்கும் முக்தர் அப்பாஸ் நக்வியிடமோ அல்லது நஜிமா ஹெப்துல்லாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அபுதாபியில் கோவில் வந்துவிட்டால் காலையிலேயே, கடவுளை தரிசித்துவிட்டு, மதியம் மட்டன் பிரியாணிக்கு வழிசெய்தமைக்காக கோட்டான கோடி நன்றிகள்.

தாங்கள் இந்த நாட்டின் பட்டத்து இளவரசரின் உபசரிப்பை புகழ்ந்து பேசியதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. இப்போதும் கூட இஞ்சிபருப்பான் பாக்கெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டே டைப் செய்துகொண்டிருக்கின்றேன். தாங்களின் வருகையையொட்டி நகரில் ஒரு போஸ்டர் ஒட்டவோ, பிளக்ஸ் வைக்கவோ அனுமதியளிகவில்லை. இருந்தாலும் விடுவோமா? பேஸ்புக்கில், புர்ஜ் கலிபாவில் இந்திய கொடி லைட்டிங்க் செய்ததாக போட்டோ ஷாப் செய்து பரப்பினோம். குமரி முத்து கண்கொண்டு கண்டாலே அது ஒரு போட்டோஷாப் என்று அப்பட்டமாக தெரியும், ஆனாலும் ஆயிரத்துக்கு மேல் லைக்குடன் நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்தமுறை வரும்போது குஜராத்தில் இருந்து கைதேர்ந்த போட்டோஷாப் வல்லுனர்களை முதலிலேயே அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் நீங்கள் பேசியது போலவே, அபுதாபி ஐ-காட் லேப்பர் கேம்மில் வசிக்கும் லேபர்களிடம் ’’உங்களால் இந்தியா பெருமை அடைகிறது’’ என்று பேசியதை எண்ணி இங்குள்ளவர்கள் புலங்காயிதம் அடைந்தனர். சொகுசாக வாழ அமெரிக்கா சென்றவர்களிடம் அந்த வசனம் ஓகே, ஆனால், சொந்த நாட்டில் சோத்துக்கு வழியில்லாமல் அந்நிய நாட்டில் கொத்தடிமைபோல் இருப்பதற்கு இந்தியா ஏன் பெருமையடையவேண்டும்? மாறாக ஆட்சி செய்தவரகளும், ஆட்சி செய்பவர்களும் வெட்கப்படவேண்டும் .என்று எவனும் கேள்வி கேட்கவில்லை. ஏன் யோசிக்கக் கூட இல்லை. அதுதான் உங்களின் வெற்றி.

‘’தொழிலாளர் நலம் பேணப்படவேண்டும், மனிதாபிமானத்துடன் தொழிலாளர்களை நடத்தவேண்டும்’’ என்று நீங்கள் கட்டளையிட்டபோது, ஆசான வாயையும் சேர்த்து மூடியபடி அந்த அரபி அதிகாரி தலையாட்டியதாக ஒருவர் கூறக்கேட்டேன். அதைச் சொல்லும் போது அவருக்கு புல் அரித்திருந்தது, எனக்கோ....... ஃபுல் அடித்ததுபோல் இருந்தது. அந்திய நாட்டில் வந்து இவ்வாறு அறைகூவல் விடுக்கும் தாங்கள், சொந்த நாட்டில் நசுக்கும் தொழிலாளர் நல வாரியங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வைப்புத்தொகையில் கை வைப்பதில் இருந்து, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை சட்டவிரோதமாக மாற்ற நினைப்பது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊனமடைந்த ராணுவ வீரர்களின் சலுகையில் கைவைப்பது  வரை, பாவம் இந்த அரபு நாட்டு அடிமைகள் அறியவில்லை.  அது உங்களின் அடுத்த வெற்றி.

பத்து வருடத்திற்கு மேல் இந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூரில் இருப்பது போல குடியுருமை வழங்க ஆவணசெய்வீர்கள் என்று எண்ணினோம். அது நடக்காமல் போனது சற்று ஏமாற்றம்தான். இருப்பினும் அடுத்த ஊழல் பிரட்சனை உருவெடுக்கும் போது தாங்கள் இன்னொரு முறை இங்கு வருவீர்கள் என்பதால் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். 50,000 பேர் கூடிய அந்த வரலாற்று நிகழ்வு புகைப்படங்கள் சிலவற்றை காணக்கண்டேன். கம்யூட்டரில் இமெயில் ஓப்பன் செய்ய அறியாதவர்கள், தங்களைக் காண ஆன்லைனில் புக்கிங்க் செய்திருப்பதாக அறிந்த போதுதான் தங்களின் ஆற்றலைக் கண்டு ஆடிப்போனேன். உங்களுக்கு கூட்டிய, மன்னிக்கவேண்டும் கூடிய கூட்டத்தையும், நீங்கள் ஆற்றிய உரையையும் உளவுத்துறையிடம் கேட்டு இந்த நாட்டு மன்னரும், இளவரசரும் மெர்சலாகிவிட்டதாக ஒரு செய்தி. ராசல் கைமாவில் வெங்கையா நாயுடு, அஜ்மானில்  அருண் ஜெட்லி, சார்ஜாவில் சாக்ஷி மகராஜ், உம்மல் குயினில் உமாபாரதி, புஜைராவில் ராஜ் நாத் சிங், துபையில் சுஸ்மாஸ்வராஜ் ஆகியோறை களம் இறக்கி ஆட்சியைப்பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் போல உங்கள் பேச்சு இருந்தது. பலே.

நேற்று மதியம் ஒரு ஹோட்டலில் எனக்கு எதிர்தார்போல்  ஒரு தமிழர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். துபாயில் இருந்து ஆபிஸ் விசயமாக அபுதாபி வந்திருந்தார், பேச்சிற்கு நடுவே ‘’இன்னைக்கு சீக்கிரம் போகணும், மோடி பேச்சை கேக்கணும், எல்லோரும் அவரைக் காண ஆவலா இருக்காங்க, நீங்க வரலையா?’’ எனக் கேட்டார். ‘’இல்ல பாஸ், எனக்கு அதுல முன் அனுபவம் இருக்கு, அதனால நான் வரல’’ என்றேன். ‘’எப்படி, முன்னாடி மோடி மீட்டிங்கிற்கு போயிருக்கீங்களா?’’ என்று கேட்டார். ‘’இல்ல, ஆனா லிங்கா படத்திற்கு போயிருக்கேன்’’ என்று சொன்னேன். நான் கூறியதன் அர்த்தம் அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. கண்டிப்பாக நேற்று அவன் முன்வரிசையில் அமர்ந்து உங்கள் பேச்சை கேட்டிருப்பான். நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ‘’நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’’ என்று.

முதலீட்டாளர்கள் கூட்டத்தில், காங்கிரஸின் மந்தமான செயல்பாடுகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை, பல கோப்புகள்/திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன அதனை முடிக்கிவிடவே நான் வந்துள்ளேன் என நீங்கள் உள்நாட்டுஅரசியலை வெளிநாட்டில் வந்து பேசினீர்கள். ஆனால் தங்களின் கையெழுத்திற்காக ஆயிரக்கணக்கான கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் காத்திருப்பது பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதை நினைத்து நீங்கள் வாயை மூடி நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். சுதந்திர தின விழாவில், நாட்டில் ஊழலே இல்லை, கருப்பு பண நடவடிக்கை, சாதி, மத பேதம் பாராது........ என்று பேசியபோது தேமே என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் உங்களை நோக்கி வேறு என்ன கேட்டுவிடமுடியும்?. பேலன்ஸ் ஜீரோ என்றாலும் கோடிக்கணக்கானவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்த சாதனை உலக வரலாற்றில் தங்களுக்கு மட்டும்தான். இனி, 15 லட்சம் ரூபாய் பற்றி எவனாவது பேசினால், அதற்காகத்தான் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருக்கின்றோம் என்று அடுத்த 4 வருடங்களை ஓட்டிவிடலாம். அப்புறம் அதுவே அவர்களுக்கு பழகிவிடும்.

தாங்கள் பிரதமராக தேர்வானபோது எனக்கு மனவருத்தம் இருந்தது. இப்போது இருக்கிறதா? என்று எதிர் கேள்வி கேட்டு என்னை இன்னலுக்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றே எண்ணுகின்றேன். அதே அளவு சந்தோசம் காங்கிரஸ் தோல்வியால் இருந்தது. தமிழில் வின்னர் என்ற படத்தில் வருவது போல ‘’அந்த பொண்ண நீ லவ் பண்ணினா என்ன?, நான் லவ் பண்ணினா என்ன? மொத்தத்தில் அந்த குடும்பம் நாசமா போகணும் அவ்வளவுதான்’’ என்று காங்கிரஸை எதிர்த்துக்கொண்டு இருந்தேன். உங்களின் வெற்றியை கண்டபோது அது சாத்தியமாகலாம் என்று தோன்றியது. ஆனால், தற்போது தாங்கள் மறைமுகமாக, காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் ஆள் சேர்த்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. உடனடியாக ஆப்ரேஷன் ‘’போட்டோ ஷாப் போடுறோம் பார்’’ ஐ முடிக்கிவிட வேண்டும். ஆகையால் தாங்கள் அமெரிக்கா, ரஷ்யா, துபாயில் எடுத்த போட்டோக்களை, இது அஹமதாபாத், வதோத்ரா, ராஜ்கோட். சூரத் ன்ற கேப்சனுடன் உடனே தங்களது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யுமறு கேட்டுக்கொள்கிறேன்.

அபுதாபியில் கோவில் கட்ட 2013லேயே அனுமதியளிகப்பட்டுவிட்டதாமே?,
இதுவரை சென்ற நாடுகளில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் எவ்வளவு?
அபுதாபி ஷேக் கூறியிருக்கும் பல மில்லியன் டாலர் முதலீடு எதில்? எப்போது?
 ....................என்று கேள்வி கேட்பவர்களை தலைகீழாக தொங்கவிட்டு மூக்குப் பொடியை தூவும் ‘’பானபத்திர ஓனாண்டி’’ தண்டனைச் சட்ட மசோதாவை  உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும்.

மேலும் நிலுவையில் இருக்கும், விவசாய நில புடுங்கும் சட்டத்தை போர்கால நடவடிக்கையில் அமல்படுத்தி, இந்தியாவை பாலைவனமாக மாற்றி அதன்மூலம் சவுதி, குவைத், அபுதாபி போன்று பெட்ரோல், காஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

தாங்கள் இங்கு இருக்கும் வரையில், அபுதாபி சுட்சர்லாந்து போல குளு, குளு என்று இருந்தது, ஆனால் இன்றிலிருந்து மறுபடியும் சூடு ஆரம்பித்து, சூ........ (காலில் போடும்) வழியாக புகைவருவதால் இங்கு நிறுத்திக்கொள்கின்றேன்.

பாரத் மாத்தாக்கீ ஜே.


--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

24 கருத்துகள்:

 1. Excellent what ever you said are true, thanks

  பதிலளிநீக்கு
 2. Awesome....

  அபுதாபியில் கோவில் கட்ட 2013லேயே அனுமதியளிகப்பட்டுவிட்டதாமே?,
  Sollevellai....

  http://www.aljazeera.com/news/2015/08/uae-allocates-land-abu-dhabi-hindu-temple-150817062426501.html.

  looks new news...

  god only knows...

  Seshan/Dubai

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கிட்டயும் சொல்லவே இல்லை தோழர்

   http://timesofindia.indiatimes.com/india/Arab-donates-land-for-Swaminarayan-temple-in-UAE/articleshow/20979897.cms

   நீக்கு
 3. மோடி அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் செய்யப் போவது கேலியும், கிண்டலும்தான். நீங்கள் படிக்கும் புத்தகங்களும், பார்க்கும் மனிதர்களும் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள். வேறென்ன சொல்ல..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். இனிமே இந்த சிவப்புகொடி தூக்கிக்கிட்டு சுத்துறவனுங்க பழக்கத்தை கட் பண்னனும்.
   எப்படியாவது அந்த 15 லட்சத்த மட்டும் வாங்கிகொடுத்துருங்க. வீட்டுல ரொம்ப கஷ்டம்.

   நீக்கு
 4. சரியான வாய்பந்தல் வீரன். குட்டி இந்தியா, இந்தியர்களின் மாபெரும் சக்தி, அது இதுன்னு பேசி இந்தியர்களுக்கு தாரளமாக விசா கொடுப்பதை கத்தாரைபோல் கட்டுப்பாடு கொண்டு வர இந்த மோடு முட்டியினால் நமக்கு ஆப்பு வராமல் இருந்தால் சரி.
  அபுதாபியில் 300 தொழிலார்களிடம் 8 நிமிடம் செலவிட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிய மகான் இவரு. நினைச்சாலே அப்படியே புல்லரிக்குது
  பூபதி துபாய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன? கத்தாரில் விசா கெடுபிடியா? அப்ப அடுத்த டூர் அங்கதான்.
   கருத்துக்கு நன்றி

   நீக்கு
 5. //கூட்டிய, மன்னிக்கவேண்டும் கூடிய கூட்டத்தையும், நீங்கள் ஆற்றிய உரையையும்//

  'ஆற்றிய' என்பதன் விளக்கம் தர இயலுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிக்ஸ்னரியில் தேடிக்கொண்டு இருக்கிறேன் தோழர். கண்டுபிடிச்சிடுவேன்.

   நீக்கு
 6. //சூடு ஆரம்பித்து, சூ........ (காலில் போடும்)//

  அது 'சூ' அல்ல;
  ;ஷூ'.

  காமெடி! நல்லா வருது உங்களுக்கு காமெடி!!

  பதிலளிநீக்கு
 7. வஞ்ச புகழ்ச்சியின் உச்ச கட்டம்.. அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் .இனிமேல் வளைகுடாவில் உள்ள இந்தியர்களின் வாழ்வு விளம்பிடும்.
  பின்குறிப்பு : அந்த 15 லட்சம் வந்தவுடன் சொல்லுங்க..எனக்கும் வரும்ன்னு சொல்லி இருக்காரு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது வஞ்ச புகழ்ச்சியா? பானபத்திர ஓனாண்டி தண்டனையின் கீழ் கைதாகப் போகும் முதல் நபர் நீங்கள்தான் தோழர். வாழ்த்துக்கள்
   கருத்துக்கு நன்றி.

   நீக்கு

 8. சொன்னா நம்பமாட்டிங்க .. சில நாட்களுக்கு முன் லிங்கா படம் பார்க்கலையா என்று கேட்ட ஒரு நண்பரிடம் நான்.. தேவையில்லை.. நான் மோடி அவர்களின் பேச்சை ஏற்கனவே கேட்டு - பார்த்து விட்டேன் என்றேன்.

  பதிலளிநீக்கு
 9. Very good article, I like your every articles, your writing is very good, I wish allah to continue your writing

  A Abdul Rahim

  பதிலளிநீக்கு